தொல்காப்பியம் அகத்திணையியல் செய்திகள்

தொல்காப்பியம் 3 பகுதிகளாக உள்ளது. எழுத்து, சொல், பொருள் என்பன அவை. முதல் 2 பகுதிகள் மொழியியலில் நாட்டம் செலுத்துகின்றன. மூன்றாவது பொருளதிகாரம் வாழ்க்கைப்பொருளை விளக்குகிறது. தமிழர் வாழ்ந்த வகையைக் கூறுவன அக்காலத் தமிழ் இலக்கியங்கள். அந்த இலக்கியங்கள் வாழ்க்கைச்செய்தியைத் தெரிவிக்கும் முறைமையை விளக்குவது தொல்காப்பியப் பொருளதிகாரம்.

பொருளதிகாரம் 9 இயல்களாக உள்ளது. அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய முதல் ஐந்தும் இலக்கிய வாழ்வியலை விளக்குகின்றன. ஆறாவது மெய்ப்பாட்டியல் மாந்தரின் மனவுணர்வு வெளிப்பாட்டை விளக்கும் ஓர் அறிவியல். அடுத்துள்ள உவமவியல், செய்யுளியல் ஆகிய இரண்டும் இலக்கிய நடையை விளக்குகின்றன. இறுதியில் உள்ள மரபியல் மொழியிலும், வாழ்க்கையிலும் தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் நெறிமுறையை விளக்குகிறது.

இந்தத் தலைப்பிலுள்ள அகத்திணையியல் அகத்திணையை 7 எனக் காட்டி, அவற்றில் ஐந்தை அன்பின் ஐந்திணை எனக் கூறி, திணைப்பாகுபாடு வெளிப்படும் பாங்கை உணர்த்தி, கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றை அகப்புறம் எனத் தனிமைப்படுத்திக் காட்டிச் செல்கிறது.

  • குறிப்பு - செய்தியின் இறுதியில் உள்ள எண்கள் இந்த இயலில் எத்தனையாவது நூற்பா எனபதைக் குறிக்கும்

திணை

தொகு
எழுதிணை – கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை [1]
நிலம் – முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்குக்கு மட்டும் உண்டு [2]
பொருள் – முதல், கரு, உரி – என 3 வகை [3]
முதல்-பொருள் – நிலம், பொழுது – என 2 வகை [4]
நிலம் - முல்லை – மாயோன் மேய காடுறை உலகம், குறிஞ்சி – சேயோன் மேய மைவரை (இருண்ட மலை) உலகம், மருதம் – வேந்தன் மேய தீம்புனல் (நன்னீர்) உலகம், நெய்தல் (கடல் உவர்நீர் உள்ள) வருணன் மேய பெருமணல் உலகம் [5]
பொழுது – முல்லைக்குக் கார், மாலை [6]
பொழுது – குறிஞ்சிக்குக் கூதிர், யாமம் [7]
பொழுது – குறிஞ்சிக்குப் பனி எதிர்கொள்ளும் முன்பனிப் பருவம் உரியது. [8]
பொழுது – மருதத்துக்கு வைகறை, விடியல் பொழுதும் உரியன [9]
பொழுது – நெய்தல் நிலத்துக்கு எற்பாடு பொழுது உரியது [10]
பொழுது – பாலைக்கு வேனில், நண்பகல், [11]
பொழுது – பாலைக்குப் பின்பனிப் பருவமும் உரியது [12]

உரிப்பொருள் அல்லாத திணை மயக்கம்

தொகு
உரிப்பொருள் பிரிவு – தலைமகன் தலைமகளைப் பிரிதல், தலைமகன் உடன்கொண்டு செல்லத் தலைமகள் பெற்றோரைப் பிரிதல் என 2 வகை [13]
உரிப்பொருள் பிரிவு – இந்தப் பிரிவு பிற திணைப் பொருளாகவும் மயங்கும். நிலம் வேறு திணையாக மயங்காது [14]
உரிப்பொருள் அல்லாத கால-முதலும், கருப்பொருளும் பிற திணைகளிலும் மயங்கி வரும். உரிப்பொருள் மயங்காது [15]
உரிப்பொருள் – புணர்தல் (குறிஞ்சி), பிரிதல் (பாலை), இருத்தல் (முல்லை), இரங்கல் (நெய்தல்), ஊடல் (மருதம்) மற்றும் இவற்றின் நிமித்தம் (இதனால் சொல்லப்பட்டது என்னவென்றால், ஆணும் பெண்ணும் புணர்தல் பற்றியும், இப் புணர்ச்சிக்குத் துணைநிற்பனவுமாகிய செய்திகளைக் கொண்ட பாடல் :குறிஞ்சித்திணை. குறிஞ்சித்திணையில் காலமாகிய முதற்பொருளும், கருப்பொருளும் மயங்காமலும், மயங்கியும் வந்திருக்கும்) [16]
பாலை உரிப்பொருள் – தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு தன் ஊர் செல்லல், [17]
பெருந்திணை உரிப்பொருள் – தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு செல்லும்போது ஏதோ இடையூறு நேர்ந்து பிரிதல் [18]
தலைவனும் தலைவியும் கூடல், பின்னும் கூட முயலுதல் ஆகியனவும் (குறிஞ்சி) உரிப்பொருள் [19]
முதற்பொருள் என்பது மேலே சொல்லப்பட்ட நிலம், காலம் ஆகிய இரண்டு மட்டுமே [20]

