பாலைக்கலி
சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாலைத்திணைக் கலிப்பாப் பாடல்களை பாலைக்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 35. இவை கலித்தொகை நூலில் 2 முதல் 36 எண்ணுள்ள பாடல்களாக முதல் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ
தலைவன் தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்லும் பிரிவோடு தொடர்புடைய செய்திகளைக் கூறுவது பாலைத்திணை.
பலரைக் கவர்ந்த பகுதி
தொகுபாலைக்கலியில் பலரைக் கவர்ந்த பகுதிகள் பல. அவற்றுள் இரண்டு பாடல்களில் உள்ள தாழிசைப் பகுதி
தலைவி தலைவனிடம் கூறுவன [1] | பகவர் செவிலியிடம் கூறுவன [2] |
---|---|
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஓரன்னர் [3] |
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? |
நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர் [5] |
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? |
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓரன்னர் [7] |
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? |
கருத்தோட்டம்
தொகுஇதன் 35 பாடல்களில் தோழி கூறுவதாக 28 பாடல்களும் தலைவி கூறுவதாக 5 பாடல்களும் செவிலிக்கு முக்கோல் பகவர் கூறுவதாக ஒரு பாடலும் பாணன் கூறுவதாக ஒன்றும் இதில் உள்ளன.
தோழி தலைவியிடம் கூறுகிறாள். என் சொல்லைக் கேட்டு காதலர் பொருள் தேடச் செல்லாமல் தங்கிவிட்டார் (1), நீ செல்லும்காட்டில் மரங்கள் தளிர்க்கட்டும் (2), நீ சென்றால் இவள் இவள் உயிர் இருக்குமா (3), இவள் புலம்பிக்கொண்டு உயிர் வாழ முடியுமா (4), இவள் வளையல் கழலும் (6), விருந்தோம்பி இல்லிருந்து வாழ்வதுதான் இவளுக்கு இவளுக்குப் பொருள் (7), தலைவன் செல்லவில்லை, புலம்பாதே (9), கீற்றமும் மூப்பும் மறந்தாயா (11), அவர் சும்மா சொல்லி நகைக்கிறார், போகமாட்டார் (12), பொருளாசையைக் கைவிடுக (13), இளமை நிலைக்குமா (14), அறம் பெரிதென்று நின்றுவிட்டார் (15), இன் சொல் மருத்துவன் ஊட்டிய மருந்து போல் பலித்துவிட்டது (16), ஒன்றன் கூறு உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை (17), செய்வினை முற்றாமல் இவள் அவலம் கேட்டு மீளவேண்டி வரும். (18), இமைப் பொழுதும் வாழாள் (20), வறுமையில் வாழ இவள் அஞ்சினாளா (21), நீ இல்லாத காலம் மழை இல்லாத காலம் போன்றது (24), அவர் திரும்பியுள்ளதாகத் தூது வந்துள்ளது (25), அவர் தேர் விரைந்து வருகிறது (26), நாம் தூது அனுப்பியுள்ளோம் (27), இதோ வந்துவிட்டார் (28), கூடல் நகருக்கு அவரது கொடிப்படை வந்துவிட்டது (30), அவரது தூது வந்திருக்கிறது (31), திரும்புவதற்குத் தேரைப் பூட்டிவிட்டார் (32), குதிரையில் வருகிறார் (33), விடியற் காலத்திலேயே தேரைப் பூட்டியுள்ளார் (34), அவர் வரவைக் காண என் நெஞ்சம் துடிக்கிறது (35)
