சிவமகாபுராணம்

வியாசபுராணங்களில் ஒன்று

சிவ புராணம் (சமஸ்கிருதம்: शिव पुराण, சிவ புராணா) என்பது பதினெண் புராணங்களில் நான்காவது புராணமாகும். பதினென் புராணங்களின் வரிசையில் சிலர் சிவ புராணத்திற்கு பதிலாக வாயு புராணத்தினை சேர்க்கின்றார்கள். வியாச முனிவரால் இயற்றப்பட்ட பதினெட்டு மகா புராணங்களுள் சைவ சமய முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெருமையை உரைக்கும் புராணங்கள் சிவபுராணங்களாகும்.[1] இவை தாமச புராணம் என்றும் அறியப்படுகின்றன.

இந்த சிவபுராணங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. இப்புராணங்களை படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும் மாகேசுர பூசையை அவசியம் செய்ய வேண்டுமென ஆறுமுக நாவலர் தனது சைவ வினா விடை இரண்டாம் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.[2] ஆசாரியராவதற்கு சிவபுராணங்களை அறிந்திருக்க வேண்டுமெனவும்,[3] சிவபுராணங்களை படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் உத்திராட்சத்தினை தரிக்க வேண்டுமெனவும்,[4] சிவராத்தியன்று சிவபுராணங்களை படிக்க வேண்டுமெனவும்[5] ஆறுமுக நாவலர் கூறுகி்றார்.

புராண வரலாறு தொகு

நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிக்கும் முனிவர்கள் ஒன்றிணைந்து, வருமான சூதமா முனிவரிடம் சிவபெருமானது பெருமைகளை கூறும் படி வேண்டினார்கள். சூதமா முனிவர் வியாஸ மகரிஷியின் சிஷ்யராவர். அவர் கூறிய சிவனது பெருமைகளின் தொகுப்பே சிவ புராணமாகும்.

சோதிர் லிங்க தோற்றம், திருமாலிற்கும் பிரம்மாவிற்கும் வரம் கொடுத்தது, சிவலிங்கத்தின் மகிமை, சிவ பூஜைக்கான விதிமுறைகள், சிவ பூஜை மந்திரங்கள், மன்மதன் எரிப்பு என பல்வேறு சிவபெருமைகளை இந்நூல் கூறுகிறது.

இப்புராண நூலில் சரப புராணம். ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகளை திருமலைநாதர் என்பவர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.[6]

இந்து தொன்மவியலின் அடிப்படையில் புராணங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவையாகும். சிவபெருமான் புராணங்களை கூற நந்தி தேவர் முதலில் அறிந்தார். அதன் பின் சனத் குமாரருக்கு புராணங்களை எடுத்துரைத்தார். சனத் குமாரரிடமிருந்து புராணங்களைப் பெற்ற வியாச முனிவர் அதை தொகுத்தார்.[7]

சிவபுராணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,.

  1. கந்த புராணம்
  2. வாமன புராணம்
  3. மச்ச புராணம்
  4. வராக புராணம்
  5. மார்க்கண்டேய புராணம்
  6. இலிங்க புராணம்
  7. பௌடிக புராணம்
  8. பிரம்மாண்ட புராணம்
  9. சைவ புராணம்
  10. கூர்ம புராணம்[8]

புராண அமைப்பு தொகு

புராண ரத்தினமான சிவமகாபுராணம் பல்வேறு வடிவங்களில் கிடைக்கப்பெற்றாலும், தற்போது அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது புராண மாகாத்மியத்தில் தொடங்கி ஏழு சம்ஹிதைகளாக பிரிக்கப்பட்டு, 24000 சுலோகங்கள் அடங்கிய வடிவமாகும். ஏழு சம்ஹிதைகளாவன : வித்யேஸ்வர சம்ஹிதை, ஸ்ரீருத்ர சம்ஹிதை, சதருத்ர சம்ஹிதை, கோடிருத்ர சம்ஹிதை, உமா சம்ஹிதை, கைலாய சம்ஹிதை, வாயவீய சம்ஹிதை என்பனவாம்.

