போலந்து

மத்திய ஐரோப்பிய நாடு

போலந்து என்றழைக்கப்படும் போலந்து குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசு, சிலோவேக்கியா ஆகியனவும் கிழக்கில் உக்ரைன், பெலாரஸ் ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் பால்டிக் கடலும், உருசியாவின் கலினின்கிராட் ஒப்லாசுத்தும் உள்ளன. போலந்தின் மொத்தப் பரப்பளவு 312,679 சதுர கிலோமீட்டர் (120,726 சதுர மைல்).[12] இதன் அடிப்படையில் போலந்து உலகின் 69 ஆவது பெரிய நாடாகவும், ஐரோப்பாவில் 9 ஆவது பெரியதாகவும் இருக்கிறது. 38 மில்லியன் மக்கள் தொகையைக்[12] கொண்ட போலந்து உலகின் 34 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும்,[13] ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது பெரிய நாடாகவும் உள்ளது. போலந்து, "வோய்வோட்சிப்" எனப்படும் 16 மாகாணங்களைக் கொண்ட ஒற்றையாட்சி நாடு. இது, ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ, ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி, பன்னாட்டு ஆற்றல் முகமை, ஐரோப்பிய அவை, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, பன்னாட்டு அணு ஆற்றல் முகமை, ஜி6, பால்டிக் கடல் நாடுகள் அமைப்பு, விசேகிராட் குழு, வெய்மார் முக்கோணம், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் உறுப்பு நாடாகவும் உள்ளது.

போலந்து குடியரசு
Rzeczpospolita Polska (போலிய மொழி)
கொடி of போலந்து
கொடி
சின்னம் of போலந்து
சின்னம்
நாட்டுப்பண்: Mazurek Dąbrowskiego
"போலந்து இன்னும் இழக்கவில்லை"
அமைவிடம்: போலந்து  (dark green)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (green & dark grey)
– in the ஐரோப்பிய ஒன்றியம்  (green)  —  [Legend]

தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
வார்சா
52°13′N 21°02′E / 52.217°N 21.033°E / 52.217; 21.033
ஆட்சி மொழிபோலிய மொழி[1]
இனக் குழுகள்
(2011[2])
சமயம்
(2011[3])
  • 2.4% மதம் இல்லை
  • 0.2% மற்றவை
  • 8.7% பதில் இல்லை
மக்கள்போலிய மக்கள்
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்ற குடியரசு
ஆண்ட்ரெஜ் துடா
மேட்யூஸ் மொராவிக்கி
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மூப்பவை
செச்ம்
உருவாக்கம்
• கிறிஸ்துவமயமாதல்[b]
14 ஏப்ரல் 966
18 ஏப்பிரல் 1025
1 சூலை 1569
24 அக்டோபர் 1795
11 நவம்பர் 1918
17 செப்தெம்பர் 1939
19 பெப்பிரவரி 1947
• மூன்றாம் குடியரசு
31 திசம்பர் 1989[5]
பரப்பு
• மொத்தம்
312,696 km2 (120,733 sq mi)[6] (69வது)
• நீர் (%)
1.48 (2015)[7]
மக்கள் தொகை
• 2022 கணக்கெடுப்பு
Neutral decrease37,796,000[8] (38வது)
• அடர்த்தி
122/km2 (316.0/sq mi) (98வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2023 மதிப்பீடு
• மொத்தம்
$1.664 டிரில்லியன்[9] (22வது)
• தலைவிகிதம்
$44,249[9] (41வது)
மொ.உ.உ. (பெயரளவு)2023 மதிப்பீடு
• மொத்தம்
$754 பில்லியன்[9] (23வது)
• தலைவிகிதம்
$20,045[9] (56வது)
ஜினி (2020)positive decrease 27.2[10]
தாழ்
மமேசு (2021) 0.876[11]
அதியுயர் · 34வது
நாணயம்ஸ்வாட்டெ (PLN)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
திகதி அமைப்புdd.mm.yyyy (பொ. ஊ.)
வாகனம் செலுத்தல்வலது பக்கம்
அழைப்புக்குறி+48
ஐ.எசு.ஓ 3166 குறியீடுPL
இணையக் குறி.pl

