பண்டைய எகிப்து
பண்டைய எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். இது இன்றைய எகிப்து நாட்டுள் அடங்குகிறது. தனித்தனியே உருவான பண்டைய உலகின் ஆறு நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நாகரிகம் கீழ் எகிப்து மற்றும் மேல் எகிப்தை ஒன்றிணைத்த முதல் வம்ச பார்வோன்[1] நார்மெரின் ஆட்சி கி.மு. 3150 அளவில் தொடங்கியது.[2] இது மூன்றாயிரமாண்டுகளாக வளர்ச்சியடைந்தது.
இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது: வெண்கலக் காலத்து பழைய எகிப்து இராச்சியம், மத்திய கால இராச்சியம் மற்றும் புதிய இராச்சியம் ஆகும். பதினெட்ட்டாம் வம்ச ஆட்சிக் காலத்தில் புதிய இராச்சியத்தின் உச்சகட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியது. இராமசைடு ஆட்சி காலம், பண்டைய அண்மை கிழக்கில் இருந்த இட்டைட்டு பேரரசு, அசிரியா மற்றும் மித்தானி இராச்சியத்திற்கு இணையாக விளங்கியது.
இதன் பின்னர் இந்நாகரிகம் மெதுவான ஆனால் உறுதியான இறங்குமுக நிலையை அடைந்தது. இக்காலத்தில் இப்பகுதி அசிரியர்கள், பாபிலோனியர்கள், மக்கெடோனியர்கள் போன்ற பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. பேரரசர் அலெக்சாந்தரின் மறைவிற்குப் பிறகு அவரது தளபதிகளில் ஒருவரான தாலமி சோத்தர் எகிப்தின் அரசராக முடிசூடினார். இவரது கிரேக்கத் தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு 312 முதல் கி.மு. 31 வரை ஆண்டனர். கி.மு. 31-ஆம் ஆண்டில், ஏழாம் கிளியோபாட்ரா ஆட்சியின்போது, தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனை தன் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியது.[3]
பண்டைய எகிப்து நாகரிகத்தின் வெற்றி நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலைமைகளுக்கு ஏற்ப வேளாண்மையை வகுத்துக் கொள்வதில் இருந்தது. வெள்ளத்தை எதிர்நோக்கவும் நீர்ப்பாசனத்தை கட்டுபடுத்தவும் இயன்றதால் அபரிமித விளைச்சலைப் பெற்றது. இதனால் கூடிய மக்கள்தொகையை ஏற்க இயைந்தது; சமூக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் வழிவகுத்தது. வளமிகுந்திருந்ததால் நிர்வாகம் கனிம தேடுதல்களை சுற்றுப்புற பள்ளத்தாக்கு மற்றும் பாலைவனப்பகுதிகளில் மேற்கொண்டது. இக்காலத்தில் எழுதுமுறைகள், கூட்டு கட்டுமானத் திட்டங்கள், கூட்டு வேளாண்மைத் திட்டங்கள் ஊக்கம் பெற்றன. சுற்றுப்புறப் பகுதிகளுடன் வணிகம் பெருகியது. வெளிநாட்டு எதிரிகளை முறியடிக்கவும் எகிப்தின் ஆதிக்கத்தை நிறுவவும் முடிந்தது. இவற்றுக்கு பாராவின் கீழான எகிப்திய எழுத்தர்கள், மதகுருக்கள், நிர்வாகிகள் ஊக்குவிப்பவர்களாக இருந்தனர். முழுமையான சமய நம்பிக்கைகள் அரசர் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க உறுதுணையாக இருந்தது.[4][5]
பண்டைய எகிப்தியர்களின் சாதனைகளாக கல்லகழ்தல், அளக்கையியல், கட்டுமானத் தொழினுட்பம் அமைகின்றன; இத்திறன்களால் பல நிலைத்திருக்கும் பிரமிடுகள், கோயில்கள், மற்றும் சதுரக்கூம்பகத்தூண்களை எழுப்பினர்; எகிப்திய முறை கணிதம், மருத்துவ முறை, வேளாண்மை, நீர்ப்பாசன முறைகள், முதல் கப்பல்கள்[6] , எகிப்திய களிமண்சுடு பொம்மைகள், கண்ணாடித் தொழினுட்பம், இலக்கிய வகைகள் உருவாயின. உலகத்தின் முதல் அமைதி உடன்பாடு இட்டீக்களுடன் ஏற்பட்டது.[7] எகிப்தின் கலை வடிவங்களும் கட்டிடப் பாணியும் பரவலாக நகலெடுக்கப்பட்டன. எகிப்தின் தொன்மைப் பண்டங்கள் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இக்காலத்துக் கட்டிடங்களின் அழிபாடுகள்பல நூற்றாண்டுகளாக பயணிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் மன எழுச்சியை அளித்துள்ளன.[8]
வரலாறு
தொகுபண்டைய எகிப்தில் மனித வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதுமான உயிர்நாடி நைல் நதி ஆகும்.[9]
அரசும் பொருளாதாரமும்
