உயேசி
உயேசி என்பவர்கள் சீன வரலாறுகளில் வறண்ட புல்வெளிப் பகுதியில் வாழ்ந்த நாடோடிகளாக முதலில் விளக்கப்பட்டுள்ள ஒரு பண்டைக்கால மக்கள் ஆவர். இவர்கள் தற்போதைய சீன மாகாணமான கான்சுவின் மேற்குப்பகுதியில் கி. மு. 1ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தனர். கி. மு. 176இல் சியோங்னுவிடம் ஒரு பெரிய தோல்வியை அடைந்ததற்குப் பிறகு உயேசி பெரிய உயேசி மற்றும் சிறிய உயேசி என இரு குழுக்களாகப் பிரிந்தனர். வெவ்வேறு திசைகளில் பயணித்தனர். இது சிக்கலான பல நிகழ்வுகளை அனைத்துத் திசைகளிலும் ஏற்படுத்தியது. பின்வந்த நூற்றாண்டுகளுக்குப் பெரும்பாலான ஆசியாவின் வரலாற்றின் போக்குக்குக் காரணமாகியது.[1] பெரிய உயேசி தொடக்கத்தில் வட மேற்கில் பயணித்து நவீன சீன மற்றும் கசகஸ்தான் எல்லைகளில் இலி பள்ளத்தாக்கிற்குள் சென்றனர். அங்கிருந்த சகர்களை அவ்விடத்திலிருந்து மாற்றிக் குடியேறினர். இவர்கள் இலி பள்ளத்தாக்கிலிருந்து உசுன் என்பவர்களால் துரத்தப்பட்டனர். தெற்கே சோக்தியானாவுக்குப் புலம் பெயர்ந்தனர். பிறகு பாக்திரியாவில் குடியமர்ந்தனர். தொக்காரியோயி மற்றும் அசீ ஆகியோரைப் போல கிரேக்கப் பாக்திரியப் பேரரசு மீது தாக்குதல் ஒட்டம் நடத்தியதாக பண்டைக்கால ஐரோப்பிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களுடன் பெரிய உயேசி பெரும்பாலும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். கி. மு. 1ஆம் நூற்றாண்டின் போது, பாக்திரியாவில் இருந்த ஐந்து முக்கிய பெரிய உயேசி பழங்குடி இனங்களில் ஒன்றான குசானர்கள் மற்ற பழங்குடியினங்கள் மற்றும் அண்டை மக்களைத் தங்களுடன் இணைக்க ஆரம்பித்தனர். இறுதியாகக் குசானப் பேரரசைத் தோற்றுவித்தனர். இப்பேரரசு அதன் உச்ச பட்ச பரப்பளவை கி. பி. 3ஆம் நூற்றாண்டில் அடைந்தது. அந்நேரத்தில் வடக்கே தாரிம் வடிநிலத்தின் துர்பன் நகரத்திலிருந்து தெற்கே இந்தியாவின் சிந்து கங்கைச் சமவெளியின் பாடலிபுத்திரம் வரை பரவியிருந்தது. பட்டுப் பாதை வணிகத்தின் வளர்ச்சி மற்றும் சீனாவுக்குப் பௌத்தத்தை அறிமுகப்படுத்தியதில் குசானர்கள் ஒரு முக்கியப் பங்காற்றினர்.
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Dean, Riaz (2022). The Stone Tower: Ptolemy, the Silk Road, and a 2,000-Year-Old Riddle (in English). Delhi: Penguin Viking. pp. 73-81 (Ch.7, Migration of the Yuezhi). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0670093625.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)