மங்கோலியா

கிழக்காசியாவின் நிலஞ்சூழ் நாடு

மங்கோலியா[b] (Mongolia, /mɒŋˈɡliə/ (About this soundகேட்க) mong-GOH-lee) என்பது கிழக்காசியாவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இதற்கு வடக்கே உருசியாவும், தெற்கே சீனாவும் எல்லைகளாக உள்ளன. மங்கோலியாவின் மேற்குக் கோடி முனையானது கசக்கஸ்தானில் இருந்து வெறும் 23 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. வரை படத்தில் காணும் போது இப்பகுதியானது ஒரு நாற்சந்திப்பை ஒத்திருக்கலாம். இந்நாட்டின் பரப்பளவு 15,64,116 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் மொத்த மக்கள்தொகை வெறும் 33 இலட்சமே ஆகும். உலகின் மிகவும் அடர்த்தி குறைவான இறையாண்மையுள்ள நாடாக இது திகழ்கிறது. நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடலை எல்லையாகக் கொண்டிராத உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடு மங்கோலியா ஆகும். இந்த நாட்டின் பெரும்பாலான நிலமானது ஸ்டெப்பி புல்வெளிகளால் மூடப்பட்டுள்ளது. இந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கே மலைகளும், தெற்கே கோபிப் பாலைவனமும் உள்ளன. இதன் தலைநகரமாகவும், மிகப் பெரிய நகரமாகவும் உலான் பத்தூர் திகழ்கிறது. தோராயமாக இந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேரை இந்நகரம் கொண்டுள்ளது.

மங்கோலியா
Mongolia
கொடி of மங்கோலியா
கொடி
சின்னம் of மங்கோலியா
சின்னம்
நாட்டுப்பண்: Монгол улсын төрийн дуулал
"தேசியப் பண்"
தலைநகரம்உலான் பத்தூர்[a]
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)மங்கோலியம்
அதிகாரபூர்வ எழுத்துமுறைகள்
இனக் குழுகள்
(2020[2])
சமயம்
(2020[2])
மக்கள்மங்கோலியர்
அரசாங்கம்ஒருமுக சனாதிபதிக் குடியரசு[3]
• அரசுத்தலைவர்
உக்நாகீன் கூரெல்சூக்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
அமைப்பு
கிமு 209
1206
1691
• சிங் அரசில் இருந்து விடுதலை அறிவிப்பு
29 திசம்பர் 1911
26 நவம்பர் 1924
• தற்போதைய அரசியலமைப்பு
13 பெப்ரவரி 1992
பரப்பு
• மொத்தம்
1,564,116 km2 (603,909 sq mi) (18-ஆவது)
• நீர் (%)
0.67[4]
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
3,227,863[5] (134-ஆவது)
• அடர்த்தி
2.07/km2 (5.4/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
$47.1  பில்.[6] (124-ஆவது)
• தலைவிகிதம்
$13,611[6] (103-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
$15.7 பில்.[6] (136-ஆவது)
• தலைவிகிதம்
$4,542[6] (115-ஆவது)
ஜினி (2018)32.7[7]
மத்திமம்
மமேசு (2021) 0.739[8]
உயர் · 96-ஆவது
நாணயம்தோகுரோக் (MNT)
நேர வலயம்ஒ.அ.நே+7/+8[9]
திகதி அமைப்புஆஆஆஆ.மாமா.நாநா (பொ.ஊ)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+976
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMN
இணையக் குறி.mn, .мон

தற்போதைய மங்கோலியாவின் நிலப்பரப்பானது பல்வேறு நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்டுள்ளது. இதில் சியோங்னு, சியான்பே, உரூரன் ககானரசு, முதல் துருக்கியக் ககானரசு, இரண்டாம் துருக்கியக் ககானரசு, உயுகுர் ககானரசு மற்றும் பிற அரசுகளும் அடங்கும். 1206இல் செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தார். வரலாற்றின் மிகப் பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசாக இது உருவானது. இவரது பேரன் குப்லாய் கான் மைய சீனாவைக் கைப்பற்றினார். யுவான் அரசமரபை நிறுவினார். யுவான் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியர்கள் மங்கோலியாவுக்குப் பின் வாங்கினர். தயன் கான் மற்றும் தியூமன் சசக்த் கான் ஆகியோரின் சகாப்தங்களைத் தவிர்த்து பிற காலங்களில் தங்களுடைய முந்தைய வாழ்க்கை முறையான பழங்குடியினச் சண்டைகளை மங்கோலியர்கள் தொடர்ந்தனர். 16ஆம் நூற்றாண்டில் திபெத்தியப் பௌத்தமானது மங்கோலியாவுக்குப் பரவியது. சிங் அரசமரபானது மஞ்சு இனத்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அரசமரபு மங்கோலியாவை 17ஆம் நூற்றாண்டில் இணைத்துக் கொண்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வாக்கில் இந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர்.[10][11] 1911இல் சிங் அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியா விடுதலையை அறிவித்தது. ஆனால், சீனக் குடியரசிடமிருந்து உண்மையான சுதந்திரத்தை 1921ஆம் ஆண்டு தான் அடைந்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே மங்கோலியாவானது சோவியத் ஒன்றியத்தின் ஒரு சார்பு நாடாக மாறியது. 1924இல் ஒரு சோசலிசக் குடியரசாக மங்கோலிய மக்கள் குடியரசு நிறுவப்பட்டது.[12] 1989ஆம் ஆண்டின் பொதுவுடமைவாத எதிர்ப்புப் புரட்சிக்குப் பிறகு மங்கோலியா 1990ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இதன் சொந்த அமைதியான சனநாயகப் புரட்சியை நடத்தியது. பல கட்சி ஆட்சியமைப்பு, 1992ஆம் ஆண்டில் ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் சந்தைப் பொருளாதாரத்துக்கான மாற்றம் ஆகியவற்றுக்கு இப்புரட்சி வழி வகுத்தது.

