உலகப் பாரம்பரியக் களம்

(உலக பாரம்பரியக் களம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலகப் பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம்[1]. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படுவதுடன் 21 பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்[2][3]

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவிற்கான இலச்சினை
களம் #86: எகிப்து நாட்டில் மெம்பிசு பகுதியும், அங்கே உள்ள கிசா பிரமிடுத் தொகுதியும்
களம் #114: பெர்செபோலிசு, ஈரான்
களம் #174: பிளாரென்சின் வரலாற்று மையம், (இத்தாலி)
களம் #129: மாயன் கோபன் (ஹொண்டுராஸ்)
களம் #447: உலுரு-கடா தேசியப் பூங்கா, (ஆத்திரேலியா)
களம் #483: சிச்சென் இட்சா, (மெக்சிகோ)
களம் #540:சென் பீட்டர்ஸ்பேர்க் வரலாற்று மையமும் அதன் சுற்றுப்புறமும் (உருசியா)
களம் #705: ஊடங் மலைப்பகுதியில் உள்ள பண்டை கட்டிட வளாகம் (சீனா)
களம் #723: பெனா தேசிய அரண்மனை மற்றும் சின்ட்ரா (போர்த்துகல்)
களம் #800: கென்யா மலை தேசியப் பூங்கா (கென்யா)
களம் #944: இந்திய மலைப்பாதை தொடருந்துகள் (இந்தியா)
பரிந்துரைக்கப்பட்ட களத்திற்கான ஒரு காட்டு: தாதேவ் துறவியர் மடம் (ஆர்மீனியா)

மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். சில களங்களின் மேம்பாட்டுக்காக, சில நடைமுறைகளின் கீழ், உலக பாரம்பரிய நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்கப்படுவதும் உண்டு. இவ்வாறான களங்களைப் பாதுகாக்கும் நோக்குடன், 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் நடந்த யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் கொண்டு வரப்பட்ட சாசனத்தில்,[4] இத்திட்டம் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 2012 அறிக்கையின்படி, இத் திட்டத்தில் இதுவரை 190 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன[5].

2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இது வரை 962 களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 157 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 745 பண்பாட்டுக் களங்களும், 188 இயற்கைசார் களங்களும், 29 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன.[6][7]. போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்[8].

இத்தாலியிலேயே அதிகளவு உலகப் பாரம்பரியக் களங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யுனெஸ்கோ ஒவ்வொரு பாரம்பரியக் களத்திற்கும் ஒவ்வொரு அடையாள இலக்கத்தை வழங்கி வருகின்றது. புதிதாக பட்டியலிடப்படும் களங்களில் சில பழைய பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதனால், அடையாள இலக்கங்களின் எண்ணிக்கை 1200 ஐ விட அதிகமாக இருப்பினும், களங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பிட்ட களங்கள் அந்தந்த நாட்டின் சட்டப்படியான எல்லைக்குள் இருப்பினும், இவை ஒவ்வொன்றையும் பாதுகாப்பது உலக சமூகத்தின் கடமை என யுனெஸ்கோ கருதுகின்றது.

வரலாறு தொகு

ஐக்கிய அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; இதுவே நூறாண்டுகள் கழித்து, நிக்சனின் நிர்வாகத்தின்போது, 1972ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் 'உலக பாரம்பரிய அறக்கட்டளைக்கு' பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே உலகளவில் தேசியப் பூங்கா கருத்தாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தது.[9]

1954ஆம் ஆண்டில் எகிப்திய அரசு அஸ்வான் அணை கட்ட முடிவெடுத்தபோது அதன் நீர்பிடிப்புப் பகுதியிலிருந்த பள்ளத்தாக்கில் அபு சிம்பெல் கோவில்கள் போன்ற பல பண்டைய எகிப்தின் பொக்கிசங்கள் மூழ்குவதாக இருந்தது. அப்போது இவற்றைக் காத்திட யுனெசுக்கோ உலகளவில் பெரும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டது. அபு சிம்பெல் மற்றும் பிலே கோவில்கள் கல், கல்லாக பெயர்க்கப்பட்டு உயரமான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மீண்டும் கட்டமைக்கப்பட்டது. தெண்டூர் கோவில் இதேபோல நியூ யார்க்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.[10]

இந்தத் திட்டத்திற்கு US$ 80 மில்லியன் செலவானது; இதில் ஏறத்தாழ $ 40 மில்லியன் செலவை 50 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்தாலியில் வெனிஸ், பாக்கித்தானில் மொகெஞ்சதாரோ மற்றும் இந்தோனேசியாவில் போரோபுதூர் கோவில் வளாகங்களையும் பாதுகாக்க பன்னாட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. யுனெசுக்கோ, நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையுடன் இணைந்து, மனித இனத்தின் பொதுவான பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் காப்பதற்கான சாசன முன்வரைவு ஒன்றை உருவாக்கியது.

