பாலைவனம்
புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை.
வரையறை
தொகுபொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங்களை விட அதிகமாக நீர் வெளியேறும் புவியியற் பிரதேசங்களே பாலைவனம் எனக் கருதப்படும். தனியே மழைவீழ்ச்சியை மாத்திரம் கொண்டு பாலைவனங்களை வரையறுக்க முடியாது. இவ்வரையறை வெப்பநிலையாலும் ஈரப்பதத்தாலும் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.
வகைகள்
தொகுசில வேளைகளில் பாலைவனங்களை குளிர்ப் பாலைவனங்கள் என்றும் வெப்பப் பாலைவனங்கள் என்றும் பாகுபடுத்துவர். குளிர்ப் பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். 1961 இல் பெவெரில் மேக்ஸ் பாலைவனங்களை மழை வீழ்ச்சியின் அடிப்படையில் வகைப்படுத்தினார். தற்போது அங்கீகரிக்கப்படும் பாகுபாடு யாதெனின் வறண்ட வலயம், அரையுலர் வலயம் எனப் பிரிக்கும் பாகுபாடாகும். வறண்ட பாலைவனங்களில் குறைந்தது 12 மாதங்களாவது மழைவீழ்ச்சி அற்றுக் காணப்படுவதோடு அது 250 mm (10 அங்குலங்கள்) விடக் குறைந்ததாகக் காணப்படும். அரையுலர்ப் பாலைவனங்களில் மழை வீழ்ச்சி 250–500 mm (10–20 அங்குலங்கள்) வரை இருக்கும்.
சொல்லிலக்கணம்
தொகுபுவியியல் தன்மை
தொகுபுவியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (33%) பாலைவனங்களாகும். சூடான பாலைவனங்களின் பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். இவற்றின் குளிர்கால-கோடைகால வெப்பநிலை வேறுபாடும் அதிகமாகக் காணப்படும். சூடான பாலைவனங்களின் கோடைக்கால வெப்பநிலை 45 °C/113 °F வரை உயரும் அதே வேளை குளிர்கால வெப்பநிலை 0 °C/32 °F அல்லது அதை விடக் குறைவடையும். இங்கு ஈரப்பதம் குறைவென்பதால் இதனைச் சுற்றியுள்ள வளி சூரியனால் பகலில் வேகமாக சூடாக்கப்படுவதுடன் இரவு வேளையில் வேகமாகக் குளிர்வடைந்து விடும். எனவே இங்கு பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும்.
நிலை | பாலைவனம் | பரப்பு (km²) | பரப்பு (mi²) |
---|---|---|---|
1 | அன்டார்க்டிக் பாலைவனம் (அன்டார்க்டிக்கா) | 13,829,430 | 5,339,573 |
2 | ஆர்ட்டிக் பாலைவனம் (ஆர்க்டிக்) | 13,726,937 | 1,003,600+ |
3 | சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா) | 9,100,000+ | 3,320,000+ |
4 | அரேபிய பாலைவனம் (மத்திய கிழக்கு) | 2,330,000 | 900,000 |
5 | கோபி பாலைவனம் (ஆசியா) | 1,300,000 | 500,000 |
6 | கலகாரிப் பாலைவனம் (ஆபிரிக்கா) | 900,000 | 360,000 |
7 | படகோனியா பாலைவனம் (தென்னமெரிக்கா) | 670,000 | 260,000 |
8 | பெரிய விக்டோரியா பாலைவனம் (அவுஸ்திரேலியா) | 647,000 | 250,000 |
9 | சிரியப் பாலைவனம் (மத்திய கிழக்கு) | 520,000 | 200,000 |
10 | பெரும் வடிநிலப் பாலைவனம் (வட அமெரிக்கா) | 492,000 | 190,000 |
பாலைவன அம்சங்கள்
தொகுதாவரங்கள்
தொகுபாலைவனங்களின் காலநிலை தாவரங்களுக்கு ஏற்றதல்லவென்றாலும், உண்மையில் பாலைவனங்களின் உயிர்ப்பல்வகைமை அதிகமாகும். இங்கு வாழும் தாவரங்கள் ஆவியுயிர்ப்பைக் குறைக்கும் வகையில் இசைவாக்கமடைந்துள்ளன. கள்ளி போன்ற தாவரங்கள் இங்கு நன்றாக வளரக் கூடியன (அடகாமா, அன்டார்க்டிக்கா போன்றவற்றைத் தவிர்த்து). இவற்றின் வேர்த்தொகுதி அரிதாகக் கிடைக்கும் நீரை சரியான முறையில் விநியோகிக்கக் கூடியவாறு விருத்தியடைந்துள்ளன.