தோராயமாக 30% மக்கள் நாடோடிகளாகவோ அல்லது பகுதியளவு நாடோடிகளாகவோ உள்ளனர். பண்பாட்டில் குதிரையானது இன்னும் ஓர் அங்கமாகத் தொடர்கிறது. நாட்டின் பெரும்பான்மையான சமயமாக பௌத்தமும் (51.7%), இரண்டாவது பெரிய குழுவாக சமயம் சாராதவர்களும் (40.6%) உள்ளனர். மூன்றாவது பெரிய குழுவாக இசுலாமியர் (3.2%) உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கசக் இனத்தவர்களாக உள்ளனர். நாட்டின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். தோராயமாக 5% கசக்குகள், துவர்கள், மற்றும் பிற சிறுபான்மையினராக உள்ளனர். இவர்கள் குறிப்பாக மேற்குப் பகுதிகளில் அதிகளவில் உள்ளனர். ஐக்கிய நாடுகள் அவை, ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை, ஜி77, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, மற்றும் அணி சேரா இயக்கம் ஆகிய அமைப்புகளில் ஓர் உறுப்பினராக மங்கோலியா உள்ளது. மேலும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் சர்வதேசக் கூட்டாளியாகவும் உள்ளது. 1997ஆம் ஆண்டு உலக வணிக அமைப்பில் மங்கோலியா இணைந்தது. பிராந்தியப் பொருளாதார மற்றும் வணிகக் குழுக்களில் இதன் பங்களிப்பை விரிவாக்க மங்கோலியா முயற்சி செய்து வருகிறது.[4]

சொற்பிறப்பியல் தொகு

மங்கோலியா
மங்கோலியப் பெயர்
மங்கோலிய சிரில்லிக் Монгол Улс
(மங்கோல் உளூசு)
மொங்கோலிய எழுத்துமுறை ᠮᠣᠩᠭᠣᠯ
ᠤᠯᠤᠰ

இலத்தீன் மொழியில் மங்கோலியா என்ற பெயரின் பொருளானது "மங்கோலியர்களின் நிலம்" என்பதாகும். மங்கோலியச் சொல்லான மங்கோல் எவ்வாறு தோன்றியது என்று தெரியவில்லை. ஒரு மலை அல்லது ஆற்றின் பெயராக பலவராக இது கொடுக்கப்படுகிறது. மங்கோலிய மோங்கே-தெங்கிரி-கல் ("அழிவற்ற வான் நெருப்பு")[13] என்பதன் ஒரு மருவிய வடிவமாக இது கருதப்படுகிறது, அல்லது உரூரன் ககானரசின் 4ஆம் நூற்றாண்டு நிறுவனரான முகுலு என்பவரிடம் இருந்து பெறப்பட்டது என்று கருதப்படுகிறது.[14] இவரது பெயரானது 'முங்கு' என்றும் முதலில் குறிப்பிடப்பட்டது.[15] தற்போதைய சீன மொழியில் மெங்வு, நடுக்கால சீன மொழியில் முவ்ன்கு என்றும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[16] 8ஆம் நூற்றாண்டின் தாங் அரசமரபின் வடக்குப் பழங்குடியினங்களின் பட்டியலில் சிவேயி பழங்குடியினத்தின் ஒரு பிரிவினராக இந்த முங்கு குறிப்பிடப்படுகின்றனர். இது லியாவோ கால முங்கு[15] என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.[17]

1125இல் லியாவோ அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியப் பீடபூமியில் ஒரு முன்னணிப் பழங்குடியினமாகக் கமக் மங்கோலியர்கள் உருவாயினர். எனினும், சுரசன்களால் ஆட்சி செய்யப்பட்ட சின் அரசமரபு மற்றும் தாதர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான போர்களால் கமக் மங்கோலியர்கள் பலவீனம் அடைந்தனர். இந்தப் பழங்குடியினத்தின் கடைசித் தலைவர் எசுகெய் ஆவார். இவரின் மகனான தெமுஜின் இறுதியாக அனைத்து சிவேயி பழங்குடியினங்களையும் ஒன்றிணைத்து மங்கோலியப் பேரரசாக்கினார் (எகெ மங்கோல் உளூசு). 13ஆம் நூற்றாண்டில் செங்கிஸ் கானின் ஆட்சிக்குக் கீழ் இருந்த மங்கோலிய மொழி பேசிய பழங்குடியினங்களின் ஒரு பெரிய குழுவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட ஒற்றைச் சொல்லாக மங்கோலியர் என்ற வார்த்தை உருவானது.[18]

13 பெப்ரவரி, 1992 அன்று மங்கோலியாவின் புதிய அரசியலமைப்புப் பின்பற்றப்பட்டதில் இருந்து அரசின் அதிகாரப்பூர்வப் பெயராக "மங்கோலியா" (மங்கோல் உளூசு) உள்ளது.

