தகவல் (Information) என்னும் கருத்துரு அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து தொழில்நுட்பப் பின்புலம் கொண்ட பொருள்கள் வரை பல்வேறு பொருண்மை பரவல் கொண்டதாக இருந்தாலும் எளிமையாக, தகவல் என்பது குறிப்பிட்ட செய்தியின் அறிவிப்பு வடிவம் ஆகும். எனவே இது தரவு, அறிவு எனும் கருத்துப் படிமங்களோடு தொடர்புள்ள சொல்லாகும். தரவு என்பது குறிப்பிட்ட அளபுருக்கள் சார்ந்த இயல்மதிப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. அறிவு என்பது இயல்பொருள்கள் அல்லது நுண்ணிலைக் கருத்துகளைப் புரிந்து கொள்ளும் தகவு அல்லது திறன் ஆகும்.[1] தரவைப் பொறுத்தவரையில் அதன் நிலவலுக்கு ஒரு நோக்கீட்டாளர் தேவையில்லை. ஆனால், அறிவு என்பதற்கு அறியும் நோக்கர் அதாவது அறிபவர் கட்டாயமாகத் தேவைப்படும்.[2] அடிப்படையில் தகவல் என்பது ஓர் அமைப்பில் நிலவும் முதல்-விளைவு நிகழ்வின் பரவுதல் ஆகும். தகவல் ஒரு செய்தியின் உள்ளடக்கமாகவோ நிலவுகை குறித்த நேரடியாக அல்லது மறைமுகமாக நோக்கீட்டின் உள்ளடக்கமாகவோ அமையும். காணும் எதுவும் தன்னளவில் ஒரு செய்தியாகும். இந்தப் பொருளிலும் தகவல் செய்தியின் உள்ளடக்கம் ஆகிறது. தகவலைப் பல்வேறு வடிவங்களில் குறிமுறைப்படுத்தி செலுத்தலாம் அல்லது விளக்கலாம். விளக்கத்தை காட்ட, தகவலைக் குறிகளின் நிரலாக வரிசைப்படுத்தலாம் அல்லது குறிகைகளாக்கி அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பலாம். அல்லது காப்பாகத் தேக்கிவைக்க கரந்தநிலைக் குறிகளில் குறிமுறைப்படுத்திச் செலுத்தலாம் அல்லது பாதுகாக்கலாம்.

"Wikipedia" எனும் ஆங்கிலச் சொல்லை இரும எண்களால் உருவகிக்கும் ஆசுக்கி ( ASCII) குறிமுறைகள். கணினித் தகவலைக் குறிமுறைப்படுத்த இரும எண்முறைமை தான் பரவலாகப் பயன்படுகிறது.

தகவல் உறுதியின்மையைக் குறைக்கிறது. ஒரு நிகழ்வின் உறுதியின்மை என்பது அதன் நிகழ்தலின் நிகழ்தகவு ஆகும். இது நிகழ்தலுக்கு தலைக்கீழ் விகிதத்தில் அமையும். ஒரு நிகழ்வு கூடுதலான உறுதியின்மையோடு இருந்தால், அதன் உறுதியின்மையைத் தீர்க்க கூடுதலான தகவல் தேவையாகும். தகவலின் அலகுகளாக பிட், நேட் என்பவை அமைகின்றன. எடுத்துகாட்டாக, ஒரு நாணயத்தின் சுண்டுதலில் அமையும் தகவல் = log2(2/1) = 1 பிட் ஆகும். அதேபோல, இரு நாணயங்களின் சுண்டுதலில் அமையும் தகவல் = log2(4/1) = 2 பிட் ஆகும்.

