குடும்பம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்புபட்ட ஓர் உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஓர் உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது."[1] நெருங்கிய குடும்பம் என்பது வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்கள், மகள்கள் ஆகியோரை உள்ளடக்கும். இவர்களோடு, பெற்றோரின் உடன்பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர், மருமக்கள் போன்றோரும் சேர்ந்து விரிந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர்.
பெரும்பாலான சமுதாயங்களில் பிள்ளைகள் சமூகமயமாவதற்கான முதன்மை நிறுவனமாகக் குடும்பம் விளங்குகிறது. உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் நோக்குகையில் குடும்பத்தின் முக்கியமான தொழிற்பாடுகளில் ஒன்று புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதாகும். இந்தத் தொழிற்பாடு, பகிர்தல், கவனிப்பு, பராமரிப்பு, பேணி வளர்ப்பு என்பவற்றைக் கொடுத்தல் / பெற்றுக்கொள்ளல், ஒழுக்கநல உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல், அறமுறையிலான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றால் பேணப்படுகிறது[2][3]. ஆனாலும் புதிய உறுப்பினரை உருவாக்குவது மட்டுமே குடும்பத்தின் முக்கியமான பணியல்ல. இரு நபர்களுக்கிடையில் பிணைப்பின்மூலம், பொருளியல் அடிப்படையில், ஓர் ஆக்கபூர்வமான ஓர் அமைப்பை உருவாக்குவதுமாகும்[4][5][6].
பிள்ளைகளைப் பொறுத்த வரையில், குடும்பமானது, குடும்ப அமைப்புக்கான ஓர் அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. அதேவேளை பெற்றோரைப் பொறுத்த வரையில், குடும்பமானது, பிள்ளைகளை உருவாக்கி, சமூகத்துடன் அவர்களைப் பிணைக்கும் இடமாக இருக்கிறது.
சொற்பிறப்பு
தொகுகுடும்பம் என்னும் சொல் கூடல் என்னும் பொருள் கொண்ட குல் என்னும் தமிழ் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. குல் > குள் > குழு என மாற்றம் பெறும்.[7] குழு என்பது கூட்டம் என்ற பொருள் தருவது. குழு > குழும்பு > குடும்பு > குடும்பம் என்றவாறு குடும்பம் என்னும் சொல் பெறப்படுகிறது. குடும்பம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் திருக்குறளில் (குறள்.1029) இடம்பெற்றுள்ளது.
இது பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்த கூட்டம் என்ற பொருள் தருகிறது.[8]
குடும்ப வரையறை
தொகுமனித சமுதாயத்தின் அடிப்படை அலகு, குடும்பம் ஆகும்.குடும்ப அமைப்பு,ஒழுங்கான முறையில் அமைந்தால் அது நல்ல குடும்பம் எனப்படும்.
குடும்பத்தின் வகைகள்
தொகுகணவன் – மனைவி தொடர்பு, பெற்றோர் – பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையிலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன.
அமைப்பு
தொகுகுடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை,
- மணவழிக் குடும்பம் (Conjugal Family)
- தனிக் குடும்பம் (Nuclear family)
- விரிந்த குடும்பம் (Extended Family)
என வகைப்படுத்தலாம்.
மார்கனின் குடும்பம் குறித்த கருத்துகள்
தொகுஅமெரிக்க மானிடவியல் அறிஞர் லூவி ஹென்றி மார்கன்(1818–1881), மனிதப் பண்பாட்டில் குடும்பத்தின் ஐந்து படிமலர்ச்சி நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.அவை:
1.இரத்த உறவுக் குடும்பம்:
இரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) எனப்படுவது,ஒரே தலைமுறையைச் சேர்ந்த அண்ணன் தம்பியர் அவர்தம் சகோதரிகளை மணமுடிப்பதாகும்.
