உளவியல்

மனித நடத்தைப் பற்றிய அறிவியல் நடத்தை

உளவியல் (Psychology) என்பது உள்ளத்தின் செயல்பாடுகளையும் நடத்தைகளையும் அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்றல், பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.[1][2] இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை அறிவியலாளர்கள் என்றும் வகைப்படுத்தப்படுவர். உளவியல் ஆய்வு என்பது அடிப்படை ஆய்வுகளின் அடிப்படையிலான அல்லது செயல்முறை ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. உளவியலாளர்கள் ஒரு மனிதரின் தனிப்பட்ட உளச் செயல்பாடுகளின் பங்கினையும் சமூக ஒழுக்கத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது, அடிப்படையான உளவியலும், நரம்பியல் செயல்பாடுகளும் வெளியாகின்றது.

உளவியலின் அடிப்படை ஆய்வு என்பது உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி வேகம், இயல்பூக்கம், மூளையின் செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை ஆகியவை தொடர்பான ஆய்வைக் குறிக்கும். உளவியலாளர்கள், உளவியல் சமூக வேறுபாடுகளுக்கு இடையேயான காரணம், எதிரெதிரான தொடர்புகளைத் தீர்மானிப்பதற்கு மெய்யறிவான முறைகளைப் பின்பற்றுகின்றனர். மருத்துவ உளவியலாளர்கள் சில நேரம் குறிப்பால் உணர்த்தும் முறையை அல்லது இதர தூண்டும் நுட்பங்களை சார்ந்திருப்பர்.

உளவியல் என்பது சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான நடத்தை அறிவியலுக்குள்ளும் அடங்குகின்றது. 1879 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் உண்ட் செருமனியிலுள்ள லீய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். இதுவே உளவியற் கல்வியின் தொடக்கம் எனப்படுகிறது.

சொல்லிலக்கணம்

தொகு

உளவியல் என்ற சொல் கிரேக்க வார்த்தையான சைகே (psyche) என்பதிலிருந்து உருவாகியுள்ளது. இது ஆன்மா அல்லது உயிர் என்று பொருள்படும். சைக்காலஜி (psychology) என்ற சொல்லின் பிற்பகுதி -λογία -logia என்பதிலிருந்து உருவாகியுள்ளது, இச்சொல்லிற்கு "ஆய்வு" அல்லது "ஆராய்ச்சி" என்று பொருள்.[3] உளவியல் என்ற சொல் முதன்முதலில் மறுமலர்ச்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதன் இலத்தீன் வடிவமான psychiologia, முதன்முதலில் குரோசிய மனிதநேயவாதியும் இலத்தீன் மொழி வல்லுநருமான மார்கோ மாருலிக் அவர்களால் 1510-1520 ஆம் ஆண்டுகளில் பிசிகியோலோஜியா டி ரேசனே அனிமே ஹியூமனி (Psichiologia de ratione animae humanae) என்ற அவரது புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[4][5] ஆங்கிலத்தில் psychology என்ற சொல்லுக்கான மிகப் பழைய குறிப்பு 1694ஆம் ஆண்டில் ஸ்டீவன் பிளாங்கார்ட் எழுதிய தி பிசிகல் டிக்சனரி (The Physical Dictionary) என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. அந்த அகராதியின்படி இச்சொல்லிற்கான பொருளாக "உடலைப் பற்றி ஆராயும் உடற்கூறியல், ஆன்மாவைப் பற்றி ஆராயும் உளநலவியல்" என்று குறிப்பிடுகிறது.[6]

1890 களில் வில்லியம் சேம்சு உளவியலை “உளவியல் என்பது நிகழ்வுகள், நிலைமைகள் சார்ந்த உளத்தின் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல்” என்பதாக வரையறுத்தார். இந்த வரையறை பல பதின்ம ஆண்டுகளுக்குப் பரவலாக புழக்கத்தில் இருந்தது. இருப்பினும், இந்த வரையறை அல்லது பொருளானது ஜான் பி. வாட்சன் என்பவரால் வாதத்திற்குள்ளானது. வாட்சன் உளவியலை இயற்கை அறிவியலின் நோக்கம் சார்ந்த சோதனையியில் பிரிவு என்று அறுதியிட்டுக் கூறினார். இந்தத் துறையின் கருத்தியல்ரீதியான இலக்கானது நடத்தையைப் பற்றிய கணிப்பு, நடத்தையைக் கட்டுப்படுத்துதல் என்பதாக வாட்சன் கூறினார். [7]

உளவியல் அறிவானது பல்வேறு மானிட செயல்பாடுள்ள துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. அன்றாட வாழ்வில் உள்ள நடைமுறைகளில் குடும்பம், கல்வி, தொழில் மற்றும் உளநலப் பிரச்சினைகளுக்குரிய சிகிச்சை இவை யாவிலும் ஆராயப்படுகின்றன. உளவியல் அறிவியலாளர்கள் தனி நபர், சமூக நடத்தை பற்றிய உளவியல்ரீதியான வினைச்செயல்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். உளவியல் ஆய்வில் துணைத் துறைகள் அதன் பயன்பாடுகளை அடங்கியுள்ளன. அத்தகைய துறைகளாவன: மானிட வளர்ச்சி, கல்வி, விளையாட்டு, உடல்நலம், தொழிற்சாலை, ஊடகம், மற்றும் சட்டம் முதலியனவாகும். சமூக அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள், கலை, இலக்கியங்கள், மனிதப்பண்புகள் யாவும் பற்றிய ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதே உளவியலாகும். ஓர் உளவியலாளர் என்பார் உளவியல் பயிற்றுவிப்பவரும், தொழில்முறைக் கோட்பாட்டை பின்பற்றுபவரும் ஆவார்.

