கோட்பாடு
கோட்பாடு (doctrine) என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாகச் சூழல் அமைவைப் பொறுத்து இப்பெறுபேறுகள் இயற்கை எவ்வாறு தொழிற்படுகிறது என்பது குறித்த ஒரு பொதுமைப்படுத்திய விளக்கமாக இருக்கலாம். கோட்பாடு என்பதைச் சோதனைகள் மூலம் நிறுவப்பட்ட அல்லது இல்லை என்று இன்னும் நிரூபிக்கப்படாததும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதுமான ஒரு கருதுகோள் எனலாம்.
கோட்பாடு என்னும் சொல்லுக்குத் தற்காலத்தில் வழங்கும் சொற்பொருள்கள் சில அதன் ஊகம் சார்ந்த தன்மையையும், பொதுமைப்படுத்தும் பண்பையும் குறித்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாகக் கலைகளிலும், மெய்யியலிலும் "கோட்பாட்டு" அல்லது "கோட்பாடு சார்ந்த" போன்ற பயன்பாடுகள், இலகுவில் அளந்தறிய முடியாத எண்ணக் கருக்களையும், பட்டறிவு சார்ந்த தோற்றப்பாடுகளையும் குறிப்பதற்குப் பயன்படுகின்றன. அரிசுட்டாட்டிலின் வரைவிலக்கணங்களில் "கோட்பாடு" பெரும்பாலும் "செயல்முறை"க்கு முரண்பட்டதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோட்பாட்டுக்கும், செயல்பாட்டுக்குமான வேறுபாட்டை மருத்துவத் துறையில் இருந்து எடுத்துக்காட்டு ஒன்றிம் மூலம் தெளிவாகக் காட்டலாம். மருத்துவக் கோட்பாடு, உடல்நலம், நோய்கள் என்பவற்றின் இயல்புகள் குறித்தும் அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் புரிந்துகொள்ள முயல்கிறது. மருத்துவத்தின் செயல்முறை மக்களை உடல்நலத்துடன் வைத்திருக்க முயல்கிறது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை ஆயினும், இரண்டும் தனித்தனியாக இருக்கவும் முடியும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நோயாளியைக் குணப்படுத்தாமல், உடல்நலத்தையும் நோய்களையும் பற்றி ஆய்வு செய்ய முடியும் என்பதுடன், குணப்படுத்தலின் அடிப்படைகளை அறிந்து கொள்ளாமலும் கூட ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடியும்.[1]
தற்கால அறிவியலில், நன்றாக உறுதிப்படுத்தப்பட்ட இயற்கை குறித்த விளக்கமாக அமையும் அறிவியல் கோட்பாடுகளையே குறிக்கிறது. இத்தகைய அறிவியற் கோட்பாடுகள், அறிவியல் வழிமுறைகளுக்கு இசைவானவையாகவும், தற்கால அறிவியலின் கட்டளை விதிகளுக்கு அமைவானவையாகவும் இருக்கவேண்டியதும் அவசியம். இவ்வாறான கோட்பாடுகள், குறித்த துறைசார்ந்த எந்தவொரு அறிவியலாளரும், புரிந்துகொள்ளும்படியும், செயல்முறைகள் மூலம் அதை உறுதிசெய்யவோ அல்லது பொய்ப்பிக்கக் கூடியதாகவோ இருக்கும் வகையிலும் விளக்கப்பட வேண்டும். அறிவியற் கோட்பாடுகளே கூடிய அளவு நம்பத் தக்கவையாகவும், கண்டிப்பானவையாகவும், விரிவானவையாகவும் அமைந்த அறிவியல் அறிவுத் தொகுப்புக்கள் ஆகும்.[2] குறித்த நிலைமைகளில் இயற்கையின் நடத்தைகளை விபரித்து விளக்க முயல்வனவும், செயல்முறையில் சோதித்துப் பார்க்கக்கூடியவையுமான ஊகக் கணிப்புக்கள், அறிவியல் விதிகள் போன்றவை கோட்பாட்டில் இருந்து வேறுபட்டவை.[3] இவை கருதுகோள்கள்.
"எவ்வாறு இருக்கவேண்டும்" என்று எடுத்துக்கூறும் வகையிலான நெறிப்படுத்துகின்ற, அல்லது விதிமுறை சார்ந்தனவாகவும் ஒரு கோட்பாடு இருக்கக்கூடும். இது, இலக்குகள், நெறிமுறைகள், நியமங்கள் போன்றவற்றை வழங்குகிறது.[4] ஒரு கோட்பாடு, விளக்க மாதிரிகளோடு தொடர்பான அல்லது தொடர்பற்ற அறிவுத் தொகுப்பாகவும் அமையக்கூடும். இவ்வாறான அறிவுத் தொகுப்பின் உருவாக்கமே கோட்பாடாக்கம் எனப்படுகிறது.[5]
குறிப்புகள்
தொகு- ↑ See for example இப்போக்கிரட்டீசு Praeceptiones, Part 1.
- ↑ Schafersman, Steven D. "An Introduction to Science". Archived from the original on 2018-01-01. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
- ↑ எடுத்துக்காட்டுகளுக்கு en:Physical law கட்டுரையைப் பார்க்கவும்.
- ↑ Dolhenty, Jonathan. "Philosophy of Education and Wittgenstein's Concept of Language-Games". The Radical Academy. பார்க்கப்பட்ட நாள் 19 November 2010.
- ↑ Thomas, G. (2007) Education and Theory: Strangers in Paradigms. Open University Press.