தொலையுணர்தல்
பரந்த பொருளில் தொலையுணர்தல் (Remote Sensing) என்பது, பொருள் அல்லது தோற்றப்பாடு ஒன்றுடன் நெருக்கமான தொடர்பு எதுவும் இல்லாமலேயே தொலை தூரத்திலிருந்து அது பற்றிய தகவல்களைத் திரட்டுதலைக் குறிக்கும். இது பொதுவாக வானூர்திகள், விண்கலங்கள், செய்மதிகள், கப்பல்கள் போன்றவற்றில் இருந்து செய்யப்படுகின்றது. நடை முறையில், பல வகையான கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது இடத்துக்கு அப்பால் இருந்து, அது பற்றிய தகவல்களைத் திரட்டுவது தொலையுணர்தல் எனப்படுகின்றது. ஆகவே, புவி அவதானிப்பு மற்றும் வானிலைச் செய்மதிச் சேகரிப்பு மேடைகள், கடல் மற்றும் வளி மண்டல அவதானிப்பு மேடைகள், உயரொலி முறை மூலம் கருத்தரிப்பை அவதானித்தல் போன்றன எல்லாம் தொலையுணர்தலுக்கான எடுத்துக் காட்டுகள் ஆகும்.
எனினும் இச்சொல்லின் தற்காலப் பயன்பாடு, பொதுவாகப் படவாக்க உணர் நுட்பங்களைப் பயன்படுத்துவதையே குறிக்கிறது. இங்கு வானூர்திகள், விண்கங்கள், செய்மதிகள் அல்லது வேறிடங்களில் பொருத்தப்பட்ட கருவிகள் பயன்படுகின்றன. மருத்துவப் படவாக்கம் போன்ற பிற படவாக்கத் துறைகள் இதிலிருந்தும் வேறுபட்டவையாகவே கருதப்படுகின்றன.
தொலையுணர்தலில், நேரடித் தொலையுணர்தல், மறைமுகத் தொலையுணர்தல் என இரு வகைகள் உண்டு. மறைமுகத் தொலையுணர்தலில், உணரிகள், பொருளினால் வெளிவிடப்படும் அல்லது தெறிக்கப்படும் இயற்கைக் கதிர்வீச்சை உணர்ந்தறிகின்றன. மறைமுக உணரிகளால் உணரப்படும் மிகப் பொதுவான கதிர்வீச்சு சூரிய ஒளி ஆகும். சாதாரண நிழற்படக் கருவிகள், அகச்சிவப்புக் கதிர்க் கருவிகள், ரேடியோமானிகள் என்பன மறைமுகத் தொலையுணரிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். நேரடித் தொலையுணர்தலில் கருவிகள் தாமே கதிர்வீச்சை வெளியிட்டுப் பொருட்களையும், இடங்களையும் துருவுகின்றன. ராடார்கள் நேரடித் தொலையுணர்தலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.