குறிஞ்சிப் பாட்டு

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும். இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூறுகின்றன. தலைவன் தலைவி தன்னிச்சையாக உடலுறவு கொள்ளத் தோழி ஒப்புதல் தந்துள்ளாள்.[1] ஆரிய அரசன் பிரகத்தன் என்பவருக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது.இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.அவ் அரசன் தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள,குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது.

நூல் தோன்றக் காரணம்

தொகு

ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவுநெறியைத் தீது என்றான். இது கற்புநெறியில் முடியும்; மிகவும் நல்லது; என்னும் உண்மைகளைத் தெளிவுபடுத்த எழுதப்பட்டது.

பாடல் அமைதி

தொகு

காதல் நோயால் தலைவியின் உடலில் மாறுபாடு. செயலில் தடுமாற்றம். இதனை அவளது தாயர் முருகன் அணங்கியதாக எண்ணி முருகாற்றுப்படுத்த முனைகின்றனர். [2] உண்மையைச் சொல்லிவிடு என்று தலைவி தோழியைத் தூண்ட, தோழி நிகழ்ந்ததைக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

நிகழ்ந்தவற்றின் நிரல்

தொகு

தாயர், தன் மகளைத் (தலைவியைத்) தினைப்புனம் காத்துவருமாறு அனுப்பினர். தலைவி தன் தோழிமாருடன் சென்றாள். புனத்தில் அமைக்கப்பட்டிருந்த இதணம் என்னும் பந்தல்மேல் ஏறிக் குளிர் தட்டை முதலான இசைக் கருவிகளைப் புடைத்துக் கிளிகளை ஓட்டினர்.

பூ விளையாட்டு, தழை-ஆடை

பறவைகள் வரமுடியாத அளவுக்கு வானம் பெருமழை பொழிந்தது. தலைவி தோழிமாருடன் சென்று அருவியிலும், சுனையிலும் நீராடினர். பின்னர்ப் பல வகையான பூக்களைப் பறித்துவந்து பாறைமீது குவித்தனர். அவற்றால் தழையாடை புனைந்து உடுத்திக்கொண்டனர்.

தலைவன்

அப்போது அங்குக் காளை ஒருவன் தோன்றினான். நீராடும்போது பூசிய தகரம் அவன் தலையில் கமழ்ந்தது. அவன் தன் முடிக்கு அகில் புகை ஊட்டியிருந்தான். மலையிலும், நிலத்திலும், மரக்கிளையிலும், சுனையிலும் பூத்த நால்வகை மலர்களால் தொடுத்த கண்ணியைத் தலையில் அணிந்திருந்தான். பிண்டி என்னும் அசோகின் பூந்தளிரை ஒரு காதில் செருகியிருந்தான். மார்பில் சந்தனம், இடையில் வாள், கையில் வில்லம்பு, காலில் ஈகையை உணர்த்தும் கழல் ஆகியவற்றுடன் தோன்றினான்.

உறவுமொழி

இளைஞர் சூழ வந்தான். அவனது வேட்டை நாய் குரைத்துக்கொண்டு அவனைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்தது. இவற்றைக் கண்டு தலைவியும் தோழிமாரும் அஞ்சி ஒதுங்கினர். அவன் பசுவைப் பார்க்கும் காளைபோல் பண்போடு பார்த்தான் [3] அவர்கள் ஐந்து வகையாக முடித்திருந்த ‘ஐம்பால்’ கூந்தல் அழகைப் பாராட்டினான். அவர்களின் நடுக்கத்தைக் கண்டு ‘பெருந்தீங்கு செய்துவிட்டேன் போலும்’ [4] என்றான். அவர்கள் ஏதும் பேசவில்லை. அவன் கலக்கத்துடன் ‘எம்முடன் சொல்லலும் பழியோ’ என யாழில் எழும் சைவளப் பண் போலத் தழுதழுத்தான் [5] அப்போது ஆண்யானை ஒன்று அங்கு வந்தது. அதனைக் கண்டு நடுங்கிய தலைவி தன் நாணத்தை மறந்து அவனைத் தழுவிக்கொண்டாள். யானைமீது தலைவன் அம்பு எய்தான். யானை போய்விட்டது. அவள் விலகினாள். “உன் அழகை நுகர அசையாமல் நில்” என்றான். [6] அவளது நெற்றியைத் தடவிக்கொடுத்தான். தலைவி நின்றாள். தலைவன் தோழியைப் பார்த்தான். தோழி நாணி விலகினாள்.