கருப்பொருள்

தொகு
தெய்வம், உணா, மா, மரம், புள், பறைமுழக்கம், செய்தி(செய்தொழில்), யாழ்(பண்) ஆகியவை திணைக்கு உரிய கருப்பொருளாக வரும். [21]
பூவோ, புள்ளோ எந்த நிலத்தில் வருகிறதோ அந்த நிலத்தினவாக அவை கொள்ளப்படும். [22]
திணைநிலைப்பெயர் என்பது நிலத்தால் பெயர் பெறும் மக்களைக் குறிக்கும். அப்பெயர் நிலத்தின் பெயராலும், அவர் செய்யும் தொழிலின் பெயராலும் அமையும். [23]
ஆ மேய்ப்பர் ஆயர். வேட்டையாடுவோர் வேடர். (அம்பு எய்பவர் எயினர். எயினர் குலப்பெயர்) [24]
திணைநிலைப்பெயர், மேலும் சில. குலப்பெயர், தொழிற்பெயர், தலைமக்கட்பெயர். குறிஞ்சி குறவன் குறத்தி, மலைநாடன் வெற்பன். பாலை எயினன் எயிற்றி மீளி விடலை மருதம் உழவன் உழத்தியர் ஊரன் மகிழநன் நெய்தல் நுளையர் நுளைச்சியர் சேர்ப்பன் துறைவன் கொண்கன். [25]
அடியோர் பாங்கினும், வினைவலர் பாங்கினும் நிகழ்ந்தால் அது அகப்புறம் (கைக்கிளை, பெருந்திணை) எனக் கொள்ளப்படும். [26]
ஏவல் மரபினர் அக ஒழுக்கமும் அகப்புறம். [27]
பிரிவு 3 வகை ஓதல், பகை. தூது [28]
ஓதல், தூது – உயர்ந்தோர் மேன. [29]
தூதாக வேந்தன் தானே செல்வான். அல்லது ஒத்தவரை அனுப்புவான். [30]
படிமை(வழிபாடு), காவல், பொருளீட்டல் ஆகிய பிரிவுகள் ஏனோர் பாங்கில் நிகழும். [31]
மேலோருக்காகப் (தேவர்களுக்காகப்) பிரிதல் நால்வர்க்கும் உரித்து. [32]
காவல் வணிகர் வேளாளர்களுக்கு [33]
ஓதல் பிரிவு உயர்ந்தோர்க்கு உரியது. [34]
தூது வணிகர், வேளாளருக்கும் உரியது. [35]
பொருட்பிரிவு வணிகர் வேளாளர்க்கு உரியது. [36]
உயர்ந்தோர் பொருளுக்காகப் பிரிந்தால் அது பிரிவாகக் கருதப்படாமல் அவர்களது ஒழுக்கமாகக் கருதப்படும். [37]

மகளிர் அகற்சி

தொகு
பொருளீட்டக் கடல்வழியில் செல்லும்போது மகளிருடன் செல்லும் வழக்கம் இல்லை. [38]
மகளிர் மடலேறிதல் எப்போதும் இல்லை. [39]
மகள் தமரைப் பிரிந்தபோது நற்றாய் தோழியிடமும், கண்டோரிடமும் புலம்புவாள். [40]
மகள் சென்ற சுரத்துக்கும் ஊர்ச் சேரிக்கும் செல்லும் தாயரும் உண்டு. [41]
வாழும் மனையை விட்டு வெளியில் சென்றாலும் அகற்சியாகவே கொள்ளப்படும். [42]