தலைவி தலைவனிடம் கூறுகிறாள். கொடிய காடு என்றாலும் நானும் உன்னடுடன் வருவதுதான் இன்பம் (5), பொடி சுடும் காடு என்றான் தலைவன். அங்கே தன் குட்டி கலக்கிய நீரைத் தன் பெண்யானைக்கு ஊட்டிவிட்டுப் பின்னர் நீர்ப் பருகும் ஆண்யானையைப் பார்க்கலாம் அல்லவா என்கிறாள் தலைவி (10) கானத்தில் பருகுவதற்கு ஆற்றுநீர் இருக்காது என்கிறான் தலைவன். ஆற்றுநீர் கழிவது போல் இளமை போய்விடுமே. ஆறு நீர் இல்லாமல் போனால் என்ன, உன் நெஞ்சைத் தேறும் நீர் என்னிடம் இருக்கிறது என்குறாள் தலைவி (19) நீர் மொண்டு குடித்த பனங்குடை போல் என்னைத் தூக்கி எறியலாமா என்கிறாள் (22), நீ தொய்யில் எயுதாவிட்டால் என் உயிர் இருக்காது என்கிறாள் தலைவி. (23)
பாணன் கூறுகிறான் பாசறையில் தலைவனைக் கண்டுவந்த பாணன் முன்பு காமன் விழாவில் உன்னோடு விளையாடியதை எண்ணி வருவார் எனக் கூறித் தலைவியைத் தேற்றுகிறான் (29)
பகவன் கூறுகிறான். தலைவனுடன் சென்ற தலைவியை வழிநில் கண்ட முக்கோல் பகவர் தல்லவியைத் தேடிவரும் செவிலியிடம் கூறுகின்றனர். சந்தனம் தான் பிறந்த மலைக்குப் பயன்படாமல் பூசிக்கொள்பவருக்கும், முத்து தான் பிறந்த கடலுக்குப் பயன்படாமல் அணிந்துகொள்பவருக்கும், யாழிசை தான் பிறந்த யாழுக்குப் பயன்படாமல் மீட்டுபவனுக்கும் பயன்படுவது போல உன் மகள் பயன்படுகிறாள் என்கிறார் (8)
உலகியல்
தொகு- தவத்தால் பேரின்பம் [9]
- ஈகையால் செல்வம் வளரும் [10]
- பொருள் தேடுதலின் நோக்கம் ஈகை [11]
- பொருளால் அறம் செய்யலாம். உதவியவர்களுக்கு உதவலாம், பகை வெல்லலாம், காதலின்பம் பெறலாம்.[12]
- பொருள் உடைமையும் இல்லாமையும் [13]
- வாங்கும்போதும் கொடுக்கும்போதும் முகம் மாறுபடுதல் [14]
- காதலனுடன் செல்வது அறநெறி.[15]
- கூடி மகிழ்வதுதான் வாழ்க்கை. செல்வம் அன்று.[16]
வாழ்வியல்
தொகு- வழிப்பறி [17]
- திருமணத்திற்கு மொழி, குலம், நல்ல-நாள், நல்ல-நேரம் என்று இல்லை [18]
- தலையில் வாள் போல் வாக்கு எடுத்துச் சீவிக் கொள்வர்.[19] எஃகு என்னும் சீப்பால் தலை வாரிக்கொள்வர்.[20]
- கொம்பு ஊதி யானையைக் பலக்குவர்.[21]
- அந்தணரின் குடை, உறி, கரகம், முக்கோல், நடை [22]
- யானையை யாழிசையால் அடக்குவர்.[23]
- நம்பிக்கை - பல்லி ஒலி, இடக்கண் துடித்தல் ஆகியவை நன்மையின் அறிகுறிகள் [24]
இயற்கை
தொகுதிருக்குறள் தாக்கம்
தொகுபாலைக்கலியின் பாடல்-பகுதி | பாலைக்கலியில் பாடல் எண் | திருக்குறள் |
---|---|---|
படையமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ, புடை பெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் | 9 | புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக் கொள்வு அற்றே பசப்பு |
வறன் ஓடின் வையத்து வான் தரு கற்பினாள் | 15 | தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுது எழுவாள் 'பெய்' எனப் பெய்யும் மழை |
பொருள்தான் பழவினை மருங்கில் பெயர்பு பெயர்பு உறையும் | 20 | ஆகு ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள் போகு ஊழால் தோன்றும் மடி |
- சிலப்பதிகாரம் தாக்கம்
"காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது" எனனும் தொடர் இந்தக் கலியில் (32-7) வருகிறது. இதன் தாக்கம் சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடலில் "காதலற் பிரியாமல் கவ்வுக்கை நெகிழாமல் தீது அறுக" எனக் வாழ்த்திக் கோவலன் கண்ணகி மணமக்களை மங்கல மடந்தையர் முதலிரவுப் படுக்கையில் ஏற்றினர் என வருகிறது.
இவை இந்த நூல்களின் காலத்தைக் கணிக்க உதவுகின்றன.