போலந்தின் உருவாக்கம், இன்றைய போலந்து நாட்டுக்குள் அடங்கும் பகுதிகளை ஆண்ட முதலாம் மியெசுக்கோ (Mieszko I) 966 ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தழுவியதுடன் தொடர்பானதாகக் கடுதப்படுகின்றது. 1025 ஆம் ஆண்டில் போலந்து இராச்சியம் உருவானது. 1569ல் லுப்லின் ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயம் உருவாக்கப்பட்டதன் மூலம், போலந்து, லித்துவேனியப் பெரிய டச்சியுடன் நீண்டகாலக் கூட்டுறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது. 1795 ஆம் ஆண்டில், போலந்தை, பிரசிய இராச்சியம், உருசியப் பேரரசு, ஆசுத்திரியா ஆகியவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால், இந்த உறவு முடிவுக்கு வந்தது. 1918 ஆம் ஆண்டில், போலந்து, இரண்டாவது போலந்துக் குடியரசு ஆக விடுதலை பெற்றுக்கொண்டது. 1939 செப்டெம்பரில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், செருமனிக்கும் உருசியாவுக்கும் இடையிலான மோலோட்டோவ்-ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன. ஏறத்தாழ ஆறு மில்லியன் போலந்து மக்கள் இப்போரில் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலந்து, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வட்டத்துள் அடங்கியதான போலந்து மக்கள் குடியரசாக உருவாகி 1989 வரை நிலைத்திருந்தது. 1989 ஆம் ஆண்டுப் புரட்சியின் போது 45 ஆண்டுக்கால பொதுவுடைமை ஆட்சி தூக்கி எறியப்பட்டு சனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது பெரும் அழிவுகளுக்கு உட்பட்டிருந்தும், போலந்தின் பெரும்பாலான பண்பாட்டுச் செல்வங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 14 யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்கள் போலந்தில் உள்ளன.[14] பொதுவுடைமை ஆட்சி நீக்கப்பட்ட பின்னர், மனித வளர்ச்சி தொடர்பில் போலந்து அதியுயர் தரத்தை எட்டியுள்ளது.[15]

வரலாறு தொகு

வரலாற்றுக்கு முந்திய காலம், 966 வரை தொகு

இன்று போலந்து என அறியப்படும் பகுதியில் முற்காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்ததாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். இவர்களின் இனம், மொழி என்பவை தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இப் பகுதிக்குள் சிலாவிய மக்கள் நுழைந்த காலம், வழி என்பவை தொடர்பிலான விடயங்கள், சர்ச்சைக்கு உரிய முக்கியமான கருப்பொருட்களாக உள்ளன.

தொல்பழங்கால அல்லது முன்வரலாற்றுப் போலந்து தொடர்பிலான முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பு, பிசுக்குப்பின் (Biskupin) அரண் குடியிருப்பு ஆகும். இது, கிமு 700 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைச் சார்ந்த முந்திய இருப்புக் காலத்தின் லுசாத்தியப் பண்பாட்டுக்கு உரியது. கிபி 960ல் கிறித்தவ மதத்துக்கு மாறும்வரை, போர், வளமை, செழிப்பு என்பவற்றுக்கான "சுவேத்தோவிட்" என்னும் சிலாவியக் கடவுள் மீது போலந்து மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