வரலாறு தொகு

வரலாற்றுக்கு முந்தைய மற்றும் பண்டைக் காலம் தொகு

கோவ்து மாகாணத்தில் உள்ள கோயித் திசேங்கர் குகையானது[19] மாமூத், சிவிங்கிப் பூனை, இரட்டைத்திமில் ஒட்டகம் மற்றும் நெருப்புக் கோழிகளின் உயிரோட்டமுடைய வெளிர் சிவப்பு, பழுப்பு மற்றும் சிவப்புக் காவி வண்ண ஓவியங்களைக் (20,000 ஆண்டுகளுக்கு முன்னர்) கொண்டுள்ளது. பிரான்சில் 17,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட லசுகௌக்சு என்ற இடத்தில் வரையப்பட்ட ஓவியங்களை ஒத்து இக்குகையானது மங்கோலியாவின் லசுகௌக்சு என்ற செல்லப் பெயரைப் பெற்றுள்ளது. சைபீரியாவின் மால்டா கலாச்சாரத்தைச் சேர்ந்த பெண் தெய்வம் வீனசின் சிலைகள் (21,000 ஆண்டுகளுக்கு முன்னர்) வடக்கு மங்கோலியாவில் இருந்த மேல் பாலியோலித்திக் கலையின் தரத்திற்குச் சான்றாக உள்ளது. நோரோவ்லின், தம்சக்புலக், பயன்சக், மற்றும் இரசான் காத் போன்ற நியோலித்திக் விவசாயக் குடியிருப்புகள் (அண். 5,500-3,500 பொ. ஊ. மு.) குதிரை-சவாரி நாடோடிகளின் அறிமுகத்திற்கு முன்னரே இருந்தது. மங்கோலியாவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இது கருதப்படுகிறது. இப்பண்பாடே அதிக தாக்கத்தையுடைய பண்பாடாக மாறியது. செப்பு மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த அபனசேவோ பண்பாட்டின் (3,500-2,500 பொ. ஊ. மு.) போது மங்கோலியாவில் இருந்து பெறப்படும் தொல்லியல் சான்றுகளில் குதிரை-சவாரி செய்யும் நாடோடிகள் நன்முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.[20] நடு மங்கோலியாவின் கான்காய் மலைகளில் இந்த இந்தோ-ஐரோப்பியப் பண்பாடானது செயல்பாட்டில் இருந்தது. அபனசேவர்களின் சக்கரங்களுடைய வண்டிகளின் புதையலானது பொ. ஊ. மு. 2,200ஆம் ஆண்டிற்கு முன் காலமிடப்படுகிறது.[21] பிந்தைய ஒகுனேவ் பண்பாடு (பொ. ஊ. மு. 2,000), அன்ட்ரோனோவோ பண்பாடு (2,300–1,000 பொ. ஊ. மு.), கரசுக் பண்பாடு (1,500–300 பொ. ஊ. மு.) ஆகியவற்றின் மூலம் ஆயர் நாடோடி வாழ்க்கை முறை மற்றும் உலோக வேலைப்பாடுகள் நன்கு முன்னேற்றம் அடைந்தன. இது இறுதியாக பொ. ஊ. மு. 209ஆம் ஆண்டு இரும்புக் கால சியோங்னு பேரரசுடன் முடிவடைந்தது. பறக்கும் மான்களின் உருவங்களையுடைய கற்கள், சமாதிக்கு மேல் எழுப்பபப்டும் மேடுகளான கெரேக்சுர் குர்கன்கள், சதுர பாள சமாதிகள் மற்றும் பாறை ஓவியங்கள் ஆகியவற்றை சியோங்னு காலத்திற்கு முந்தைய வெண்கலக் காலமானது நினைவுச் சின்னங்களாகக் கொண்டுள்ளது.

நியோலித்திக் காலம் முதலே பயிர் செய்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் ஆயர் நாடோடி வாழ்க்கை முறையுடன் ஒப்பிடும் போது விவசாயமானது எப்போதுமே மிகச் சிறிய அளவிலேயே நடைபெற்றது. விவசாயமானது மங்கோலியாவுக்கு மேற்குப் பகுதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லது மங்கோலியாவிலேயே சுதந்திரமாக வளர்ச்சியடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. செப்புக் காலத்தின் போது மங்கோலியாவின் கிழக்குப் பகுதியில் இருந்தவர்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், மேற்குப் பகுதியில் இருந்தவர்கள் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.[19] தொச்சாரியர்கள் (உயேசி) மற்றும் சிதியர்கள் வெண்கலக் காலத்தின் போது மேற்கு மங்கோலியாவில் வாழ்ந்து வந்தனர். இளம் பொன்னிற முடியுடைய 30 முதல் 40 வயதுடைய ஒரு சிதியப் போர் வீரனின் மம்மியானது மங்கோலியாவின் அல்த்தாய் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[22] இது சுமார் 2,500 ஆண்டுகள் பழையது என்று நம்பப்படுகிறது. குதிரை சார்ந்த நாடோடி வாழ்க்கை முறையானது மங்கோலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஐரோவாசியப் புல்வெளியின் அரசியல் மையமும் மங்கோலியாவிற்கு இடம் மாறியது. பொ. ஊ. 18ஆம் நூற்றாண்டு வரை மங்கோலியாவே ஐரோவாசியப் புல்வெளியின் அரசியல் மையமாகத் தொடர்ந்து இருந்தது. சாங் அரசமரபு (1600–1046 பொ. ஊ. மு.) மற்றும் சவு அரசமரபு (1046–256 பொ. ஊ. மு.) ஆகியவற்றின் காலத்தின் போது சீனாவுக்குள் வடக்கு ஆயர்களின் (எ. கா. குயிபங், சன்ரோங், மற்றும் தோங்கு) ஊடுருவல்கள் நாடோடிப் பேரரசுகளின் காலம் வரப்போகிறது என்பதன் முன் அறிகுறியாக இருந்தது.

