நெடுநல்வாடை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
நூற்பொருள்
தொகுஇஃது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன், தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவேதான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.