தோழி பேசுதல்

தொகு
வரவிருக்கும் துன்பம் பற்றித் தலைவிக்கு எடுத்துரைத்தல், தலைவியைத் தலைவனிடம் அனுப்பிவைத்தல், தலைவனோடு அனுப்பிவைத்தல், தலைவி பிரிவால் நெஞ்சு கலங்குதல், கண்டோரிடமும் தாயரிடமும் உண்மையைக் கூறல், கலங்கும் தாயரைத் தேற்றுதல், திருமணம் செய்துகொள்ளும்படி தலைவனை வற்புறுத்தல் – போன்றவை தோழியின் செயல்கள். [43]

கண்டோர் மொழிதல்

தொகு
(தமரை விட்டுவிட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவியை வழியில் கண்டவர் செயல்)
வெயில் இருள் ஆகிய காலத்தினால் வரும் துன்பம், வழியில் நேரும் துன்பம், பெற்றோருக்குத் தெரியாமல் செல்லும் வழுவின் குற்றம், வந்த ஊர் அருகில் உள்ளது, போகும் ஊர் தொலைவில் உள்ளது, என்றெல்லாம் எடுத்துரைப்பர். பெற்றோரை விட்டுப் பிரியும் தலைவியின் மனமும் கொடிய வழியில் அழைத்துச் செல்லும் தலைவன் மனமும் கொடியன எனக் கூறுவர். அவரைத் தேடிவரும் தாயின் நிலையைக் கண்டு, தாம் கண்டது சொல்லித் தாயைத் தேற்றுவர். தாயைத் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்துவர். [44]

தலைவன் கூற்று

தொகு
  1. தலைவியைக் கொண்டுசெல்லும்போது பேசல் - தலைவியின் தமர் ஏற்றுக்கொள்ளாதபோது பருவநிலை, சுரம் பற்றிக் கூறித் தலைவி உடன்வருதலைத் தடுப்பதற்கும், உடன்கொண்டு செல்வதற்கும் பேசுவான். இடைச்சுரத்தில் தலைவியை அவளது பெற்றோர் மீட்டுச் சென்றபோது கலங்கிப் பேசுவான். (இதற்குக் கற்பொடு புணர்ந்த கௌவை என்று பெயர்) இவை ஒருபக்கம்.
  2. மற்றொரு பக்கம் தான் பொருளுக்காகப் பிரியும்போது பேசுதல். வாழ்நாளின் சில, இளமை நில்லாது, முயற்சி வேண்டும், தகுதியைப் பெறவேண்டும், பொருள் இல்லாமை இளிவு, பொருளுடைமை உயர்வு, பிறருக்கு அன்பு செய்யப் பொருள் வேண்டும், பொருள் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை, என்பனவற்றையெல்லாம் எண்ணியும் சொல்லியும். ஊதியம் பற்றிப் பேசுவான். புகழ் மானம் போன்றவற்றைப் பேசுவான்.
  3. தூது சொல்லப் பிரியும்போது பேசுவான்.
  4. பாசறையில் புலம்பல், போர்வினை முடிந்தபின் பாகனிடம் விரைந்து ஓட்டுக எனல்.
  5. பரத்தையில் பிரிந்து மீண்டு பேசுதல் [45]
  6. பிரிவின்போது பிறர் கூற்றும் நிகழும். [46]
  7. பிரிவில் முன்பு நிகழ்ந்ததை எண்ணிப் பிரியாமல் இருந்தாலும் பிரிவின்பாற் பட்ட பாலைத்திணையே [47]
  8. முல்லைத்திணைக்கு உரிய கார்காலம் போன்றவை பேசப்பட்டாலும் பிரிவில் பேசப்படுவதால் அது பாலைத்திணையே [48]

திணையுணர் உவமம் வகை - 2

தொகு
பாடலின் திணையை அறிந்துகொள்ள உரிப்பொருள், கருப்பொருள் ஆகியவை முறையே அளவுகோளாக எடுத்துக்கொள்ளப்படும். அத்துடன்
  1. உள்ளுறை-உவமம்
  2. வெளிப்படை உவமம்

ஆகியனவும் அளவுகோலாக அமையும். [49]

உள்ளுறை உவமம் தெய்வம் அல்லாத கருப்பொருள்களில் அமைந்திருக்கும். [50]
கருப்பொருள்களின் இயல்புகளும் செயல்பாடுகளும் அகத்திணை மாந்தரின் இயல்புகளோடும் செயல்பாடுகளோடும் இணைத்துப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்வது உள்ளுறை உவமம். [51]
ஏனைய உவமத்தில் உவமையும் பொருளும் வெளிப்படையாகப் பொருத்திக் காட்டப்பட்டிருக்கும். [52]