2.குழுமணக் குடும்பம்:
ஓர் இரத்தக் குழுவைச் சேர்ந்த அண்ணன் தம்பியர்,பிறிதோர் இரத்தக் குழுவின் அக்காள் தங்கையரை மணந்து கொள்வது குழுமணக் குடும்பம் (Punaluan Family) ஆகும்.
3.நிரந்தரமற்ற குடும்பம்:
நிரந்தரமற்ற குடும்பம்(Syndiasmian Family) குழுமணமுறை, ஒரு துணை மணமுறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மணமுறையினைக் கொண்டது. இவ்வகைக் குடும்ப முறையில் கணவர் மனைவி இருவரும் அவர்கள் விரும்பும்போது மணவிலக்குப் புரிந்து கொண்டு வேறு துணையுடன் வாழ முற்படுவர். ஒரே துணையுடன் வாழும்போதும் இவர்களுக்கிடையில் பந்தம் இருப்பதில்லை.
4.தந்தைத் தலைமைவழிக் குடும்பம்(Patriarchal Family):
தந்தைத் தலைமைவழிக் குடும்பத்தில் (Patriarchal Family) ஆண்களிடம் குடும்பத்தின் எல்லாவிதமான அதிகாரங்களும் பொறுப்புகளும் குவிந்திருக்கும். தொடக்கக் கால உரோமானியர்களும் எபிரேயர்களும் இம்முறையைப் பின்பற்றினார்.
5.ஒரு துணைமணக் குடும்பம்(Monogamian Family):
ஒரு துணைமணக் குடும்ப (Monogamian Family) மணமுறையானது, அண்மைக்கால தனிக்குடும்ப முறையை ஒத்ததாகும். கணவன்/மனைவி ஒரு துணையுடன் வாழும் குடும்ப முறையாகும்.
தொன்மைச் சமுதாயம் நூல்
தொகுகி.பி.1877-இல் லூவி ஹென்றி மார்கன் தொன்மைச் சமுதாயம் எனும் நூலை வெளியிட்டார்.இந்நூல் மார்க்சியத்தின் இயக்கவியல் அணுகுமுறை (Dialectical Approach),வரலாற்றுப் பொருள் முதல்வாதம்(Historical Matetialism)ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.இந்நூலைப் படித்த எங்கெல்ஸ்,குடும்பம், தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலை உருவாக்கினார்.இந்த நூலானது மார்கன் எழுதிய நூலின் சுருக்கமாக அமைந்திருந்தது.மார்கன் எடுத்துக்கூறிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய கருத்தை எங்கெல்ஸ் ஏற்றுக்கொண்டார்.எங்கெல்ஸ் மூலமாக சோவியத்து இனவியலில் மார்கன் மதிப்புமிக்க கொள்கையாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.[9]
திருமணம்,குடும்பம் இவற்றிற்கிடையேயான தொடர்பு
தொகுதிருமணம் என்பது வழக்கமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள உறவின் நெருக்கமான,பாலுறவு அம்சத்தை,அவர்களுடைய,சாராம்சத்தில் உயிரியல்,பாலுணர்ச்சித் தேவைகளை நிறைவு செய்வதை வலியுறுத்துவதாகும்.
குடும்பம் என்பது திருமணத்துடன் தொடர்புடையது.பாலுணர்ச்சித் தேவைகள் மட்டுமல்லாமல் உணவு மற்றும் இதர அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகத் தனிநபர்கள் இடைச்செயல் புரிகின்ற நிகழ்ச்சிப் போக்கை முதன்மைப்படுத்துகிறது.
குடும்ப அமைப்பு உருவாக,திருமணம் அடிப்படையாக உள்ளது. எனினும்,அது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை.மரபுவழி இணைப்பின் தொடர்ச்சியாகவும் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளின் மரபினை கோலோச்சுவதாகவும் அமைகிறது.
