தமிழர் நிலத்திணைகள்
நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு நிலத்திணை. தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணைகளைக் கொண்டது.[1] முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது [2] அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.
ஐந்திணை
தொகுகுறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
- காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
- இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
- வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
- கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
திணை என்பது ஒழுக்கம். அகத்திணை என்பது அகவொழுக்கம். புறத்திணை என்பது புறவொழுக்கம். தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு ஐந்திணைப் பாகுபாடு கொள்ளப்படுகிறது.
இந்தப் பாகுபாடு ஐந்து வகைப்பட்ட திணை-ஒழுக்கங்களை மையமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. புணர்தல், தலைவன் புறவொழுக்கத்தில் பிரியும்போது தன்னை ஆற்றிக்கொண்டு இருத்தல், தலைவன் தன்னை விட்டு அகவொழுக்கத்தில் பிரியும்போது ஊடுதல், கடலில் சென்றவருக்காக இரங்கல், புறப்பொருளுக்காகப் பிரிதல் என்பன அகத்திணைக்கு அகத்திணை உரிப்பொருள்கள். இவற்றில் திணை மயக்கம் நிகழ்வது இல்லை. [3] எனவே மயங்காத உரிப்பொருளின் அடிப்படையில் இன்ன பாடல் இன்ன திணை எனக் கொள்ளப்படும். எனவே குறிஞ்சித் திணை என்பது 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' பற்றிய செய்திகளைக் கூறுவது என்பது பொருள். பிற திணைகளுக்கும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும். இது தமிழ் நெறி. காண்க; அகத்திணை - புறத்திணை, திணை விளக்கம்
உரிப்பொருள்
தொகுதிணை | உரிப்பொருள் | துறைகள் அல்லது அடையாள நிகழ்ச்சிகள் |
---|---|---|
குறிஞ்சி | புணர்தலும், புணர்தல் நிமித்தமும் | (1) தலைவனும் தலைவியும் முதன் முதலாகச் சந்திக்கை (புணர்தல்)
(2) மீண்டும் மீண்டும் சந்திக்கை (3) சிறுபான்மை அவர்களிடையே மெய்யுறு புணர்ச்சி என்னும் உடல்நிலை உறவு நிகழ்தல் (4) தலைவன் தலைவியைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தல் |
முல்லை | (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும் * ஆனிரையோடு மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நிலத்தியல்பு. * பொருள் தேடச் சென்றவர் மீளும் வரையில் (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது வாழ்க்கை இயல்பு * போருக்குச் சென்றவர் மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நாட்டின் இயல்பு * ஓதல் முதலான பிற பிற பிரிவுகளையும் இங்கு எண்ணிக்கொள்ள வேண்டும். ஓதற்பிரிவு என்பது கல்வி கற்கச் செல்லுதல். | புறப்பொருள் நிமித்தம் பிரிந்த தலைவன் வருகைக்காகத் தலைவி காத்திருத்தல் |
மருதம் | ஊடலும், ஊடல் நிமித்தமும். | அகவொழுக்கப் பிரிவு * வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனிடம் தலைவி பிணக்கிக் கொள்ளுதல் |
நெய்தல் | இரங்கலும் இரங்கல் நிமித்தமும். | முல்லை நிலத்தில் கணவன் திரும்பி வருவது உறுதி என்பதனால் ஆற்றிக்கொண்டு இருத்தல் உரிப்பொருள் ஆயிற்று * கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோரது நிலை அதுவன்று. எனவே மனைவி கவலைப்படுவது இரங்கலாயிற்று. |
பாலை | பிரிதலும், பிரிதல் நிமித்தமும் | பொருள், போர், கல்வி முதலான புறப்பொருள் நிமித்தம் தலைவன் பிரிதலும், தலைவி வாடுதலும் |
நானிலம்
தொகுதிணை | நிலம் |
---|---|
குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த நிலமும் |
முல்லை | காடும் காடு சார்ந்த நிலமும் |
மருதம் | வயலும் வயல் சார்ந்த நிலமும் |
நெய்தல் | கடலும் கடல் சார்ந்த நிலமும் |
தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர்.
