கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் (ஆங்கில மொழி: Gangaikonda Cholapuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது.[1] இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது.[2] அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.[3]
கங்கைகொண்ட சோழபுரம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
இடம் | அரியலூர் மாவட்டம் |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii |
உசாத்துணை | 250 |
UNESCO region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11th தொடர்) |
விரிவாக்கம் | 2004 |
அமைவிடம்
அரியலூர் மாவட்டத்தில், (11°12′27″N 79°27′05″E / 11.2076°N 79.4514°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது.
வேறு பெயர்கள்
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர்.[1]
சோழர்களின் புதிய தலைநகர்
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் பொ.ஊ. 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.[4]
தொல்லியல் அகழாய்வு
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடித் தொகுதி, ஆதிச்சநல்லூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அகழாய்வில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், சில அடி ஆழத்திலேயே செங்கற்களால் ஆன பதிமூன்று சுவர்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இது தவிர, சில செப்புக் காசுகள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள் ஆகியவையும் இங்கிருந்து கிடைத்திருக்கின்றன. இது தவிர, சீன மட்பாண்டமும் கிடைத்திருக்கிறது. தற்போது ஐந்து குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில், 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கின்றன. இன்னும் பத்துக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டு போது பெரிய அளவிலான சுவர்களைப் பார்க்க முடியும் என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம்.[5]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்) - காமகோடி தளம்
- ↑ மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம் - தினமலர்
- ↑ சோழ மன்னன் நினைவாக தஞ்சையிலிருந்து தீப ஓட்டம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் 1,000 தீபம் ஏற்றினர் - தி இந்து சூலை 26, 2014
- ↑ பக் 49, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87371-07-2.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?
ஆதார நூல்
தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்,பண்பாட்டுச் சின்னங்களும்,[1] நூலாசிரியர், வி. கந்தசாமி, வரலாற்றுத்துறைத் துணைப் பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் கலை,பண்பாட்டுக்கல்லூரி, பழனி
வெளி இணைப்புகள்