திருமண-குடும்ப உறவுகள் ஆண்-பெண் இருவருக்கிடையில் நெருக்கமான உறவுகளை முன்னிலைப்படுத்துகின்றன.அவர்கள் குடும்பம் என்ற முறையில் இனப்பெருக்கத்திற்கும்,சமூக,பொருளாதார செயல்பாட்டிற்கும் அடிப்படை அலகுகளாக உள்ளனர்.இது உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றைப் பெருக்கும் கருவியாக இந்த அலகு காணப்படுகிறது.
குழு மணம் பாலுறவை நிர்ணயித்தது.இணைக் குடும்பம் பெற்றோரைத் தீர்மானித்தது.ஒருதார மணமுறை சொத்தைப் பாரம்பரியமாகப் பெறும் உரிமை மற்றும் சமூக,பொருளாதார, உற்பத்தி நுகர்வு அலகாகத் தோன்றியது.
பண்பாடற்ற காலகட்டத்தில் இணைக் குடும்பம் பெரிய தந்தைவழிக் குடும்பமாகப் பரிணமிக்கிறது.தந்தைவழிக் குடும்பம் ஒருதார மணத்தை நோக்கி வளர்ச்சி அடைகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.அந்த வளர்ச்சி உழைப்புப் பிரிவினையின் புதிய துறைகளையும் வடிவங்களையும் நிர்ணயிக்கிறது.[10]
ஒருதாரக் குடும்பங்களின் தோற்றத்திற்கு கைத்தொழில்கள் மற்றும் வாணிபம் காரணிகளாக அமைந்தன.குடும்பம் அரசு, அதிகார உறவுகளின் எதேச்சதிகாரத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
குடும்ப அமைப்பும் இருபாலர் நிலையும்
தொகுஎங்கெல்ஸ் கூறியதாவது,'பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ உள்ள பெண் அடிமைத்தனத்தின் அடிப்படையில்தான் நவீன காலத் தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது;நவீன காலச் சமுதாயம் என்பதும் தனிப்பட்ட குடும்பங்களைத் தனது மூலக்கூறுகளாகக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பே.இன்று, மிகப் பெரும்பான்மையான சமயங்களில், ஆண்தான் சம்பாதிக்கிறவனாக,சோற்றுக்கு வழி செய்கிறவனாக இருக்க வேண்டியிருக்கிறது.குறைந்தபட்சம் சொத்துள்ள வர்க்கங்களில் இப்படித்தான்;இது அவனுக்கு ஆதிக்க நிலையைத் தருகிறது. அதற்கொன்றும் விசேஷமான சட்டவகைச் சலுகை உரிமைகள் வேண்டியதில்லை.'[11]
குடும்பமும் குலவழிபாடும்
தொகுகுலம் தழைக்கவும்,முன்னோர் சாந்தி அடையவும்,பின்னோர் செழிக்கவும் குலவழிபாடு தொன்றுதொட்டு உள்ளது. ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வமுண்டு.இதுவே,இவர்களுக்குக் காவல் தெய்வமாகும்.அக் காவல் தெய்வம் குல தெய்வமாக வழிபடப்படுகிறது.பெற்றோர் பிறக்கும் தம் பிள்ளைகளுக்கு,முதல் முடியினைக் குல தெய்வம் கோயிலுக்குச் சென்று எடுப்பர்.மேலும், காதணியும் அணிவிக்கப்படும்.
குலதெய்வ வழிபாடு இந்து மதத்தைப் பின்பற்றுவோருக்கு முக்கியமான ஒன்றாகும்.குல தெய்வ வழிபாடு என்பது மனிதனின் லௌகீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. குல தெய்வத்தை வழிபடும் ஒரு சமூக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்,ஒத்த இனக்குழு ஆவார்கள்.இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதி வாழ்பவர்கள். இவர்களுக்குள் மணமுறை நிகழாது.மேலும், குடும்பத்தில் நிகழும் எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் தொடங்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அப்போதுதான் அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை.ஆண்டுதோறும் செய்யப்படும் குலதெய்வ வழிபாட்டால் குடும்பத்தில் அமைதியும் நன்மையும் விளையும் என்பது உண்மையாக உள்ளது.