பியாத்து வம்சம், 966-1385 தொகு

 
966ல் போலந்தில் ஞானஸ்நானம்

10 ஆம் நூற்றாண்டில், பியாத்து வம்சத்தின் கீழ், போலந்து அடையாளம் காணப்படத்தக்கதான ஒருங்கிணைந்த வடிவத்தைப் பெற்றது. வரலாற்றில் அறயவருகின்ற முதல் அரசரான முதலாம் மியெசுக்கோ 966 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்துக்கு மாறினார். அது நாட்டின் மதமும் ஆனது. தொடர்ந்து வந்த சில நூற்றாண்டுகளில் நாட்டு மக்கள் எல்லோரும் கத்தோலிக்கர் ஆயினர். 1000 ஆவது ஆண்டில் மியெசுக்கோவின் மகனான வீர போல்சுலாவ் தந்தையின் கொள்கைகளையே பின்பற்றி "கினியெசுனோ" மாநாட்டை நடத்தியதுடன், புதிய மறை மாவட்டம் ஒன்றையும் உருவாக்கினார். போல்சுலாவ் நாட்டைத் தனது மகன்களிடையே பிரித்துக் கொடுத்ததனால், 12 ஆம் நூற்றாண்டில் போலந்து பல சிறு டச்சிகளாகப் பிரிந்து காணப்பட்டது.

புவியியல் தொகு

 
போலந்தின் நில அமைப்பு

போலந்து, அகலக்கோடுகள் 49°, 55° வ ஆகியவற்றுக்கும், நெடுங்கோடுகள் 14° and 25° கி ஆகியவற்றுக்கும் இடையில் பலவகையான புவியியல் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. வடமேற்கில் அமைந்துள்ள பால்டிக் கடற்கரை பொமரேனிய விரிகுடாவில் இருந்து, கிடான்சுக் வளைகுடா வரை நீண்டுள்ளது. இக்கரையோரத்தில் பல மணற் பள்ளங்களும், கரையோர ஏரிகளும், மணற் குன்றுகளும் காணப்படுகின்றன. பெரும்பாலும் நேர்கோடாக அமைந்துள்ள இக் கரையோரத்தில் இசுட்டெச்சின் குடா (zczecin Lagoon), புச்கு விரிகுடா (Bay of Puck), விசுட்டுலா குடா என்பன குழிவுகளாக அமைந்து காணப்படுகின்றன. நடுப் பகுதியும், வடக்கின் ஒரு பகுதியும் வட ஐரோப்பியச் சமவெளியில் அமைந்துள்ளன.

இத் தாழ்நிலங்களில் இருந்து சற்று உயரத்தில், பிளீசுட்டோசீன் பனிக்கட்டிக் காலத்தில் உருவான பனியாற்றுப் படிவுகளையும் பனியாற்று ஏரிகளையும் கொண்ட நான்கு குன்றுப் பகுதிகள் உள்ளன. இவ்வேரிப் பகுதிகள் பொமரேனியன் ஏரி மாவட்டம், பெரும் போலிய ஏரி மாவட்டம், கசுபிய ஏரி மாவட்டம், மசுரிய ஏரி மாவட்டம் என்பனவாகும். இவற்றுள் பெரிய மசுரிய ஏரி மாவட்டம், வடகிழக்குப் போலந்தின் பெரும் பகுதியில் பரந்துள்ளது.

வட ஐரோப்பிய தாழ்நிலங்களுக்குத் தெற்கில் சிலேசியா, மசோவியா ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் அகலமான பனிக்கட்டிக்கால ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. மேலும் தெற்கே போலந்தில் மலைப் பகுதிகள் அமைந்துள்ளன. போலந்தின் தெற்கு எல்லையை ஒட்டி, கார்ப்பதியன் பலைகளில் மிகவும் உயரமான தாத்திரா மலை உள்ளது.

நிலவியல் தொகு

 
தென்மேற்குப் போலந்தின் கர்க்கோனேசே மலையில் சிலேசியப் பாறைப் பகுதியில் உள்ள கருங்கல்லிலான வெளிப்படுபாறை.

போலந்தின் நிலவியல் அமைப்பு, கடந்த 60 மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகியவற்றின் கண்ட மோதுகையினாலும், வட ஐரோப்பாவின் நான்காம் நிலை உறைபனிப் பரவலினாலும் ஏற்பட்டது. இவ்விரு செயற்பாடுகளும், சுடேட்சு, கார்ப்பதியன் ஆகிய மலைகளை உருவாக்கின.

