தலையாலங்கானத்துப் போர்

தலையாலங்கானத்துப் போர் என்ற போர் சங்ககாலத்தில் நடந்த தலைசிறந்த புகழ்பெற்ற போராகும் இப்போர் நெடுஞ்செழியனுக்கும் ஏழு மன்னர்களுக்கும் இடையில் நடந்தது போரில் நெடுஞ்செழியன் வென்றான்.

தலையாலங்கானம் தொகு

இப்போர் நடைபெற்ற இடமான தலையாலங்கானம் சோழ நாட்டில் தற்கால திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியிலுள்ள ஒரு கிராமமாகும். பிற்காலத்தில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று.

போர் தொகு

முதிரா இளைஞனான நெடுஞ்செழியனின் பாண்டிய நாட்டைக் கைப்பற்ற இரண்டு பேரரசர்கள்,ஐந்து வேளிர்கள் ஆக எழுவர் சேர்ந்து தாக்கினர். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன், வேளிர்களான திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன் ஆகியோரே இவ்வெழுவர்.[1] எதிரிகளைக்கண்டு பாண்டியன் கடுஞ்சினம் கொண்டு வஞ்சினம் கூறுகிறான். இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும் என்று பலர் முன் கூறுவது வஞ்சினம். நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால்,

  • என் குடிமக்கள் என்னைக் கொடியன் என்று தூற்றுவார்களாக!
  • மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட என் புலவர்-சங்கம் என்னைப் பாடாது போகட்டும்!
  • என்னைப் பாதுகாப்போர் துன்பம் கொள்ள, இரவலர்களுக்கு வழங்கமுடியாத வறுமை என்னை வந்தடையட்டும்!

என்று கூறி போருக்குப் புறப்படுகிறான். [2]

இப்போரில் எதிரிப்படைகளை சிதறடித்து எழுவர் முரசுகளோடு வெண்குடைகளையும் நெடுஞ்செழியன் கைப்பற்றினான்.[3]

புகழ் தொகு

அப்போரைப் பற்றிப் பாடாத அந்நாளைய புலவர்களே இல்லை எனலாம். அக்கால சிறந்த புலவர்களான நக்கீரரும், மாங்குடி மருதனாரும் முறையே இப்போரின் வெற்றி நாயகனான பாண்டியன் மீது நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி ஆகிய பெரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

குறிப்புகள் தொகு

  1. கா.அப்பாத்துரை,தென்னாட்டுப் போர்களங்கள்,பக்.127
  2. புறநானூறு,பாடல்.72
  3. அகநானூறு, பாடல்-34
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையாலங்கானத்துப்_போர்&oldid=2565478" இலிருந்து மீள்விக்கப்பட்டது