கரந்தைத் திணை

புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.

அக்கால மக்கள் வாழ்வில் இடைத்தொழில், மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அந்நாட்டைப் பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாட்டின் ஆ நிரைகளைக் கவருவதான செயல் முதலில் இடம்பெற்றது, இதற்கு பதிலடியாய் பகைவர் கவர்ந்து கொண்ட தம் ஆ நிரைகளை மீட்டுவந்து தன்னாட்டை (நாட்டின் பொருளாதாரத்தை) காப்பது அவசியமாகிறது, அதுவே கரந்தையாய் இடம்பெற்றது.

மேலும், ஆரம்பகாலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத் துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறுகுடிகளுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளை கவருவதும் அதை இவர்கள் மீட்டுக்கொள்வதும் இயல்பு, இதுவே பிற்கால பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது.

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்

வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்

செரு வென்றது வாகையாம்

புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் கரந்தைத் திணைக்கான செய்தியை உரைக்கிறது.
பகைவர் கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.

தொல்காப்பியத்தில் கரந்தைத் திணை

தொகு

இன்றைய நிலையில் புலவர்கள் கரந்தை என்னும் திணையை தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார்.

வெறியறி சிறப்பின்...
...
அனைக்கு உரி மரபினது கரந்தை...

-தொல்-பொருள்-2-5

என்று கரந்தையை வெட்சியின் ஒரு பிரிவாகவே சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர்.

வெட்சியின் போர் முறைக்கு எதிரானது அல்லது மாறானது கரந்தை, அஃதாவது வெட்சி ஆ நிரைகளை கவர்வது என்றால் கரந்தை அவற்றை மீட்பது ஆகும், என்பதினால் தொல்காப்பியர் இவ்வாறு அடக்கியுள்ளார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம், அதனாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம்.

புறப்பொருள் வெண்பாமாலையில் கரந்தைத் திணை

தொகு

தொல்காப்பியத்திற்கு பிறகு தமிழில் புறப்பொருள் பற்றி கிடைக்கும் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலையாகும். இது கரந்தையை பின்வருமாறு உரைக்கிறது,

மலைத் தெழுந்தோர் மறம் சாயத்
தலைக் கொண்ட நிரை பெயர்த்து அன்று


-பு.பொ.வெ.மா-கரந்தை-1

அஃதாவது, தாம் மலைக்குமாறு திடீரென வந்துத் தாக்கி தம் ஆ நிரைகளை கவர்ந்தவர்களின் மறம் (வீரம்) சாயுமாறு திருப்பித்தாக்கி அவர் கொண்ட தம் ஆக்களை மீட்டல் கரந்தையாகும்.

கரந்தையின் துறைகள்

தொகு

கரந்தையானது கரந்தை, கரந்தை அரவம், அதரிடைச்செலவு, அரும்போர்மலைதல், புண்ணொடு வருதல், போர்களத்து ஒழிதல், ஆள்எறிபிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழிகூறல், பிள்ளைப்பெயர்ச்சி, வேத்தியன்மலிவு, குடிநிலை எனப் பதிமூன்று துறைகளை உடையது என்று புறப்பொருள் வெண்பாமாலை உரைக்கிறது.

கதமலி-கரந்தை, கரந்தைஅரவம்,
அதரிடைச்செலவே, அரும்போர்மலைதல்,
புண்ணொடுவருதல், போர்களத்துஒழிதல்,
ஆள்எறிபிள்ளை, பிள்ளைத்தெளிவே,
பிள்ளைஆட்டொடு, கையறுநிலையே,
நெடுமொழிகூறல், பிள்ளைப்பெயர்ச்சி,
வேத்தியன்மலிபே, மிகு-குடிநிலை, என
அரும்கலை உணர்ந்தோர் அவை பதினான்கும்
கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப

-பு.பொ.வெ.மா-கரந்தை-1

[1]

சங்க இலக்கியத்தில் கரந்தைத் திணை

தொகு

புறப்பொருள் பாடல்களை சங்க இலக்கியத்தில்தான் பெரும்பாலும் காண்கிறோம், அதிலும் வெட்சி முதாலான திணைகளில் பொருந்திய பாடல்கள் புறநானூறில் மட்டுமே காணப்படுகின்றன.

புறநானூறில் கரந்தைத் திணையில் அமைந்த பாடல்களின் வரிசை எண்கள் பின்வருமாறு,

259, 260, 263, 264, 265, 270, 290, 291, 298

இப்பாடல்களுள்,

  • 259-ம் பாடல் போர்மலைதல் என்னும் துறையிலும்
  • 263-265, 270 ஆகிய பாடல்கள் கையறுநிலை என்னும் துறையிலும்
  • 290ம் பாடல் குடிநிலை உரைத்தல் என்னும் துறையிலும்
  • 291ம் பாடல் வேத்தியல் என்னும் துறையிலும்
  • 298ம் பாடல் நெடுமொழி என்னும் துறையிலும் அமைந்துள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. நூலாசிரியர் “கரந்தையும் கரந்தைத் துறையும்” எனக்கொண்டதினால் “பதினான்கும்” என்றார், துறைகளை மட்டுமே கொள்ளின் பதின்மூன்றே ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரந்தைத்_திணை&oldid=3896084" இலிருந்து மீள்விக்கப்பட்டது