பதஞ்சலி யோகசூத்திரம்

பதஞ்சலி யோகசூத்திரம், பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. சமாதி, 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 196 சூத்திரங்கள் கொண்டது.

பதஞ்சலி முனிவர்

யோக சூத்திரத்தின் சிறப்பு

தொகு

யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல், அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே. ஒற்றை வரியில் சொல்லப்போனால் 'மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக' யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும்.

யோக சூத்திரத்தின் உரைநூல்கள்

தொகு

பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக வியாசர் யோகத்தைக் காண்கிறார் . வாசஸ்பதி மிஸ்ரர்ரின் 'விசாராதி ' என்ற உரையும் புகழ் பெற்றது .

இயற்றியவரும் இயற்றப்பட்ட காலமும்

தொகு

இயற்றியவர்

தொகு

யோக சூத்திரம் குறித்த ஏற்கனவே இருந்த அறிவையும் விவரங்களையும் சேகரித்து உணர்ந்து கி மு 400 ஆண்டிற்கு முன்பே பதஞ்சலி முனிவர் தொகுத்து வழங்கியுள்ளார்.[1][2][3] 40 இந்திய மொழிகள், இரண்டு வேற்று மொழிகள் பழைய ஜாவா மற்றும் அரபிக் உட்பட 40க்கு மேற்பட்ட மொழிகளில் அதிகப்படியாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் ஆகும்.[4] பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் 12ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 700 ஆண்டுகள் வழக்கிலிருந்து மறைந்து போயிருந்தாலும், விவேகானந்தரின் முயற்சியாலும் தீசாபிகல் சங்கத்தின் முயற்சியாலும் 19ஆம் நூற்றாண்டு இறுதியில் புத்துயிர் பெற்று வழக்கத்திற்கு வந்தது என்று டேவிட் கோர்டன் குறிப்பிடுகிறார்.[5] 20ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இடைக்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் அல்லாமல் பல்வேறு யோகங்கள் குறிப்பாக பகவத் கீதை, யோக வசந்தம், ஹத யோகம், தஸ்த்ரிக் யோகம் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன. 20ஆம் நூற்றாண்டில் யோகம் பயில்பவர்கள் பதஞ்சலியின் யோக சூத்திரத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தலையாய இடத்தைப் பெற்றுத் தந்தனர். [6]

இந்து ஆச்சார வழக்கத்தின்படி பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் யோக தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.[7] இருந்தாலும் பிற்காலத்தில் யோக வழிமுறைகளின் மீது பதஞ்சலி முனிவரின் யோக சாத்திரத்தின் தாக்கம் குறித்து பல விதமான கருத்துக்கள் நிலவி வருவதாக டேவிட் கோர்டன் வைட் கூறுகிறார். யோக சூத்திரம் பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.[8][9] பதஞ்சலி முனிவர் என்னும் பெயர் குறித்து பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. சமஸ்கிருத மொழியில் இலக்கண நூல் ‘மகாபாஸ்யம்’ மும் பதஞ்சலி முனிவர் என்பவரால் எழுதப்பட்டது என்று கூறுவர். இருவரும் ஒருவரா அல்லது வேறு நபர்களா என்பது குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

இயற்றப்பட்ட காலம்

தொகு

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம், முதலாம் நூற்றாண்டில் இதற்கு எழுதிய உரையின் அடிப்படையிலும் மற்ற இலக்கியங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் கிமு 400 ஆண்டு வாக்கில் எழுதப் பட்டிருக்கலாம் என்று பிலிப் ஏ மாஸ் என்பவர் மதிப்பிடுகிறார்..[10] எட்வின் பிரயனட் இவை சுமார் பல வல்லுனர்களால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் கி பி நான்காம் நூற்றாண்டில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். [11] மிசலி டெஸ்மரிஸ் இந்த யோகசூத்திரம் கிமு 500 லிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்."[12]

1.சமாதி பாதம்

தொகு

பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதலில் சொல்லப்பட்ட பாதம் சமாதி பாதம் ஆகும்.இது 51 சூத்திரங்களைக் கொண்டது.ஐந்துவித எண்ணங்களான பிரமாண, விபா்யய, விகல்ப, நித்ரா மற்றும் ஸ்மிருதி பற்றி விளக்கி அவற்றை பயிற்சி, பற்றின்மையால் அடக்க வழி சொல்லப்படுகிறது.