தொடக்க அரசுகள் தொகு

 
உலான் பத்தூரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் எடுக்கப்பட்ட 7ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்கள்.

வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே மங்கோலியாவில் நாடோடிகள் வாழ்ந்து வந்துள்ளனர். காலம் விட்டு காலம் இந்த நாடோடிகள் சக்தி மற்றும் முக்கியத்துவத்தைப் பெற்ற பெரும் கூட்டமைப்புகளை அமைத்தனர். கானின் அலுவலகம், குறுல்த்தாய் (உச்சபட்ச அவை), இடது மற்றும் வலது பிரிவுகள், ஏகாதிபத்திய இராணுவம் (கெசிக்) மற்றும் தசம அடிப்படையிலான இராணுவ அமைப்பு ஆகியவை பொதுவான அமைப்புகளாக இருந்தன. இந்தப் பேரரசுகளில் முதன்மையானது சியோங்னு ஆகும். சியோங்னுவைத் தோற்றுவித்தவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்படவில்லை. மொடு சன்யூ பொ. ஊ. மு. 209இல் அனைத்துப் பழங்குடியினங்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார். சீனாவின் சின் அரசமரபுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இவர்கள் சீக்கிரமே உருவாயினர். இதன் காரணமாக சின் அரசமரபு சீனப் பெருஞ்சுவரைக் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அழிவை ஏற்படுத்தக் கூடிய சியோங்னு ஊடுருவல்களுக்கு எதிராக ஒரு தற்காப்புக்காக அலுவலர் மெங் தியானின் காலத்தின் போது கிட்டத்தட்ட 3 இலட்சம் போர் வீரர்கள் இந்த சீனப் பெருஞ்சுவரைக் காத்து வந்தனர். பரந்த சியோங்னு பேரரசுக்குப் (பொ. ஊ. மு. 209-பொ. ஊ. 93) பிறகு மங்கோலிய சியான்பே பேரரசு (பொ. ஊ. 93-234) ஆட்சிக்கு வந்தது. தற்போதைய மங்கோலியாவின் முழுப் பகுதிக்கும் அதிகமான பரப்பை சியான்பே ஆண்டது. மங்கோலிய உரூரன் ககானரசு (330-555) தான் ஏகாதிபத்திய பட்டமான "ககான்" என்ற பட்டத்தை முதன் முதலில் பயன்படுத்திய அரசு ஆகும். உரூரன் ககானரசானது சியான்பே பூர்வீகத்தைக் கொண்டிருந்தது. இது ஒரு பரந்த பேரரசை ஆண்டது. பிறகு இதை விடப் பெரிய பேரரசான கோக் துருக்கியர்களால் (555-745) உரூரன் ககானரசு தோற்கடிக்கப்பட்டது.

கோக் துருக்கியர்கள் தற்போது கெர்ச் என்றழைக்கப்படும் பந்திகபேயம் நகரத்தை 576இல் முற்றுகையிட்டனர். கோக் துருக்கியர்களுக்குப் பிறகு உயுகுர் ககானரசு (745–840) ஆட்சிக்கு வந்தது. உயுகுர் ககானரசை கிர்கிசுக்கள் தோற்கடித்தனர். சியான்பேயின் வழித் தோன்றல்களான மங்கோலிய கிதான்கள் லியாவோ அரசமரபின் (907–1125) காலத்தின் போது மங்கோலியாவை ஆண்டனர். இதற்குப் பிறகு கமக் மங்கோல் (1125–1206) முக்கியத்துவம் பெற்றது.

நடு மங்கோலியாவில் பில்கே ககானின் (684–737) நினைவுக் கல்வெட்டின் 3 முதல் 5 வரையிலான வரிகள் ககான்களின் காலத்தை சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

