சமூகம் (Society) என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பதை பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். பொதுவாக சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிப்பதாகக் கொள்ளலாம்.[1]

பல்வகைப்பட்ட இனங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் இள வயதினர்.

இக்குழுக்கள் ஏதோவொரு வகையில் கூட்டுறவாக இயங்குவதால் அக்குழு சார்ந்த சமூகத்திற்கும், சமூக உறுப்பினர்களுக்கும் நன்மைகள் உண்டாகின்றன. கூட்டுறவு மனப்பான்மை இல்லாவிடில் இத்தகைய நன்மைகள் தனிநபர்களுக்கு கிடைப்பது இயலாததாகிவிடுகின்றது. தனிப்பட்ட மற்றும் சமூகத்திற்கு கிடைக்கின்ற பொதுவான நன்மைகள் வேறுபடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவை ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்து இரண்டுக்கும் பொதுவாக்கின்றன. தனியர்கள் தங்கள் சொந்த நெறிகள் மற்றும் மதிப்புகளை கடைபிடித்துக் கொண்டு மேலாதிக்கம் கொண்ட பெரிய சமுதாயத்திற்குள்ளும் அங்கத்தினர்களாக வாழமுடியும். சில சமயங்களில் இத்தகைய ஒரே சிந்தனை கொண்ட மக்கள் குழு துணைக்குழு என்று குறிப்பிடப்படுகிறது, இச்சொல்லாடல் குற்றவியல் கோட்பாட்டிற்குள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

அரசறிவியலில், சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில், சமூகம் என்பது ஓரளவு மூடிய சமூக முறைமையை உருவாக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும். இதில், பெரும்பாலான ஊடுதொடர்புகள் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்களுடனேயே இடம்பெறுகின்றன. சமூகம் என்பது சில வேலைகளில் பண்பாடு என்பதிலிருந்து முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிளிபர்ட் கீர்ட்ஸ் என்பவர், சமூகம் என்பது சமூகத் தொடர்புகளின் உண்மையான ஒழுங்கமைவு என்றும், பண்பாடு என்பது நம்பிக்கைகளாலும், குறியீட்டு வடிவங்களாலும் ஆனது என்றும் குறிப்பிட்டார்.[2][3] ரிச்சார்ட் யெங்கின்சு என்னும் சமூகவியலாளர், சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாளுகிறது என்கிறார்.

  1. புலன்களால் உணரப்படும் உலகம் மனித அனுபவத்தின் ஒரு சிறு பகுதியே. எனவே உலகைப் புரிந்து கொள்வதற்கு, மனிதத் தொடர்புகளைப் பண்பியல் (abstract) அடிப்படையில் (அதாவது, சமூகம் என்பதன் மூலம்) உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
  2. பல தோற்றப்பாடுகளை தனிப்பட்ட நடத்தைகளாகப் பார்க்க முடியாது. சில நிலைமைகளை விளக்குவதற்கு, "பகுதிகள் எல்லாவற்றின் கூட்டுத்தொகையிலும் பெரிதான ஒன்று" தேவையாக இருக்கிறது.
  3. கூட்டுநிலை, தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரதும் வாழ்க்கைக் காலத்தையும் தாண்டி நிலைக்கக்கூடியது.
  4. மனித நிலைமைகள் எப்பொழுதும் எமது புலன்கள் தரும் சான்றுகளுக்கும் அப்பால் செல்லுகிறது; நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கூட்டுநிலையோடு பிணைக்கப்பட்டுள்ளது.[4]

பெயர்க்காரணமும் பயன்பாடும்

தொகு
தெற்கு டாங் வம்சத்தின் 12 ஆம் நூற்றாண்டு தோற்றத்தின் ஒரு பகுதி. ஊழியர்கள், இசைக்கலைஞர்கள், துறவிகள், குழந்தைகள், விருந்தினர்கள் மற்றும் அச்சமூக சூழலில் இடம்பெற்றுள்ள அனைத்து அங்கத்தினர்களையும் உள்ளடக்கிய ஓவியம்

"சமுதாயம்" என்பது லத்தீன் வார்த்தையான societas, என்ற சொல்லில் இருந்து வந்துள்ளது. இதுவும் தோழர், நண்பன், நட்பு என்ற பொருள் கொண்ட socius என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். படைப்பு ஏதும் இல்லாத நிலையில் சமூகம் என்பது முழுமையான மனிதத்தைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது. சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் சமூக எதிர்ப்பாளர்களாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இசுக்காட்லாந்தின் பொருளாதார வல்லுனரான ஆடம் சிமித் இவ்வாறு கூறுகிறார். "வெவ்வேறு வணிகர்களிடையே வேறு எந்தவொரு பரசுபர அன்பும் பாசமும் இல்லாமல் இல்லாமல் நிலவும் உறவு முறையே சமூகம் என்கிறார். ஒரு சமுதாயம் என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது, சமுதாயம் என்பது செயல்பாட்டு உறவுகளின் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தனிநபர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும். தேசிய அல்லது கலாச்சார அடையாளங்கள், சமூக ஒற்றுமை, மொழி, அல்லது படிநிலை அமைப்பு போன்ற சிறப்பியல்புகளை இவ்வமைப்பு கொண்டிருக்கும்.