2.சாதனா பாதம்

தொகு

இது 55 சூத்திரங்களைக் கொண்டது. இந்த பாதத்தில் சித்த சுத்திக்கான கிாியா யோகம் விளக்கப்பட்டுள்ளது. கா்மா, கா்ம பலன் பற்றியும் முக்குணங்களின் மாறுதலான 24 தத்துவங்களான பிரகிருதி பற்றியும் கூறப்பட்டுள்ளது.

சித்தத்தின் ஐந்து நிலைகள்

தொகு

நிருத்தம்' என்ற சமாதி நிலையை அடைய இருப்பவன் அதற்கு முன் சித்தத்தின் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியவனாகிறான். அவை 1.சிஃப்தம் 2.முத்தம் 3.விசிஃப்தம் 4.ஏகாக்ரகம். இந்த நான்கு நிலைகளைக் கடந்தவனுக்கு 5வது நிலையான நிருத்தம் என்கின்ற சித்த விருத்திகள் அடக்கப்பட்ட மனநிலை கிடைக்கும் [13] .

மூன்று வகை பிரமாணங்கள்

தொகு

1.பிரத்யட்ஸம்- ஐம்புலன்கள் மூலம் நாமே நேரடியாகக் கண்டறிவது. இது உண்மை அறிவாகும். 2.அனுமானம்(ஊகம்)- உண்மையறிவைத் தரக்கூடிய இது பொருள்களிடையே உள்ள ஒருபடித் தன்மையை சாா்ந்தது. 3.ஆகமம்- சப்தப் பிரமாணம் என்றும் கூறுவாா்கள். உண்மையை நோில் கண்டறிந்த சான்றோா்களின், ரிஷிகளின் சுய அனுபவ வேதவாக்கும் வேதவேதாந்தமும் ஒன்று என்பதால் ஆப்தா்களின் வாக்காலேயே வேதம் உண்மையாகிறது.[13]

அஷ்டாங்க யோகம்

தொகு
 
பதஞ்சலி யோகபீடத்தில் பதஞ்சலி முனிவரின் சிலை

பதஞ்சலி முனிவர் முதல் சூத்திரத்தில் இந்நூலின் குறிக்கோளையும் இரண்டாவது சூத்திரத்தில் யோகம் என்பதற்கு விளக்கமும் கூறுகிறார்.விவேகானந்தர் சித்தத்தை பல எண்ணங்களில் சிதற விடாமல் ஒருமுகப் படுத்துவது யோகம் என்று குறிப்பிடுகிறார்."[14]

பதஞ்சலி முனிவர் வாழ்க்கையின் குறிக்கோளாக ‘சித்த விருத்தி நிரோதக யோகக’ என்று குறிப்பிடுகிறார். மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் யோகம், இது தான் லட்சியம் என்று குறிப்பிடுகிறார்.[15]

மனம் ஒரு கருவி இது பல காரியங்களைச் செய்கிறது. முதலில் ஐம்புலன்களின் பின் நின்று அவைகளின் மூலமாக அறிவைப் பெற கருவியாக அமைகிறது. பின் தானாகவே சிந்தித்தும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. தன்னையே சுத்தப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. தானே செயலைச் செய்பவனாகவும் (கர்த்தா), பலனை அனுபவிப்பவனுமாக ( போக்தா) அனுமானம் செய்து கொள்கின்றது. இப்படிப்பட்ட மனதை அஷ்டாங்க யோகத்தினால் நெறிப்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பதஞ்சலி முனிவர் இன்னூலில் குறிப்பிடுகிறார்.

எட்டு அங்கங்கள்

தொகு

[15]

