திணை விளக்கம்
திணை விளக்கம் என்னும் இக்கட்டுரை தமிழில் திணை என்னும் சொல்லின் பயன்பாடு குறித்த விளக்கம் ஆகும். தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை. இது தொல்காப்பிய இலக்கணத்தையும், அதன் உரைநூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஒப்புநோக்கப் பட்டியலில் காணப்படும் இலக்கண நூல்கள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவை.
தமிழ் நெறி (தமிழ் இலக்கணம்)
தொகுதொல்காப்பியர் மொழியைப் பற்றி எண்ணும்போது திணைகளை வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார். இலக்கியங்களில் காணப்படும் பொருளைப்பற்றி எண்ணும்போது வேறு வகையான பெயர்களைக் கையாண்டு தமிழ் இலக்கண நெறியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
- ஆலங்குடி வங்கனார் என்னும் சங்ககாலப் புலவர் பாடிய குறுந்தொகை 45-ஆம் பாடலில் பெண் ஒருத்தி தன்னைப் பெண்திணையில் பிறந்ததாகக் குறிப்பிடுவது 'திணை' என்னும் சொல் பிரிவு (ஆண்பிரிவு, பெண்பிரிவு) என்னும் பொருளைத் தருவதாக அமைந்துள்ளது.
இவற்றையும் பார்த்தல் நன்று
மொழியியலில் திணை
தொகுதமிழர் சொல்லை உயர்திணைச் சொல் என்றும், அஃறிணைச் சொல் என்றும் பாகுபடுத்திக் கொண்டுள்ளனர். அஃறிணை என்பது அல்+திணை, அதாவது உயர்வு அல்லாத திணை என்னும் பொருளைத் தரும்.
ஆறு அறிவு உள்ள மக்கள் உயர்திணை. அறிவில் குறைந்த ஏனைய உயிரினங்களும், உயிர் இல்லாதனவுமாகிய பொருள்களும், இவற்றுள் அடங்கும் இடம், காலம், சினை(பொருளின் உறுப்பு), பண்பு, தொழில் பற்றிய பெயர்களும் அஃறிணை.
உயர்திணையில் ஆண்பால், பெண்பால் பலர்பால் என்னும் பாகுபாடுகளும், அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால் என்னும் பாகுபாடுகளும் உண்டு.
பொருளியலில் திணை
தொகுபொருள் என்பது வாழ்க்கையாகிய பொருள். இவற்றை இரு பிரிவுகளாகப் பார்த்தனர். ஆணும் பெண்ணும் உறவு கொண்டு வாழ்வதைக் கூறுவது அகவாழ்க்கை. பிறவெல்லாம் புறவாழ்க்கை.
அகவாழ்க்கை என்னும் அகத்திணையை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழாகவும், புறவாழ்க்கையை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் பாகுபடுத்திக் கொண்டனர். இந்தப் பாகுபாடுகள் தொல்காப்பிய காலத்துக்கு முந்தியவை.
ஒப்புநோக்கம்
தொகு- தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக் கொண்டுள்ளது.
- புறப்பொருள் வெண்பா மாலை புறத்திணையை, 12 பகுதிகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.
- இறையனார் அகப்பொருள் என்னும் நூல் அகவாழ்க்கையைக் களவியல், கற்பியல் என்னும் பாகுபாடுகளைக் கொண்டுள்ளது. வேறு பாகுபாடுகள் இதில் இல்லை.
- நம்பி அகப்பொருள் என்னும் நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்து தலைப்புகளில் அகவாழ்க்கையை விளக்குகிறது.
அகத்திணை இயல்
தொகுதமிழின் முதல் இலக்கண நூல் எனக் கருதப்படும் தொல்காப்பியத்தில், அதன் ஆசிரியர் தொல்காப்பியர், அகத்திணை இயலை ஏழு திணைகளாகப் பகுத்துள்ளார். அவை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பனவாகும். அவற்றுள் ஒருதலைக்காதல் எனும் கைக்கிளை, பொருந்தாக் காமம் எனும் பெருந்திணை தவிர்த்த பிற ஐந்து திணைகளும், காளை ஒருவனுக்கும் கன்னி ஒருத்திக்கும் இடையே முகிழ்த்து வளரும் காதல் அன்பைப் பற்றிப் பாடும் திணைகள் ஆகும். இந்த அன்பின் எழுச்சியால் தலைவன், தலைவியரின் உள்ளத்தே தோன்றுகின்ற இன்பமும் துன்பமும், களிப்பும் கலக்கமும் இணைந்த வாழ்வியலை, இந்த ஐந்து திணைகளில் பிரித்து இலக்கியங்கள் பாடுகின்றன். இப்பாடல்கள், பெரும்பாலும் அவர் உள்ளத்திலே நிகழும் நினைவுப் போராட்டங்களாகத் தம் நெஞ்சுக்குச் சொல்லுவதாக அமைந்தாலும், நெருங்கிய, தோழி, செவிலி, பாணன், பாங்காயினோர் போன்றோரிடம் தம் உள்ளம் திறந்து உரைப்பாராகவும் இவை விளங்குகின்றன.