போலந்து, 2,000 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட 70 மலைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்துமே தாத்திராசு பகுதியிலேயே அமைந்துள்ளன. உயர் தாத்திராசு, மேற்குத் தாத்திராசு என இரண்டு பிரிவாக உள்ள போலந்தின் தாத்திராசுவே நாட்டின் மிகவும் உயரமான மலைத் தொகுதி ஆகும். போலந்தின் மிக உயரமான இடம், மட மேற்குச் சிகரமான "ரிசி" ஆகும். இது 2,499 மீட்டர் (8,199 அடி) உயரமானது. இதன் அடிவாரத்தில், சார்னி இசுட்டஃப் பாட் ரிசாமி (ரிசி மலையின் கீழமைந்த கரும் ஏரி), மோர்சுகியே ஓக்கோ (கடற்கண்) ஆகிய ஏரிகள் உள்ளன.

போலந்திலுள்ள ஒரேயொரு பாலைவனம் சகுளம்பியே டபிரோஃப்சுக்கி பகுதியில் பரந்துள்ளது. இது பிளெடோஃப் பாலைவனம் என அழைக்கப்படுகிறது. தெற்குப் போலந்தில் உள்ள இப் பாலைவனம், 32 சதுர கிலோமீட்டர் (12 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இது ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐந்து இயற்கைப் பாலைவனங்களுள் ஒன்று. இந்த அகலக்கோட்டுப் பகுதியில் உள்ள வெப்பம் கூடிய பாலைவனமும் இதுவே. "பிளெடோஃப்" பாலைவனம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருகிய பனியாறு ஒன்றினால் ஏற்பட்டது. சிறப்புத் தன்மை கொண்ட நிலவியல் அமைப்பு இதற்கான முக்கிய காரணியாக இருந்துள்ளது. மணல் படையின் தடிப்பு சராசரியாக 40 மீட்டரும் (131 அடி), மிகக் கூடிய தடிப்பு 70 மீட்டர் (230 அடி) ஆகவும் உள்ளது. இது, விரைவாகவும், ஆழமாகவும் நீர் வடிந்தோடுவதற்கு இலகுவாக இருக்கிறது.

நீர்ப்பரப்புகள் தொகு

 
மொட்லின் பகுதியில் விசுட்டுலா ஆறு.

போலந்தில் உள்ள மிக நீளமான ஆறு, விசுட்டுலா. இது 1,047 கிலோமீட்டர் (651 மைல்) நீளமானது. போலந்தின் மேற்கு எல்லையின் ஒரு பகுதியாக அமையும் ஓடெர் ஆறு 854 கிலோமீட்டர் (531 மைல்) நீளமும், அதன் கிளையாறான வர்த்தா 808 கிலோமீட்டர் (502 மைல்) நீளமும் கொண்டது. விசுட்டுலாவின் கிளையாறான பக் ஆறு 772 கிலோமீட்டர் (480 மைல்) நீளமானது.விசுட்டுலா, ஓடெர் ஆகிய ஆறுகளும், பொமரேனியாவில் உள்ள பல சிறிய ஆறுகளும் பால்டிக் கடலில் கலக்கின்றன. லினா, அங்கிரப்பா ஆகிய ஆறுகள் பிரெகோல்யா ஊடாக பால்டிக்கில் விழுகின்றன. "செர்னா அன்சா", "நெமன்" ஊடாக பால்டிக் கடலில் கலக்கின்றது. போலந்தின் பெரும்பாலான ஆறுகள் பால்டிக் கடலிலேயே கலக்கின்ற போதும், கருங்கடலில் கலக்கும் ஒராவா, தன்யூப் ஆகியவற்றின் சில கிளையாறுகள் போலந்தின் "பெசுக்கிட்சு" பகுதியிலேயே உற்பத்தியாகின்றன. கிழக்கு "பெசுக்கிட்சு" பகுதியில் உற்பத்தியாகும் சில ஊற்றுக்களும் "டினியெசுட்டர் ஆறு" வழியாகக் கருங்கடலில் கலக்கின்றன.

