நெடுமொழி
மூன்று புறநானூற்றுப் பாடல்கள் நெடுமொழி என்னும் துறையினவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று வெவ்வேறு திணைகளில் வருகின்றன.
புறநானூறு
தொகு- சேரமான் குட்டுவன் கோதை என்னும் மன்னன் நாடானது, நெடுமொழி கூறும் மன்னர்களுக்கு ஆட்டிடையன் செல்லாத புலி உறங்கும் காடு போன்றது,[1] வாகைத்திணை [2]
- அரசன் ஒருவன் தன் பகைவன் ஒருவனது நாட்டை முற்றுகை இட்டிருந்தபோது ‘நீ முந்து’ என வாயை மடித்து உறுமினான்.[3] கரந்தைத்திணை.
- ஓய்மான் நல்லியாதன் நிரயம் நரகம் போல இருந்த புலவர் புறத்திணை நன்னாகனார் வாழ்வை வளமாக்கினான். அதுமுதல் ‘பிறர் வாயிலுக்குச் செல்லமாட்டேன்’ எனப் புலவர் நெடுமொழி கூறிவந்தாராம்.[4] பாடாண் திணை.
தொல்காப்பியம்
தொகு- மாராயம் பெற்ற நெடுமொழி வஞ்சித்திணையில் வரும் திணை.[5][6]
- சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர்.[7] இது வெட்சித்திணையில் வரும் பாடல்.
புறப்பொருள் வெண்பாமாலை
தொகு- நெடுமொழி என்பது கரந்தைத் திணைக்குரிய துறைகளில் ஒன்றாகும். தனது மாமன்னனுக்குத் தன்னுடைய மேம்பாட்டை மறவனொருவன் தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல் எனப்படும். நெடுமொழி என்பது தற்பெருமை.[8][9][10]
உசாத்துணை
தொகுதா. ம. வெள்ளைவாரணம், புறப்பொருள்வெண்பாமாலை, திருப்பனந்தாள் மட வெளியீடு.1967.
மேற்கோள்
தொகு- ↑ புறநானூறு 54
- ↑ இப்பாடலுக்கு அரச வாகை என்னும் துறையும் குறிக்கப்பட்டுள்ளது.
- ↑ புறநானூறு 298
- ↑ புறநானூறு 376
- ↑ தொல்காப்பியம், புறத்திணையியல் 7
- ↑ இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு
துடி எறியும் புலைய!
எறி கோல் கொள்ளும் இழிசின!
காலம் மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும்,
தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! (புறநானூறு 287) - ↑
சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 5) - ↑
"மன்மேம் பட மதிக்குடை யோர்க்குத்
தன்மேம் பாடு தானெடுத் துரைத்தன்று." (புறப்பொருள் வெண்பாமாலை). - ↑ எடுத்துக்காட்டு:
- "ஆளமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி
- வாளொடு வைகுவேன் யானாக- நாளும்
- கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப்
- பிழிமகிழ் உண்பார் பிறர்.
- ↑ பொருள்:
'மன்னனே! வெட்சி மறவரது கூட்டம் பெருகி வருமானால் அதனைத் தடுத்து வாளுடன் போர்க்களத்தில் தங்குபவன் யான் ஒருவனே ஆகட்டும். பிறரெல்லாம் நீ கொடுத்த கள்ளை நுகர்பவராகட்டும்' என்று கரந்தை மறவன் ஒருவன் கூறுகிறான் இது நெடுமொழி யாகும்.