ஐந்நிலம்
தொகுமேலே கண்ட நான்கு வகை நிலப் பாகுபாட்டுடன் பருவ மாற்றத்தால் தோன்றும் பாலை நிலத்தையும் சேர்த்து ஐந்நிலம் எனக் கொண்டனர். தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லை.[4] பாலை நிலம் என்பது குறிஞ்சி-நிலத்திலும், முல்லை-நிலத்திலும் தோன்றும் பருவநிலை மாற்றம்.[5] ஐந்நிலம் என்பது ஐந்து வகைப்பட்ட நிலம். ஐந்திணை என்பது ஐந்து வகைப்பட்ட ஒழுக்கம்.
ஐந்திணை நிலவளம்
தொகுஐந்து வகைப்படுத்தப்பட்ட நிலத்தின் வழித்தடப் பாங்கைப் பதிற்றுப்பத்து பாடல் [6] விளக்குகிறது. தொல்காப்பியம், நம்பியகப்பொருள் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் இந்த நிலப்பாகுபாடுகளை விரிவாக எடுத்துரைக்கின்றன.
- குறிஞ்சி - குறிஞ்சி திரிந்து பாலையாகிய நிலம் இப்பாடலில் காட்டப்பட்டுள்ளது.
- முல்லை - இந்த நிலத்து மக்கள் நிலத்தை உழுது வரகும், தினையும் விளைவிப்பர். வழிப்போக்கர்களுக்கு நுவணை என்னும் தினைமாவை விருந்தாகத் தருவர்.[7]
- மருதம் - மருத மரத்தைச் சாய்த்துக்கொண்டு வயலில் பாயும் வெள்ளத்தைத் தடுக்க வயலிலுள்ள கரும்பை வெட்டிக் குறுக்கே போட்டு அணைப்பர். இந்தத் தடுப்பு-விழா முரசு முழக்கத்துடன் நிகழும்.[8]
- நெய்தல் நிலத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வளம் நிறைந்த கானல் என்னும் மணல்-காடு. ஞாழல் மரங்களும், நெய்தல் கொடிகளும் இந்த நிலத்தின் தாவரங்கள். வெண்ணிறச் சிறகு கொண்ட குருகு இந்த நிலத்துப் பறவை.[9] மற்றொன்று மென்புலம். இங்கு அடும்பு கொடிகள் படர்ந்திருக்கும். சங்கு, முத்து, பவளம் ஆகியன விளையும்.[10]
- பாலை
- இதில் குறிஞ்சி நிலம் திரிந்த பாலை ஒருவகை.
- இங்கு வாழும் மக்கள் வேட்டுவர். இவர்கள் தம் தலையில் காந்தள் பூவைக் கண்ணியாகப் பிணைத்துத் தலையில் சூடிக் கொள்வர். வில்லம்பு கொண்டு ஆமான்களை உணவுக்காக வேட்டையாடுவர். யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து ஊர்க் கடைத் தெருவில் 'பிழி' என்னும் தேறலுக்காக விற்பர்.[11]
- முல்லை நிலம் திரிந்த கடறு மற்றொரு வகை.
- இது காடு விளையாமல் வறண்டு கிடக்கும் நிலம். இங்குள்ள மகளிர் ஆண்கள் காலில் அணியும் கழலை வீரத்தின் வெளிப்பாடாக அணிந்துகொண்டு திரிவர்.[12]
ஐந்திணை மனநிலை
தொகு- தமிழ்நாட்டில் பாலை என்று கூறும்படி தனி நிலம் இல்லை. முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் கோடையின் வெப்பத்தால் திரிந்து பாலை என்னும் படிமை நிலையைக் கொண்டிருக்கும். அக்காலத்தில் ஒழுக்க நிலையிலும் திரிவு நிகழும். மழை பொழிந்த பின்னர் பாலை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். குடும்பத்தில் நிகழும் பிரிவும் அத்தகையதே.
- இலக்கண நூல்கள் இந்த மனநிலையை 'உரிப்பொருள்' என்று கூறுகின்றன.