யுத்தங்களில் இவர்கள் நான்கு திசைகளிலும் இருந்த நாடுகளை அடிபணிய வைத்தனர். அவர்களை ஒடுக்கினர். தலைகளை உடையவர்களை தலை வணங்குமாறு செய்தனர். முட்டிகளை உடையவர்களை மண்டியிட வைத்தனர். கிழக்கே கதிர் கான் பொது மக்கள் வரையிலும், மேற்கே இரும்பு வாயில் வரையிலும் இவர்கள் வென்றனர்... இந்த ககான்கள் புத்திசாலிகளாக இருந்தனர். இந்த ககான்கள் தலை சிறந்தவர்களாக இருந்தனர். இவர்களது பணியாளர்களும் கூட புத்திக் கூர்மையுடையவர்களாகவும், தலை சிறந்தவர்களாகவும் இருந்தனர். அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும், மக்களுடன் நேரடியாகத் தொடர்பிலும் இருந்தனர். இவர்கள் நாட்டை இவ்வழியில் ஆண்டனர். இவ்வாறாக மக்கள் மீது இவர்கள் தாக்கத்தைக் கொண்டிருந்தனர். இவர்கள் இறந்த போது போகுலி சோலுக் (பயேக்சே கொரியா), தப்கச் (தாங் சீனா), திபெத் (திபெத்தியப் பேரரசு), அவார்கள் (அவார் ககானரசு), உரோம் (பைசாந்தியப் பேரரசு), கிர்கிசு, உச் குரிகான், ஒதுசு-தாதர்கள், கிதான்கள், ததபிகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இறுதிச் சடங்கிற்கு வந்தனர். மகா ககான்களுக்காக துயரம் கொள்ள ஏராளமான மக்கள் வந்தனர். இவர்கள் மிகப் பிரபலமான ககான்களாக இருந்தனர்.[23]

மங்கோலியப் பேரரசு முதல் தொடக்க கால 20ஆம் நூற்றாண்டு வரை தொகு

 
மங்கோலியப் பேரரசின் விரிவாக்கம் (1206 முதல் 1294 வ்ரை)
 
1236–1242 ஐரோப்பா மீதான மங்கோலியப் படையெடுப்புகள்
 
தற்போதைய மங்கோலியருடன் ஒப்பிடும் போது 13ஆம் நூற்றாண்டு மங்கோலியப் பேரரசின் எல்லைகளை இந்த வரைபடம் காட்டுகிறது. இங்கு காட்டப்பட்டுள்ள சிவப்புப் பகுதியானது தற்போது மொங்கோலிய மொழி பேசும் பெரும்பாலான மக்கள் எங்கு வாழ்கின்றனர் என்று காட்டுகிறது.
 
அதன் அதிகபட்ச விரிவாக்கத்தின் போது வடக்கு யுவான் அரசமரபு.

பிந்தைய 12ஆம் நூற்றாண்டின் பெரிதும் ஒழுங்கற்ற நிலையின் போது மஞ்சூரியா மற்றும் அல்த்தாய் மலைத் தொடர்களுக்கு இடைப்பட்ட மங்கோலியப் பழங்குடியினங்களை ஒன்றிணைப்பதில் தெமுஜின் என்ற பெயருடைய ஒரு பழங்குடியினத் தலைவன் வெற்றி பெற்றான். 1206இல் அவன் செங்கிஸ் கான் எனும் பட்டத்தைப் பெற்றான். அதன் மிருகத் தனம் மற்றும் ஆக்ரோசத்திற்காகப் புகழ் பெற்ற ஒரு தொடர்ச்சியான இராணுவப் படையெடுப்புகளைத் தொடங்கினான். இது பெரும்பாலான ஆசியா முழுவதும் பெரிய, முக்கியமான மாற்ற விளைவுகளை ஏற்படுத்தியது. மங்கோலியப் பேரரசை அமைத்தான். உலக வரலாற்றின் மிகப் பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு இதுவே ஆகும். இவனது வழித் தோன்றல்களின் கீழ் இப்பேரரசு மேற்கே தற்போதைய போலந்து முதல் கிழக்கே தற்போதைய கொரியா வரையிலும், வடக்கே சைபீரியாவின் பகுதிகளிலிருந்து தெற்கே ஓமான் குடா மற்றும் வியட்நாம் வரையிலும் பரவியிருந்தது. 3.30 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இது கொண்டிருந்தது.[24] உலகின் மொத்த நிலப்பரப்பில் இது 22% ஆகும். இப்பேரரசு 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் உலக மக்கள் தொகையில் கால் பங்கு இதுவாகும். இப்பேரரசின் உச்சநிலையின் போது ஏற்பட்ட பாக்ஸ் மங்கோலியா எனப்படும் மங்கோலிய அமைதியானது ஆசியா முழுவதும் வணிகத்தைப் பெருமளவுக்கு எளிதாக்கியது.[25][26]

செங்கிஸ் கானின் இறப்பிற்குப் பிறகு பேரரசானது நான்கு இராச்சியங்கள் அல்லது கானரசுகளாகப் பிரிக்கப்பட்டது. 1259இல் மோங்கே கானின் இறப்பைத் தொடர்ந்து அதிகாரத்திற்கான யுத்தமானது வெடித்தது. இது டொலுய் உள்நாட்டுப் போர் (1260–1264) என்று அழைக்கப்படுகிறது. இந்த யுத்தத்திற்குப் பிறகு இந்தக் கானரசுகள் இறுதியாக வெளித் தோற்றத்தில் சுதந்திரம் பெற்றன. இந்தக் கானரசுகளில் ஒன்றான "மகா கானரசானது" மங்கோலியத் தாயகம் மற்றும் பெரும்பாலான தற்போதைய சீனாவை உள்ளடக்கியிருந்தது. இது செங்கிஸ் கானின் பேரன் குப்லாய் கானின் கீழ் யுவான் அரசமரபு என்று அறியப்பட்டது. குப்லாய் கான் தன்னுடைய தலை நகரத்தை தற்போதைய பெய்ஜிங்கில் அமைத்தார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த பிறகு 1368இல் யுவான் அரசமரபானது மிங் அரசமரபால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. யுவான் அரசவையானது வடக்கு நோக்கிப் பின் வாங்கியது. இவ்வாறாக வடக்கு யுவான் அரசமரபு என்றானது. மங்கோலியர்களை அவர்களது தாயகத்துக்குள் துரத்திச் சென்ற மிங் இராணுவங்கள் மங்கோலியத் தலைநகரான கரகோரம் மற்றும் பிற நகரங்களை வெற்றிகரமாகச் சூறையாடி அழித்தன. ஆயுசிறீதரன் மற்றும் அவரது தளபதி கோகே தெமூர் தலைமையிலான மங்கோலியர்கள் இந்தத் தாக்குதல்களில் சிலவற்றை முறியடித்தனர்.[27]