விண்ணப்பிக்கும் நடைமுறை தொகு

ஒவ்வொரு நாடும், தனது நாட்டிலுள்ள பண்பாட்டு, இயற்கை முக்கியத்துவம் உள்ள களங்களைக் கணக்கெடுக்க வேண்டும். இது ஆய்விற்கான ஒரு பட்டியலாகக் கொள்ளப்படும். இந்தப் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படும் களத்தை உலக பாரம்பரியக் களத்திற்காக குறிப்பிட்ட நாடு முன்மொழியலாம். இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு களத்தை உலக பாரம்பரியக் களத்திற்காக ஒரு நாடு முன்மொழியக் கூடாது.
அப்படி முன்மொழியப்பட்ட களங்களை நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமும் மதிப்பீடு செய்யும். பின்னர் குறிப்பிட்ட களமானது உலக பாரம்பரியக் களத்துக்கான தகுதியைப் பெற்றிருப்பின், அதனை உலகப் பாரம்பரியக் குழுவிற்குப் பரிந்துரை செய்யும். அந்தக் குழுவே ஆண்டுக்கொருமுறை ஒன்றுகூடி, குறிப்பிட்ட களத்தை உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்துக் கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும். சிலசமயம் இறுதி முடிவு எடுப்பதற்கு மேலதிக தகவல்கள் தேவை என குறிப்பிட்ட களத்தை முன்மொழிந்த நாட்டிடம் கேட்கப்படும்.

தேர்விற்கான விதிகள் தொகு

2004 ஆம் ஆண்டுவரை பாரம்பரிய பண்பாட்டு களங்களுக்கு ஆறு தேர்வு அளவீடுகளும், பாரம்பரிய இயற்கைக் களங்களுக்கு நான்கு தேர்வு அளவீடுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் இந்த முறையில் சிறுமாற்றம் செய்யப்பட்டு, அனைத்து வகையான பாரம்பரியக் களங்களுக்கும் பொதுவாக பத்து தேர்வு அளவீடுகள் கொடுக்கப்பட்டன. முன்மொழியப்படும் பாரம்பரியக் களமானது உலகளாவிய நோக்கில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், குறிப்பிட்ட பத்து அளவீடுகளில் ஒன்றையாவது நிறைவு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.[11]

பண்பாட்டு களங்களுக்கான தேர்வு அளவீடுகள் தொகு

 • (i) மனிதனின் மிகச் சிறந்த படைப்பாக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.
 • (ii) கட்டடக்கலை அல்லது தொழில்நுட்பம், நினைவுச்சின்னங்களைக் கொண்ட கலை, நகராக்க திட்டம் அல்லது நிலத்தோற்ற (landscape) வடிவமைப்பு போன்றவற்றின் அபிவிருத்தியினால், மனித மதிப்பீட்டில் முக்கியமான பரிமாற்றத்தை வெளிக்காட்டக் கூடியதாகவும், உலகின் பண்பாட்டு மையங்களில் அமைந்திருக்கும் ஒன்றாக அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மேலாக நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
 • (iii) தற்காலத்திலும் நிலைத்திருக்கின்ற அல்லது மறைந்துபோன ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்துக்கோ, அல்லது நாகரீகத்துக்கோ தனித்துவமான, அல்லது மிகச் சிறந்த சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
 • (iv) மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிலையை/காலத்தை விளக்கக் கூடிய, ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்கக் கூடிய ஒரு கட்டடம், கட்டக்கலை அல்லது தொழில்நுட்பம் சார் குழுமம் அல்லது நிலத்தோற்றமாக இருக்க வேண்டும்.
 • (v) மனிதருக்கும் சூழலுக்கும், முக்கியமாக தற்காப்புக்கு அப்பாற்பட்ட மீட்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும் சூழலுக்கும், இடையிலான இடைத்தாக்கத்தை அல்லது பண்பாட்டை விளக்கும் பாரம்பரிய மனித குடியேற்றம், நிலப் பாவனை, அல்லது கடல் பாவனை போன்றவற்றிற்கான ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
 • (vi) உலகளாவிய அதி முக்கியத்துவமுடைய நிகழ்வுகள் அல்லது வாழும் பாரம்பரியங்களுடன், எண்ணங்களுடன், அல்லது நம்பிக்கைகளுடன், கலைகளுடன், இலக்கியம்சார் விடயங்களுடன் நேரடியாக, அல்லது உறுதியான தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும்.

