தரவுகள் (Data)என்பன பயனுடையதாகக் கருதப்படும் குறிப்புகளாகும். அவை எண்களாகவோ, வெப்பநிலை, ஒலி, ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ அல்லது பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். ஏதொன்றையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் எனில் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவைகள் தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள், கண்டுபிடிப்புகள் முதலியன பெற இயலும். தரவுகள், தகவல்களுக்கான முதல் வடிவங்கள் ஆவன; தரவுகளின் மீது சில அல்லது பல செயல்முறைகள் செய்யபட்டு அவை மக்களால் கொள்ளக்கூடியத் தகவல்களாக மாறுகின்றன.

வரலாறு

தொகு

இலத்தீன் மொழியில் dare (தர்) எனில் தா என்று பொருள், அதன் வழி தரப்பட்டது என்னும் பொருள் படும் datum என்னும் சொல் 2,300 ஆண்டுகளாக மேற்குலகில் பயன்பாட்டில் உள்ளது. கி.மு. 300ல் யூக்ளிட் என்னும் கிரேக்க அறிஞர் ஆக்கிய நூல்களில் ஒன்று Dedomena டெடோமெனா (இலத்தீனில் Data) என்பதாகும். வடிவ கணிதம் போன்ற துறைகளில் தரப்பட்ட செய்திகளை data (தரவுகள்) என்று குறிப்பது வழக்கம். தரப்பட்டதை சரியானது, உண்மையானது என்று கொள்வதும் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. இன்று கணினியியல், அறிவியல், பொறியியல், மருத்துவ இயல், போன்ற அறிவியல் துறைகளில், எண்கள், சொற்கள், அளவீடுகள் என பலவும் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இலத்தீனில் இருந்து பெற்ற இன்றைய ஆங்கிலச் சொல்லாகப் பயன் படும் data (டேட்டா) என்பது பன்மை, datum (டேட்டம்) என்பது ஒருமை. எனினும் ஒற்றைக் குறிப்புதனையும் data என்று சொல்வது் இன்று சரியென ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. தமிழில் தரவு, தரவுகள் என வழங்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவு&oldid=3704152" இலிருந்து மீள்விக்கப்பட்டது