புவியியலும் காலநிலையும் தொகு

மங்கோலியா உலகின் ஈரானுக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பத்தொன்பதாவது நாடாகும். மங்கோலியா அதிகமாக புல்வெளிகளையும் காட்டுப் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது மங்கோலியாவின் மொத்த நிலப்பரப்பில் 11.2% வீதமாகும். இங்கு சனவரி காலத்தில் வெப்பநிலை −30 °C (−22 °F) ஆகக் குறைகிறது.

மாகாணங்கள் தொகு

மங்கோலிய நாடு 21 மாகாணங்களாக அதாவது மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணங்களும் அல்லது மாநிலங்களும் 329 மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன

 • ஆர்க்கன்காய் (Arkhangai)
 • பயன் ஒல்ஜீ (Bayan-Ölgii)
 • பயன்க்ஹோன்கோர் (Bayankhongor)
 • புல்கன் (Bulgan)
 • டார்க்கன்-யூல் (Darkhan-Uul)
 • டொர்னொட் (Dornod)
 • டொர்னோகொவி (Dornogovi)
 • டுன்கொவி (Dundgovi)
 • கொவி-அல்டை (Govi-Altai)
 • கொவிசம்பர் (Govisümber)
 • கேன்டீ (Khentii)
 • கோவ்த் (Khovd)
 • கோவ்ஸ்கொல் (Khövsgöl)
 • ஒம்னொகொவி (Ömnögovi)
 • ஓர்க்கோன் (Orkhon)
 • ஒவொர்கான்கய் (Övörkhangai)
 • செலெகெ (Selenge)
 • சுக்பாடர் (Sükhbaatar)
 • டொவ் (Töv)
 • உவ்ஸ் (Uvs)
 • சவ்கான் (Zavkhan)

தேசிய விடுமுறைகள் தொகு

திகதி விடுமுறை
சனவரி முதலாம் திகதி புத்தாண்டு
சனவரி அல்லது பெப்ரவரி பண்டைய புத்தாண்டு (Old new year (Tsagaan sar))
மார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம்
சூன் முதலாம் திகதி சிறுவர் தினம்
11ம்-12ம் திகதிகள் சூலை நாடம் விடுமுறை (Naadam Holiday)
நவம்பர் 26ம் திகதி சுதந்திர தினம்

சமயம் தொகு

2010 இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில், 53 வீதமானோர் பௌத்தர்கள் ஆவார்கள். அதுமட்டுமன்றி அங்கு சமய ஈடுபாடு இல்லாதவர்கள் 39% வீதமானோர் உள்ளார்கள்.

மங்கோலியாவில் உள்ள சமயங்கள்
சமயம் சனைத் தொகை வீதம்
%
மதமற்றவர்கள் 735,283 38.6
சமய ஈடுபாடுடையவர்கள் 1,170,283 61.4
பௌத்தம் 1,009,357 53.0
இஸ்லாம் 57,702 3.0
சமனிசம் 55,174 2.9
கிறித்தவம் 41,117 2.1
ஏனைய சமயங்கள் 6,933 0.4
மொத்தம் 1,905,566 100.0

மொழிகள் தொகு

மங்கோலியாவின் உத்தியோகபூர்வ மொழி மங்கோலியன் ஆகும். இது அங்குள்ள 95 வீதமான மக்களால் பேசப்படுகின்றது. இங்கு மங்கோலியன் சிரில்லிக் எழுத்துக்களே எழுதுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

வேளாண்மை தொகு

2002 ஆம் ஆண்டில், முப்பது வீதமான வீடுகளில் கால்நடை வளர்ப்பே அடிப்படையாக அமைந்திருந்தது. மங்கோலியாவில் உள்ள பல மேய்ப்பவர்களும் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். 2009 மற்றும் 2010 போன்ற ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான குளிரால் மங்கோலியா 96.7 மில்லியன் விலங்குகளை இழந்தது.மங்கோலிய பொருளாதாரம்

மங்கோலியாவில் பொருளாதார நடவடிக்கை நீண்ட காலமாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்டது, இருப்பினும் தாமிரம், நிலக்கரி, மாலிப்டினம், தகரம், டங்ஸ்டன் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விரிவான கனிம வைப்புகளின் வளர்ச்சி தொழில்துறை உற்பத்தியின் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது மொத்த உற்பத்தி மற்றும் சேவை, போக்குவரத்து மற்றும் சேமிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.8%) மற்றும் வேளாண்மை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16%) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக உள்ளது. சாம்பல் பொருளாதாரம்( கருப்புச் சந்தை பொருளாதாரம்) உத்தியோகபூர்வ பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மதிப்பிடப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில், மங்கோலியாவின் ஏற்றுமதிகளில் 68.4% PRC க்கு சென்றது, மற்றும் PRC மங்கோலியாவின் இறக்குமதியில் 29.8% வழங்கப்பட்டது.

