புராணம்
புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும்.[1] புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.
இப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர்–அரக்கர்களின் போர்கள் போன்றவைகள் பலவற்றினையும் விவரிக்கின்றன.
சொல்லிலக்கணம்
தொகுபுராணம் என்கிற சமஸ்கிருத சொல்லானது புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.
தமிழ் மொழியில்
தொகுபுராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி" போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது சிவபுராணம். அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள்.[2] சேக்கிழாரின் பெரியபுராணம் புகழ்பெற்றது.
மகாபுராணங்கள்
தொகுமகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்துவடிவம் பெற்றுள்ளன.
- சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
- கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
- கருட புராணம் - ஸ்ரீமத் நாராயணன் கருடனுக்கு கூறினார்.
- மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
- அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
- வராக புராணம் - வராகரே கூறினார்.
- கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.
- வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
- விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.
புராணங்களின் தொடக்கத்தில் இந்த புராணங்கள் எவருக்காக மறுபடியும் கூறப்பட்டன, யாரால் கூறப்பட்டன என்பதையும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புராணத்தின் பெயர் | உபதேசித்தவர் | உபதேசம் பெற்றவர் |
பிரம்ம புராணம் | சூதமுனிவர் | சௌகனாதி முனிவர்கள்]] |
பத்ம புராணம் | ||
விஷ்ணு புராணம் | பராசர முனிவர் | மைத்ரேய முனிவர் |
சிவ புராணம் | சூதமாமுனிவர் | நைமிசாரண்ணிய முனிவர்கள் |
வாயு புராணம் | ||
லிங்க புராணம் | சூதமாமுனிவர் | நைமிசாரண்ணிய முனிவர்கள் |
கருட புராணம் | ஸ்ரீமத் நாராயணன் | கருடாழ்வார் |
நாரத புராணம் | ||
பாகவத புராணம் | ||
அக்னி புராணம் | ||
கந்த புராணம் | ||
பவிசிய புராணம் | ||
பிரம்ம வைவர்த்த புராணம் | ||
மார்க்கண்டேய புராணம் | ||
வாமன புராணம் | ||
வராக புராணம் | ||
மச்ச புராணம் | ||
கூர்ம புராணம் | ||
பிரம்மாண்ட புராணம் |
புராணங்களை எடுத்துரைத்த இடம்
தொகுவேதவியாசரின் மகன் சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை வைசம்பாயனர், அத்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் அவைகளை நன்கு கேட்டார்.
அப்புராண இதிகாசங்களை, கோமதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்த நைமிசாரண்யம் எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌனகர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என மகாபாரத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
புராணங்கள் தோன்றிய காலம்
தொகுபுராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துல்லியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன.
தொல்காப்பியத்தை எழுதிய புலவரும், திருக்குறளை இயற்றிய புலவரும் தங்களது பெயர், ஊர், வாழ்ந்த காலம், நூலை இயற்றிய ஆண்டு, ஆட்சி செய்த மன்னர் இவை எதையுமே குறிப்பிடவில்லை.
இவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் பொ.ஊ. 6 அல்லது பொ.ஊ. 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்து சமயத்தின் பொற்காலம்
தொகுபொ.ஊ. 300–600 காலகட்டங்களில் வட நாட்டை ஆண்ட குப்தர்கள் வட மொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் பொ.ஊ. 300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.
கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான்
தொகுதிருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.
திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,
- "மேவுமந்தமிகுந்திரையாயுக
- மோவில்பல்புகழோங்குநளன்றனக்
- கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள்
- பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன்" (பாடல் 1325)
என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக் கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கலியுகம் தோன்றி 5,102 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி 5102 ౼ 2000 = பொ.ஊ.மு. 3102). அதாவது பொ.ஊ.மு. 3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது.
இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.
புராண வகைகள்
தொகுமுதன்மைக் கடவுள்களின் அடிப்படையில் பதினெட்டு புராணங்களும் வருமாறு பிரிக்கப்படுகின்றன.[3] சில இடங்களில் வாயு புராணத்துக்குப் பதிலாக சிவமகாபுராணம் கருதப்படுகின்றது.
முதன்மைத் தெய்வம் | எண்ணிக்கை | புராணங்கள் |
சிவன் | 10 | லிங்க புராணம், கந்த புராணம், ஆக்கினேய புராணம், பிரம்மாண்ட புராணம், மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம், வராக புராணம், வாமன புராணம், வாயு புராணம் |
விஷ்ணு | 04 | விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம் |
பிரம்மா | 02 | பிரம்ம புராணம், பத்ம புராணம் |
சூரியன் | 01 | பிரம்ம வைவர்த்த புராணம் |
அக்கினி | 01 | அக்கினி புராணம் |
மகா புராணங்கள் சத்துவம், ராஜசம், தாமசம் என்ற அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது. சைவர்கள் தமது பத்து புராணங்களுமே சத்துவ புராணங்கள் என்றும்,[4] வைணவர்கள் தமது புராணங்களே சத்துவ புராணங்கள் என்றும்[5] கூறிக்கொள்கிறார்கள். பதினெட்டுப் புராணங்களுக்கு மாறாக, உபபுராணங்கள் என்று சொல்லப்படும் பட்டியலில் அடங்குகின்ற புராணங்கள் வருமாறு:
சூரிய புராணம், கணேச புராணம், காளிகா புராணம், கல்கி புராணம், சனத்குமார புராணம், நரசிங்க புராணம், துர்வாச புராணம், வசிட்ட புராணம், பார்க்கவ புராணம், கபில புராணம், பராசர புராணம், சாம்ப புராணம், நந்தி புராணம், பிருகத்தர்ம புராணம், பரான புராணம், பசுபதி புராணம், மானவ புராணம், முத்கலா புராணம் என்பனவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ புராணம் ஓர் அறிமுகம்!. தினமலர் நாளிதழ். 24 மே 2012.
- ↑ கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181
- ↑ ஞானசம்பந்தன், அ.ச.ஞா, மீரா, ஞா. (1996). பதினெண் புராணங்கள். கங்கை புத்தக நிலையம். pp. xxii.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ அருணாச்சலம், ப. (2004). சைவ சமயம்: ஓர் அறிமுகம். கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம். pp. 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9559429582.
- ↑ Rajeev Verma (2009). Faith & Philosophy of Hinduism. Gyan Publishing House. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178357188.