கலித்தொகை
கலித்தொகை (ஆங்கிலம்: Kalittokai) சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர், தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
பதிப்பு வரலாறு
தொகுகலித்தொகை நூலை முதன்முதலில் சி. வை. தாமோதரம்பிள்ளை 1887-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக " நல்லந்துவனார் கலித்தொகை" என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன் பின்னர் பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும் வேறு நூல்களை ஆராய்ந்தும் உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ. வை. அனந்தராமையர் 1925-ஆம் ஆண்டு பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும் கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம்.
தொகுப்பு
தொகுகலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது எனக் கீழ் வரும் இரு பாடல்களின் உதவியுடன் அறியலாம்.
பாடல் 1
தொகுஇன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்
கல்விவலார் கண்ட கலி.
கலித்தொகை நூலில் உள்ள
- பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ ( 35 பாடல்கள்)
- குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர் (29 பாடல்கள்)
- மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் மருதன் இளநாகனார் (35 பாடல்கள்)
- முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் (17 பாடல்கள்)
- நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவன் (33 பாடல்கள்)
இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.
பாடல் 2
தொகுஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்
போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்
புல்லும் கலிமுறைக் கோப்பு.[1]
இதில் சொல்லப்பட்டவை:
தலைவன், தலைவி
பிரிதல் போக்கு - பாலை
புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி
இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம்
நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை
இரங்கிய போக்கு - நெய்தல்
பாடல்கள்
தொகு
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
குறிஞ்சிக்கலி
தொகுபுணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும். குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அமைந்து படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளன.
"சுடர்த்தொடீஇ கேளாய்"
என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் 51-ஆம் பாடல் ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்து இன்பம் பயப்பதாகும். இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின் முன்னோடியாகக் கூறப்படுகிறது.
முல்லைக்கலி
தொகுமுல்லைக்கலிப் பாடல்கள், தலைவனோடு மனத்தால் ஒன்றுபட்டு இருந்த தலைவி தலைவன் பிரிந்து சென்ற போது இல்லிருந்து தன்மனதை ஆற்றியிருத்தலைக் கூறுகின்றன. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச் சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
மருதக்கலி
தொகுபரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும் அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும் தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.
நெய்தற்கலி
தொகுபிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும்
பாலைக்கலி
தொகு'உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந்துயரம் கண்ணீா் நினைக்கும் கடுமை காடு' எனப் பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும் தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கிய கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும்.
கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்
தொகு
'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறைவு எனப்படுவது மறைபிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
(கலி ,133) [2]கலித்தொகை காட்டும் சமூகம்
தொகுகளிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றிச் செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.
வரலாற்று, புராணச் செய்திகள்
தொகுகலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையைப் பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு
- கலித்தொகை நூல் உரை - எட்டுத்தொகை நூல்கள்
- பாடல்கள் பரணிடப்பட்டது 2005-03-15 at the வந்தவழி இயந்திரம்
அடிக்குறிப்புகள்
தொகு
- ↑ அகத்திணை வாய்பாட்டுப் பாடல்
- ↑ மது.ச. விமலானந்தம் (2020). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். p. பக்க எண். 45.
{{cite book}}
: Unknown parameter|மொழி-=
ignored (help)