பிலிகுது கான் ஆயுசிறீதரா

பிலிகுது கான் அல்லது யுவானின் சாவோசோங் பேரரசர் என்பவர் மங்கோலியாவில் இருந்து ஆளப்பட்ட வடக்கு யுவான் அரசமரபின் ஆட்சியாளர் ஆவர். இவரது இயற்பெயர் ஆயுசிறீதரா (Билигт хаан Аюушридар) (கோயில் பெயர்: 昭宗, சாவோசங்; ஆட்சி. 1370–1378). கடைசி யுவான் பேரரசரான தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு இவர் அரியணைக்கு வந்தார். 1372இல் படையெடுத்து வந்த மிங் ராணுவத்தை தோற்கடித்தார். புதிதாக நிறுவப்பட்ட மிங் அரசமரபிடம் பறிகொடுத்த சீன எல்லையில் இருந்த சில நிலங்களை மீட்டெடுத்தார்.

ஆரம்ப வாழ்க்கை தொகு

ஆயுசிறீதரா 1338ஆம் ஆண்டு தோகோன் தெமுருக்கும், கீ சீமாட்டிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தனது பத்தாம் வயதில் தன் தந்தையின் அமைச்சரான தோக்தோவாவின் வீட்டில் சீன மொழியில் இவருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. தோகோன் தெமுரின் முதன்மை பேரரசியான தனசிறீ அவருக்கு ஒரே ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆனால் அக்குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. மங்கோலிய நோயன்கள் பெரும்பாலும் மற்றொரு போர்சிசின் வழித்தோன்றலையே அடுத்த அரசனாக வர ஆதரித்தனர். அவர்கள் ஆயுசிறீதராவை ஆதரிக்கவில்லை. ஏனெனில் ஆயுசிறீதராவின் தாய் கொரியாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் அரண்மனைப் பணிப்பெண் மற்றும் தேனீர் கொடுப்பவர் ஆவார். தனசிறீயின் குடும்பம் ஒழித்துக் கட்டப்பட்டு, மெர்கிடு இனத் தளபதி பயன் இறந்த பிறகு இவரும் இவரது தாயும் மங்கோலிய அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தனது கொரியப் பேரரசி சீமாட்டி கீயால் தூண்டப்பட்ட யுவான் பேரரசர் 1353 ஆம் ஆண்டு தனது வாரிசை  தேர்ந்தெடுக்கும் நிகழ்வை நடத்தினார். எனினும் தோக்தோவா இந்த நிகழ்வை சில தெரியாத காரணங்களுக்காக தாமதித்தார். இது தோக்தோவாவின் அரசியல் எதிரிகளின் கோபத்தைத் தூண்டியது. முதலமைச்சர் மற்றும் அவரது ஆதரவில் முன்னர் வாழ்ந்த கங்லி இன கமா, மற்றும் ஆயுசிறீதரா, அவரது தாய் பேரரசி கீயின் ஆதரவுடன் தோக்தோவா மீது ஊழல் மற்றும் சட்ட மீறல் குற்றச்சாட்டுகளை வைத்தனர். அந்நேரத்தில் 1354 ஆம் ஆண்டு தோக்தோவா சிவப்புத் தலைப்பாகை கலகத்திற்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்தார். இச்சூழ்நிலை காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த நேரத்தில் அவர் வெற்றிகரமாக அந்த கலகத்தைத் தோற்கடித்துக் கொண்டிருந்தார். தோக்தோவாவின் தகுதிகள் அனைத்தும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, கோவாய்-நன் என்ற இடத்திற்கு நாடுகடத்தப்பட்டார்.[1]

கமா முதன்மை மந்திரி ஆக்கப்பட்டார். அனைத்து அதிகாரங்களும் அவர் கைக்கு வந்தன. இந்த வெற்றியின் காரணமாக ஆயுசிறீதராவை அரியணைக்கு ஏற்ற முடிவு செய்தார். இந்தத் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. கமா நாடுகடத்தப்பட்டார். 1356 ஆம் ஆண்டு அவரது எதிரிகள் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றனர். ஆயுசிறீதரா மன்னிக்கப்பட்டார். 1353 ஆம் ஆண்டு பட்டத்து இளவரசனாக ஆயுசிறீதரா ஆனபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஒரு பிரச்சனை உண்டானது. ஏழு வருடங்களுக்குப் பிறகு ஆயுசிறீதரா மற்றும் அவரது தாய் சீமாட்டி கீ முதன்மை அமைச்சரான தாய் பிங்கிடம் ககானைப் பதவி விலக சமாதானப்படுத்தி, ஆயுசிறீதராவிடம் நாட்டை ஒப்படைக்க வைக்குமாறு கூறினர். தாய் பிங் இதற்கு மறுத்த போது அவர்கள் தாய் பிங்கின் ஆதரவாளர்களை விஷம் வைத்துக் கொன்று தாய் பிங்கை பதவி விலக வைத்தனர். அதிகாரமானது பபுவா என்ற ஒரு திருநங்கை ஆக்கப்பட்டவரிடமும் மற்றும் சோ செகின் என்றவரிடமும் சென்றது. இருவருமே பலவீனமானவர்களாக இருந்தனர். 1364 ஆம் ஆண்டு எதிர்ப்பாளர்களின் தலைவரான போலத்-தெமுர் தலைநகரை ஆக்கிரமித்துக் கொண்டார். தடு நகரத்திற்கு திரும்பி வருமாறு ஆயுசிறீதராவை அவரது தந்தை பணித்தார். போலத்-தெமுரின் பெரிய ராணுவத்தை எதிர்க்கத் தனக்கு சக்தியில்லை என்று உணர்ந்த ஆயுசிறீதரா யுவான் தளபதியான கோகே தெமுரிடம் தப்பி ஓடினார். ஆயுசிறீதரா படைகளுடன் முன்னேறி வருவதை அறிந்த போலத்-தெமுர், சீமாட்டி கீயைக் கைது செய்யப்பட்டார். அவர் தனது மகனை தலைநகருக்கு திரும்புமாறு கூற வைக்கப்பட்டார். எனினும் போலத்-தெமுரின் தளபதிகள் அவரிடமிருந்து பிரிந்து கோகே தெமுரிடம் சென்றடைந்தனர். இளவரசன் வெயி சுனின் மகனான கோ சாங்கிடம் போலத்-தெமுரைக் கொலை செய்யுமாறு தோகோன் தெமுர் இரகசியமாக ஆணையிட்டார். போலத்-தெமுர் இறந்தபிறகு போலத்-தெமுரின் தளபதியான துகியேலை 1365 ஆம் ஆண்டு கோகே தெமுர் தோற்கடித்தார். தனக்கு சாதகமாகப் பேரரசரைப் பதவி விலக வைக்க கோகே தெமுரை ஆயுசிறீதரா கட்டாயப்படுத்தினார். பேரரசர் பதவியை விட்டு விலக விருப்பம் இன்றி இருந்தார். ஆனால் தனது மகனுக்கு யுவான் அரசில் ராணுவ தலைவனுக்கு அடுத்த பதவியைக் கொடுத்தார். கோகே தெமுர் இதைத் தடுக்க முயற்சித்தார். ஆனால் அம்முயற்சியில் தோல்வி அடைந்தார். அவரது தகுதிகள் பறிக்கப்பட்டன.

1368 ஆம் ஆண்டு யுவான் அரசமரபானது மிங் அரசமரபால் தூக்கி எறியப்பட்டது. தோகோன் தெமுர் மற்றும் அவரது குடும்பம் தடுவில் இருந்து வடக்கே சங்டுவுக்கு தப்பியது. 1370 இல் இங்சங்கில் தோகோன் தெமுர் உயிரிழந்தார். மிங் ராணுவம் அந்த நகரத்தைக் கைப்பற்றியது. ஆயுசிறீதராவின் உறவினர்கள் மற்றும் அவரது மகன் மைதர்பால் ஆகியோரைப் பிடித்தது. பத்திரமாக கரகோரத்திற்குத் தப்பிய.ஆயுசிறீதரா அங்கே மங்கோலியர்களின் ககானாக முடிசூட்டிக் கொண்டார். ஆயுசிறீதராவுக்கு பிலிகுது (புத்திசாலி) என்ற மங்கோலியப் பட்டம் வழங்கப்பட்டது.

ஆட்சிக்காலம் தொகு

அரியணை ஏறிய சிறிது காலத்தில் கரகோரத்திற்கு அவர் தப்பினார். தனது சகாப்தப் பெயரை சுவான்குவாங் என்று மாற்றிக்கொண்டார். கோகே தெமுரைத் தனது போர்ப்படைத்தலைவன் மற்றும் மைய அரசின் வலது கையின் சிங்சாங்காக ஆக்கினார். யுவான் அரசமரபின் எஞ்சியவர்கள் மங்கோலியத் தாயகத்தில் வடக்கு யுவான் அரசமரபினர் என்று அழைக்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஒரு வலிமையான சக்தியாக நீடித்தனர். இவரது நாட்டின் பகுதிகளானவை வடகிழக்கு சீனாவில் இருந்து சிஞ்சியாங் வரை நீண்டிருந்தது.