தகவல் என்பது செய்தி எனும் கருத்துப்படிமம் பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருளைக் குறிக்கிறது.[3] எனவே தகவல் என்பது கட்டுத்தளை, கருத்துபுலப்பாடு, கட்டுபாடு, தரவு, வடிவம், கல்வி, அறிவு, பொருள், புரிதல், உளத்தூண்டல்கள், படிவம் (பாணி), புலன்காட்சி, உருவகம், இயலடக்கம் ஆகிய கருதுபாடுகளுடன் நெருக்கமாக உறவு பூண்டுள்ளது. தமிழில் தகவல் என்பது, செய்தி என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான information என்னும் சொல்லுக்கு, "தகவல் சொல்லும் செயல் எனப் பொருள் தரப்படுகிறது. இது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளது போல, மனம் அல்லது எண்ணத்தின் வினைகளுக்கு வடிவம் கொடுத்தல்" என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. தகவல் சமூகம், தகவல் புரட்சி, தகவல் தொழினுட்பம், தகவல் அறிவியல் என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது. இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் தகவல் என்பது "ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை" ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது பெறுனர்களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய உள்ளடக்கம் எனலாம். தகவல் என்பது காணும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது துல்லியத் தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு கூடும்போது அதன் துல்லியத் தன்மையும் மிகும்.

தகவல் கோட்பாட்டு அணுகுமுறை

தொகு

தகவல் கோட்பாட்டு நிலைபாட்டில், தகவல் என்பது ஒழுங்குபடுத்திய குறியீடுகளின் வரிசைமுறையாகக் கொள்ளப்படுகிறது. Χ எனும் எழுத்தால் உள்ளீடும் ϒ எனும் எழுத்தால் வெளியீடும் குறிப்பிடப்பட்டால், கையாளும் தகவல் உள்ளீடு-வெளியீடு சார்பால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தச் சார்பு ϒ எனும் வெளியீட்டு வரிசைமுறையை χ எனும் உள்ளீட்டு வரிசைமுறையால் படமாக வரைகிறது. இப்பட வரைவு நிகழ்தகவினதாகவோ நிலைத்தீர்வினதாகவோ அமையலாம். இது நினைவகத்தைப் பெற்றோ பெறாமலோ இருக்கலாம். அதாவது இது நனவுடனோ அல்லது நனவின்றியோ அமையலாம்.[4]

புலன் உள்ளீடாக

தொகு

தகவலை அடிக்கடி ஓர் உயிரி அல்லது அமைப்புக்கன உள்ளீடாகக் கருதவேண்டியுள்ளது. இவ்வகை உள்ளீடுகள் இருவகைப்படும்; உணவு போன்ற சில உள்ளீடுகள் உயிரியின் செயல்பாட்டுக்கு இன்றியமையாதவை ஆகின்றன. அதேபோல, ஆற்றல் போன்ற உள்ளீடுகள் அமைப்புக்கு இன்றியமையாதவை ஆகின்றன. புலன்சார் சூழலியல் எனும் தனது நூலில்[5] தூசென்பெரி இந்த உள்ளீடுகளை முதன்மை அல்லது காரண உள்ளீடுகள் எனக் கூறுகிறார். முதன்மை உள்ளீட்டோடு தொடர்புடையதாக அமைதலால், பிற உள்ளீடுகள் சிறப்புப் பெறுகின்றன. பின்னர் வேறு இடத்தில் நிகழக்கூடிய முதன்மை உள்ளீட்டை முன்கணிக்க இவை பயன்படுகின்றன. சில தகவல்கள் பிற சில தகவல்களோடு இணைந்து முதன்மை உள்ளீட்டோடு தொடர்புற்றிருந்தால் அவையும் சிறப்புப் பெறுகின்றன. நடைமுறையில் உயிரியாலோ அமைப்பாலோ புலன்வழி துலங்கிச் செயல்பட வைக்கப் போதாத நிலையில் தகவல் மெலிந்த தூண்டல்களாக அமைவதுண்டு. அப்போது இத்தூண்டல்களை ஆற்றல் உள்ளீட்டால் வலுவாக்கி உயிரி அல்லது அமைப்பைச் செயல்படச் செய்யவேண்டும். எடுத்துகாட்டாக, தாவரங்களுக்கு ஒளி ஓர் முதன்மை உள்ளீடாகும். ஆனால், விலங்குகளுக்குத் தகவலை மட்டுமே தருகிறது. பூவின் வண்ண ஒளி ஒளிச்சேர்க்கைக்கு உதவாத அளவு மெலிவானதாகும். ஆனால், ஈக்களின் காட்சிப் புலன் அமைப்பு இதைக் கண்டறிந்து, இத்தகவலின் உதவியால் அதன் நரம்பு அமைப்பு ஈக்களை பூவிடம் செல்ல வழிப்படுத்துகிறது. இங்கு வழக்கமாக, ஈக்களுக்கு தேன் அல்லது மகரந்த உணவு கிடைக்கிறது. எனவே வண்ண ஒளி உணவை வழங்குவதால் முதன்மை உள்ளீடாகிறது.