உடலுறவு இன்பம்

பாறையில் பட்டுத் தெறித்த மிளகு ஊறிக்கொண்டிருக்கும் சுனையில் மாம்பழம் விழுந்தது. [7] [8] சுனையில் பலாச்சுளையும் தேனும் இனித்தன [9]

கடவுள்மேல் சத்தியம்

விழா எடுத்து ஊருக்கு விருந்து படைத்துத் திருமணம் செய்துகொள்வேன் என அவன் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு கடவுள்மேல் சத்தியம் செய்தான். [10]

கலக்கம்

மாலை வந்தது. இல்லம் திரும்பினர். அன்று முதல் அவன் இரவில் அவளிடம் வந்து போனான். இரவில் காவலர் வருதல், நாய் குரைத்தல், முதலான இடையூறு நேரும்போது கலங்குவாள்.

அவன் வரும் வழியில் உழுவை, ஆளி, உளியம் போன்ற விலங்குகளும், பாம்பும் உண்டு. அவன் கடக்கும் ஆற்றில் முதலை, இடங்கர், கராம் முதலான இரைதேர் விலங்குகளும் உண்டு. இவற்றையும் எண்ணி இவள் கலங்குகிறாள். இவையே இவள் மாறுபாட்டுக்குக் காரணம். என்று தோழி தாயாரிடம் கூறி முடிக்கிறாள்.

இறுதி வெண்பா

தொகு

இந்தப் பாடலின் முடிவில் இரண்டு வெண்பாக்கள் உள்ளன. இவை கபிலரால் இயற்றப்பட்டவை அன்று. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் எழுதிச் சேர்த்த பாட்டுகள்.

  • முதல் பாடல் இப்பாட்டில் வரும் தலைவன், தலைவி, தோழி, தாயர் ஆகிய யார்மீதும் குற்றம் இல்லை என்று கூறுகிறது.
  • இரண்டாம் பாடல் வடமொழியாளரின் காந்தருவ மணத்துக்கு நிகரானது என்று கூறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  • எண் குறியீடுகள் இப் பாட்டில் வரும் அடியின் எண்ணைக் குறிக்கும்
  1. கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும்,
    வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது,
    எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை
    நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
    செப்பல் ஆன்றிசின்; சினவாதீமோ! (அடி 30 முதல்)

  2. இக்காலப் பாணியில் பேய் பிடித்துக்கொண்டதாகக் கருதிப் பேயோட்ட முனைகின்றனர்.
  3. ஆ காண் விடையின், அணி பெற வந்து
  4. இறந்த கெடுதியும் உடையேன்
  5. கலங்கிக் கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு சொல்லலும் பழியோ, மெல் இயலீர்?" (143-145)
  6. "அம் சில் ஓதி! அசையல்; யாவதும் அஞ்சல், ஓம்பு; நின் அணி நலம் நுகர்கு" (180).
  7. இன்பத் துளி விழுந்ததைச் சொல்லும் இறைச்சிப்பொருள்
  8. பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை, முழு முதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென, (187-188)
  9. புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேற
  10. "நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர, நாடு அறி நல் மணம் அயர்கம்; சில் நாள் கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!"


வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சிப்_பாட்டு&oldid=3823405" இலிருந்து மீள்விக்கப்பட்டது