புராண மகாத்மியத்தை வாசித்த பிறகே எந்தவொரு புராணத்தையும் படிக்கத்தொடங்கவேண்டும் என்பது மரபு. புராண மகாத்மியத்தில் சிவமகாபுராணத்தினை கேட்கும் விதிமுறைகளும், படித்து பாராயணம் செய்யும் விதிமுறைகளும், அதனால் அடையும் பலன்களும் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தீயநடத்தை கொண்ட பிந்துகன்-சஞ்சுலை தம்பதியினர் சிவமகாபுராணம் கேட்டு தங்கள் பாவங்கள் தொலைந்து சிவலோகம் அடைந்த சரித்திரம் இடம்பெற்றுள்ளது. அத்தோடு சிவமகாபுராணமாகிய நூலானது எந்த வீட்டில் வைத்து அனுதினமும் பூசிக்கப்பட்டு, படிக்கப்பட்டு வருகிறதோ அந்த வீடானது காசி முதலிய புண்ணியஸ்தலங்களுக்கு சமமாக வைத்து போற்றப்படும் என புராணமாகாத்மிய பகுதியில் சூதமுனிவர் கூறுகிறார்.

முதலாவதான வித்யேஸ்வர சம்ஹிதை ஏறத்தாழ 2000 சுலோகங்களைக் கொண்டது. சனத்குமாரர் வியாசருக்கு எடுத்துரைத்த இப்பகுதியில் அடிமுடிதேடிய படலம், சிவலிங்கபூஜை விதி, மண்ணாலான பார்த்திவலிங்க பூஜை விதி, மனிதனின் நித்திய கடமைகள், ஏனைய ஈஸ்வர வித்யைகள் என இவை யாவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

இரண்டாவதான ஸ்ரீருத்ர சம்ஹிதை அளவில் பெரியது. இந்த சம்ஹிதை பிரம்மதேவன் தன் மகன் நாரதன் சாபம் நீங்கும் பொருட்டு கூறிய புண்ணியம் மிகுந்த சிவசரித்திரங்களை தன்னுள் கொண்ட பகுதியாகும். சிவமகாபுராணத்தின் சாரமாக விளங்கும் இப்பகுதியானது ஐந்து காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அக்காண்டங்களாவன சிருஷ்டி, சதி, பார்வதி, குமாரம், யுத்தம் என்பனவாம். ஐந்து காண்டங்களைக் கொண்ட இந்த ஸ்ரீருத்ர சம்ஹிதையானது 10,500 சுலோகங்களோடு சிவமகாபுராணத்தின் நடுநாயகமாக ஒப்பற்று விளங்குகிறது.

நாரதன் சாபம் பெற்ற கதை, ஜகத்தின் உற்பத்தி, லிங்கோத்பவர் எனும் அண்ணாமலையார் கதை, குபேரனின் பூர்வ சரித்திரங்கள் என இவை யாவும் சிருஷ்டி காண்டத்திலும், அருந்ததி-வஸிஷ்டர் வரலாறு, தக்ஷப்பிரஜாபதியின் மகளான தாக்ஷாயணி திருமணம், தக்ஷவேள்வி, தாஷாயணியின் தேகத்தியாகம், வீரபத்திரர் உற்பத்தி சரித்திரங்கள் சதி காண்டத்திலும், தக்ஷவேள்வியில் உயிர்நீத்த சதியே மறுபடி பர்வதராஜனுக்கு பார்வதி எனும் திருப்பெயரில் மகளாக அவதரித்தல், உயர்ந்ததான பார்வதி-பரமேஸ்வர திருக்கல்யாண வைபவம், பதிவிரதையின் தர்மம் என இவைகள் பார்வதி காண்டத்திலும் விளக்கப்பட்டுள்ளன.

மேலும் தாரகாசுரனின் தலைமையில் அசுரப்படையானது எல்லா உலகங்களையும் உபத்திரவம் செய்ய, அதையழிக்க பார்வதி பரமேஸ்வரரின் குமாரனாக முருகப்பெருமான் அவதரித்த கதை, விநாயகர் உற்பத்தி, விநாயகரின் சிரச்சேதம், விநாயகரின் சித்தி புத்தி திருமணம் என இவை யாவும் குமரக்காண்டத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் பராக்கிரமத்தை விளக்கும் ஐந்தாவதான யுத்த காண்டத்தில் திரிபுரசம்ஹாரம், ஜலந்தர வதம், சங்கசூடன் வதம், பாணாசுர வதம், அந்தகாசுர வதம் முதலிய யுத்த சரித்திரங்கள் அழகுற விளக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் பகுதியான சதருத்ர சம்ஹிதையானது அப்பெயருக்கேற்ப சிவபெருமானது நூறு சிவ அம்சங்களையும், அவதாரங்களையும் அதன் உற்பத்தி வரலாறு மற்றும் பெருமையையும் பறைசாற்றும் விதமாய் விளங்குகிறது. நான்காவதான கோடிருத்ர சம்ஹிதை பன்னிரு ஜ்யோதிர்லிங்கங்களின் விரிவான வரலாற்றையும், திருவாழி சக்கரத்தை பெறும்பொருட்டு திருமால் ஜபித்த சிவனது ஆயிரம் திருநாமங்களடங்கிய 'சிவ சஹஸ்ரநாமம்'எனும் மாமந்திரத்தையும் உள்ளடக்கியது. இந்த இரண்டு சம்ஹிதைகள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 2000 சுலோகங்களைக் கொண்டவை. இவ்விரு பகுதிகளும் சனத்குமாரர் வியாசருக்கும், வியாசர் தம் சீடனான சூதருக்கும் உபதேசித்தபடி அமைந்துள்ளது.