உருவகிப்பாகவும் சிக்கல்தன்மையாகவும்

தொகு

அறிதலியல் அறிஞரும் கணிதவியலாளரும் ஆகிய உரொனால்டோ வீகோ தகவல் எனும் கருத்தினம் அளவியலான பொருளில் இரு உருப்படிகளை உள்ளடக்குவதாகும் என வாதிடுகிறார். அவை, பருமானத்துடன் வரையறுக்கப்பட்ட S எனும் பொருள்களின் கணமும் தன் உட்கணங்களில் ஒன்றாகிய R உட்கணமாகும். R சாரநிலையில் S இன் ஓர் உருவகிப்பாகும் அல்லது, இது S பற்றிய ஒருவகை உருவகிப்பு அல்லது கருத்துப்படிமத் தகவல் ஆகும். வீகோ பின்னர் R உட்கணம் S பற்றித் தரும் தகவல் அளவை, R இல் உள்ள பொருள்களை S இல் இருந்து நீக்கும்போதுள்ள S இன் சிக்கலுடைமையின் மாற்ற வீதமாக வரையறுக்கிறார். இவ்வகை "வீகோ தகவலின்" கீழ் பாணி, மாறாமை, சிக்கலுடைமை. உருவகிப்பு, தகவல் ஆகிய அறிவியலின் ஐந்து அடிப்படை புனைவுகள் அல்லது கற்பிதங்களும் புதுவகை கணிதவியல் சட்டகத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.[6][7][8]> மற்றெதைக் காட்டிலும், இந்தச் சட்டகம் அகஞ்சார்ந்த தகவலைஅளக்கவும் பான்மைபடுத்தவும் முயலும்போது சாணான்-ஆர்ட்லே தேற்றத்தின் அல்லது சாணான் வீவரின் வரம்புகளை எதிர்கொள்ள உதவுகிறது.

உருமாற்றத்தை நிகழ்த்தும் தாக்கமாக

தொகு

தகவல் என்பது பிற பாணிகளை உருவாக்கும் அல்லது உருமாற்றும் ஒருவகைப் பாணியாகும்.[9][10] இந்த பொருளில் ஒரு பாணியை காணவோ மதிப்பிடவோ நனவுமனம் தேவைப்படுவதில்லை.[சான்று தேவை] எடுத்துக்காட்டாக, மரபன் எனும் டி.என்.ஏவைக் கருதுவோம். உட்கருவன்களின் வரிசைமுறை ஒரு பாணி அல்லது வடிவம் தான். இது நனவுமனத்தின் துணையின்றியே உயிரியின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. நனவுமனத்தால் ஒரு பாணியை வரையறுக்க குறிப்பாக உட்கருவனை வரையறுக்க நனவோடு கூடிய தகவலாற்றல் தேவைப்படுகிறது என வாதிடலாம்.

இந்தப் பொருளில் அமைப்புக் கோட்பாடும் சிலவேளைகளில் தகவலைக் கையாளுகிறது அதாவது தகவல் கட்டாயமாக நனவுமன வினையை உள்ளடக்க வேண்டும் என்பதில்லையெனக் கொள்கிறது. அமைப்பில் பின்னூட்டத்தால் சுழலும் பாணிகளையும் தகவல் என அழைக்கலாம். அதாவது, இங்கு உருவகிப்பு போலக் கருதப்படும் ஒன்று தகவலாக அமைகிறது. ஆனாலும் இது அவ்வகை நோக்கில் உருவாக்கவோ முன்வைக்கவோ படுவதில்லைதான். எடுத்துகாட்டாக, கிரிகொரி பேட்சன் "தகவல்" என்பது "வேற்றுமையை உருவாக்கும் வேற்றுமை" என வரையறுக்கிறார் .[11]