  • யமம்: யமம் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஐந்து நடவடிக்கைகள். இவைகள் அனுசரிக்கப்பட வேண்டியவைகளாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
  1. அஹிம்சை: பிறரை மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தாமை.
  2. வாய்மை: எப்பொழுதும் வாய்மையுடன் இருக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது . இதனை மூன்று நிலைகளில் அனுசரிக்க வேண்டும். முதலில் நிகழ்ந்ததைக் கூறுதல். எதைப் பார்த்தோமோ அல்லது கேட்டோமோ அதனைக் கூறவேண்டும். இரண்டாவதாக நிகழ்ந்ததைக் கூறாமலிருத்தல். நிகழ்ந்ததைக் கூறுவதைக் கேட்பவருக்குத் தகுதியில்லை என்றால் மெளனம் சாதிக்கலாம். நிகழ்ந்ததைக் கூறவேண்டியதில்லை. மூன்றாவதாக பொது நன்மைக்காக நிகழ்ந்ததை மாற்றியும் கூறலாம். இதைத் தான் வள்ளுவரும் "பொய்மையும் வாய்மையிடத்து" என்று கூறுகிறார். ஆகவே சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் இதனைக் கையாள வேண்டும்.
  3. களவாமை: மற்றவர்களுடைய பொருளைக் களவாடாமை
  4. பிரம்மசாரியம்: பிரம்மச்சாரியம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. வேதம் விதித்தபடி வாழ்வது என்றும் உடலாலும் மனதாலும் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளாமை என்றும் பொருள்படும். மாணவர்கள் கல்வி பயிலும் போதும் துறவிகளும் இம்முறையை அனுசரிக்க வேண்டும்.
  5. அபரிகிரகா: தேவைக்கு மேல் பொருள்களின் மீது ஆசைப்படாமை, கையாளாமை. மற்றும் பொருள்கள் என்னுடையது என்ற எண்ணத்தைத் துறத்தலும் ஆகும். குறிப்பாக பேராசை கொள்ளாமையும் ஆகும்.
  • நியமம்: கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்
  1. செளச்சம்: தூய்மை மனம் வாக்கு உடல் ஆகிய மூன்றிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறான எண்ணங்களை எண்ணுவதோ, பேசுவதோ அல்லது தவறான செயல்களைச் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும். உடலைப் பொருத்தவரை உடல் ஆடை முதலியவைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  2. சந்தோசம்: இதற்கு திருப்தி என்று பொருள். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற எண்ணம் வேண்டும். இதனால் மனிதன் முயற்சியே செய்யாமல் வாழவேண்டும் என்று பொருள் அல்ல. கர்ம யோகத்தின் மூலம் கர்த்தாவாக செயல் செய்பவனாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஆனால் பலனை அனுபவிக்கும் பொழுது திருப்தியான அணுகுமுறையை அனுசரிக்க வேண்டும்.
  3. தவம்: தவம் என்பது ஒரு பொதுச்சொல். நற்பண்புகளை அடையவும் தீய பண்புகளை நீக்கவும் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் தவம் எனப்படும்.
  4. சுவாத்யாயம்: வேதங்களைப் படித்தல். வேதங்களைப் படித்து அதனை நன்கு கிரகித்து, உணர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். வேதத்தின் மந்திரங்களைப் படிப்பதும் நன்கு உணர்ந்து கொள்வதும் இதனுள் அடங்கும். ஆன்மீக வாழ்விற்கு எந்த நூல்கள் உதவி செய்யுமோ அவற்றைப் படித்துப் பயன் பெற வேண்டும்.
  5. ஈஸ்வரப் பிரனிதானம்: இறைவழிபாடு: ஒவ்வோருநாளும் இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும். இறைவனிடம் என்ன கேட்கவேண்டும் என்று எண்ணும் பொழுது மேலே கூறிய நற்பண்புகளையும் செயல்படுத்தும் சக்தியை வேண்டும் என்று கேட்கலாம். இவ்வாறு இறைவனிடம் வழிபடும் பொழுது நாமே இப்பண்புகளை நினைவு படுத்திக் கொள்வது மற்றொரு பயனாகும்.
  • ஆசனம்: ஆசனம் என்பது எப்படி அமர்வது என்றும், எதன் மீது அமர்கிறோம் என்ற இருக்கை ஆகிய இரண்டையும் குறிக்கும். பதஞ்சலி முனிவர் எப்படி அமர்வது என்று குறிப்பிடுகிறார். திடமாகவும் சுகமாகவும் இருக்கும் படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேலும் ஆசனங்கள் என்பது உடற்பயிற்சிக்காக செய்யும் ஆசனங்களையும் குறிக்கும் இவை யோகாசனம் எனவும் குறிப்பிடப்படும்.
  • பிரணாயாமம்: மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவது: மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஸ்தூல உடலையும், சூட்சும மனதையும் இணைக்கும் கருவியைக் கட்டுப்படுத்துவதாகும். மூச்சுக்காற்றை ஒழுங்கு படுத்துவது, முறைப்படுத்துவது என்பது மிகத் தீவிரமான பயிற்சியிலிருந்து சாதாரணமான பயிற்சிகள் வரை பலவிதமாக வேறுபடும். தீவிர மூச்சுப் பயிற்சியை நன்கு பயின்ற ஒருவரின் மேற்பார்வையில் தான் செய்ய வேண்டும். ஆனால் சாதாரணமான மூச்சுப்பயிற்சி எவரும் செய்யலாம். தமது மூச்சுக்காற்றை மெதுவாக வெளியிட்டு பின்பு மெதுவாக உள்ளே இழுக்கலாம் இப்பொழுது மூச்சை நன்கு கவனிக்க வேண்டும். இது போன்ற எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் சுவாசம் தொடர்பான நோய்கள், பசியின்மை போன்றவை குணமாக வாய்ப்புண்டு. அதிகமாக உறக்கம் வரும் பொழுது உறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இது உதவும்.
  • பிரத்தியாகாரம்: பிரத்தியாகாரம் என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவது ஆகும். அறிவைக் கொடுக்கும் ஐம்புலன்களான மெய்,வாய்,செவி,மூக்கு,கண் முதலியனவைகளையும் செயல் புலன்களான, கை,கால்,வாக்கு முதலியனவைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும். ஐம்புலன்களை மூன்று செயல்களுக்குப் பயன்படுத்தலாம். அவை அன்றாட நடைமுறை செயல்களுக்காக அதாவது வியவாகரம், வாகனம் ஒட்டும் பொழுது பார்ப்பது போன்றவை, இரண்டாவதாக இன்பத்திற்காக மூன்றாவது நல்லவைகளுக்காக. வியவாகரத்திற்காக இவைகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. ஆனால் இன்பத்திற்காகப் பயன்படுத்தும் பொழுது இவைகளை நல்லவைகளுக்காகப் பயன்படுத்த இயலாமல் போய்விடும். அதலால் இன்பத்திற்காகப் பயன்படுத்துதல் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
  • தாரணம்: ஒரு இடத்தில் மனதை பொருத்துதல். சூட்சுமமான இடங்களில் மனதைப் பொருத்துவது கடினம். ஆதலால் ஒரு தூலமான இடத்தை அனுமானம் செய்து கொண்டு அதனை அடையாளமாக வைத்து அதன் மேல் மனதைப் பொருத்துதல் தாரணம் எனப்படும். இது ஆலம் பனம் எனவும் அறியப்படும்
  • தியானம்: ஆலம்பன இடத்தில் பொருந்திய மனதை தொடர்ந்து அங்கேயே நிலை நிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம் எனப்படும். பல எண்ண ஒட்டங்கள் வந்து நிலைநிறுத்தும் முயற்சியை சிதறச் செய்யும். அவற்றைக் கடந்து நிலை நிறுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்வது தான் தியானம் எனப்படும்
  • சமாதி: தியானத்தில் ஒரு முகப்படுத்திய மனதை அதே நிலையில் தொடர்ந்து வைத்தல் சமாதி ஆகும்