 
தென்கிழக்குப் போலந்தில் உள்ள குர்ட்கோவியெச், உயர்வளிமிகு ஏரி

போலந்தின் ஆறுகள் மிகப் பழைய காலத்தில் இருந்தே போக்குவரத்துக்குப் பயன்பட்டுவந்தன. எடுத்துக்காட்டாக, வைக்கிங்குகள் விசுட்டுலா, ஓடெர் ஆகிய ஆறுகளூடாகத் தமது நீள்கப்பல்களில் பயணம் செய்தனர். மத்திய காலத்திலும், நவீன காலத் தொடக்கத்திலும், போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம் ஐரோப்பாவின் "தானியக் கூடை" ஆக இருந்தபோது, வேளாண்மை உற்பத்திகளை விசுட்டுலா ஆற்றினூடாக "கிடான்சுக்" வரை எடுத்துச் சென்று, அங்கிருந்து ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு அனுப்பினர்.

ஒவ்வொன்றும் 1 எக்டேர் (2.47 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஏறத்தாழப் பத்தாயிரம் வரையிலான ஏரிகளைக் கொண்ட போலந்து, உலகில் அதிக அளவு ஏரிகளைக் கொண்ட நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. ஐரோப்பாவில் பின்லாந்து மட்டுமே போலந்திலும் கூடிய ஏரி அடர்த்தி கொண்ட நாடாக உள்ளது. 100 சதுர கிலோமீட்டருக்கு (39 சதுர மைல்) மேல் பரப்பளவு கொண்ட மசூரியாவில் உள்ள சினியார்டுவி ஏரி, மாம்ரி ஏரி என்பனவும், பொமரேனியாவில் உள்ள லெப்சுக்கோ ஏரி, டிராவ்சுக்கோ ஏரி என்பன போலந்தின் மிகப் பெரிய ஏரிகளுள் அடங்குகின்றன.

நிலப் பயன்பாடு தொகு

 
பல்வேறு நிலத்தோற்றங்கள் கலந்த மசூரியப் பகுதி

போலந்தின் நிலப்பகுதியில் 28.8% காடுகளாக உள்ளன. அரைப் பங்குக்கும் மேற்பட்ட நிலப்பகுதி வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கைக்கு உரிய நிலப் பரப்பளவு குறைந்து வருகின்ற போதும், எஞ்சிய பயிர் நிலங்களில் செறிவான வேளாண்மைச் செய்கை இடம்பெற்று வருகின்றது.

3,145 சதுர கிலோமீட்டர் (1,214 மைல்) பரப்பளவு கொண்ட, போலந்தின் நிலப்பரப்பில் 1% ஆன பகுதி பாதுகாக்கப்பட்ட 23 போலந்து தேசியப் பூங்காக்களுள் அடங்குகிறது. மசூரியா, கிராக்கோ-செசுட்டோச்சோவா மேட்டுநிலம், கிழக்கு பெசுக்கிட்சு ஆகிய பகுதிகளில் இன்னும் மூன்று தேசியப் பூங்காக்கள் அமைப்பதற்குத் திட்டம் உள்ளது. இவை தவிர, நடுப் போலந்தில், ஆறுகளையும் ஏரிகளையும் அண்டிய ஈரநிலங்களும், வடக்கின் கடற்கரைப் பகுதிகளும் சட்டப்படி காக்கப்பட்டுள்ளன. பல இயற்கை ஒதுக்ககங்களையும் பிற காக்கப்பட்ட பகுதிகளையும் அண்டி, ஏறத்தாழ 120 பகுதிகளை நிலத்தோற்றப் பூங்காக்கள் என அறிவித்துள்ளனர்.