இயற்பியலின் ஓர் இயல்பாக

தொகு

தகவலுக்கு இயற்பியல் நன்கு வரையறுத்த பொருளைத் தருகிறது. ஜே. டி. பேக்கன்சுட்டீன் இயற்பியலில் இன்று வளர்ந்துவரும் போக்கு புறநிலை உலகம் என்பது தகவலால் ஆனதாக வரையறுக்கிறது என 2003 இல் கூறியுள்ளார். இப்படித் தான் இயற்பியல் தகவலை வரையறுக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Information | Definition of Information by Merriam-Webster". Merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
  2. "epistemology - Can there be information without a "knower"?". Philosophy Stack Exchange. 2017-01-05. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
  3. A short overview is found in: Luciano Floridi (2010). Information - A Very Short Introduction. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-160954-4. The goal of this volume is to provide an outline of what information is...
  4. Stephen B. Wicker, Saejoon Kim (2003). Fundamentals of Codes, Graphs, and Iterative Decoding. Springer. pp. 1 ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-7264-3.
  5. Dusenbery, David B. (1992). Sensory Ecology. W.H. Freeman., New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-2333-6.
  6. Vigo, R. (2011). "Representational information: a new general notion and measure of information". Information Sciences 181: 4847–4859. doi:10.1016/j.ins.2011.05.020. 
  7. Vigo, R (2013). "Complexity over Uncertainty in Generalized Representational Information Theory (GRIT): A Structure-Sensitive General Theory of Information". Information 4 (1): 1–30. doi:10.3390/info4010001. 
  8. Vigo, R. (2014). Mathematical Principles of Human Conceptual Behavior: The Structural Nature of Conceptual Representation and Processing. Scientific Psychology Series, Routledge, New York and London; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415714362.
  9. Shannon, Claude E. (1949). The Mathematical Theory of Communication.
  10. Casagrande, David (1999). "Information as verb: Re-conceptualizing information for cognitive and ecological models". Journal of Ecological Anthropology 3 (1): 4–13. doi:10.5038/2162-4593.3.1.1. http://www.lehigh.edu/~dac511/literature/casagrande1999.pdf. 
  11. Bateson, Gregory (1972). ^ Form, Substance, and Difference, in Steps to an Ecology of Mind. University of Chicago Press. pp. 448–466.

மேலும் படிக்க

தொகு
  • Alan Liu (2004). The Laws of Cool: Knowledge Work and the Culture of Information, University of Chicago Press
  • Bekenstein, Jacob D. (2003, August). Information in the holographic principle. Scientific American.
  • Gleick, James (2011). The Information: A History, a Theory, a Flood. Pantheon, New York, NY.
  • Shu-Kun Lin (2008). 'Gibbs Paradox and the Concepts of Information, Symmetry, Similarity and Their Relationship', Entropy, 10 (1), 1-5. Available online at Entropy journal website.
  • Luciano Floridi, (2005). 'Is Information Meaningful Data?', Philosophy and Phenomenological Research, 70 (2), pp. 351 – 370. Available online at PhilSci Archive
  • Luciano Floridi, (2005). 'Semantic Conceptions of Information', The Stanford Encyclopedia of Philosophy (Winter 2005 Edition), Edward N. Zalta (ed.). Available online at Stanford University
  • Luciano Floridi, (2010). Information: A Very Short Introduction, Oxford University Press, Oxford.
  • Robert K. Logan. What is Information? - Propagating Organization in the Biosphere, the Symbolosphere, the Technosphere and the Econosphere, Toronto: DEMO Publishing.
  • Sandro Nielsen: 'The Effect of Lexicographical Information Costs on Dictionary Making and Use', Lexikos 18/2008, 170-189.
  • Stewart, Thomas, (2001). Wealth of Knowledge. Doubleday, New York, NY, 379 p.
  • Young, Paul. The Nature of Information (1987). Greenwood Publishing Group, Westport, Ct. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-275-92698-2.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தகவல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்&oldid=3924156" இலிருந்து மீள்விக்கப்பட்டது