தாய்வழிக் குடும்பமும் தந்தைவழிக் குடும்பமும்
தொகு19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய கருத்துகளின்படி தந்தை வழிக் குடும்பமே சமூக அமைப்பின் ஆதி வடிவமாகக் கருதப்பட்டது.
இரத்த உறவுமுறையின் அமைப்புகள் மற்றும் உறவுமுறையைக் குறைக்கும் வார்த்தைகள் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராந்த முதல் நபரான மார்கன் தாயுரிமைக் குலமே சமூக அமைப்பின் ஆதி வடிவம் என்று கண்டுபிடித்தார்.ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரும் வழக்குரைஞருமான யோஹன் ஜாக்கப் பாஹொஃபென் தாயுரிமை என்னும் தனது நூலில் பெண்களின் பரிபூரண ஆட்சியை முதலில் தத்துவ ரீதியாக விவாதித்தார்.ஆனால்,மார்கன் அவருக்கு மாறாக தாயுரிமைக் குலத்தின் தோற்றம் மற்றும் இருத்தலை மாயை-மதக் காரணங்களால் அல்ல, யதார்த்தமான,பொருளாதார மற்றும் உற்பத்திக் கூறுகளைக் கொண்டு விளக்கினார்.<ref>எங்கெல்ஸின்'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல்',பக்.151-152.
மேலும்,எங்கெல்ஸ் தன்னுடைய நூலில், குடும்பத்துக்கு முன்னர் குலம் இருந்தது. தந்தை வழி முறைக்கு முன்னர் தாய்வழி முறை இருந்தது என்னும் மார்கனுடைய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு தீவிரமாக ஆதரித்தார்."தமக்குள் மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கப்படாதிருக்கின்ற பெண் வழி இரத்த உறவினர்களைக் கொண்ட ஒரு குறுகிய வட்டமாக"குலம் உருவாகிக் கொண்டிருந்தது. <ref>ibid.pp.153-154.<ref>
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம், உறுப்புரை 16 (3)
- ↑ Schneider, David 1984 A Critique of the Study of Kinship. Ann Arbor: University of Michigan Press. p. 182
- ↑ Deleuze-Guattari (1972). Part 2, ch. 3, p. 80
- ↑ Wolf, Eric. 1982 Europe and the People Without History. Berkeley: University of California Press. 92
- ↑ Harner, Michael 1975 "Scarcity, the Factors of Production, and Social Evolution," in Population, Ecology, and Social Evolution, Steven Polgar, ed. Mouton Publishers: டென் ஹாக்.
- ↑ Rivière, Peter 1987 "Of Women, Men, and Manioc", Etnologiska Studier (38).
- ↑ வேர்ச்சொற் கட்டுரைகள், நூல் 2, பக்கம் 19
- ↑ வேர்ச்சொற் கட்டுரைகள், நூல் 2, பக்கம் 20
- ↑ பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சல பாரதி, ப.135
- ↑ எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், பக்.166-167.
- ↑ [ibid.,p.174]
வெளி இணைப்புகள்
தொகு- "Family". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 10. (1911).
- Family database, OECD,
- Family Research Laboratory, unh.edu
- "Family evolution and contemporary social transformations" (PDF). seres.fcs.ucr.ac.cr. Estación de Economía Política. Archived from the original (PDF) on 2008-10-29.
- Family Facts: Social Science Research on Family, Society & Religion (a Heritage Foundation site). familyfacts.org
- Families Australia – independent peak not-for-profit organisation. familiesaustralia.org.au
- FamilyPlatform – A consortium of 12 organisations providing input into the European Union's Socio-Economic and Humanities Research Agenda on Family Research and Family Policies.
- Unitedfamilies.org, International organisation
- UN.org, Families and Development
- Family, marriage and "de facto" unions, Vatican.va
- What Is a Family? பரணிடப்பட்டது 2017-03-04 at the வந்தவழி இயந்திரம்