இந்த ஐவகை திணைகளில், ஐவகை நிலங்களின் தன்மையை ஒட்டியனவாக, அந்த அந்த சூழல்களொடு பின்னி பிணைந்து நிகழ்வனவாக, அவற்றின் பகுதிகளாக மேலும் பலப்பல துறைகளையும் வகுத்துக்கொண்டு செய்யுள் செய்வது பண்டை தமிழ் புலவர்களின் மரபாகும். இவ்வொழுக்கங்கள் "முதல்", "கரு", "உரி" என மூன்று தலைப்புகளில் கீழ் சொல்லப்படும் பொருட்களின் சார்பாக நிகழும் என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.
'முதற்பொருள்' என்பது 'நிலமும் பொழுதும்' என்ற இவற்றினை ஒட்டி அமையும் ஒழுக்கங்கள் ஆகும். 'நிலம்' என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்தும், 'பொழுது' என்பது அந்த ஐவகை நிலத்தைச் சார்ந்து நிற்போருக்குக் காம உணர்வினைக் கிளர்ந்து எழச் செய்யும் "பெரும்பொழுது" மற்றும் "சிறுபொழுது" ஆகும்.
திணை | நிலம் |
---|---|
குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த நிலமும் |
பாலை | முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் |
முல்லை | காடும் காடு சார்ந்த நிலமும் |
மருதம் | வயலும் வயல் சார்ந்த நிலமும் |
நெய்தல் | கடலும் கடல் சார்ந்த நிலமும் |
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது |
---|---|---|
குறிஞ்சி | கூதிரும் முன்பனியும் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை) | யாமம் |
பாலை | வேனில், பின்பனி (ஆனி, ஆடி, மாசி, பங்குனி) | நண்பகல் |
முல்லை | முல்லை - கார்(ஆவணி, புரட்டாசி) | மாலை |
மருதம் | ஆறு பருவங்கள் (12 மாதம்) | விடியல் |
நெய்தல் | ஆறு பருவங்கள் (12 மாதம் -) | எற்பாடு (பிற்பகல்) |
இவை அந்த அந்த நிலங்களுக்குச் சிறப்பாகப் பொருந்துவன என்று காணப் பெற்றாலும், சிலரிடையே மயங்கி நின்றும் உணர்வு எழ செய்தலும் நிகழலாம். அவை "திணை மயக்கம்" என்றே கொள்ளல் வேண்டும்.
கருப்பொருள் என்பன அந்த அந்த திணைக்கு உரியனவாகவும், அவற்றின்கண் உள்ளனவாகவும், விளங்கும் தெய்வம், மக்கள் (உயர்ந்தோர், தாழ்ந்தோர்),புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலான பதினான்கும். (பின்னர் காண்க)
உரிப்பொருள் என்பன உள்ளத்தே எழுகின்ற மன உணர்வுகளுக்குக் காரணமாக விளங்கும் உந்துதல்களாகும். அவை:
1. குறிஞ்சி --புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)
2. பாலை --பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
3. முல்லை --இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ( காத்து இருத்தல்)
4. மருதம் --ஊடலும் ஊடல் நிமித்தமும்
5. நெய்தல் --இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்)
இவைகள் செய்யுள் செய்வார்க்குப் பெரிதும் சிறப்புடைய அடிப்படை பொருட்களாகும். ஆயின், இவை பிற திணைகளின் உள்ளும் வருவதற்கு உரியன என அறிதலும் வேண்டும்.
குறிஞ்சித்திணை
தொகுகுறிஞ்சியாவது, 'மலையும் மலை சார்ந்த இடங்களும்', இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்தத் துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும் குறிஞ்சித்திணைக்குக் கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.
குறிஞ்சியின் கருப்பொருட்கள்:
கடவுள் | முருகக்கடவுள் |
மக்கள் | பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வேம்பன், கானவர் |
புள் | கிளி, மயில் |
விலங்கு | புலி, கரடி, யானை |
ஊர் | சிறுகுடி |
நீர் | அருவி நீர், சுனை நீர் |
பூ | வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை |
மரம் | ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில் அசோகம், நாகம், மூங்கில் |
உணவு | மலைநெல், மூங்கில் அரிசி, தினை |
பறை | தொண்டகப்பறை |
யாழ் | குறிஞ்சி யாழ் |
பண் | குறிஞ்சிப்பண் |
தொழில் | வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல், தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல் |
குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக் காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"
பாலைத்திணை
தொகுபாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லையும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம். இதனால், காதலர் இடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள், பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.