கைக்கிளை

தொகு
காம உணர்வில்லாத இளையவள் மேல் காமம் கொண்டு, அந்தக் காமத்துக்குப் பாதுகாப்பு இல்லாத மன உளைச்சல் அடைந்து தனக்கு நன்மையும், அவளுக்கு நன்மையும், தனக்குத் தீமையும், அவளுக்குத் தீமையும் எனத் தன்னோடும் அவளோடும் ஒப்பிட்டுத் தன்னைப்பற்றி மேன்மையாக எண்ணித் தருக்குக் கொண்டு அவளிடம் பேசி, அவளிடமிருந்து எந்த மறுமொழியும் பெறாமல், தனக்குள்ளேயே ஆண்மகன் இன்பம் காணுதல் கைக்கிளைத் திணை. [53]

பெருந்திணை

தொகு
  1. மடலேறியது பற்றிப் பேசுதல்,
  2. அதிமுதியோனும் இளையோளும் உறவுகொள்ளல், முதியோளும் இளையோனும் உறவுகொள்ளல்,
  3. தெளிவில்லாத காம உணர்ச்சி உந்துதலால் புணர்தல்
  4. வலிமையால் இழுத்துப்போட்டு விருப்பமில்லாதவளோடு உடலுறவு கொள்ளல்
ஆகிய நான்கும் பெருந்திணை. [54]
  1. மடலேறுவேன் எனல்
  2. முதியரும் இளையரும் காமம் கொள்ளுதல்
  3. ஒப்பில்லார் மாட்டு உந்தும் காம-உணர்வு
  4. வலுக்கட்டாயமாய் வளைத்துப்போடும் பேச்சு
ஆகிய நான்கும் பெருந்திணை முதிராத முன்னைய நிலை. இவை நான்கும் கைக்கிளை. [55]
இங்குக் கூறப்பட்ட அகத்திணைச் செய்திகள் எல்லாம் புலனெறி (இலக்கண) வழக்கில் உள்ளவை. இவை நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும் பாடல்களில் வரும். இவை கலிப்பா, பரிபாடல் ஆகிய பாடல்களில் வரும். [56]
இவற்றில் தனி ஒருவரைச் சுட்டும் பெயர் வராது. [57]
தனியொருவரின் பெயர் சுட்டப்பட்டால் அது அகத்திணை அன்று. புறத்திணை. [58]

இதனையும் காண்க

தொகு

இந்த இயலில் உள்ள நூற்பா எண்கள்

  1. நூற்பா 1
  2. நூற்பா 2
  3. நூற்பா 3
  4. நூற்பா 4
  5. நூற்பா 5
  6. நூற்பா 6
  7. நூற்பா 7
  8. நூற்பா 8
  9. நூற்பா 9
  10. நூற்பா 10
  11. நூற்பா 11
  12. நூற்பா 12
  13. நூற்பா 13
  14. நூற்பா 14
  15. நூற்பா 15
  16. நூற்பா 16
  17. நூற்பா 17
  18. நூற்பா 17
  19. நூற்பா 18
  20. நூற்பா 19
  21. நூற்பா 20
  22. நூற்பா 21
  23. நூற்பா 22
  24. நூற்பா 23
  25. நூற்பா 24
  26. நூற்பா 25
  27. நூற்பா 26
  28. நூற்பா 27
  29. நூற்பா 28
  30. நூற்பா 29
  31. நூற்பா 30
  32. நூற்பா 31
  33. நூற்பா 32
  34. நூற்பா 33
  35. நூற்பா 34
  36. நூற்பா 35
  37. நூற்பா 36
  38. நூற்பா 37
  39. நூற்பா 38
  40. நூற்பா 39
  41. நூற்பா 40
  42. நூற்பா 41
  43. நூற்பா 42
  44. நூற்பா 43
  45. நூற்பா 44 - நூற்பா 45
  46. நூற்பா 46
  47. நூற்பா 47
  48. நூற்பா 48
  49. நூற்பா 49
  50. நூற்பா 50
  51. நூற்பா 51
  52. நூற்பா 52
  53. நூற்பா 53
  54. நூற்பா 54
  55. நூற்பா 55
  56. நூற்பா 56
  57. நூற்பா 57
  58. நூற்பா 58