கொற்றவை
கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. மறவர் மற்றும் எயினர் (எயினர் என்பவர்கள் பாலை நில வேட்டுவர்கள்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. வேட்டுவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர்.கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந் தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள். பாலைக்கு என்று தனி நிலம் இருந்திடாமல் முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என ஆனதால், குறிஞ்சி நிலத்தில் வழிபட்டதாக கருதப்படும் கொற்றவை பாலை நிலக் கடவுளாக ஆகியிருக்கலாமென கருதவும் வாய்ப்புண்டு. கொற்றவை மறவர்களுக்கு தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் என இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.
கொற்றவை குறித்த தொடக்ககாலச் சான்றுகள்
தொகுஇன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது.[1] காலத்தால் முற்பட்ட இந்த நூலிலேயே கொற்றவை இடம்பெற்றிருந்தும், சங்க இலக்கியங்கள் எதிலும் கொற்றவைத் தெய்வம் பெயர் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. கொற்றவை கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுள் ஆவாள். எனவே "ஓங்குபுகழ் கானமர் செல்வி" என அகநானூறு (345.4-5) குறிப்பிடுவது கொற்றவையையே எனலாம். அத்துடன் குறுந்தொகையில் "விறல் கெழு சூலி" எனவும், பதிற்றுப்பத்தில் "உருகெழு மரபின் அயிரை" எனக் குறிக்கப்படுவதும் கொற்றவையையே என்பது சில அறிஞர் கருத்து. சங்க காலத்துக்குப் பிற்பட்ட சங்க மருவியகால இலக்கியங்களில் கொற்றவை பற்றிய சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. கலித்தொகையில், தலைவனின் தன்னிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவதாக, "பெருங்காட்டுக் கொற்றவைக்குப் பேய் நொடி சொல்வதுபோல" என்னும் பொருள்படும் பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்னும் வரி உள்ளது. பரிபாடலிலும், நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண் என்ற வரியில் கொற்றவை பற்றிய குறிப்பு வருகின்றது. திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் "கொற்றவை சிறுவ",[2] "பழையோள் குழவி"[3] என்னும் தொடர்களால் குறிப்பிடுகிறது. இது கொற்றவையை முருகக் கடவுளின் தாயாகப் பழந்தமிழர் கருதியதைக் காட்டுவதுடன், "பழையோள்" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டின் தொன்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். இதிலிருந்து, திருமுருகாற்றுப்படைக்கு முந்திய பெரும்பாணாற்றுப்படையில் "சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய இறைவி"[4] என்னும் பொருள்படும். "கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி"[5] என்னும் குறிப்பும் கொற்றவையையே குறிக்கிறது என்பது வெளிப்படை.
கொற்றவையின் இயல்புகள்
தொகுகொற்றவை பற்றிய நேரடியானதும் மறைமுகமானதுமான குறிப்புக்கள் முற்பட்ட நூல்களிலேயே காணப்படினும் சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய விரிவான பல தகவல்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது பற்றிய தகவலும் அத் தெய்வம் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது. மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும், அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள் என்றும், அவள் நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் கொற்றவையின் இயல்பும் சிறப்பும் விவரிக்கப்படுகின்றன.[6]
மறவர் குடியிலே பிறந்த சாலினி தெய்வம் ஏறிய நிலையில் கூறுவதாகக் கொற்றவைக்குப் பலி கொடா விட்டால் ஏற்படக்கூடிய நிலையையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. மறவரின் மன்றங்கள் பாழ்படும், வழிப்பறி வாய்ப்பு இல்லாமல் மறவர் சினம் குறைந்து செருக்கு அடங்குவர், கொற்றவை மறவரின் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள், கள் குடித்து மகிழ்ந்து வாழும் வாழ்வு கிடைக்காது என்று மறவரின் தொழிலும், இயல்பும் வாழ்வும் பாழ்படும் நிலை கூறப்படுகின்றது.[7]
கொற்றவையின் தோற்றம்
தொகுகொற்றவை எப்படியான தோற்றம் கொண்டவள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்களில் காணப்படவில்லை. எனினும், கொற்றவைக்கு அத்தெய்வத்தின் இயல்பை விளக்கும்படியான வடிவம் இருந்தது என்பதை உய்த்து உணரும்படியான தகவல்கள் அந்நூல்கள் சிலவற்றில் காணப்படுகின்றன[8]. சிலப்பதிகார வரியில், மறக்குலப் பெண்ணான சாலினி, கொற்றவையாகக் கோலம் புனைந்தது பற்றிய விவரங்கள் தரப்படுகின்றன. இது அக்காலத்தில் மக்கள் கொற்றவையை எப்படியான தோற்றத்தில் வழிபட்டனர் என்பதை அறிய உதவுகின்றது.