- செய்யுளுக்கு உரிய சொல்லை 'உரிச்சொல்' என்றனர். அது போல செய்யுளுக்கு உரிய பொருளை 'உரிப்பொருள்' என்றனர். எண்ணிப்பார்த்தால் புணர்தல் என்பது மலைவாழ் மக்களுக்கு மட்டும் உரிய பொருள் அன்று என்பது விளங்கும். அதுபோலவே பிற உரிப்பொருள்களும் அமையும்.
- எனவே உரிப்பொருளைச் செய்யுள் இலக்கணத்தின் மனநிலைப் பாகுபாடு என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஐந்திணைப் பொழுதுகள்
தொகு- பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். ஓர் ஆண்டின் ஆறு பருவகாலத்தைக் குறிப்பது 'பெரும்பொழுது'.
- ஒரு நாளின் ஆறு பிரிநிலைக் குறியீடுகளைக் குறிப்பது 'சிறுபொழுது'
சிறுபொழுது | மணி (24 மணி கணக்கீடு)(60 நாழிகை என்பது ஒரு நாள்) (24 நிமிடம் என்பது ஒரு நாழிகை) |
---|---|
காலை | 6 முதல் 10 மணி |
நண்பகல் | 10 முதல் 14 மணி |
எற்பாடு | 14 முதல் 18 மணி |
மாலை | 18 முதல் 22 மணி |
யாமம் | 22 முதல் 2 மணி |
வைகறை | 2 முதல் 6 மணி |
பெரும்பொழுது | கால எல்லையைக் குறிக்கும் வழக்கிலுள்ள தமிழ்மாதப் பெயர்கள் |
---|---|
இளவேனில் | சித்திரை, வைகாசி |
முதுவேனில் | ஆனி, ஆடி |
கார் | ஆவணி, புரட்டாசி |
கூதிர் (குளிர்) | ஐப்பசி, கார்த்திகை |
முன்பனி | மார்கழி, தை |
பின்பனி | மாசி, பங்குனி |
- தொல்காப்பிய அடிப்படையில் திணைகளுக்குத் தரப்பட்டுள்ள பொழுதுகள் வருமாறு;
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது | தொல்காப்பிய நூற்பா |
---|---|---|---|
குறிஞ்சி | கூதிர், முன்பனி | யாமம் | 952 |
முல்லை | கார், முன்பனி | மாலை | 952 |
மருதம் | - | வைகறையாகிய விடியல் | 954 |
நெய்தல் | - | எற்பாடு (ஏற்பாடு) | 954 |
பாலை (நடுவுநிலைத் திணை) | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் | 955, 956 |
கருவிநூல்
தொகு- பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், வே. சாமிநாதைய்யர் பதிப்பு, 1920
- தொல்காப்பியம், தமிழ் இலக்கண நூல்கள், மூலம் முழுவதும் - குறிப்பு விளக்கங்களுடன், பதிப்பாசிரியர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன், 2007
அடிக்குறிப்பு
தொகு- ↑ அவற்றுள், | நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் | படுதிரை வையம் பாத்திய பண்பே. (தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா 2)
- ↑ சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம் காடுகாண் காதை அடி 66
- ↑ உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்காப்பியம் 3-15)
- ↑
அவற்றுள்,
நடுவண் ஐந்திணை, நடுவணது ஒழிய,
படு திரை வையம் பாத்திய பண்பே (தொல்காப்பியம் 3-2) - ↑
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து,
பாலை என்பது ஒரு படிவம் கொள்ளும்
காலை - ↑ பதிற்றுப்பத்து 30
- ↑
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை,
மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்; (பதிற்றுப்பத்து 30) - ↑
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது,
அரி கால் அவித்து, பல பூ விழவின்
தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று,
வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச்
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்
செழும் பல் வைப்பின் பழனப் பாலும்; (பதிற்றுப்பத்து 30) - ↑
இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை,
மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல்
பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை
வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும்
அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை, (பதிற்றுப்பத்து 30) - ↑
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடற் படப்பை மென்பாலனவும்; (பதிற்றுப்பத்து 30) - ↑
- காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்
செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட
மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன் புல வைப்பும்; (பதிற்றுப்பத்து 30)
- காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்
- ↑
பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி,
அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு,
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்; (பதிற்றுப்பத்து 30)
வெளி இணைப்புகள்
தொகுதமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |