கமக் மங்கோல்

மங்கோலியக் கானரசு மற்றும் பழங்குடியினக் கூட்டமைப்பு, தெமுஜின் பிறந்த நாடு

கமக் மங்கோல் (Khamag Mongol, மொங்கோலியம்: Хамаг монгол, மொத்த மங்கோல்), 12ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பீடபூமியில் இருந்த ஒரு பெரிய மங்கோலியப் பழங்குடியினக் கூட்டமைப்பு (கான்லிக்) ஆகும். இது சில நேரங்களில் மங்கோலியப் பேரரசுக்கு ஒரு முன்னோடி அரசாகக்[1] கருதப்படுகிறது.[2]

கமக் மங்கோல்
Хамаг Монголын ханлиг
10ம் நூற்றாண்டு–1206
1207ல் மங்கோலியப் பேரரசு
நிலைகானரசு
தலைநகரம்கெர்லேன் ஆற்றின் அருகே மையப்படுத்தப்பட்ட முகாம்
பேசப்படும் மொழிகள்நடு மங்கோலியம்
சமயம்
தெங்கிரி மதம் (ஷாமன் மதம்)
அரசாங்கம்தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சி
கான் 
• 10ம் நூற்றாண்டு
கய்டு
• 1120–1148
காபூல் கான் (முதலில் பதிவு செய்யப்பட கான்)
• 1148–1156
அம்பகை கான் (2வது)
• 1156–1160
ஹோடுலா கான் (3வது)
• 1189–1206
செங்கிஸ் கான் (கடைசி)
சட்டமன்றம்குறுல்த்தாய்
வரலாற்று சகாப்தம்உயர் நடுக்காலம்
• தொடங்கப்பட்டது
10ம் நூற்றாண்டு
• வரலாற்றில் பதியப்பட்ட முதல் கான் காபூல் கான் ஆவார்.
1130
• தெமுஜின் கமக் மங்கோலின் ககானாகிச் செங்கிஸ் கான் எனும் கௌரவப் பெயர் பெற்றார்.
1189
• செங்கிஸ் கான் பழங்குடியினரை ஒற்றுமைப்படுத்தி, மங்கோலியப் பேரரசைத் தாபித்தார்.
1206
முந்தையது
பின்னையது
கிதான் பேரரசு
முந்தைய-மங்கோலியர்கள்
மங்கோலியப் பேரரசு
தற்போதைய பகுதிகள் மங்கோலியா
 உருசியா
 சீனா

மங்கோலிய பாரம்பரியத்தில் கமாங் மங்கோலிய உளூஸ் என்று அறியப்பட்ட ஒரு மர்ம பழங்குடியின சக்தி வடக்கு சீனா மற்றும் கிழக்கு மங்கோலியாவில் உள்ள கிதான் லியாவோ வம்சத்தின் (907-1125) ஆதாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[3] 1125 ஆம் ஆண்டில் லியாவோ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மங்கோலிய சமவெளிப்பகுதிகளில் கமாங் மங்கோலியர்கள் ஒரு முக்கிய பங்காற்றத் தொடங்கினர்.[4] அவர்கள் நாட்டின் மிக வளமான நிலங்களில் ஒன்றான கென்டி மலைப்பகுதியிலுள்ள ஓனான், கெர்லென் மற்றும் துல் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை ஆக்கிரமித்திருந்தனர். தைசிவுட் (சிரில்லிக்: Тайчууд) என்பது 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் மங்கோலியாவின் கமக் மங்கோல் காலத்தில் வாழ்ந்த மூன்று முக்கிய பழங்குடி இனங்களில் ஒன்றாகும். அம்மக்கள் சைபீரியாவின் சபய்கல்சுகி கிரையின் தெற்குப் பகுதியில் வாழ்ந்தனர். சபய்கல்சுகி கிரை மற்றும் மங்கோலியாவின் கென்டீ மாகாணம் ஆகியவை கமக் மங்கோல் கானேட்டின் முக்கியமான பகுதிகள் ஆகும்.[5] இக்கூட்டமைப்பில் நான்கு முக்கிய இனங்கள் இருந்தன. அவை கியாத், தைசிவுட், ஜலைர்கள் மற்றும் ஜிருக்கென் ஆகியவை ஆகும்.

வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கமக் மங்கோலின் முதல் கான் போர்சிசின் இனத்தைச் சேர்ந்த காபூல் கான் ஆவார். காபூல் கான் வெற்றிகரமாக சுரசன் சின் ராணுவங்களின் படையெடுப்பை முறியடித்தார். காபூல் கானுக்கு பின் வந்தவர் தைசிவுட் இனத்தைச் சேர்ந்த அம்பகை கான் ஆவார். தனது மகளை திருமணத்திற்காக தாதர் கூட்டமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்க செல்லும் போது அம்பகை பிடிக்கப்பட்டார். சின் அரசமரபிடம் அம்பகை ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் இரக்கமற்ற வகையில் அவரை கொன்றனர். அம்பகைக்குப் பின் காபூல் கானின் மகனான ஹோடுலா கான் பதவிக்கு வந்தார். அம்பகை கானின் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியாக தாதர்களுக்கு எதிராக 13 யுத்தங்களை ஹோடுலா கான் நடத்தினார்.

ஹோடுலா இறந்த பிறகு ஒரு கானை தேர்வு செய்ய கமக் மங்கோலியர்களால் முடியவில்லை. ஆனால் காபூலின் பேரனான, கியாத் பழங்குடி இனத்தின் தலைவரான எசுகை, கமக் மங்கோலின் பயனுள்ள மற்றும் புகழ்வாய்ந்த தலைவரானார். எதிர்கால செங்கிஸ் கானான தெமுசின், எசுகையின் குடும்பத்தில் 1162 ஆம் ஆண்டு ஆனன் ஆற்றின் உயர் பகுதியில் தெலுன் போல்தக் என்ற இடத்தில் பிறந்தார்.

இளம் தொகுருல் கான் கெரயிடு இனத்தில் தனது சகோதரர்களை அரியணையில் இருந்து அகற்ற கமக் மங்கோலின் தலைவரான எசுகையிடம் உதவி கேட்டபோது,[6] 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கெரயிடுகளை தோற்கடித்து தொகுருலை அரியணையில் உட்கார வைக்க மங்கோலியர்கள் உதவி புரிந்தனர்.

1170 இல் தாதர்கள் எசுகைக்கு விடம் வைத்தனர். அதன் பிறகு எசுகை இறந்தார். 1171 இல் எசுகையின் இறப்பிற்குப் பிறகு கமக் மங்கோல் சிதறுண்டது. 1189 இல் தெமுசின் கமக் மங்கோலின் கானாக வரும் வரை அரசியல் அராஜகம் மற்றும் ஒரு அதிகார வெற்றிடம் நீடித்தது. சீக்கிரமே மங்கோலிய பழங்குடி இனத்தவர்களுக்கு மத்தியில் போர் மூண்டது. 1201 இல் தெமுசினின் நண்பரான சமுக்கா எதிரி பழங்குடியினரால் குர்-கானாக (பிரபஞ்ச ஆட்சியாளர்) பட்டம் பெற்றார். ஆனால் கமக் மங்கோல் மற்றும் கெரயிடுகளின் கூட்டணியால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

கமக் மங்கோலுடன் கூட்டணி ஏற்படுத்த தொகுருல் கான் மறுத்தபோது இனங்கள் உடனான தெமுசினின் போர்கள் அவரை கிட்டத்தட்ட அழித்தன. செங்கிஸ் கானாக பட்டம் கொடுக்கப்பட்ட போது 1206 இல் மங்கோலிய பீடபூமியில் இருந்த அனைத்து இனங்களையும் தெமுசின் கடைசியாக ஒன்றுபடுத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Bat-Ocher Bold (2001), Mongolian nomadic society: a reconstruction of the "medieval" history of Mongolia, Richmond, Surrey: Curzon, p. 176, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1158-9
  2. History of the Mongolian People's Republic By Akademii︠a︡ nauk SSSR, பக்.99
  3. Khamag Mongol Uls
  4. Histoire de la Mongolie By László Lőrincz, p.43
  5. History of Mongolia, Volume II, 2003
  6. எசுகை என்றுமே கமக் மங்கோலின் கான் என்ற பட்டத்துடன் கருதப்படவில்லை, ஆனால் பகதூர் (ஹீரோ) என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமக்_மங்கோல்&oldid=3455682" இலிருந்து மீள்விக்கப்பட்டது