விக்கிரம சோழன்

சோழ மன்னர்

விக்கிரம சோழன் (பொ.ஊ. 1118-1135[1]) முதலாம் குலோத்துங்கனுக்கும் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. விக்கிரமசோழ உலா எனும் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம்.

விக்கரம சோழன்

kulothunga_territories_cl.png
விக்கரம சோழன் காலத்துச் சோழ நாடு பொ.ஊ. 1122
ஆட்சிக்காலம் பொ.ஊ. 1118-1136
பட்டம் இராசகேசரி வர்மன்

அகளங்கன்

தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி
பிள்ளைகள் இரண்டாம் குலோத்துங்க சோழன்
முன்னவன் முதலாம் குலோத்துங்க சோழன்
பின்னவன் இரண்டாம் குலோத்துங்க சோழன்
தந்தை முதலாம் குலோத்துங்க சோழன்
பிறப்பு கங்கை கொண்ட சோழபுரம்
இறப்பு கங்கை கொண்ட சோழபுரம்

வேங்கிப் போர்

தொகு

சாளுக்கிய மன்னனாகிய விக்கிரமாதித்தனின் மறைவுக்கு பின் சாளுக்கிய அரசர்கள் வலுவிழந்தனர். அது மட்டும் இல்லாமல் தங்களின் மரபு வழி பூமியாகிய வேங்கியை இழக்க விக்ரம சோழனும் விரும்பவில்லை ஆதலால் தனது மகன் அபயகுலோத்துங்கனின் தலைமையில் ஒரு படையினை வேங்கிக்கு அனுப்பி வைத்தான். சோழர்களுக்குத் துணையாக சோட நாட்டுத் தலைவர்களாகிய கொனகண்டேஸ்வரனும் கிரிபச்சிமாவும் துணை இருந்தனர். இந்த போரின் மூலம் சோழ தேசம் எந்த எல்லையையும் விக்கிரம சோழனின் காலத்தில் இழக்காமல் இருந்தது.

கலிங்கப் போர்

தொகு

குலோத்துங்கனின் காலத்திற்கு பின்பு இவன் காலத்திலும் கலிங்கப் போர் நடைபெற்றதாக குறிப்புகள் உள்ளன. முதலாம் குலோத்துங்கனின் காலத்திலும் விக்கிரம சோழனே படைகளுடன் சென்றுள்ளான். கருணாகரப் பல்லவன் விக்ரம சோழனின் காலத்திலும் துணை இருந்துள்ளதாக இந்த போரின் குறிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் இந்தப் போரினை அடுத்து நிகழ்ந்த கங்காவடி போரினிலும் கலந்து கொண்டுள்ளான். ஆதலால் கருணாகரன் குலோத்துங்கன் காலத்திலும் விக்கிரமன் காலத்திலும் சோழர்களுக்கு துணை இருந்துள்ளான் என்பதனை அறிந்து கொள்ளலாம். விக்கிரம சோழன் கலிங்கத்தின் மீது படை எடுத்தமையை ஒட்டக்கூத்தர் உலா மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த கலிங்கத்து போரிலும் சோழர்கள் வெற்றி பெற்றமையால் சோழ நாடு சுருங்காமல் இருந்தது.

கங்காவடிப் போர்

தொகு

இந்தக் கால கட்டமே ஹோய்சாளர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற காலம் ஆகும். சாளுக்கியர்களின் காலம் முடிந்து, ஹோய்சாலர்களின் ஆட்சிக் காலம் ஆரம்பம் ஆகிய காலத்தே நிகழ்ந்த இந்தப் போரின் கங்காவாடிப் பகுதியை சோழர்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர். ஆதலால் விக்கிரம சோழன் ஹோய்சாளர்கள் மீது போர் தொடுத்து கங்காவாடிப் பகுதியை மீட்டான்.

தேச அளவு

தொகு

தன் தந்தையின் காலத்தில் பல போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுப் பட்டான். சேர நாடும் பாண்டிய நாடும் இவனுக்கு பணிந்தே இருந்தனர். இலங்கை தேசம் புலனருவா பகுதி வரை[சான்று தேவை] சோழ அரசு விரிந்து இருந்தது.

கோவில் பணிகள்

தொகு

விக்கிரம சோழன் தீவிர சிவ பக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகே தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தான். விக்ரம சோழன் உலகளந்த சோழமங்கலத்தில் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவை) சிவன் கோயிலைக் கட்டினான். இந்தக் கோயிலில் சிவன் சுயம்புவாக உள்ளார். சிதம்பரம் நடராசர் சிலையைப் போலவே இங்குள்ள சிலையும் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது. இக்கோவிலின் வெளிப்புறச் சுவர் பச்சைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.[2]

தியாகசமுத்ரம்

தொகு

விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தில் மழை இல்லாமல் சிறிது வறுமை தலை தூக்கியது. ஆதலால் விக்கிரமன் தனது மக்களுக்கு பற்பல தானங்கள் வழங்கி வறுமை களைந்தான். ஆதலால் அவனுக்கு இந்தப் பெயர் கிடைத்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Nilakanta Sastri, K. A. (1935). The Cōḷas., University of Madras, Madras (Reprinted 1984).p62-63.
  2. https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/to-sport-a-new-look/article6506910.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரம_சோழன்&oldid=4096805" இலிருந்து மீள்விக்கப்பட்டது