புவியியல்

புவியின் நிலம், கூறுகள் , உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு துறை

புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை,

  1. இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு;
  2. நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது;
  3. மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு;
  4. புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும்.
புவியின் நிலப்படம்(Medium) (Large 2 MB)

ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் (physical geography) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

தொகு

முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்முறைகள், அம்சங்கள், மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றின் இடம் சார்ந்தனவும், உலகியல் சார்ந்தனவுமான பரம்பல்கள் குறித்து ஆராய்கிறார்கள். வெளியும், இடமும்; பொருளியல், உடல்நலம், காலநிலை, தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் மீது தாக்கங்களைக் கொண்டிருப்பதால், புவியியல் ஒரு பலதுறைத் தொடர்பு கொண்ட துறையாக உள்ளது.

புவியியலின் இரண்டு பிரிவுகளுள், மானிடப் புவியியல், பெரும்பாலும் கட்டிடச் சூழல் பற்றியும்; அவற்றை எவ்வாறு மனிதர்கள் உருவாக்குகிறார்கள், நோக்குகிறார்கள், மேலாண்மை செய்கிறார்கள், அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்கிறது. இரண்டாவது வகையான இயற்கைப் புவியியல், காலநிலை, தாவரவகை, பிற உயிர்வகைகள், நில அமைப்பு என்பன எவ்வாறு உருவாகின்றன, எத்தகைய தொடர்புகளை அவற்றுள் கொண்டுள்ளன என்பவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழல் குறித்து ஆய்வு செய்கிறது.

புவியியலின் பிரிவுகள்

தொகு

இயற்கைப் புவியியல்

தொகு

இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), கற்கோளம் (lithosphere), நீர்க்கோளம் (hydrosphere), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

மானிடப் புவியியல்

தொகு

மானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் இயல் நிலத்தோற்றமாக (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. சூழற் புவியியல் இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது.

மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.

மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

சூழற் புவியியல்

தொகு

சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக, சூழற் புவியியல் உருவாகியுள்ளது. மேலும், சூழலுடனான மனிதரின் தொடர்புகள், உலகமயமாதல், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றால் மாற்றம்பெற்று வருவதனால், இந்த மாறுகின்றதும் இயங்குதன்மை கொண்டதுமான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கு புதிய அணுகுமுறையும் தேவைப்பட்டது. பேரழிவு மேலாண்மை (disaster management), சூழல் மேலாண்மை, தாங்குதிறன் (sustainability), அரசியல் சூழலியல் (political ecology) என்பன சூழற் புவியியலின் கீழ் அடங்கும் ஆய்வுப் பரப்புகள் ஆகும்.

புவித்தகவற்கணியவியல்

தொகு
 
இலக்கமுறை ஏற்ற மாதிரி (Digital Elevation Model – DEM)

புவித்தகவற்கணியவியல் (Geomatics) என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்துகின்றது. புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல் போன்ற நுட்பங்களைப் பிற துறைகளும் பயன்படுத்துவதனால் புவித்தகவற்கணியவியல் இன்று ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது. இத்துறை, நிலப்படவரைவியல், புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல், விண்கோள் நில அளவை முறைமை (Global positioning systems) போன்ற இடஞ்சார் பகுப்பாய்வுகளுடன் கூடிய பலவகை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

மண்டலப் புவியியல்

தொகு

பிரதேசப் புவியியல் (Regional geography), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரையறுப்பது ஆகும். பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து எல்லை வகுப்பதற்கான முறையான நுட்பங்களைத்தன்னுள் அடக்கும் மண்டலமயமாதல் (regionalization) குறித்தும் இது கவனம் செலுத்துகின்றது. மண்டலப் புவியியல், புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு அணுகுமுறையாகவும் கருதப்படுகின்றது.

தொடர்புள்ள துறைகள்

தொகு

கோள் அறிவியல்கள்

தொகு

புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் (planetology) எனப்படும்.