3000 சுலோகங்களை உடைய உமா சம்ஹிதை சிவமகாபுராணத்தின் ஐந்தாவது பகுதி. பூமிவாழ் மனிதர்களின் பாவபுண்ணியச் செயல்கள், புண்ணியம் செய்த புண்ணியர்கள் அடையும் சொர்க்கலோக வர்ணனை, பாவங்களைச் செய்யும் பாவிகளை வதைக்கும் கொடிய நரகலோக வர்ணனை இப்பகுதியின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பிரம்மன் சிருஷ்டிக்கத் தொடங்கியது முதல் இன்றுவரையுள்ள பல தெய்வ, அரச வம்சங்களிள் பெயர்களும், சரித்திரங்களும் வரிசை மாறாமல் கூறப்பட்டுள்ளது. பெயரளவில் 'உமாசம்ஹிதை' என்றிருப்பனும் மகாதேவரும் உமாதேவியும் உரையாடிய விஷயங்கள் சொற்ப அளவிலேயே காணப்படுகிறது. எனினும் பராசக்தியின் பராக்கிரமத்தை உணர்த்தும் மார்கண்டேய புராணத்திலுள்ள தேவிமகாத்மியத்தை ஒத்த சுலோகங்கள் பல இந்த சம்ஹிதையின் முடிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமான் உமாதேவிக்கும், பின்னர் முருகப்பெருமான் வாமதேவருக்கும் உபதேசித்த ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் சூட்சுமப்பொருளை ஆறாவதான கைலாஸ சம்ஹிதையில் காணலாம். இதன் இறுதிப்பகுதியில் சந்நியாசிகளின் ஆசார நியமங்களும், அவர்களது ஈமச்சடங்குகளும் விளக்கப்பட்டுள்ளது. 1000 சுலோகங்களே உள்ள இப்பகுதியானது ஏனைய சம்ஹிதைகளை விட அளவில் சிறியதாயினும், இதில் பொதிந்துள்ள கருத்துக்களோ மிகமிக ஆழமானது. ஏழு சம்ஹிதைகளைக் கொண்ட சிவமகாபுராணத்தில் பிரணவத்தின் ரகசியார்த்தத்தை கொண்ட கைலாஸ சம்ஹிதையே சாலச்சிறந்த சம்ஹிதை என்றும், இதை படிப்பதால் மகேஸ்வரர் மிகுந்த பிரீத்தி அடைகிறார் என்றும் சூதமாமுனிவர் பிற முனிவர்களுக்கு உபதேசிக்கிறார்.

ஆதியில் பரப்பிரம்ம தத்துவத்தினை அறியவிரும்பிய முனிவர்களுக்கு வாயுபகவான் உபதேசித்ததே ஏழாவதான வாயவீய சம்ஹிதை ஆகும். இஃது பூர்வபாகம், உத்தரபாகம் என இருபிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது. பிரம்மன் சிருஷ்டிக்க முடியாது திணறியதும், அதனால் சிவனை நோக்கி கடுந்தவமியற்ற, அர்த்தநாரீசுவரராக சிவபெருமான் எழுந்தருளி பிரம்மனுக்கு படைப்புத்தொழிலை செய்யும் திறனையளித்த வரலாறும், தேவியின் பிற வடிவங்களும், பதி,பசு,பாசம் ஆகியவற்றின் விளக்கமும், சிவபெருமான உயிர்களாகிய பசுக்களுக்கெல்லாம் பதி என்ற பரப்பிரம்ம தத்துவமும் பூர்வபாகத்தில் உள்ளன.

