அரசறிவியல்

அரசறிவியல் (political science) என்பது நாடு, அரசாங்கம், அரசியல் மற்றும் அரசுக் கொள்கைகள் போன்றவற்றைப் பயிலும் ஒரு சமூக அறிவியல் கற்கை நெறி ஆகும்.[1] இது குறிப்பாக அரசியல் கொள்கை, மற்றும் நடைமுறை, அரசாட்சி முறைமைகளைப் பற்றிய ஆலசல், அரசியல் போக்கு, கலாசாரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. அரசறிவியல் பொருளியல், சட்டம், சமூகவியல், வரலாறு, மானிடவியல், பொது நிர்வாகம், பன்னாட்டு உறவுகள், உளவியல், மற்றும் அரசியல் தத்துவம் போன்ற பல நெறிகளுடன் பிணைந்துள்ளது. இது ஒரு நவீன கற்கையாக விளங்குகின்ற போதிலும் இதன் தோற்றத்தை பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது. அரசியலின் ஆங்கிலப் பதமான பொலிடிக்ஸ் (politics) என்பது கிரேக்கப் பேரரசு நிலவிய காலத்தில் நகர அரசு எனும் பொருளுடைய ‘பொலிஸ்’ (Polis) எனும் பதத்திலிருந்தே தோன்றியதாகும்.

ஆரம்பகால கிரேக்கத்தின் அரசியல் ஒழுங்கமைப்பின் அடிப்படை அலகுகளாகவும், சமூக வாழ்வின் சுயதேவைப் பூர்த்தியுடைய அலகுகளாகவும் காணப்பட்ட இந் நகர அரசுகள் மனித வாழ்வின் மேம்பாட்டிற்கான சிறந்த ஒழுங்கமைப்பாகவும் கருதப்பட்டது. நில அளவால் மிகச் சிறியனவாகக் காணப்பட்ட இந் நகர அரசுகளை அக்கால சமுதாயத்திலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அதாவது இவை அரசுகளாக மட்டுமன்றி சமுதாயமாகவும் விளங்கியதால் மக்களின் பொதுநடத்தையையும், தனி நடத்தையையும், அரசியல் நடத்தையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந் நகர அரசுகளில் வாழ்ந்த மக்களின் நடத்தைகள் யாவும் அரசியல் சம்பந்தப்பட்டதாகவே அமைந்திருந்தன.

ஆரம்ப காலங்களில் அரசு பற்றிய விஞ்ஞானம் என்றும், அரசின் கடந்தகால – நிகழ்கால – எதிர்கால நிலை பற்றியும் அவ்வரசு சார்ந்த அமைப்புகள், நிறுவனங்கள், கோட்பாடுகள் பற்றிய கல்வியே அரசறிவியல் என்றும் அரசினை முன்னிலைப்படுத்தி அரசறிவியலுக்கு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு அரசினை முதன்மைப்படுத்தி கூறும் விளக்கத்தினை அரசியலறிஞர்களான பிளன்ற்சிலி (Bluntchili), கார்ணர் (Garner), கெட்டல் (Gettal), பிராங்குட்நோவ் (Frankgutnov), பொலொக் (Pollock), ஸ்ட்ரோங் (Strong) முதலானோர் ஆதரிக்கின்றனர்.

19ம் 20ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அரசியற் கல்வியில் அரசு நிலை சார்ந்த இக் கருத்துநிலைகள் கூடிய செல்வாக்குப் பெற்றனவாகத் திகழ்ந்தன. Guy அரசியலானது அரசுடன் தொடர்புடைய எல்லா அம்சங்களையும் குறிப்பதாக அமைகின்ற போதிலும் அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் ஒரே கருத்துடையவையாகா. அவை ஒன்றிலிருந்து ஒன்று தம்மிடையே வேறுபட்டவை. அரசியல் என்பது அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர்புடைய நாளாந்த நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியலோடு தொடர்புடைய யாவற்றையும் ஆராய்கின்றது. அதாவது அரசியல்வாதி எனப்படுபவர் நாளாந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராவார். பொதுவாக அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றை சார்ந்தவராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியும். ஆனால் அரசியல் விஞ்ஞானி என்பவர் அரசுடன் தொடர்புடைய சரித்திரம், சட்டம், கோட்பாடு, நடைமுறை போன்ற யாவற்றையும் ஆராய்கின்ற ஒருவராவார். அதே வேளை அரசியல் விஞ்ஞானிகளும் நேரடியாக அரசியலில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துக் காட்டலாம்.

  • பண்டைய அரசியல் சிந்தனையாளரான பிளேட்டோ சிசிலியின் சைசாகஸ் அரசர்களுக்கு சேவை செய்தவராவார்
  • அரிஸ்ரோட்டில் மகா அலெக்ஸாண்டருக்கு சேவை செய்தவராவார்.
  • மாக்கியவல்லி புளோரன்ஸ் குடியரசின் செயலாளராக பணிபுரிந்தவராவார்.