இயற்கை களங்களுக்கான தேர்வு அளவீடுகள் தொகு

வரையறுக்கப்பட்ட களங்களுக்கான சட்டம்சார் நிலை தொகு

பரம்பல் தொகு

கீழுள்ள அட்டவணையில், உலகின் வெவ்வேறு வலயங்களில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் பரம்பலைக் காணலாம்:[12][13]

வலயம் இயற்கை பண்பாடு கலப்பு மொத்தம்
வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் 68 417 11 496[14]
ஆசியாவும் ஒசியானியாவும் 55 148 10 213[14]
ஆபிரிக்கா 39 48 4 91
அரபு நாடுகள் 5 67 2 74
லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் 36 91 3 130
Sub-Total 203 771 30 1004
இருமுறை பதிவானவற்றைக் கழிக்க* 15 26 1 42
Total 188 745 29 962
 • சில களங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமாக இருப்பதனால் வலயங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் இவ்வாறு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகின்றது.

நாடுகள் அடிப்படியிலான புள்ளிவிவரத்திற்கு உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலைப் பார்க்கவும்.

உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் தொகு

ஆபத்தான நிலையிலுள்ள உலக பாரம்பரியக் களங்கள் தொகு

இலங்கையிலுள்ள உலக பாரம்பரியக் களங்கள் தொகு

தற்போது, இலங்கையில் எட்டு இடங்கள் யுனெசுகோவினால் உலக பாரம்பரியக் களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு பண்பாட்டுக் களங்களாகவும் இரண்டு இயற்கைக் களங்களாகவும் விளங்குகின்றன.[15]

 1. பண்டைய புனித நகரமான அனுராதபுரம்
 2. தங்கக் கோயில், தம்புள்ளை
 3. புனித நகரம் கண்டி
 4. பண்டைய நகரமான பொலன்னறுவை
 5. பண்டைய நகரமான சிகிரியா
 6. காலியின் பழைய நகரமும் அதன் கோட்டைகளும்
 7. சிங்கராஜ வனம்
 8. இலங்கையின் மத்திய உயர்நிலங்கள்

இன்னமும் அறிவிக்கப்படாது ஆய்நிலையிலுள்ளப் பட்டியல்:

 1. சேருவில மங்கள ரஜ மகாவிகாரை
 2. சேருவில முதல் ஸ்ரீ பாத வரை (புனித காலடி ஆலயம்), மகாவலி ஆற்றோர பண்டைய யாத்திரிகர் பாதை

தமிழகத்திலுள்ளவை தொகு

 1. மாமல்லபுர மரபுக்கோயில்கள்பல்லவர்களால் கட்டப்பட்டது.
 2. அழியாத சோழர் பெருங்கோயில்கள்சோழர்களால் கட்டப்பட்டது.
 3. நீலகிரி மலை இரயில் பாதை – 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை(rack railway) ஆகும்.

மேற்கோள்கள் தொகு

 1. "World Heritage". http://whc.unesco.org/en/about/. 
 2. "The World Heritage Committee". UNESCO World Heritage Site. http://whc.unesco.org/en/comittee/. பார்த்த நாள்: 2006-10-14. 
 3. According to the UNESCO World Heritage வலைத்தளம், States Parties are countries that signed and ratified The World Heritage Convention. As of January 2012, there are a total of 188 State Parties.
 4. Convention Concerning the Protection of World Cultural and Natural Heritage
 5. World "World Heritage List". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். http://whc.unesco.org/pg.cfm?cid=31&l=en&&&&mode=table&order=region World. பார்த்த நாள்: 2012-10-01. 
 6. World Heritage List, UNESCO World Heritage Sites official sites.
 7. Twenty-seven new sites inscribed, UNESCO World Heritage Sites official sites.
 8. வல்லமை.காம்
 9. World Heritage Convention, National Park Service Official Sites.
 10. Brief History, UNESCO World Heritage Sites official sites.
 11. "Criteria for Selection". World Heritage. http://whc.unesco.org/en/criteria/. பார்த்த நாள்: 2006-10-14. 
 12. Stats
 13. [1]
 14. 14.0 14.1 The Uvs Nuur basin located in மங்கோலியா and உருசியா is here included in ஆசிய-பசிபிக் zone.
 15. http://www.worldheritagesite.org/countries/srilanka.html

வெளி இணைப்புகள் தொகு