பொதுவுடமை கருத்தியலில் சமூகம்

தொகு

ஆதி பொதுவுடமை சமூகம்

தொகு

உற்பத்தி சாதனங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் சமூகத்தின் பொது சொத்தாக இருந்தது. கல் ஆயுதங்கள் முதல் வில் அம்பு வரை பொதுவிலிருந்தது. ஆந்த ஆதி மனிதர்கள் இயற்கையையும், காட்டு மிருகங்களையும் எதிர்த்து போராடி வாழ்ந்தார்கள். எனவே கூட்டு வாழ்வு, கூட்டு உழைப்பு, உற்பத்தி பலனை பொதுவில் அனுபவிப்பது நடைமுறையாக இருந்தது. சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற சமூக அமைப்பாக அது இருந்தது.

அடிமை சமூகம்

தொகு

இதில் உற்பத்திச் சாதனங்கள் அடிமை எஜமானர்களுக்கு (ஆண்டை) சொந்தம். அடிமையும், ஆண்டையின் உடமைதான். அடிமைகளை மிருகங்கள் போல வாங்கலாம், விற்கலாம். கல் ஆயுதங்களுக்கு பதில் இரும்பு, செம்பு போன்ற உலோக ஆயுதங்கள் வந்தன. விவசாயம், கைத்தொழில் வளர்ந்தது. ஏராளமான வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. அடிமைகளின் எலும்புக் கூடுகளால் உருவான சமூகம் இது. அடிமைகளின் உழைப்பை நிர்பந்தமாய் சுரண்டி ஆண்டைகள் கொழுத்தனர். தனியுடமை, அரசு, குடும்பம் தோன்றின.

நிலப்பிரபுத்துவ சமூகம்

தொகு

உற்பத்திச் சாதனங்களனைத்தும் இதில் நிலப்பிரபுவுக்கு சொந்தம். ஆனால் உழைப்பாளி நிலப்பிரபுவின் அடிமையல்ல. அவனை முன்பு போல் மிருகம் போல வாங்கி விற்பது, கொலை செய்வது முடியாது. கருவிகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இரும்பை உருக்கி கருவிகள, கலப்பைகள், தறிகள் என்று கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. முன்பு அடிமையாக இருந்தோர் தற்போது சொந்த வேளாண்மை, கைத்தொழில் செய்யலாம். ஆனால் நிலப்பிரபுவுக்காக உழைக்க வேண்டும். சாகுபடி செய்து அறுவடையில் பங்குதர வேண்டும். இந்த முறையில் சுரண்டல் கொடுமை நெடுங்காலம் நீடித்தது.

முதலாளித்துவ சமூகம்

தொகு

இதில் உற்பத்திச் சாதனங்களான தொழிற்சாலைகளும், கருவிகளும் முதலாளிக்கு சொந்தம். உற்பத்தி கருவிகள் உழைப்பாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளி தனது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. கைத்தொழில்கள் சிதைந்து எந்திர உற்பத்தி பெருமளவில் வளர்ச்சியடைந்தது. நிலங்கள் முதலாளித்துவ விவசாய பண்ணைகளாய் உருமாறின. விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றால் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது.

பொதுவுடைமை சமூகம்

தொகு

முதலாளித்துவ முரண்பாடுகளாலும், உற்பத்தியின் சமூக தன்மைக்கு உற்பத்திச் சாதனங்கள் தனியுடைமை விரோதமானதாக ஆகிறது. இதனால் புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் வீழ்ந்து பொதுவுடைமை சமூகம் பிறக்கிறது. இச்சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், கருவிகளும் சமுதாய உடைமையாகின்றன. உழைப்புக்கேற்ற பங்கீடு கிடைக்கும். உழைக்காதவனுக்கு சோறில்லை. இச்சமூகத்தில் உற்பத்தி சக்திகளுக்கு முற்றிலும் பொருத்தமான உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன.

நிலப்பிரபுத்துவ சமூகம்

தொகு

நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலத்தின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் ஒரு வடிவமாகும். இன்றைய விவசாயிகள் போலல்லாமல், நிலப்பிரபுத்துவத்தின் கீழ் சிற்றரசர்களாக இருப்பவர்கள் தங்கள் கடவுளின் தேசத்தில் வேளாண்மை செய்து வருவர். பிரபுக்கள், நில உரிமையாளர்கள் உணவு, பயிர்கள், கைவினை, அஞ்சலி, மற்றும் பிற சேவைகளை விவசாயிகளுக்கு சாதகமாக வழங்குவர். நிலப்பிரபுத்துவ உலகினில் விவசாயிகள் தங்கள் தலைமுறைக்காக கடவுளின் நிலத்தினில் வேளாண்மை செய்து வந்தனர்.

