நளன்

இந்திய புராண கதாபாத்திரம்

நளன் என்பவன், இந்தியாவின் பழைய கதை ஒன்றின் கதைத் தலைவன் ஆவான். இக் கதை, புகழ் பெற்ற வடமொழி இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள துணைக் கதைகளுள் ஒன்று. மகாபாரத்தின் வன பருவம் அத்தியாயம் 53 முதல் 78 முடிய நளன் - தமயந்தி தம்பதியரின் காதல், திருமணம், சூதாட்டம், தமயந்தியை பிரிதல் போன்ற சோதனைகளுக்குப் பின் மீண்டும் இருவரும் இணைவது குறித்து விளக்கப்படுகிறது.[1]

நளன்-தமயந்தி ஓவியர்: ரவி வர்மா

இக் கதை பின்னர் பல மொழிகளிலும் தனி நூல்களாக எழுதப்பட்டன. ஸ்ரீஹர்ஷரின் நைஷதம் என்னும் வடமொழி நூலும், புகழேந்திப் புலவரால் நளவெண்பா என்னும் பெயரிலும், அதிவீரராம பாண்டியரால் நைடதம் என்னும் பெயரிலும் எழுதப்பட்ட தமிழ் நூல்களும் குறிப்பிடத் தக்கவை.

இக் கதைகளின்படி, நளன் நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும் நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில் நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச் சனி பிடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன் தானும் வருவேன் எனத் தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும் முள்ளிலும் நடந்து துன்பப் படுவது கண்டு பொறாத நளன், வழியிலேயே அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. காதல் தூது சென்ற அன்னம்! - வனபர்வம் பகுதி 53 – 78 முடிய]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளன்&oldid=3218039" இருந்து மீள்விக்கப்பட்டது