மங்கோலியா உலக வங்கியின் கீழ்-நடுத்தர-வருமான பொருளாதாரமாக மதிப்பிடப்படுகிறது. மக்கள்தொகையில் 22.4% ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே வாழ்கின்றனர். 2011 ல் ஜிடிபி தனிநபர் 3,100 டாலர். வளர்ச்சி விகிதத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் விகிதம் 1998 இல் 35.6%, 2002-2003 இல் 36.1%, 2006 ல் 32.2% என கணக்கிடப்பட்டுள்ளது.

சுரங்கத் துறையின் வளர்ச்சியின் காரணமாக மங்கோலியா 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் முறையே (9.9% மற்றும் 8.9%) உயர்ந்த வளர்ச்சி கண்டிருந்தது. [ 2009 இல், பொருட்களின் விலையிலும், உலக நிதி நெருக்கடியின் விளைவுகளிலும் நாட்டின் பணமானது அமெரிக்க டாலருக்கு எதிராக 40% வீழ்ச்சியடைந்தன. 2011 ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 16.4% என எதிர்பார்க்க பட்டது இருப்பினும், பணவீக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் லாபத்தைத் தொடர்ந்து கொண்டு, 2011 இன் இறுதியில் சராசரியாக 12.6% என காணப்பட்டது 2006 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் 7.5% என்ற விகிதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2002 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக உயர்ந்துள்ளது என்றாலும், ஒரு வர்த்தக வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க அரசு இன்னும் வேலை செய்கிறது. மங்கோலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% இந்த வர்த்தக பற்றாக்குறை 2013 ஆம் ஆண்டில் ஓர் உபரிவாக உருமாறும் என்று பொருளாதார வல்லுனர் கணித்துள்ளார்.

2010-2050 வரை வளர்ந்து வரும் சந்தையில் உள்ள நாடுகளில் மங்கோலியா ஒருபோதும் பட்டியலிடப்படவில்லை. சிட்டி குரூப் ஆய்வாளர்கள் மங்கோலியாவை 2010-2050 க்கு மிகவும் உறுதியளிக்கும் வளர்ச்சிக்கான நாடுகளான "உலகளாவிய வளர்ச்சியுற்ற நாடுகளில்" ஒன்றாக இருப்பதை உறுதிப்படுத்தியது. மங்கோலியா பங்குச் சந்தை, 1991 இல் Ulaanbaatar இல் நிறுவப்பட்டது, சந்தை மூலதனத்தின் மூலம் உலகின் மிகச் சிறிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. [ 2008 ஆம் ஆண்டில், 2008 ஆம் ஆண்டில் 406 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து நான்கு மடங்குக்கு பின்னர் மொத்தமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த சந்தை மூலதனத்துடன் 336 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) "Doing Business" அறிக்கையில் முந்தைய ஆண்டின் 88 உடன் ஒப்பிடுகையில், 76 வது இடத்திற்கு முன்னேறிய மங்கோலியா, கணிசமான முன்னேற்றம் கண்டது.

மங்கோலியாவின் ஏற்றுமதியில் 80% க்கும் அதிகமானவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், இது இறுதியில் 95% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3,000 சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டன. மங்கோலியாவில் சுரங்கத் தொழில்களைத் தொடங்கும் சீன, ரஷ்ய மற்றும் கனேடிய நிறுவனங்களின் எண்ணிக்கை மூலம் சுரங்கத் தொழில்துறையானது மங்கோலியாவில் ஒரு பெரிய தொழில்துறையாக தொடர்கிறது.

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

 1. "உலான் பத்தோர்" எனவும் அழைக்கப்படுகிறது.
 2. மொங்கோலியம்: Монгол Улс; மொங்கோலிய எழுத்துமுறை: ᠮᠤᠩᠭᠤᠯ ᠤᠯᠤᠰ, Mongolian pronunciation: [mɔŋɢəɮ ʊɮs], moŋɣol ulus; lit. "Mongol Nation" or "State of Mongolia"