புவியியலின் வரலாறு

தொகு

மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க்கோட்டை அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்படுத்திய, எளிமையான ஆனால் செயற்றிறன் கொண்ட கருவியைக் கண்டுபிடித்தவரும், கிரகணங்களை எதிர்வு கூறுவதற்கான வழிமுறையை வகுத்தவரும் இவரே என்று கருதப்படுகிறது. புவியியலுக்கான அடிப்படைகளைப் பல பண்டைக்காலப் பண்பாடுகளில் காண முடியும். பண்டைய, இடைக்கால, தற்காலத் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குரிய சீனப் பண்பாட்டில் இதற்கான சான்றுகள் உள்ளன.

புவியியலை ஒரு அறிவியலாகவும், தத்துவமாகவும் கருதி முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் கிரேக்கர் ஆவர். இவர்கள் இதனை, நிலப்படவரைவியல், மெய்யியல், இலக்கியம், கணிதம் போன்ற துறைகளூடாகச் செய்தனர். புவி கோள வடிவானது என்பதைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது, பாராமெனிட்ஸ் (Parmenides) அல்லது ஆக்கிமிடீசாக இருக்கலாம் என்கின்றனர். அனக்சாகோரஸ் என்பவர் கிரகணங்களைச் சான்றாகக் கொண்டு புவி வட்டமான விளிம்புத் தோற்றம் கொண்டது என விளக்கினார். எனினும் அவர், அவர் காலத்தின் பல அறிஞர்களைப் போலவே புவி ஒரு வட்டமான தட்டுப் போன்றது என நம்பினார்.

புதிய நாடுகளைத் தேடிப்போன ரோமர்கள் புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், இத்ரிசி, இபின் பட்டுடா, இபின் கால்டுன் போன்ற அராபியர்களும் கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர்.

மார்க்கோ போலோவின் பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான கோட்பாட்டு அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்டுபிடிப்புக்களுக்கான காலப்பகுதியாகவும் அறியப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் புவியியல் ஒரு தனித் துறையாக அங்கீகாரம் பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவின் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் புவியியல் அறிவின் அளவு பலமடங்காக விரிவடைந்துள்ளது. புவியியலுக்கும், நிலவியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகளுடனும், பொருளியல், சமூகவியல், மக்கட்தொகைப் பரம்பல் ஆகியவற்றுடனும் பிணைப்புகள் உருவாகி வலுப்பெற்றுள்ளன. மேற்கு நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில், புவியியல் துறை நான்கு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இவை சூழல் அறுதிப்பாட்டியம் (environmental determinism), பிரதேசப் புவியியல் (regional geography), கணியப் புரட்சி (quantitative revolution), மற்றும் critical geography என்பனவாகும்.

புவியியல் நுட்பங்கள்

தொகு

இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (maps) இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமையும் (geographic information systems (GIS)) இணைந்து கொண்டுள்ளது.

 
புவியியற் தகவல் முறைமைகள் (GIS) மென்பொருள்.
  • புவியியற் தகவல் முறைமைகள் என்பது தேவையின் நோக்கத்துக்கு உகந்த வகையில், அச்சொட்டான (accurate) முறையில், கணினிமூலம் தன்னியக்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புவி பற்றிய தகவல்களைச் சேமிப்பது தொடர்பானது. புவியியலின் எல்லாத் துணைத் துறைகளையும் அறிந்திருப்பதோடு, கணினி அறிவியல் மற்றும் தரவுத்தள முறைமைகள் பற்றியும் ஒரு புவியியற் தகவல் முறைமைகள் நிபுணர் அறிந்திருக்க வேண்டும். புவியியற் தகவல் முறைமைகள் நிலப்பட வரைவியல் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. இன்று ஏறத்தாள எல்லா நிலப்பட ஆக்க முயற்சிகளுமே ஏதாவதொரு புவியியற் தகவல் முறைமைகள் மென்பொருள் மூலமே செய்யப்படுகின்றன.

புவியியல் கல்வி

தொகு

தமிழக மாணவர்களுக்கான புதிய முறை

தொகு

தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை[1] மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தினமணி செய்தி பத்திரிகை; ஜனவரி 8, 2014; 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியியல்&oldid=3994992" இலிருந்து மீள்விக்கப்பட்டது