கலித்தொகையில் கொற்றி
தொகுகொற்றவையைக் கலித்தொகை கொற்றி எனக் குறிப்பிடுகிறது. கொற்றியே ஒரு பேய். அவளுக்கே பேய் பிடித்துவிட்டது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என்று தலைவி தலைவனிடம் கூறுவதாகப் பாடல் வருகிறது.[9] கன்னியாகுமரி மாவட்டத்தில் கொற்றவை பெயர் கொண்ட பிற் காலத்தில் கொற்றிகோடு என்ற பெயர் கொண்ட மறவர் ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மக்கள் கொற்றவை வழிபாட்டை செய்து வந்தவர்கள்.
புறப்பொருள் வெண்பாமாலையில் கொற்றவையின் தோற்றம்.
தொகுஇவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை ஊர்தியாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். நோலை (எள்ளுருண்டை), பொரி, அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல் (சுண்டல்), பிண்டி (அவல்), நிணம், குருதி, குடர், நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் ஆகோள் கருதுவானாயின் அவனுக்கு அறுளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள். அரசனொருவன் படையெடுக்கும்போது அவனது பகைவர் கெடுமாறும் முற்பட்டு வருவாள்.[10]
சிலம்பு கூறும் கொற்றவை
தொகுவெண்ணிறப் பாம்புக்குட்டி போன்ற பொன் இழையால் கட்டப்பட்ட நீண்ட சடைமுடி. பிறைச் சந்திரன் போலத் தோற்றமளிக்கும்படி அச் சடைமுடியிலே சாத்திய காட்டுப் பன்றியின் வளைவான கொம்பு. கழுத்தில், அஞ்சாத வலிமை கொண்ட புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புலிப்பல் தாலி. இடையில் வரிகளும் புள்ளியும் பொருந்திய புலித்தோல் ஆடை. கையிலே வில் ஆகியவற்றுடன் கூடி நீளமான முறுக்கிய கொம்புகளையுடைய கலைமான் மேல் ஏறி இருக்கும் தோற்றமே கொற்றவையின் தோற்றமாகக் காட்டப்படுகின்றது.[11]
மேலே தரப்பட்ட கொற்றவையின் தோற்றம் தமிழர் மரபுவழிக் கொற்றவையின் தோற்றத்தை வெளிப்படுத்திய அதே வேளை, ஆரியச் செல்வாக்குக்கு உட்பட்ட கொற்றவையின் தோற்ற அம்சங்களையும் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது. இதன்படி கொற்றவை, தலையில் பிறையாகிய வெண்ணிற இதழைச் சூடியவள், நெற்றிக்கண் உடையவள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப்போல் ஒளிவீசும் புன்னகையை உடையவள், நஞ்சை உண்டதனால் கருநிறமான கழுத்தை உடையவள், நச்சுப் பாம்புகளை மார்புக் கச்சாக அணிந்தவள், கையில் வளையல்களை அணிந்திருப்பவள், திரிசூலத்தை ஏந்தியிருப்பவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலில் சிலம்பும் வலக்காலில் கழலும் அணிந்தவள், வெற்றியைத் தருகின்ற வாளையுடையவள், மகிசாசூரனைக் கொன்று அவன் தலைமேல் நிற்பவள், கரு நிறத்தவள், கலைமானை ஊர்தியாக உடையவள் என்று கொற்றவையின் கோலம் கூறப்படுகின்றது.[12] இவற்றில் ஆரியப் புராணக் கதைகளின் தாக்கம் தெளிவாகத் தெரிவதுடன் கொற்றவை துர்க்கையாக மாற்றம் பெறும் நிலைமையையும் காண முடிகிறது. அது மட்டுமன்றி சிவனுக்குரிய தோற்ற இயல்புகளில் பலவும் கொற்றவைமீது ஏற்றிக் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொற்றவை வழிபாடு
தொகுபாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்து, பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை; சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால் இசைத்துக்கொண்டு வருவர்.[13]
கொற்றவையும் சமசுக்கிருதவயமாக்கமும்