உவமை
தொகு- சுடும் கண்ணீர் [28]
- மாமை நிறம் [29]
- ஈர உடம்பு [30]
- மகப் பெற்ற தாய் போல் பயன் தந்த நிலவுலகு [31]
- சான்றவர் அடக்கம் போல் பூக்காத கிளைகள் [32]
- புணர்ந்தவர் முகம் போன்ற பூங்கொத்து [33]
- உறவினர் இல்லாத வாழ்க்கை [34]
- பகைப்பவன் வாழ்க்கை [35]
- சோம்பல் இல்லாதவன் செல்வம் [36]
- பொய் சாட்சி [37]
- புகை படிந்த கண்ணாடி [38]
- நிலாக் கிரகணம் [39]
- வேள்விப் குகை போல் நெஞ்சின் பெருமூச்சு [40]
- கொடுங்கோலன் வேலை வாங்குதல் [41]
- கொடுங்கோலன் வரி வாங்குதல் [42]
மொழியியல்
தொகு- அளபெடை அடுக்கு [43]
- என்னாங்கு வாராது ஓம்பினை 22 = என்னிடம்
- ஒளி ஓடற்பாள் மன்னோ 9 = ஓடற்பாலையள், ஓடப்போகிறாள்
- விலங்கின்று அவர் ஆள்வினை = விலகியது 15
- வல்வினை வயங்குதல் வலித்திமன் 16 = வலிமையால் தாக்கப்பட்டாய்
- கடுங்குரை அருமைய காடு 12 – குரை இடைச்சொல் [44]
- இனிய சொல்லி இன்னாங்கு [45] பெயர்ப்பது = இன்னா வர
- யாழ – இடைச்சொல் 13 [46]
- யாழ நின் மைந்து உடை(ய) மார்பில் சுணங்கு = தசை மடிப்பு 17
- மருளி கொள் மடநோக்கம் = மருண்டு 13
- மதித்தீத்தை 13 - ஏவல் ஒருமை வினைமுற்று
- அவலம் 18
- பொருள் திறத்து அவவுக்கை விடுத்தல் – அவாவு 13
- கூற்றூழ் போல் வாழ்நாள் குறைபடும் 16 = தலைவிதி
புராணச் செய்தி
தொகு- சிவன் [47]
- திருமகள் [48]
- பரசுராமன் [49]
- கொற்றவை முழக்கம் [50]
- வளித்தெய்வம் [51]
- பலராமன் மராம் பூ நிறம் [52]
- கதிரவன் செருந்திப் பூ நிறம் [53]
- காமன் காஞ்சிப் பூ நிறம் [54][55]
- காமன் தம்பி சாமன் ஞாழல் பூ நிறம் [56]
- சிவன் இலவம் பூ நிறம் [57]
- அரக்கு மாளிகைத் தீயிலிருந்து வீமன் அனைவரையும் காப்பாற்றியது [58]
இந்தச் செய்திகள் பூக்களின் நிறத்தை அறிய உதவுகின்றன.
அடிக்குறிப்பு
தொகு- ↑ பாடல் 22
- ↑ பாடல் 8
- ↑ தாகம் தீரப் பனங்குடையில் தண்ணணீர் குடித்தவர்கள் அதனை எறிந்துவிடுவது போன்றது
- ↑ சந்தனம் தான் பிறந்த மலைக்குப் பயன்படாமல் பூணிக்கொள்பவருக்குப் பயன்படுவது போல உன் மகளும் பயன்படுகிறாள்
- ↑ வழிப்போக்கர் இரவில் பாதுகாப்புக்காக ஓர் ஊரில் தங்கிவிட்டு மறுநாள் அதனை விட்டுவிட்டுப் போய்விடுவது போன்றது.
- ↑ முத்து தான் பிறந்த கடலுக்குப் பயன்படாமல் அணிந்துகொள்பவருக்குப் பயன்படுவது போல உன் மகளும் பயன்படுகிறாள்
- ↑ தலையில் சூடிய பூவை எறிந்துவிடுவது போன்றது
- ↑ யாழிசை தான் பிறந்த யாழுக்குப் பயன்படாமல் மீட்டுபவனுக்குப் பயன்படுவது போல உன் மகளும் பயன்படுகிறாள்.
