இராமானுசர்

(இராமானுஜர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இராமானுசர் (இராமானுஜர், பொ.ஊ. 1017-1137) [1] இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். அண்மைக் காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்று சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப் பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.

இராமானுஜரின் சமத்துவ சிலை, ஐதராபாத், தெலங்காணா
இராமானுசர் சன்னிதி, ஶ்ரீரங்கம்
இராமனுஜர் மணிமண்டபக் கோயில், எருமாபாளையம், சேலம்

ஆச்சாரிய பரம்பரை தொகு

பொ.ஊ. ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு பக்திநெறி பரப்பியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மக்களை வழிநடத்தியவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைணவர்கள் நம்பிக்கை. பின்னர் ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன் ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர்.

சித்தித்ரயம்: இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது.

ஆகம ப்ராமாண்யம்: இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம்.

மஹாபுருஷ நிர்ணயம்: இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன்தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது.

கீதார்த்த சங்கிரகம்: இது கீதைக்கு பொருளுரை.

யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவரே என்று உலகுக்குக் காட்டியவர்.

சீடரின் சபதம் தொகு

யமுனாச்சாரியாரின் அழைப்பை பெரிய நம்பிகள் மூலம் கேள்வியுற்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடி வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாத நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன. அந்த பிரமாணங்களாவன:

• பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஓர் உரை எழுதுவது;

• விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரரின் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;

• வேதத்தை தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர் உலகில் என்றென்றும் வாழும்படி செய்வது.

இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100-ஆம் ஆண்டு முடித்தார். பராசரர், வேதவியாசர் இருவரது பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் பிள்ளைகளுக்கு இட்டார். பராசரர் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது. மூன்றாவதாக தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவி இருக்கும்படி செய்தார்.

கருணைக்கடல் தொகு

யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவரும் கேட்கும்படி மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடும் என்றார். அதற்கு இராமானுசர், எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கும் செல்வதும் பாக்கியமே என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே "எம்பெருமானார்" என்று மகிழ்ச்சியினால் ஆலிங்கனம் செய்துகொண்டார்.

நிர்வாகி தொகு

இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; நல்ல நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்குமுறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகள் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியதுதான். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கநாதன் இராமானுசரை "உடையவர்" என அழைத்தார்.

வைணவத்தின் பரவல் தொகு

இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதிமுறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையே, இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே பின்னர் வந்த காந்திமகானும் "ஹரிஜன்" என்றார்). தமிழ்ப் பாசுரங்களை ஓதி வைணவச் சின்னங்களைத் தரிக்கும் எல்லோரும், அவர் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ, வைணவர்கள் என்று அனைவரும் ஏற்கச் செய்தார்.

நூல்கள் தொகு

வட மொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை:

வேதாந்த சங்கிரகம். இது உபநிடதத் தத்துவங்களை விவரித்துச் சொல்கிறது.

வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம்: இவை பிரம்ம சூத்திரத்தைப் பற்றிய சுருக்கமான உரைகள்.

கீதா பாஷ்யம். இது பகவத் கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.

நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.

கத்யத்ரயம். இவை மூன்று உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. வைகுண்ட கத்யம் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

இராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளை தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை ஏற்படுத்திய பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.

இராமானுசருக்குப் பின் தொகு

இராமானுசருக்குப் பின் ஆச்சாரியராக வந்தவர் கூரத்தாழ்வாரின் மகனாகிய பராசர பட்டர். இராமானுசர் தன்னுடைய வடமொழிப் புலமையையும், வேதாந்தக்கடலில் தான் கடைந்தெடுத்த முத்துக்களையும் ஆழ்வார்களின் பக்திவெள்ளப் பெருக்குடன் இணைத்து விசிஷ்டாத்வைதத்தை அமைத்தார். ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் வடமொழி நூல்கள், ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்கள் இவையிரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கொள்கையில் வேறுபாடுகள் ஏற்பட்டு வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. தத்துவத்திலும் சில வேறுபாடுகள் தலைப்பட்டன. ஆனால் இரு சாராரும் இராமானுசர் என்ற பெயருக்கும் அவருடைய நூல்களுக்கும் உயர்ந்த மதிப்பு தருவதில் ஒருவரையொருவர் மிஞ்சுவர். ஒவ்வொரு வைணவக் கோயிலிலும் இராமானுசரின் கைகூப்பிய சிலை ஆண்டவன் சன்னிதியில் இருப்பதை இன்றும் காணலாம். வைணவத்தின் உட்பிரிவுகள் மட்டுமல்ல, இந்து சமய உலகத்தின் எந்தப்பிரிவிலும், ஆண்டவனைத் தொழும்போது ‘கடவுள் அனந்த கல்யாண குணங்களைப் பெற்றவன், அடியேன் ஒரு சின்னஞ்சிறு துளியிலும் துளி’ என்ற அடிப்படை மனப்பான்மை இருத்தல் வேண்டும் என்ற கோட்பாடு இராமானுசர் இட்டுச்சென்ற அழியாத முத்திரையே.

வட நாட்டிலும் தொகு

இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமாநந்தர் விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ரவிதாசர்தான் இராசபுதனத்து மீரா பக்தி மார்க்கத்தில் ஈடுபடக் காரணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

தொலைக்காட்சித் தொடர் தொகு

இராமானுஜர் பற்றிய தொலைக்காட்சித்தொடருக்கு நாத்திகவாதியாக தன்னை அடையாளப்படுத்தி வந்தவரும் முன்னாள் தமிழ் நாடு முதல்வருமாகிய மு. கருணாநிதி வசனம் எழுதியதை பலரும் விமர்சித்துள்ளனர்.[2]

இவற்றையும் பார்க்க‌ தொகு

துணை நூல்கள் தொகு

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுசர்&oldid=3860161" இலிருந்து மீள்விக்கப்பட்டது