விலங்குகள்
தொகுதாவரங்களைப் போலவே விலங்குகளிலும் பாலைவனச் சூழலுக்கு சிறப்பாக இசைவாக்கம் அடைந்தவை உள்ளன. பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகம் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
நீர் கிடைப்பனவு
தொகுபுவியிலே வரண்ட இடமாக அட்டகாமா பாலைவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஏனைய பாலைவனங்களில் சிறிதளவேனும் மழை பொழியும். இங்கு சிலவேளைகளில் அடைமழை கூடப் பொழிந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும்.
மனிதனுடனான தொடர்பு
தொகுபாலைவனங்களிலுள்ள தாதுப்பொருட்களையும், அதன் ஆற்றலையும் வெளிக்கொண்டு வர, அங்கு மனிதன் தான் வாழ நன்கு பழக்கப்படுத்திக் கொண்டான்[1]. இவ்வாறாக மனித கலாச்சாரத்தில் பாலைவனங்கள், ஓர் விரிவான இலக்கியத்தைக் கொண்டுள்ளது.
வரலாறு
தொகுமனிதன் பல நூற்றாண்டுகளாக பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான். கலஹாரி பாலைவனப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள், வட அமெரிக்க பழங்குடிகள் மற்றும் பலதரப்பட்ட இன மக்கள் பாலைவனத்தில் வாழ்கின்றனர். விலங்குகளின் தடங்களை அறியவும், அதனை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கவும், தண்ணீரைத் தேடி அலையவும், உண்ணக் கூடியவைகளை தரம் பிரிக்கவும், அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். இச்செயல்களும் திட்டங்களும் வாய் மொழியாகவே அவர்களுள் பரவியது[1]. மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஆடுகள், மாடுகள், கால்நடைகள் ஒட்டகங்கள், காட்டெருதுகள், கலைமான் ஆகியவற்றிலிருந்து வளர்த்துக் கொண்டனர். மழைக்காலங்களில் வளரும் தாவரங்களைத் தேடி கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தனர். குடிபெயரும் போது தங்களுடன், துணிகள் அல்லது தோல்களால் ஆன கூடாரங்கள், குடிக்க பால் அல்லது இரத்தம், உண்ண இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர்[2].
பாலைவன நாடோடிகளும் வணிகர்களும் இருந்தனர். சஹாரா பாலைவனமானது அட்லாண்டிக் விளிம்பிலிருந்து எகிப்து வரை நீண்டு பரந்த பரப்பளவு கொண்டதாக உள்ளது. சகாராவின் வடக்கில் உள்ள வளமான மத்தியதரைக் கடல் பகுதியுடன் தெற்கில் சஹெலை இணைக்கும் வணிக பாதைகள் வளர்ச்சியடைந்தன இவற்றின் வழியாக, பாலைவத்தில் மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச்செல்ல பெருமளவிலான ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. துவாக்கு வணிகர்களால் வழக்கமாக பாரம்பரியமாக அடிமைகள், தந்தம், தங்கம் போன்றவற்றை வடக்கு நோக்கி எடுத்துச் சென்றும், தெற்குநோக்கி உப்பை வணிகத்துக்காக கொண்டு சென்றனர். இந்த வணிகர்களால் பல்வேறு பாலைவனச் சோலைகள் மற்றும் கிணறுகளுக்கு இடையில் பயணிக்க ஏதுவாக வழிகாட்டுவதற்கு இப்பகுதியின் நிலவியல் அறிவைக் கொண்ட பெர்பர்கள் பயன்படுத்தப்பட்டனர்.