தொகுதொடக்கத்தில் மறவர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள். கலித்தொகை முருகனைச் சிவனின் மகனாகக் காட்டுகின்ற போதிலும், சிவனுக்கும், கொற்றவைக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிச் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்கள் எதிலும் பேசப்படவில்லை. கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்ககாலத்துக்குப் பிற்பட்ட நூல்கள் சிவனின் துணைவியாக உமையை முதன்மையாகப் பேசுகின்றன. எனினும் இம்மூன்று நூல்களும் கொற்றவை பற்றியும் பேசத் தவறவில்லை. திருமுருகாற்றுப்படை முருகனை "மலைமகள் மகன்" என்று உமையின் மகனாகக் காட்டுவதையும் காணலாம். இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் கலந்து காணப்படுவது அக்காலத்தில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தொடக்க நிலையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரமும் உமை, கொற்றவை இரண்டு பெண்தெய்வ வடிவங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இதில் கொற்றவையே முதன்மை பெறுகின்றது எனினும், முன்னரே குறிப்பிட்டபடி கொற்றவையில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தாக்கம் புலப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொற்றவை திருமாலின் தங்கையாகக் காட்டப்பட்டதுடன் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது. சமஸ்கிருதமயமாக்கல் காரணமாக சில தமிழர்கள் அவளை சமஸ்கிருத வேதங்களில் இருந்து காளி என்று தவறாகப் புரிந்து கொண்டனர் (காளி எப்போதும் ஆடைகளை அணிந்த கோட்ரவைக்கு மாறாக நிர்வாணமாக இருப்பார் இதுவே முக்கியத் தீமை).
தொல்லியல்
தொகுசெங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேன்பாக்கம் கிராமத்திலும்,[14] திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[15]
குறிப்புக்கள்
தொகு- ↑ நளினி, மு., கலைக்கோவன், இரா. பக். 11, 12.
- ↑ திருமுருகாற்றுப்படை 258
- ↑ திருமுருகாற்றுப்படை 259
- ↑ நாராயணவேலுப்பிள்ளை, எம்., 2003. பக்.153.
- ↑ பெரும்பாணாற்றுப்படை, 460
- ↑ சிலப்பதிகாரம் 11:210-215
- ↑ சிலப்பதிகாரம் 12:11-20
- ↑ நளினி, மு., கலைக்கோவன், இரா. பக். 12.
- ↑ தலைவன் பரத்தையிடம் போய்வந்ததை மறைப்பது இவ்வாறு உள்ளதாம்.
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!
பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து (கலித்தொகை 89 அடி 7-9) - ↑ புறப்பொருள் வெண்பாமாலை. துறை-கொற்றவை நிலை.
- ↑ சிலப்பதிகாரம் 12:22-32
- ↑ சிறீ சந்திரன், ஜெ., 2001. பக் 221
- ↑ சிலப்பதிகாரம் 12:33-45
- ↑ மதுராந்தகம் அருகே 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிப்பு
- ↑ 8ம் நூற்றாண்டின் பல்லவர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு
உசாத்துணைகள்
தொகு- காந்தி, க., தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2008.
- கைலாசபதி, க., பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், குமரன் பப்ளிசர்ஸ், சென்னை. 1999.
- சண்முகம் பிள்ளை, மு., சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2003.
- சிறீ சந்திரன், ஜெ., சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2001.
- நளினி, மு., கலைக்கோவன், இரா., பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்று மையம்.
- நாராயணவேலுப்பிள்ளை, எம்., பத்துப்பாட்டு (முதல் பகுதி) தெளிவுரையுடன், முல்லை நிலையம், சென்னை. 2003.
- http://www.dinamani.com/tamilnadu/2014/02/12/6-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/article2051319.ece