- ↑ அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள 29
- ↑ ஈதலில் குறை காட்டார் அறன் அறிந்து ஒழுகிய தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த 26
- ↑ இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு” எனப் பொருள் தேடச் சென்றான் 1
- ↑
‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என,
பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் 10 - ↑ சென்றோர் முகப்பப் பொருறும் கிடவாது, ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் ... ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை 17
- ↑ உண்கடன் வழிமொழிந்து இரங்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறு ஆதல் பண்ணும் பண்டும் இவ் உலகத்து இயற்கை 21
- ↑ சிறந்தானை வழிபடீச் சென்றனள், அறம் தலைப் பிரியா ஆறும் மற்று இதுவே 8
- ↑
செய் பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை 11 - ↑ கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்பான் தொடர்ந்து உயிர் வௌவலின் 3
- ↑ மொழி குலம் நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே” 4
- ↑ வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி 35
- ↑ எஃகு இடைத் தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் 31
- ↑ இலங்கு ஒலி மருப்பில் கைம்மா உளம்புநர் 22
- ↑ எறித் தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும், நெறிப் படச் சுவல் அசைஇ வேறு ஓரா செஞ்சத்துக் குறிப்பு ஏவல் செய் மாலை கொளைநடை அந்தணீர் 8
- ↑ காழ் என்னும் அங்குசத்துக்குக் கட்டுப்படாத யானை யாழிசைக்குக் கட்டுப்படும் 1
- ↑ பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே 10
- ↑ வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் 6
- ↑ மடமான் திரி மருப்பு ஏற்றொடு தேர் அறற்கு ஓட 12
- ↑ fata morgana
- ↑ திரி உமிழ் நெய் போல் 14
- ↑ மாயவள் மேனி போல் தளிர் ஈன (மாமை நிறம் கொண்டவள் மாயவள். மாமை என்பது மாந்தளிர் போன்ற நிறம்) 34
- ↑ ஈன்றவள் திதலைபோல் ஈர் பெய்யும் தளிர் (குழந்தை பெற்றிருப்பவளின் ஈர உடம்பு) 31
- ↑ தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் 28
- ↑ சான்றவர் அடக்கம் போல் அலர் செல்லாச் சினை 31
- ↑ புணர்ந்தவர் முகம் போல பொய்கைப் பூப் புதிது ஈன 30
- ↑ கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் ‘புல்’ என்று (தோள் நெகிழ்ந்தது) 33
- ↑ யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் வேரொடு மரம் வெம்ப 9
- ↑ மடி இலான் செல்வம் போல் மரம் நந்த 34
- ↑ கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம போலக் கவின் வாடி 33
- ↑ செய்வுறு மண்டிலம் மையாப்பது போல் முகம் பசப்பு ஊர்ந்தது.6
- ↑ பாம்பு கொள் மதி போலப் பசப்பு 14
- ↑ கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சு 35
- ↑ நடுவு இகந்து ஒரீஇ நயன் இலான் வினை வாங்கக், கொடியதோர் மன்னவன் கோல் போல ஞாயிறு தெறுதல் 7
- ↑ அவ்வுற்றுக் குடி கூவ ஆறு இன்று அப் பொருள் வெஃகிக், கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடி அவன் நீழல், உலகு போல் உலறிய உயர்மரம் 9
- ↑
பாஅய்ப் பாஅய்ப் பசந்தன நுதல்
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள் 35 - ↑ நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும் (திருக்குறள்)
- ↑ பொல்லாங்கு - என்பது போன்றதோர் சொல்
- ↑ 'ஏய்' என்னும் வன்சொல் விளி போல் 'யாழ' என்பது இன்சொல் விளி
- ↑ முக்கணான் மூவயிலைக் கண்ணால் எரித்தான் 1
- ↑ செய்யவள் அணி போல் மலர் குலுங்கல் 27
- ↑ கொடுமிடல் நாஞ்சிலான் 35
- ↑ தொடிமகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர 35
- ↑ வளிதரு செல்வன் 15
- ↑ ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், 25
- ↑ பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், 25
- ↑ மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், 25
- ↑ காமவேள் விழா 26 வில்லவன் விழா 34
- ↑ ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், 25
- ↑ ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும் 25,
- ↑
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு
களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா,
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, 24,