வெப்பக்கிரமமாறுகை (வானிலையியல்)

வானிலையியலில், வெப்பக்கிரமமாறுகை என்பது வளிமண்டலத்தில் சாதாரணமாக உயரத்திற்கேற்ப நிகழும் மாற்றங்களின் இயல்பிலிருந்து விலகி, வேறுபாடு காணப்படுதல் ஆகும். பொதுவாக வளியின் வெப்பநிலையானது, பூமியிலிருந்து மேல்நோக்கிச் செல்லச்செல்ல, உயரத்திற்கேற்றவாறு குறைந்து செல்லும். வெப்பக்கிரமமாறுகையின்போது, சூடான வளி, குளிரான வளிக்கு மேலாகக் காணப்படும். அதாவது உயரத்தைப் பொறுத்து, பொதுவாகக் காணப்படும் வெப்பநிலைத் தோற்றம் நேர்மாறாகக் காணப்படும் நிலையாகும்.[1]

Lochcarron, ஸ்கொட்லாந்து இல் புகையானது மேலெழும்புதலை, அதற்கு மேலாகக் காணப்படும் சூடான வளி தடுக்கிறது (2006).
கசக்கஸ்தான் இல் அல்மாத்தி நகரத்தில் வெப்பக்கிரமமாறுகை காரணமாக புகை நகரத்திற்கு மேலாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளது
புடாபெஸ்ட், ஹங்கேரி இல், மார்கரட் தீவில் வெப்பக்கிரமமாறுகையைக் காட்டும் படம் – 2013

இத்தகைய வெப்பக்கிரமமாறுகையானது நிலப்பரப்பிற்கு அண்மையாக புகைப்பனியை உருவாக்கி, வளிமண்டலத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த வெப்பக்கிரமமாறுகையானது, ஒரு தொப்பி போல் தொழிற்பட்டு வெப்பச் சுழற்சியைத் தடுத்து வைக்கவும் கூடும். இந்த தொப்பி போன்ற பகுதி, ஏதாவது காரணங்களால் உடையும்போது அல்லது இல்லாமல் போகும்போது, உள்ளேயிருக்கும் ஈரலிப்பில் ஏற்படும் வெப்பச் சுழற்சி கடுமையான இடிமழையைக் கொண்டு வரலாம். வெப்பக்கிரமமாறுகையானது குளிரான காலநிலையில், உறைமழையையும் ஏற்படுத்தலாம்.

சாதாரண வளிமண்டல நிலை

தொகு

பொதுவாக புவியின் மேற்பரப்பை அண்மித்த வளிமண்டலத்திலிருக்கும் வளி, மேலேயுள்ள வளியை விடச் சூடானதாக இருக்கும். இதற்குக் காரணம் சூரியனிலிருந்து வரும் வெப்பக் கதிர்களினால் புவியின் நிலப்பரப்பு சூடாகி, பின்னர் அந்தச் சூடானது அதனை அண்மித்த வளிமண்டலத்திற்குப் பரவுவதாகும்.[2]

காரணங்கள்

தொகு
  1. சூடான, குறைந்த அடர்த்தியுள்ள வளித் தொகையானது, குளிரான, அதிக அடர்த்தியுள்ள வளித் தொகைக்கு மேலாக நகர்வது.
  2. சூரியனிலிருந்து புவியின் நிலப் பரப்பிற்குக் கிடைக்கும் வெப்பத்தைவிட, புவியிலிருந்து வெளியேறும் வெப்பம் அதிகரித்தல். இது பொதுவாக இரவு நேரங்களில் அல்லது குளிர்காலங்களில், சூரியனின் சாய்வு மிகக் குறைவாக இருக்கையில் நிகழும். மேலும் பெருங்கடல் பகுதிகள் வெப்பத்தைப் பிடித்து வைத்திருக்கும் தன்மையை அதிகமாகக் கொண்டிருப்பதனால், இத்தகைய விளைவு பொதுவாக நிலப் பரப்புக்களிலேயே காணப்படும். துருவப் பகுதிகளில், குளிர் காலங்களில், நிலப்பரப்பில் இது பொதுவாக ஏற்படும்.

விளைவுகள்

தொகு
 
சீனாவில் குளிர்கால புகைப்பனி (1993).

வெப்பக்கிரமமாறுகை நிகழும் பகுதிகளில், வளியில் சுழற்சி இல்லாமல், வளியானது நகர்வு அற்று இருப்பதனால், தூசுகள் மற்றும் நச்சுக் காற்றுகளைப் பிடித்து வைத்திருப்பதனால் வளிமண்டலம் நச்சுத்தன்மைக்கு உட்படும். மக்கள்தொகை அதிகமான நகரங்களில் இதன் விளைவு அதிக பாதிப்பைக் கொடுக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Service, NOAA's National Weather. "Glossary – NOAA's National Weather Service". w1.weather.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-01-19.
  2. Nagle, Garrett, and Paul Guinness. Cambridge International A and AS Level Geography. Hodder Education, 2011. 41. Print.