வரலாறு

தொகு
 
ஆகஸ்ட்டி ரோடினின் சிந்தனையாளன்

எகிப்து, கிரேக்கம், சீனா, இந்தியா, பெர்சியா போன்ற பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் உளவியலின் தத்துவ ஆய்வில் ஈடுபட்டன. பண்டைய எகிப்தில் எபர்ஸ் பாப்பிரஸ் மன அழுத்தம் மற்றும் சிந்தனைக் குறைபாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டது.[8] தேலேஸ், பிளேட்டோ மற்றும் அரிசுட்டாட்டில் (குறிப்பாக அவரது டி அனிமா ஆய்வுரையில்) போன்ற கிரேக்க தத்துவவியலாளர்கள் மனதின் செயல்பாடுகளை விவாதித்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.[9] கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே, கிரேக்க மருத்துவர் இப்போக்கிரட்டீசு உள நோய்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்களைக் கொண்டிருக்கவில்லை, மாறாக உளவியல் காரணங்களைக் கொண்டிருந்தன என்று கருதினார்.[10]

சீனாவில், உளவியல் புரிதல் லாவோ சீ மற்றும் கன்பூசியஸின் தத்துவப் படைப்புகளிலிருந்தும், பின்னர் பௌத்த கோட்பாடுகளிலிருந்தும் வளர்ந்தது.[11] சீனத் தத்துவமும் நற்பண்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்க உள்ளத்தை தூய்மைப்படுத்துவதை வலியுறுத்தியது. தி எல்லோ எம்பரர்சு கிளாசிக் ஆஃப் இன்டர்னல் மெடிசின் (The Yellow Emperor's Classic of Internal Medicine) என்றழைக்கப்படும் பண்டைய உரை, மூளையை மெய்யறிவு, உணர்வின் இணைப்புப் புள்ளியாக அடையாளம் காண்கிறது. இவ்வுரையானது, யின்-யாங் சமநிலையின் அடிப்படையில் ஆளுமைக் கோட்பாடுகளை உள்ளடக்கியிருப்பதோடு, உடலியல், சமூக சமநிலையின்மை அடிப்படையில் உளக் குறைபாடுகளை பகுப்பாய்வு செய்கிறது. மூளையில் கவனம் செலுத்திய சீன அறிவுசார் ஆய்வு, மேற்கத்திய கல்வி பெற்ற ஃபாங் யிஜி (1611-1671), லியு ஜி (1660-1730) மற்றும் வாங் கின்ரென் (1768-1831) ஆகியோரின் பணிகளோடு கிங் அரசவம்சத்தின் போது முன்னேறியது. வாங் கின்ரென் மூளையை நரம்பு மண்டலத்தின் மையமாக முக்கியத்துவம் அளித்தார், உளக் குறைபாட்டை மூளை நோய்களுடன் தொடர்புபடுத்தினார், கனவுகள், தூக்கமின்மையின் காரணங்களை ஆராய்ந்தார். மேலும், மூளை செயல்பாட்டில் அரைக்கோள பக்கவாட்டுக் கோட்பாட்டை மேம்படுத்தினார்.[12][13]

மேற்கோள்கள்

தொகு
  1. "How does the APA define "psychology"?". Retrieved 15 நவம்பர் 2011.
  2. "Definition of "Psychology (APA's Index Page)"". Retrieved 20 December 2011.
  3. Online Etymology Dictionary. (2001). "Psychology" பரணிடப்பட்டது 18 சூலை 2017 at the வந்தவழி இயந்திரம்.
  4. Raffaele d'Isa; Charles I. Abramson (2023). "The origin of the phrase comparative psychology: an historical overview". Frontiers in Psychology 14: 1174115. doi:10.3389/fpsyg.2023.1174115. பப்மெட்:37255515. 
  5. "Classics in the History of Psychology – Marko Marulic – The Author of the Term "Psychology"". Psychclassics.yorku.ca. Archived from the original on 20 January 2017. Retrieved 10 December 2011.
  6. (Steven Blankaart, p. 13) as quoted in "psychology n." A Dictionary of Psychology. Edited by Andrew M. Colman. Oxford University Press 2009. Oxford Reference Online. Oxford University Press. oxfordreference.com பரணிடப்பட்டது 15 செப்டெம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம்
  7. John B. Watson (1913). "Psychology as the Behaviorist Views It". Psychological Review 20 (2): 158–177. doi:10.1037/h0074428. http://commonweb.unifr.ch/artsdean/pub/gestens/f/as/files/4660/33602_123928.pdf. பார்த்த நாள்: 24 April 2015. 
  8. Okasha, Ahmed (2005). "Mental Health in Egypt". The Israel Journal of Psychiatry and Related Sciences 42 (2): 116–25. பப்மெட்:16342608. https://archive.org/details/sim_israel-journal-of-psychiatry-and-related-sciences_2005_42_2/page/n53. 
  9. "Aristotle's Psychology பரணிடப்பட்டது 9 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம்". Stanford Encyclopedia of Philosophy.
  10. T.L. Brink. (2008) Psychology: A Student Friendly Approach. "Unit One: The Definition and History of Psychology." pp 9 [1] பரணிடப்பட்டது 24 சூலை 2012 at the வந்தவழி இயந்திரம்.
  11. "Natural harmony in Taoism— a cornerstone of Chinese society". The Financial Express (in ஆங்கிலம்). Retrieved 2024-03-15.
  12. Yeh Hsueh and Benyu Guo, "China", in Baker (ed.), Oxford Handbook of the History of Psychology (2012).
  13. Hergenhahn BR (2005). An introduction to the history of psychology. Belmont, CA, USA: Thomson Wadsworth. pp. 528–536.

பிற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளவியல்&oldid=4234260" இலிருந்து மீள்விக்கப்பட்டது