[3] 8 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சஹாரா முழுவதும் பல மில்லியன் அடிமைகள் வடக்கு நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.[4] மோட்டார் வாகனங்கள், கப்பல் மற்றும் வான் சரக்கு போக்குவரத்து சாதனங்களின் வருகைக்குப்பின் பாரம்பரிய தரைவழிப் போக்குவரத்துகள் குறைந்துவிட்டன, ஆனால் வணிகர்கள் இன்னும் அகடெஸ் மற்றும் பில்மாவிற்கும், பாலைவனத்திற்கு உள்பகுதியில் உள்ள சமூக மக்களுக்கு உப்பு கொண்டு செல்ல திம்புக்டுவிற்கும் டவுடுனிக்கும் இடையில் செல்லும் வழிகளிலும் பயணம் செய்கின்றனர்.[5]
பாலைவனப் பகுதி விளிப்புப் பகுதிகள் சிலவற்றில், மழைப்பொழிவு ஏற்பட்டும் பொருத்தமான சூழல்கள் ஏற்படும்போது, சில குழுக்கள் பயிர்களை பயிரிட்டன. கால்நடை மந்தைகள் வறட்சியால் இறந்து இழப்புகளைச் சந்தித்தபோது, மேய்ச்சலுடன் சாகுபடி செய்யவும் நிர்பந்தம் ஏற்பட்டு, இது நடந்தது இருக்கலாம். அவர்கள் பயிரிடப்பட்ட நிலப்பகுதியால், நாடோடி மேய்பர்களுக்கு மேய்சலுக்கான இடப் பகுதி குறைத்து, அதனால் நிலப்பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்தது. பாலைவனத்தின் அரை வறண்ட நிலப்பகுதிகள் 1930 களில் அமெரிக்க டஸ்ட் பவுல் பகுதியில் நடந்தது போல, மண் அரிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து நிறைந்த மண் வகைகள் இவையாகும். புற்கள் உள்ள இடத்தின் தரைமண் அரித்துசெல்லப்படுதல், மற்றும் தொடர்ச்சியான வறண்ட ஆண்டுகளில் பயிர் விளைச்சல் தோல்வியடைதல், பிரமாண்ட தூசுப் புயல்களால் மேல் மண் பறத்தல் போன்ற பேரழிவில் பாதி மில்லினுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[6]
இதுபோன்ற சேதங்களால் அரை வறண்ட பகுதிகளில் ஆண்டுக்கு பன்னிரண்டு மில்லியன் ஹெக்டேர் நிலப் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாக மாறி வருகின்றன.[7] காலநிலை மாற்றங்கள், விவசாய உழவு, மிகையான மேய்ச்சல், காடழிப்பு, வறட்சி போன்ற காரணிகளால் பாலைவனம் உருவாகிறது. மண்ணின் நிலையைத் தீர்மானிப்பதில் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன. பல சூழ்நிலைகளில், மண் அரிப்பு விகித்த்தை தாவரங்களின் பரப்பளவு குறைக்கின்றன.[8] தாவரங்கள் இல்லாததால் பாதுகாப்பற்று உள்ள வறண்ட மேற்பரப்பு மண் காற்றால் வீசியடிக்கப்படுகின்றன அல்லது வெள்ளப் பெருக்குகளால் அரிக்கப்பட்டு விடுகின்றன, இதனால் கீழே மிஞ்சும் வளமற்ற மண் அடுக்குகள், சூரிய வெப்பத்தால் மோசமான நிலப்பகுதியாக மாறும். அதிகப்படியான மேய்சலே வரலாற்று ரீதியாக நிலம் பாலைவனம் ஆவதற்கான காரணம் எனக் கருதப்பட்டாலும், காட்டு விலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகள் போன்றவை தாவர வளர்ப்பு மேம்படுத்துவதற்கு காரணம் என்று சில சான்றுகள் உள்ளன,
வேறு கோள்களில் உள்ள பாலைவனங்கள்
தொகுபுவியைத் தவிர சூரியக்குடும்பத்தில் செவ்வாயிலேயே பாலைவனம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உள்ள பாலைவனங்கள் புவி யில் உள்ளவற்றை விடப் பெரியனவாகும்.