வெளி இணைப்புகள்

தொகு
  1. Wujastyk 2011, ப. 33.
  2. Feuerstein 1978, ப. 108.
  3. Tola, Dragonetti & Prithipaul 1987, ப. x.
  4. White 2014, ப. xvi.
  5. White 2014, ப. xvi-xvii.
  6. White 2014, ப. xvi-xvii, 20-23.
  7. Ian Whicher (1998), The Integrity of the Yoga Darsana: A Reconsideration of Classical Yoga, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791438152, page 49
  8. [1]
  9. Surendranath Dasgupta (1992). A History of Indian Philosophy. Reprint: Motilal Banarsidass (Original: Cambridge University Press, 1922). pp. 230–238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0412-8.
  10. Maas, Philipp A. (2006). Samādhipāda: das erste Kapitel des Pātañjalayogaśāstra zum ersten Mal kritisch ediert. Aachen: Shaker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3832249877.
  11. Bryant 2009, ப. xxxiv.
  12. Bryant 2009, ப. 510, notes 43-44.
  13. 13.0 13.1 பதஞ்சலி யோகசூத்ரம்-விளக்கவுரை-ஸ்வாமி-ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்-ஏழாம் பதிப்பு(மே-1995
  14. Vivekanada, p. 115.
  15. 15.0 15.1 வார்ப்புரு:Url:https://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/yoga-sutra/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதஞ்சலி_யோகசூத்திரம்&oldid=4083762" இலிருந்து மீள்விக்கப்பட்டது