பிலிகுது கான் ஆயுசிறீதராவை சரணடையுமாறு பலமுறை மிங் அரசமரபின் கோங்வு பேரரசர் கேட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். 1372 ஆம் ஆண்டு கோங்வு பேரரசர் 1,50,000 வீரர்களைக் கொண்ட மிங் இராணுவத்தை மங்கோலியாவிற்கு அனுப்பினார். சு தா தலைமையிலான மிங் இராணுவத்தின் நடு பிரிவிற்கு எதிராக கோகே தெமுரின் இராணுவத்தை பிலிகுது கான் அனுப்பினார். சு தாவின் படைகள் தூல் ஆற்றை 20 நாட்களுக்குள் அடைந்தன. ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களது தளபதி நூலிழையில் தனது சில வீரர்களுடன் உயிர்தப்பினார். மிங் இராணுவத்தின் கிழக்குப் பிரிவு கெர்லென் ஆறுவரை முன்னேறியது. வழியிலிருந்த மங்கோலிய முகாம்களை கொள்ளையடித்தது. ஆனால் அவர்கள் திடீரென தோற்கடிக்கப்பட்டு ஓர்கோன் பகுதிக்கு பின்வாங்க வைக்கப்பட்டனர்.  ஓர்கோன் பகுதியில் மற்றொரு கடும் யுத்தம் நடைபெற்றது. கிழக்குப் பிரிவானது கலச்சானி தலைமையிலான மங்கோலிய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டது. கரகோரத்திற்கு அருகில் அவர்கள் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டனர். மிங் இராணுவத்தின் மேற்கு பிரிவு சில இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் மற்ற பிரிவுகள் தோல்வியடைந்ததால் பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்டது.

முன்னர் யுவான் அரசமரபிற்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த கொர்யியோவின் கோங்மின் அரசரை  சீனாவின் மிங் அரசமரபிற்கு எதிரான சண்டையில் ஆதரவு கொடுக்குமாறு ஆயுசிறீதரா கேட்டுக்கொண்டார். கோங்மினுக்கு எழுதிய கடிதத்தில் பிலிகுது கான் பின்வருமாறு கூறினார்:

"...ஓ வாங், நீ என்னைப் போலவே செங்கிஸ்கானின் வழித்தோன்றல். எனவே, சொர்க்கத்திற்கு கீழ் நீதியையும் உண்மையையும் நிலைநாட்ட நாங்கள் உங்களுடன் பணிபுரிய விரும்புகிறோம்..."

ஆனால் மாறாக, கோங்மின் அரசர் உதவ மறுத்துவிட்டார். மங்கோலியர்களுக்கு எதிரான கொள்கைகளைச் செயல்படுத்த ஆரம்பித்தார். 1270களில் யுவான் அரசமரபால் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலங்களைத் திரும்ப எடுத்துக் கொண்டார். மங்கோலியர்களின் ஆதரவாளரான இன் இம்-இன் தலைமையிலான பிரிவு 1374இல் கோங்மினைக் கொன்றது. இன் இம்-இன்னின் கைப்பாவை அரசரான யூவை அங்கீகரிக்க லியாவோயங்கில் இருந்த மங்கோலியர்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டனர். யூ அரசரை சீக்கிரமே பிலிகுது கான் அங்கீகரித்தார். மிங் கோட்டைக்கு எதிராக ஒன்றிணைந்த தாக்குதலை நடத்த கொர்யியோ கொரியா துருப்புகளை அனுப்ப வேண்டுமென பிலிகுது கான் கேட்டுக்கொண்டார். கொர்யியோ எச்சரிக்கையுடன்,  உதவுவதற்கு மீண்டும் மறுத்தது.

மங்கோலியர்கள் சின்கே மாகாணத்தின் புனின் மற்றும் சுயிஜின் மாவட்டங்கள், லியாவோனிங் மற்றும் ஹீபே மாகாணங்களை 1373ஆம் ஆண்டு கைப்பற்றினர். இதன் காரணமாக மிங் அரசமரபினர் லியாவோடாங்கிலிருந்து பிரிக்கப்பட்டனர். 1375 ஆம் ஆண்டு லியாவோயாங் மாகாணத்திலிருந்து நகசு என்ற ஒரு மங்கோலிய அதிகாரி லியாவோடாங் தீபகற்பத்தின் மீது, மங்கோலியர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர வைக்கும் எண்ணத்துடன், படையெடுத்தார். மங்கோலிய ஆதரவாளர்களான சுரசன்களின் உதவியுடன் அவர் வெற்றி அடைந்தார். வடக்கு யுவான் மீது சோதனை படையெடுப்புகள் நடத்துவதை மிங் அரசமரபினர் நிறுத்திக் கொண்டனர். பிலிகுது கானின் சிறந்த தளபதியான கோகே தெமுர் 1375 ஆம் ஆண்டு இறந்தார். 1378 ஆம் ஆண்டு பிலிகுது கான் ஆயுசிறீதரா இறந்தார். அவருக்குப் பின் அவரது ஒன்றுவிட்ட சகோதரரான தோகுஸ் தெமுர் அரியணைக்கு வந்தார்.

உசாத்துணை தொகு

  1. Jeremiah Curtin, The Mongols: A history, p. 399.