உபமன்யு மகரிஷி ஸ்ரீகிருஷ்ணருக்கு சிவதீட்சையளித்து உபதேசித்த உயர்ந்த சிவதத்துவங்களான சிவபக்தி, சிவத்தியான, சிவயோக நெறிமுறைகள் என அனைத்தும் வாயவீய சம்ஹிதையின் உத்தரபாகத்திலுள்ளது. பூர்வபாகமும் உத்திரபாகமும் தலா 2000 சுலோகங்கள் வீதம் மொத்தமாக வாயவீய சம்ஹிதையில் ஏறத்தாழ 4000 சுலோகங்கள் உள்ளன.

பாராயண முறை தொகு

சிவமகாபுராணமானது ஒன்பதுநாட்கள், பதினோரு நாட்கள், ஒருமாதம் அல்லது ஒருவருடம் என தங்களால் இயன்றபடி பலவிதமாக சைவ அன்பர்களால் ஓதப்பட்டு வந்தாலும், நவாஹப்பாராயணம் பிரசித்தமானது. 24,000 சுலோகங்களையுடைய ஸ்ரீமத்ராமாயணம் எனும் இதிகாசம் நவாஹம் என்ற முறைப்படி ஒன்பது நாட்களுக்கு பிரித்து எப்படி பாராயணம் செய்யப்பட்டு வருகிறதோ அதுபோல, 24,000 சுலோகங்களையுடைய இச்சிவமகாபுராணமும் சிவராத்திரி, பிரதோஷம், சோமவார விரதம் போன்ற விரத நாட்களிலும், உற்சவநேரங்களில் நவாஹ முறைப்படி ஒன்பது நாட்கள் அன்பர்களால் சிவாலயங்களிலோ, வீடுகளிலோ பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா முதலிய தென்னிந்திய பகுதிகளில் சிவபுராண உபந்நியாசம் ஒன்பது அல்லது பதினொரு நாட்கள் நடத்தப்பட்டு பூர்த்தி நாளன்று பார்வதி-பரமேஸ்வர திருக்கல்யாண வைபவம் அரங்கேற்றி அன்னதானமும் வழங்கப்படுகிறது.

சுலோகங்கள் வடிவிலுள்ள சிவமகாபுராணத்தின் மூலநூலைத் தழுவி உரைநடையாக கதைவடிவில் தாரமங்கலம் சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்களால் 2016ம் ஆண்டு 'வியாசரின் சிவமகாபுராணம்-தமிழ்மொழிபெயர்ப்பு'எனும் பெயரில் ஆயிரம்பக்கங்கள் அடங்கிய புத்தகமாக தமிழாக்கம் செய்யப்பட்டது.

தாமச புராணமா? தொகு

பத்மபுராணத்தின்படி பதினெண் புராணங்களும் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்றாக பிரிக்கப்பட்டு, அவற்றுள் வைஷ்ணவ புராணங்கள் சாத்வீகமானது என்றும், சைவபுராணங்கள் தாமச புராணங்கள் என்றும் கூறுகிறது. மறுபுறம் புராணத்தில் மிகப்பெரியதான ஒருலட்சம் சுலோகங்களையுடைய ஸ்காந்தம் எனும் கந்தபுராணத்திலோ சைவபுராணங்களே சாத்வீகமானது என்றும், வைஷ்ணவ புராணங்கள் தாமச புராணங்கள் என்றும் கூறுகிறது. இங்ஙனம் சமயம் சார்ந்த புராணங்கள் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளதால் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் எனும் முக்குணங்களின் அடிப்படையில் புராணங்களை பிரிப்பது ஏற்புடையதல்ல என புராண அறிஞர்கள் இத்தகு புராண வகைப்பாட்டினை நிராகரிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. திருமுல்லைவாயில் தலபுராணம்-தொண்டமான் சக்ரவர்த்தி பதிப்பகம் சென்னை-53. 1994ல் வெளியீடு
  2. http://www.noolaham.net/project/18/1718/1718.htm ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 376
  3. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 131 ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்?
  4. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 167 எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?
  5. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் 384 சிவராத்திரி விரதமாவது யாது?
  6. http://temple.dinamalar.com/news_detail.php?id=10943 சிவ புராணம்
  7. http://worldkovil.com/?page_id=58 பரணிடப்பட்டது 2013-12-09 at the வந்தவழி இயந்திரம் தேவாங்க புராணம் - பிரணவி உண்மை, தர்மத்தை போதிக்கும் புதிய தொடர்.
  8. http://www.xn--vkc6a6bybjo5gn.com/ta/ %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html "சிவபுராணங்கள்" என்பதன் தமிழ் விளக்கம்

தொடர்புடையவை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவமகாபுராணம்&oldid=3813835" இலிருந்து மீள்விக்கப்பட்டது