தொழிற்புரட்சிக்கு முந்தைய சமூகம்

தொகு

தொழிற்புரட்சிக்கு முந்தைய சமுதாயத்தில் மனித மற்றும் விலங்கு உழைப்பின் மூலம் உணவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கை ஆகும். இந்த சமுதாயங்கள் அவற்றின் தொழில்நுட்பத்தின் நிலை மற்றும் உணவு தயாரிக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட்டன. வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பது, மேய்ச்சல், தோட்டக்கலை, வேளாண்மை, மற்றும் நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்பன அத்துணைப்பிரிவுகள் ஆகும். .

தொழில்துறை சமூகங்கள்

தொகு

15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு புதிய பொருளாதார முறை, என்று நிலப்பிரபுத்துவ பதிலாக தொடங்கியதே தொழில்துறை சமூகங்கள். தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு உழைத்து ஊதியங்கள் வாங்குபவை நடைமுறைக்கு வந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இம்முறை பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

தொழிற்புரட்சிக்கு பிந்தைய சமூகங்கள்

தொகு

தொழிற்துறை சமுதாயங்களுக்குப் பிந்தைய சமூதாயங்கள் பொருட்கள் உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தும் சமுதாயங்களாக உள்ளன. மேம்பட்ட தொழிற்துறை சங்கங்கள் தற்போது தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறையில் சேவைத் துறையின் அதிகரிப்புக்கான ஒரு மாற்றத்தை எதிர்நோக்குகின்றன. சேவை தொழில்களில் பணியாற்றும் அதன் பணியாளர்களில் பாதிக்கும் மேலாக அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சேவை தொழில்கள் அரசாங்கம், ஆராய்ச்சி, கல்வி, சுகாதாரம், விற்பனை, சட்டம், மற்றும் வங்கி ஆகியவை அடங்கிய சேவைத் துறைகளில் தங்கள் பணியாளர்களை ஈடுபடுத்துவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.

ஆட்சி இயலில் சமூகம்

தொகு

சமூகங்கள் அரசியல் ரீதியாகவும் கட்டமைக்கப்படலாம். இந்தச் சமூகங்களின் அளவு மற்றும் கூட்டுறவை அதிகரிக்கும் பொருட்டு, இனப்பட்டைகள், பழங்குடிகள், மாநிலச் சங்கங்கள் ஆகியவை தோற்றம் பெருகின்றன. இந்த சமுதாயங்களின் கலாச்சார, புவியியல், மற்றும் வரலாற்று சூழல்களின் அடிப்படையில் இவற்றின் கட்டமைப்புகள் பல்வேறு அரசியல் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. பிற சமூகங்கள் போல அதே அளவிலான தொழில்நுட்பத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. இப்பண்புகள் ஒரு சமூகத்தில் அதிகரிக்கும்போதும் குறையும் போதும் போட்டிகள் உண்டாகின்றன.

சமகாலப் பயன்பாடு

தொகு

மேற்கத்திய சமூதாயம்

தொகு

கலாச்சாரம், அரசியலமைப்பு, கருத்துக்கள் ஆகியவற்றில் வளர்ந்து வரும் கருத்தாக்கங்களைக் கொண்டு வந்துள்ள சமூகம் மேற்கத்திய சமூகம் எனப்படுகிறது. புவியியல் ரீதியாக, இது மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இச்சமூகத்தில் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா, மற்றும் இசுரேல் ஆகிய நாடுகளும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. .

அனைத்து கலாச்சாரங்களும், வாழ்க்கை முறையும் மேற்கு ஐரோப்பாவின் வேர்கள் என்று கருதப்படுகின்றன. அவர்கள் எல்லோரும் வலுவான பொருளாதார நிலையையும் நிலையான அரசாங்கங்களையும் அனுபவித்து வருகின்றனர். , மத சுதந்திரம் அங்கு அனுமதிக்கப்படுகிறது. குடியரசு முறை ஆட்சியின் வடிவமாகவும் அதேவேளையில் முதலாளித்துவத்திற்கு ஆதரவானதாகவும், சர்வதேச வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாகவும் உள்ளது. கிறித்துவ மத நம்பிக்கைகளும் சில வகையான அரசியல் மற்றும் இராணுவ கூட்டு அல்லது ஒத்துழைப்பும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.[5] தகவல் தொழில்நுட்ப சமூகம், அறிவுச்சமூகம் போன்ற சமூகங்களும் இன்று விரிவடைந்து வருகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Briggs, Asa (2000, 2nd Edition). The Age of Improvement. Longman. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-36959-2. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. Maurice Godelier, Métamorphoses de la parenté, 2004
  3. "New Left Review - Jack Goody: The Labyrinth of Kinship". பார்க்கப்பட்ட நாள் 2007-07-24.
  4. Lenski, G. 1974. Human Societies: An Introduction to Macrosociology.
  5. John P McKay, Bennett D Hill, John Buckler, Clare Haru Crowston and Merry E Wiesner-Hanks: Western Society: A Brief History. Palgrave Macmillan, 2009. பரணிடப்பட்டது 1 சனவரி 2011 at the வந்தவழி இயந்திரம்
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சமூகம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகம்&oldid=3978434" இலிருந்து மீள்விக்கப்பட்டது