தற்காலப் போலந்து வேளாண்மைக்கான சிறப்பான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. இங்கே 2 மில்லியன்களுக்கு மேற்பட்ட தனியார் பண்ணைகள் உள்ளன. உருளைக் கிழங்கு, ராய் தானியம் ஆகியவற்றின் உற்பத்தியில், ஐரோப்பாவில் முதன்மை வகிப்பது போலந்தே. இனிப்பு பீட் கிழங்கு, கோதுமையினதும் ராயினதும் கலப்பினமான டிரிட்டிக்கேல் என்பவற்றின் உற்பத்தியிலும் போலந்து உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்று. இதனால் சில வேளைகளில் போலந்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத் "தானியக் கூடை" எனக் குறிப்பிடுவது உண்டு. எனினும், வேளாண்மைத் துறையில் 16% தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள போதும், நாட்டின் வேளாண்மை உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. சிறிய பண்ணைகள் பெருமளவில் இருப்பதன் காரணமாகவே, இத் தொழிற்துறையில் செயல்திறன் குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். அரசாங்க மட்டத்தில் வேளாண்மைச் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசப்பட்டு வருவதால் எதிர் காலத்தில் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புண்டு.

குறிப்புகள் தொகு

  1. Many declared more than one ethnic or national identity. The percentages of ethnic Poles and minorities depend on how they are counted. 94.83% declared exclusively Polish identity, 96.88% declared Polish as their first identity and 97.10% as either first or second identity. Around 98% declared some sort of Polish as their first identity.
  2. The adoption of Christianity in Poland is seen by many Poles, regardless of their religious affiliation or lack thereof, as one of the most significant events in their country's history, as it was used to unify the Polish tribes.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Constitution of the Republic of Poland, Article 27.
  2. (in pl) Struktura narodowo-etniczna, językowa i wyznaniowa ludności Polski. Narodowy Spis Powszechny Ludności i Mieszkań 2011. Central Statistical Office. 2015. பக். 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-83-7027-597-6. https://stat.gov.pl/files/gfx/portalinformacyjny/pl/defaultaktualnosci/5670/22/1/1/struktura_narodowo-etniczna.pdf. 
  3. (in pl) Struktura narodowo-etniczna, językowa i wyznaniowa ludności Polski. Narodowy Spis Powszechny Ludności i Mieszkań 2011. Central Statistical Office. 2015. பக். 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-83-7027-597-6. https://stat.gov.pl/files/gfx/portalinformacyjny/pl/defaultaktualnosci/5670/22/1/1/struktura_narodowo-etniczna.pdf. 
  4. Christian Smith (1996). Disruptive Religion: The Force of Faith in Social-movement Activism. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-91405-5. https://books.google.com/books?id=39SoSG4NGAoC&pg=PA77. பார்த்த நாள்: 9 September 2013. 
  5. "The Act of December 29, 1989 amending the Constitution of the Polish People's Republic". Internetowy System Aktów Prawnych. பார்க்கப்பட்ட நாள் 18 October 2020. (in போலிய மொழி)
  6. GUS. "Powierzchnia i ludność w przekroju terytorialnym w 2018 roku".
  7. "Surface water and surface water change". பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD). பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  8. "Statistical Bulletin No 11/2022". Statistics Poland. பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
  9. 9.0 9.1 9.2 9.3 "World Economic Outlook Database, October 2022". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். October 2022.
  10. "Gini coefficient of equivalised disposable income". Eurostat. Archived from the original on 9 October 2020. பார்க்கப்பட்ட நாள் 21 June 2022.
  11. Nations, United (8 September 2022). "Human Development Report 2021/2022" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
  12. 12.0 12.1 "Concise Statistical Yearbook of Poland, 2008" (PDF). Central Statistical Office (Poland). 28 July 2008. Archived (PDF) from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2008-08-12.
  13. NationMaster.com 2003–2007, Poland, Facts and figures
  14. "Poland - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2012-02-06.
  15. (ஆங்கிலம்) "Human Development Index and its components" (PDF). hdr.undp.org. Archived from the original (PDF) on 2010-11-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
போலந்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலந்து&oldid=3764763" இலிருந்து மீள்விக்கப்பட்டது