அவதூத கீதையானது சந்திர வம்சத்து மன்னன் நகுசனின் பேரனும், யயாதி யின் மகனும் ஆன மன்னர் யது, ஒரு நாள் முற்றும் துறந்த இளவயது அவதூத துறவியான தத்தாத்ரேயரை சந்தித்து, நீங்கள் எந்த செயலையும் செய்யாமலேயே மிகவும் ஆழமான தெளிந்த நல்லறிவு உங்களுக்கு எப்படி கிடைத்தது, எதை ஆதாரமாகக் கொண்டு சிறந்த அறிவாளியான தாங்கள் ஒரு சிறுவனைப் போல் மகிழ்ச்சியாக உலகத்தில் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவதூதர் தான் யார் யார் மூலம் எத்தகைய அறிவு (ஆத்ம ஞானம்) பெற்றதாக விவரிக்கிறார்.

அவதூத சந்நியாசி, 22 குருமார்கள் மூலம் பெற்ற ஞானம்

தொகு

1. பூமியிடமிருந்து, பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் குணத்தையும்;


2. வாயுவிடமிருந்து, உயிர் நிலைப்பதற்கு போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்ற அறிவும்;


3. ஆகாயத்திடமிருந்து, பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ஞானத்தையும்; நீரிடமிருந்து தூய்மையும்; அக்கினியிடமிருந்து குற்றமுடையது என்று எததையும் ஒதுக்கித் தள்ளாத மனநிலையும்;


4. சந்திரனிடமிருந்து, சட உடல் தோன்றி மறைந்தாலும், ஆத்மா மறைவது இல்லை என்ற ஞானத்தையும்;


5. சூரியனிடமிருந்து, ஒரு பொருளைப் வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் ஒட்டுதல் இல்லாமல் யோகி இருக்க வேண்டும் என்ற ஞானத்தையும்;


6. புறாவிடமிருந்து, முக்தியை அடைவதாற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்ற மனித உடலை அடைந்தும், புறாவைப் போல் உலகப்பற்றில் (பந்த பாசத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள் முக்தியை அடைய முடியாது என்ற ஞானத்தையும் அடைந்ததாக அவதூதர், யது மன்னரிடம் கூறினார்.


7. மலைபாம்பு மூலம், யோகி தானாக எது கிடைகிறதோ, அதையே உண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற ஞானமும்;


8. கடலிடமிருந்து, ஒரு ஆத்ம ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், நிறைவேறாதபோது தளர்ந்தும் போய் கலக்கம் அடையக்கூடாது என்ற ஞானமும்;


9. விட்டில்பூச்சி மூலம், மாயையால் படைக்கப்பட்ட பொருட்களில் மயங்கி தன் அறிவை இழந்து, அவைகளில் வீழ்ந்து விட்டில் பூச்சி அழிந்து விடுகிறது. எனவே மாயையில் மயக்கம் கொள்ளக்கூடாது என்ற ஞானமும்;


10. தேனீ இடமிருந்து, வயிற்றுத் தேவைக்கு மேல் ஒரு ஞானி பிச்சை எடுக்கக் கூடாது என்றும் மற்றும் சாத்திர நூல்களிலிருந்து சாரமான தத்துவங்களை மட்டும் மனதில் பதிந்து கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்;


11. ஆண் யாணை மூலம், ஞானிகள் பெண்களிடம் மயங்கக் கூடாது என்ற ஞானத்தையும்;


12. தேன் எடுப்பவன் மூலம், சம்சாரியின் செல்வத்துக்கு முதன்மை உரிமையாளர் துறவிதான் என்ற ஞானத்தையும்;


13. மான் மூலம், காட்டில் வாழம் துறவி ஒருபோதும் உலக இன்பங்கள் தொடர்பான பாடல்கள் கேட்கக் கூடாது என்ற ஞானத்தையும்;


14. மீன் மூலம், நாக்கை (உணவின் மீது ஆசை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்;


15. பிங்களா என்ற வேசி மூலம், பகவான் எனக்கு அருளிய நல்லறிவை ஏற்றுக்கொண்டு, உலக காமபோகங்களைத் துறந்து, பகவானை சரணடைய வேண்டும் என்ற ஞானத்தையும் அடைந்தாக கூறினார் அவதூதர்.


16. குரர பறவையிடமிருந்து தேவைக்கு அதிகமாக பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது என்ற அபரிக்கிரகம் எனும் ஞானம் அடைந்ததாக கூறினார் அவதூதர்.


17. பச்சிளம் குழந்தையிடமிருந்து பெற்ற ஞானம்: மான-அவமானம் என்ற வேறுபாடு கொள்ளக்கூடாது, பச்சிளம் குழந்தையைப்போல், தன்னிலேயே ஆனந்தப்பட வேண்டும் என்ற ஞானம். உலகத்தில் கவலைகள் இல்லாமல் எப்போதும் பரமானந்தத்தில் மூழ்கி இருப்பவர் இருவர். ஒருவர் சூது வாது இல்லாத, வேற்றுமை உணர்வற்ற, காரணமின்றி மகிழ்ச்சியில் இருப்பது பச்சிளம் குழந்தை. குணங்களையெல்லாம் கடந்த ஞானி.