மேற்கோள்கள் தொகு

 1. "Official Documents to be in Mongolian Script". UB Post. June 21, 2011 இம் மூலத்தில் இருந்து November 1, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111101013639/http://ubpost.mongolnews.mn/index.php?option=com_content&task=view&id=6478&Itemid=36. 
 2. 2.0 2.1 "Хун ам, орон сууцны 2020 оны улсын ээлжит тооллогы нэгдсэн дун" (in Mongolian) இம் மூலத்தில் இருந்து 7 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201107230731/https://tuv.nso.mn/uploads/users/87/files/Khun_am_toollogo.pdf. 
 3. Odonkhuu, Munkhsaikhan (12 February 2016). "Mongolia: A Vain Constitutional Attempt to Consolidate Parliamentary Democracy". International IDEA இம் மூலத்தில் இருந்து February 25, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160225144740/http://www.constitutionnet.org/news/mongolia-vain-constitutional-attempt-consolidate-parliamentary-democracy. "Mongolia is sometimes described as a semi-presidential system because, while the prime minister and cabinet are collectively responsible to the SGKh, the president is popularly elected, and his/her powers are much broader than the conventional powers of heads of state in parliamentary systems." 
 4. 4.0 4.1 "Mongolia". CIA. https://www.cia.gov/the-world-factbook/countries/mongolia/. 
 5. "Mongolia". த வேர்ல்டு ஃபக்ட்புக் (நடுவண் ஒற்று முகமை). https://www.cia.gov/the-world-factbook/countries/mongolia. 
 6. 6.0 6.1 6.2 6.3 "World Economic Outlook Database, October 2022". அனைத்துலக நாணய நிதியம். October 2022. https://www.imf.org/en/Publications/WEO/weo-database/2022/October. 
 7. "GINI index (World Bank estimate) – Mongolia". உலக வங்கி. https://data.worldbank.org/indicator/SI.POV.GINI?locations=MN. 
 8. "Human Development Report 2021/2022" (in en). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். September 8, 2022. https://hdr.undp.org/system/files/documents/global-report-document/hdr2021-22pdf_1.pdf. 
 9. "Mongolia Standard Time is GMT (UTC) +8, some areas of Mongolia use GMT (UTC) +7". Time Temperature.com இம் மூலத்தில் இருந்து October 13, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071013100212/http://timetemperature.com/asia/mongolia_time_zone.shtml. 
 10. Michael Jerryson, Mongolian Buddhism: The Rise and Fall of the Sangha, (Chiang Mai: Silkworm Books, 2007), 89.
 11. "Mongolia – Religion" இம் மூலத்தில் இருந்து March 15, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150315082839/http://asia.isp.msu.edu/wbwoa/east_asia/mongolia/religion.htm. 
 12. Sik, Ko Swan (1990). Nationality and International Law in Asian Perspective. Martinus Nijhoff Publishers. பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780792308768. https://books.google.com/books?id=H1ecjepq80QC&pg=PA39. பார்த்த நாள்: 2013-06-28. 
 13. National University of Mongolia, School of Social Sciences, Department of History (1999). "2. Хүний үүсэл, Монголчуудын үүсэл гарвал" (in mn). Монгол улсын түүх. Admon. பக். 67–69. 
 14. Г. Сүхбаатар (1992). "Монгол Нирун улс" (in mn). Монголын эртний түүх судлал, III боть. 3. பக். 330–550. 
 15. 15.0 15.1 Svantesson, Jan-Olov & al. The Phonology of Mongolian, pp. 103–105. Oxford Univ. Press (Oxford), 2005.
 16. Pulleyblank, Edwin George. Lexicon of Reconstructed Pronunciation in Early Middle Chinese, Late Middle Chinese, and Early Mandarin. UBC Press, 1991. ISBN 0-7748-0366-5.
 17. Baxter, Wm. H. & Sagart, Laurent. "Baxter–Sagart Old Chinese Reconstruction" இம் மூலத்தில் இருந்து 25 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425064509/http://crlao.ehess.fr/docannexe.php?id=1207.  (1.93 MB). 2011. Retrieved 11 October 2011.
 18. "Mongolia: Ethnography of Mongolia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 
 19. 19.0 19.1 Eleanora Novgorodova, Archäologische Funde, Ausgrabungsstätten und Skulpturen, in Mongolen (catalogue), pp. 14–20
 20. Gibbons, Ann (10 June 2015). "Nomadic herders left a strong genetic mark on Europeans and Asians". Science (AAAS). https://www.science.org/content/article/nomadic-herders-left-strong-genetic-mark-europeans-and-asians. பார்த்த நாள்: 5 November 2022. 
 21. David Christian (December 16, 1998). A History of Russia, Central Asia and Mongolia. Wiley. பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-631-20814-3. 
 22. "Archeological Sensation-Ancient Mummy Found in Mongolia". Spiegel Online (Spiegel.de). August 25, 2006 இம் மூலத்தில் இருந்து May 22, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100522230511/http://www.spiegel.de/international/0,1518,433600,00.html. 
 23. "Memorial Complex of Bilge Khagan". bitig.org இம் மூலத்தில் இருந்து February 3, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150203230249/http://www.bitig.org/?lang=e. 
 24. Bruce R. Gordon. "To Rule the Earth…" இம் மூலத்தில் இருந்து July 1, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070701103611/http://www.hostkingdom.net/earthrul.html. 
 25. Guzman, Gregory G. (1988). "Were the barbarians a negative or positive factor in ancient and medieval history?". The Historian (50): 568–570. 
 26. Thomas T. Allsen (March 25, 2004). Culture and Conquest in Mongol Eurasia. Cambridge University Press. பக். 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-60270-9. https://books.google.com/books?id=0StLNcKQNUoC&pg=PA211. பார்த்த நாள்: 2013-06-28. 
 27. 《扩廓帖木儿传》[biography of Köke Temür] (卷一四一,列传第二八 ). History of Yuan. 

மேலதிக வாசிப்பு தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலியா&oldid=3835875" இருந்து மீள்விக்கப்பட்டது