J.W. கார்ணர் (Garner) என்பவர் மிகச் சுருக்கமாக “அரசியல் விஞ்ஞானத்தின் தொடக்கமும் முடிவும் அரசு” என்கிறார். அவ்வாறெனின் அரசு என்பது யாது எனின், ஒரு மனித குழு ஒரு சமூகமாக இயங்குவதற்கு தனது நடத்தைகளையும் தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்றக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்குரிய நபர்களை வேண்டி நிற்கின்றது. இந்நபர்களையும் இணைத்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அச் சமூகம் அரசு என வர்ணிக்கப்படலாம். அதில் நடத்தைகளை ஒழுங்கமைப்பதற்குரிய விதிகள் அல்லது கோட்பாடுகள் சட்டம் எனப்படலாம். அச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நபர்களை அரசாங்கம் எனலாம். எனவே அரசு என்பதை மிகச் சுருக்கமாக கூறின் - “ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம்” என்று குறிப்பிடலாம்.

அரசின் தோற்றம் தொடர்பான கோட்பாடுகள்

தொகு

அரசியல் சிந்தனையில் அரசின் தோற்றம் தொடர்பாக பல்வேறு சிந்தனைகள் காணப்படுகின்றன.

  • தெய்வீக உரிமைக் கோட்பாடு
  • பலவந்தக் கோட்பாடு
  • சமூக ஒப்பந்தக் கோட்பாடு
  • மாக்சியக் கோட்பாடு
  • தந்தைவழிக் கோட்பாடு
  • தாய்வழிக் கோட்பாடு
  • பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

இவ்வாறான கோட்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது சமூக ஒப்பந்தக் கோட்பாடாகும். அதாவது அரசானது சமூகத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே தோற்றம் பெற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு இக் கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பில் பல்வகை விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தோமஸ் ஹொப்ஸ் (Thomas Hopes), ஜோன் லொக் (John Lock), ரூசோ (Russaue) போன்றோரே சமூக ஒப்பந்தவாதிகளில் சிறப்பானவர்களாகும்.

அரசாங்கம்

தொகு

அரசாங்கம் அரசின் ஒரு பகுதியும், அரசின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கருவியுமாகும். அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர் ஆகும்.

அரசின் மூலக்கூறுகள்

தொகு

மக்கள் தொகை

தொகு

மக்கள் அற்ற நிலப்பகுதிகள் அரசு எனக் கூறப்படுவதில்லை. ஏனெனில் மக்கள் இன்றி அரசு தோற்றம் பெற முடிவதில்லை. ஒரு அரசு தோற்றம் பெறுவதற்கு மக்கள் தொகை அவசியமானது என்பது அறிஞர் கருத்தாகும். எனினும் அளவு வேறுபாட்டைக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அரிஸ்ரோட்டில், ரூசோ போன்றவர்கள் மக்கள் தொகை வரையறுக்கப்பட்டதாகவும், சிறியதாகவும் இருத்தல் வேண்டும் எனக் கருதினர். ரூசோ மக்கள் தொகையை நிர்ணயம் செய்கின்றபோது அதனை பத்தாயிரமாக எல்லைப்படுத்தியுள்ள அதேவேளை அரிஸ்ரோட்டில் சுயதேவைப் ப+ர்த்தி, சிறந்த அரசாங்கம் என்பவை அமையக் கூடியவகையில் மக்கள் தொகை இருத்தல் வேண்டும் என்கிறார்.

இறைமை

தொகு

அரசறிவியலில் மிகவும் அடிப்படையான எண்ணக்கருவாக இறைமை விளங்குகின்றது. எனினும் அதன் பண்புகளைத் தெளிவாக்குவதிலும், வரையறுத்துக் கொள்வதிலும் பல்வேறு சிக்கல்களும் வேறுபாடுகளும் நிலவிவருகின்றன. இறைமை என்பது ‘உயர்ந்த அதிகாரம்’, ‘மேலான அதிகாரம்’ எனும் கருத்தினைத் தருகின்றது. இது அரசிற்கு அதனுடன் தொடர்புடைய எல்லா விடயங்களின் மீதும் காணப்படும் வரம்பற்ற அதிகாரத்தை குறிப்பதுடன், வெளிவாரியாக ஏனைய காரணிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்படாதிருக்கும் அதிகாரத்தையும் குறிக்கும்.

நிலப்பரப்பு

தொகு

நிலப்பரப்பும் அரசின் மூலக்கூறுகளில் ஒன்றாகும். ஒரு மக்கள் கூட்டம் தம்மை ஒரு அரசாக ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு குறிக்கப்பட்ட நிலப்பரப்பில் அவர்கள் நிரந்தரமாக வாழ்தல் அவசியமானதாகும். ஒரு நாடோடிக் கூட்டம் தம்மை அரசாகப் பிரகடனப் படுத்திக் கொள்ள முடியாது.

சர்வதேச அங்கீகாரம்

தொகு

அரசின் மூலக்கூறுகளில் மேலும் ஒரு அங்கமாக சர்வதேச அங்கீகாரத்தையும் முன்வைப்பர். சர்வதேச சமுதாயத்தின் வளர்ச்சிநிலை, போக்கு என்பவற்றின் காரணமாக நாடுகள் ஒன்றுடன் ஒன்று தங்கியிருக்க வேண்டியதும், உறவுகளைப் பேணிக்கொள்ள வேண்டியதும் அவசியமாக உள்ளவிடத்து, அவை ஏனைய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Oxford Dictionary of Politics: political science

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசறிவியல்&oldid=3316400" இலிருந்து மீள்விக்கப்பட்டது