18. கன்னிப் பெண்னிடமிருந்து பெற்ற ஞானம்; பலருடன் சேர்ந்து வாழ்ந்தால் சண்டை-சச்சரவு ஏற்படும், இரண்டு பெண்கள் இருந்தால் வீண் பேச்சு வளரும். ஆகவே, ஞானி பெண்னின் கை வளையலைப் போல தனியாக இருக்க வேண்டும். யோகியானவன், ஆசனத்தையும் மூச்சுக்காற்றையும் வென்று, வைராக்கியத்தை இடைவிடாத பயிற்சி செய்து, சலனமில்லாத மனதை ஒரே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும்.


19. வில்லாளியிடம் கற்ற ஞானம்: வில்லாளி அம்பு செலுத்தும் போது தன் பார்வை சிதறாதவாறு இலக்கை குறி பார்த்து அம்பு எய்வது போன்று ஞானியும் தன் மனதை பரப்பிரமம்த்திடம் வைத்திருக்க வேண்டும். முனிவன் தனித்து இருக்க வேண்டும். கூட்டத்தோடு சேரக்கூடாது. சொந்தமான இருப்பிடம் கூடாது. எதிலும் கவனமாக இருக்க வேண்டும். மலைக்குகைக்குள் வசிக்க வேண்டும். தனது ஆசார அனுஷ்டானங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும். குறைந்த அளவே பேச வேண்டும்.


20. பாம்பிடம் ஞானி கற்ற பாடம்: உடலோ சிறிது காலமே இருப்பது; அது தங்குவதற்கு திட்டமிட்டு பெரிய வீடு கட்டுவது, துக்கத்தின் தொடக்கம். பிற உயிர்களால் கட்டிய வீட்டில் (கரையான் புற்று அல்லது எலி வலை) பாம்பு குடிகொண்டு சுகமாக வாழ்கிறது. அது போன்று ஞானியும் தனக்கென வீடு கட்டிக் கொண்டு வாழாமல் மரத்தடி, குகைகள் போன்ற இடங்களில் தங்க வேண்டும்.


21. சிலந்திப்பூச்சியிடமிருந்து கற்ற ஞானம்: சிலந்திப்பூச்சி, தன் உடலிருந்து வாய் வழியாக நூலைக் கொண்டு வந்து வலையைப் பின்னுகிறது. பின்பு தானே அதை தன் வாய்க்குள் இழத்துக் கொள்கிறது. பகவானும் தான் படைத்த உலகங்களையும், சீவராசிகளையும் ஊழிக் காலத்தில் தன்னில் இழத்துக் கொள்கிறான் என்ற ஞானம்.


22. குளவி (வண்டு) இடமிருந்து கற்ற ஞானம்: கூட்டில் புழு நிலையில் இருக்கும் (வண்டு) (இங்கே வந்து மாட்டிக்கொண்டோமே என்று பயந்து பயந்து) அதையே நினைத்துக் கொண்டிருந்தது. அதன் விளைவாக தன் உடலை விடாமலே, தானும் வண்டாக மாறிவிடுகிறது. இந்த குளவிப் போன்றே பகவானையே நினைத்துக் கொண்டு இருக்கும் பக்தன், ஈஸ்வர வடிவாக - சீவன் முக்தனாக ஆகிவிடுகிறான்.


பின் தன்னுடைய உடல் மூலம் கற்றுக் கொண்ட ஞானத்தை கூறுகிறார்: இந்த உடலுக்கு பிறப்பு-இறப்பு தன்மை உடையது. மிகவும் துன்பம் தரக்கூடியது. விவேகம் - வைராக்கியத்தால் “இந்த உடல் பிறர்க்குரியது” (இந்த உடல் நான் அல்ல) என்ற உறுதியான அறிவு உண்டாகிறது. அதனால்தான் நான் இந்த உடலில் பற்று கொள்ளாதவனாக நடமாடிக் கொண்டு இருக்கிறேன் என்று, தான் பெற்ற ஞானத்தின் விவரங்களை மன்னர் யதுவிடம் எடுத்துரைத்தார் அவதூதர்.

ஆதார நூல்கள்

தொகு
  • ஸ்ரீமத் பாகவத புராணம், ஏகாதச ஸ்கந்தம்.
  • உத்தவ கீதை, கீதா பிரஸ், கோரக்பூர்.

வெளி இணைப்புகள்

தொகு
  • சுவாமி குருபரானந்தரின் உத்தவ கீதை தமிழ் சொற்பொழிவு [[1]]

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவதூத_கீதை&oldid=1852864" இலிருந்து மீள்விக்கப்பட்டது