பாலையின் கருப்பொருட்கள்:
கடவுள் | கொற்றவை |
மக்கள் | விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் |
புள் | புறா, பருந்து, எருவை, கழுகு |
விலங்கு | செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி |
ஊர் | குறும்பு |
நீர் | நீரில்லாக்குழி, நீரில்லாக்கிணறு |
பூ | குரா, மரா, பாதிரி |
மரம் | உழிஞை, பாலை, ஓமை, இருப்பை |
உணவு | வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள் |
பறை | துடி |
யாழ் | பாலை யாழ் |
பண் | பாலைப்பண் |
தொழில் | வழிப்பறி |
பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக்காட்டு: "பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்குச் சொல்லியது" இதைத் தற்கால திரைப்படங்களிலும் நாம் காணலாம், தலைவன் தலைவி பிரிவின் போது பாடல் காட்சிகளைக் கண்டால் இது நன்கு விளங்கும் முள் மரங்கள், உடைந்த கட்டடங்கள், பாலைவனம்.
முல்லைத்திணை'
தொகுமுல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆநீரை (பசுக்கள்) மேய்த்தற்குப் பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர். முல்லைத்திணைக்குக் கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்.
முல்லையின் கருப்பொருட்கள்:
கடவுள் | மாயோன் (மாய் என்பது மறைந்து தோன்ற கூடியவன்,ஓ-என்பது ஏரியில் உள்ள மதகு,ன் ஆண்பால்,மாய்+ஓ+ன்=மாயோன்)காட்டில் மறைந்து தோன்றும் கதிரவன்,(எ:கா)மாயோன் மேய காடுறை உலகமும்,மாயோன் என்பது சிவன் ஆகும் |
மக்கள் | குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர் |
புள் | காட்டுக்கோழி |
விலங்கு | மான், முயல் |
ஊர் | பாடி, சேரி, பள்ளி |
நீர் | குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு) |
பூ | குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ |
மரம் | கொன்றை, காயா, குருந்தம் |
உணவு | வரகு, சாமை, முதிரை |
பறை | ஏறுகோட்பறை |
யாழ் | முல்லை யாழ் |
பண் | முல்லைப்பண் |
தொழில் | சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யாற்று நீராடல். |
முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக்காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது"
மருதத்திணை
தொகுமருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகிப் பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுகளும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.
மருதத்தின் கருப்பொருட்கள்:
கடவுள் | இந்திரன் |
மக்கள் | மள்ளர், ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் |
புள் | வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா. |
விலங்கு | எருமை, நீர்நாய் |
ஊர் | பேரூர், மூதூர் |
நீர் | ஆற்று நீர், கிணற்று நீர் |
பூ | தாமரை, கழுனீர் |
மரம் | காஞ்சி, வஞ்சி, மருதம் |
உணவு | செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி |
பறை | நெல்லரிகிணை, மணமுழவு |
யாழ் | மருத யாழ் |
பண் | மருதப்பண் |
தொழில் | விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல் |
மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக்காட்டு: "பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்குக் கிழத்தி சொல்லியது"
நெய்தல்திணை
தொகுகடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடிக் கடலிலே திமில் ஏறிச் செல்வது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.
நெய்தலின் கருப்பொருட்கள்:
கடவுள் | வருணன் (வருள்+நன் =கடல் காற்று ) |
மக்கள் | சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர் |
புள் | கடற்காகம், அன்னம், அன்றில் |
விலங்கு | சுறா, உமண் பகடு |
ஊர் | பாக்கம், பட்டினம் |
நீர் | உவர்நீர் கேணி, மணற்கேணி |
பூ | நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம் |
மரம் | கண்டல், புன்னை, ஞாழல் |
உணவு | மீனும் உப்பும் விற்றுப் பெற்றவை |
பறை | மீன்கோட்பறை, நாவாய் பம்பை |
யாழ் | விளரி யாழ் |
பண் | செவ்வழிப்பண் |
தொழில் | மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல் |
நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஓர் எடுத்துக்காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆகத் தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய்த் தலைமகனுக்குச் சொல்லியது"
இக்கருப்பொருட்கள் அவ்வத் திணைக்குரிய சிறந்த பொருட்கள் என்றே கருத வேண்டும். இவையன்றிப் பிறவும் உள்ளன என்பதும் அவையும் இலக்கியங்களில் பயின்று வருதலும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
உசாத்துணை: கலித்தொகை: புலியூர் கேசிகன் உரை: பக்கம் 1-9
புறத்திணை இயல்
தொகுமனித வாழ்வின் உறுதிப்பொருள்களில் அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றிய செய்திகள் இங்கு கூறப்படுகின்றன. புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதால் “புறப்பொருள்” எனப்பட்டது. இப்புற ஒழுக்கம் பத்து வகைப்படும் அவை முறையே வெட்சித் திணை, கரந்தைத் திணை, வஞ்சித் திணை,காஞ்சித் திணை, உழிஞைத் திணை, நொச்சித் திணை, தும்பைத் திணை, வாகைத் திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை என்பனவாகும். சிலர் கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு அகப்பொருள் புறத்திணைகளையும் சேர்த்து எண்ணுவர்.
வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்
புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணைகளை அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உணரமுடிகிறது.