கருதுகோள்
கருதுகோள் (hypothesis) என்பது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் தற்காலிகமான ஓர் ஊகம் ஆகும். இது, ஒரு தோற்றப்பாட்டை விளக்குவதற்காக முன்வைத்த ஒரு கருத்தாகவோ அல்லது பல தோற்றப்பாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த தர்க்க முறையான ஒரு கருத்தாகவோ இருக்கலாம். அறிவியல் வழிமுறைகளின்படி ஒரு கருதுகோளானது சோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அறிவியலாளர்கள், இத்தகைய கருதுகோள்களை, முன்னைய கவனிப்புகளிலிருந்தோ இருந்தோ, அறிவியற் கோட்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலமோ ஊகித்து முன்வைக்கிறார்கள்.
பயன்பாடு
தொகு21 ஆம் நூற்றாண்டில், கருதுகோள் என்பது ஆய்வுசெய்து நிறுவ வேண்டி எடுத்துக்கொண்ட ஒரு எண்ணக்கருவாகவே கருதப்படுகிறது. ஒரு கருதுகோள் பற்றிய முறையான மதிப்பீடு ஒன்றைச் செய்வதற்கு, அதனை முன்வைத்தவர் அதன் அடிப்படைகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும். ஒரு கருதுகோளை உண்மை என நிறுவ அல்லது பிழை என மறுக்க கூடுதல் வேலை செய்யவேண்டும்.