பாலைவனமாதல்
தொகுபாலைவனமாதல் என்பது, வறண்ட, ஓரளவு வறண்ட அல்லது ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இது வழமையாக மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும்.
உயிரியற் பல்வகைமை இழக்கப்படுதலும், உற்பத்தித் திறன் இழப்பும் பாலைவனமாதலின் முக்கிய தாக்கங்களில் ஒன்றாகும். மடகாஸ்கரில், அதன் மத்திய உயர்நிலப் பகுதிகளில், உள்ளூர் மக்களின் வெட்டி எரித்தல் முறைப் பயிர்ச்செய்கையின் காரணமாக நாட்டின் 10% அளவுக்கு ஈடான நிலம் பாலைவனமாதல் மூலம் இழக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான நிலை உள்ளது.
இலக்கியங்களில்
தொகுபாலைவனங்களை பற்றி விரிவாகக் கூறும் இலக்கியங்களும் உள்ளன. சில நாடுகாண் பயணிகளால் நேரடியாக பார்த்து எழுதப்பட்டவையாகும். அவற்றில் 1888ல் சார்லசு மொன்டகு தௌடி எழுதிய "எனார்மசு டிராவல்சு இன் அராபியன் டெசர்டா", மத்திய கிழக்கு பாலைவனங்களில் அதிக பயணங்களை மேற்கொண்ட ஃப்ரேயா சுடார்கு எழுதிய இருபது நூல்களும் முக்கியமானவை. மேலும் செர்மானிய இயற்கை ஆர்வலர் எழுதிய ஆய்வுக்கட்டுரையான "இன் தி டெசர்ட் ஆஃப் திசு எர்த்", ரால்ப் பேக்னால்டு இரண்டாம் உலகப்போரின் போது செய்த ஆய்வுக் குறிப்புகள் போன்றவையும் முக்கியமானவை. மேலும் மார்க்கோ போலோ மத்திய ஆசியாவில் இருந்து சீனா செல்லும் போது எழுதிய குறிப்புகளும் பாலைவனங்களை பற்றிக் குறிப்பிடுகின்றன.
தமிழ்
தொகுதமிழில் சங்ககால நூல்களில் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர மன்னன் கலித்தொகை நூலில் தொகுத்த பாலைக்கலி என்னும் பிரிவில் வரும் 35 பாடல்களும் மற்ற சங்க நூல்களில் வரும் பாலைத் திணை பற்றிய பாடல்களும் சங்க கால பாலை நில மக்களின் வாழ்வியலையும் சேர்த்தே கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பாலை நிலமானது தற்காலிக பாலைவனங்களே ஆகும்.
பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" – சிலப்பதிகாரம்.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Fagan, Brian M. (2004). People of the Earth. Pearson Prentice Hall. pp. 169–181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0205735673.
- ↑ Dyson-Hudson, Rada; Dyson-Hudson, Neville (1980). "Nomadic pastoralism". Annual Review of Anthropology 9: 15–61. https://archive.org/details/sim_annual-review-of-anthropology_1980_9/page/15.
- ↑ Masonen, Pekka (1995). "Trans-Saharan trade and the West African discovery of the Mediterranean". Nordic Research on the Middle East 3: 116–142. http://www.smi.uib.no/paj/Masonen.html. பார்த்த நாள்: 2017-05-01.
- ↑ Wright, John (2007). The Trans-Saharan Slave Trade. Routledge. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-96281-7.
- ↑ "Sahara salt trade camel caravans". National Geographic News. 2010-10-28 இம் மூலத்தில் இருந்து 2013-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927134453/http://news.nationalgeographic.co.uk/news/2003/05/photogalleries/salt/. பார்த்த நாள்: 2013-09-22.
- ↑ "First Measured Century: Interview:James Gregory". Public Broadcasting Service. பார்க்கப்பட்ட நாள் 2013-05-25.
- ↑ "Desertification: Facts and figures". United Nations. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
- ↑ Geeson, Nicola; Brandt, C. J.; Thornes, J. B. (2003). Mediterranean Desertification: A Mosaic of Processes and Responses. Wiley. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-85686-4.