தொகுநைல் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொள்வதன் மூலம் எகிப்திய நாகரிகம் சிறப்புற்று விளங்கியது. கட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் வளமான இப் பகுதியில் மிகையான விளைவைக் கொடுத்தது. இது சமுதாய, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தூண்டியது. பயன்பாட்டுக்கான வளங்கள் அதிகமாக இருந்ததால், அரச நிவாகத்தின் சார்பில் இடம்பெற்ற கனிம அகழ்ந்தெடுப்புக்கள், தனியான எழுத்து முறையின் வளர்ச்சி, அமைப்புமுறையிலான ஒன்றிணைந்த கட்டுமானம், வேளாண்மைத் திட்டங்கள், சூழவுள்ள பகுதிகளுடனான வணிகம், எதிரிகளைத் தோற்கடித்து எகிப்தின் மேலாண்மையை நிலைநிறுத்திய படைகள் என்பவை சாத்தியமாயின. இத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டி ஒழுங்குபடுத்துவதற்காகச் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழுவும், சமயத் தலைவர்களும், நிர்வாகிகளும், தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்பட்ட பாரோக்களின் (மன்னர்) கீழ் இயங்கினர். இவர்கள் விரிவான சமய நம்பிக்கைகளின் துணையுடன் மக்களை ஒழுங்குபடுத்தி மக்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.
எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் மன்னர்கள் தான் முதலில் தங்களை பார்வோன் என அழைத்துக் கொண்டனர். எகிப்தை இறுதியாக ஆண்ட வெளிநாட்டு கிரேக்கத் தாலமி வம்சத்தினரும் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். பண்டைக் காலத்திலே பாரோக்களுக்கு ஆட்சியதிகாரம் தெய்வத்திடம் இருந்து கொடுக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இவர்களுக்காகவே எகிப்தில் பாரிய பிரமிட்டுக்களும் நிர்மாணிக்கப்பட்டன. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியபோது பார்வோன்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பார்வோன்கள் அல்லது பார்வோன்களின் பெண்களின் இறப்பின் போது அவர்களின் சடலங்கள் மம்மியாக்கிப் படகில் ஏற்றி, நைல் நதிக்கு மேற்கே உள்ள மன்னர்களின் சமவெளி அல்லது அரசிகளின் சமவெளிகளில் உள்ள பிரமிட்டுகளில் அடக்கம் செய்யப்படும். இவ்வாரு கொண்டு செல்லப்படும் ஊர்வலத்தை இறுதிப் பிரயாணம் என அழைப்பர்.
பண்பாடும் தொழில்நுட்பமும்
தொகுபண்டை எகிப்தியர்களின் சாதனைகளுள், கணித முறை, கற்கள் உடைப்பு, நில அளவை, கட்டுமான நுட்பங்கள், கண்ணாடித் தொழில்நுட்பம், மருத்துவ முறை, இலக்கியம், நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில்நுட்பம் என்பவை அடங்கும். வரலாற்றில் மிகமுந்திய அமைதி ஒப்பந்தமும் இங்கேயே மேற்கொள்ளப்பட்டது. பண்டை எகிப்து ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. பிற நாட்டவரும் அவர்களுடைய கட்டிடங்களைப் பார்த்துக் கட்டினர். அவர்களுடைய கலைப் பொருட்கள் உலகம் முழுவதும் உலாவந்தன. அவர்களுடைய பாரிய நினைவுச் சின்னங்கள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், எழுத்தாளர்களையும் பல நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வருகின்றன.
மருத்துவம்
தொகுபண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் மேம்பட்ட மருத்துவ அறிவைக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கலத்திலேயே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொளவும் உடைந்த எலும்புகளைப் பொருத்தவும் முடிந்தது. அத்துடன் அவர்கள் பல மருந்துகளைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்தனர். பண்டைக் கால எகிப்தியர் தேன் மற்றும் தாய்ப்பால் போன்றவையும் மருந்துகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.
சமயக் கடவுள்கள்
தொகுபண்டைய எகிப்தியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபட்டு வந்தனர். அக் கடவுள்களுள் முக்கியமான கடவுள் ரே (Re) எனும் சூரியக் கடவுள் ஆவார். எகிப்தியக் கடவுள்களின் அதிபதியாக அமுன் (amun) என்பவர் கருதப்பட்டார். அமுன் கடவுளுக்கும் ரே கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கருதப்பட்டது. இதன் காரணமாக அமுன் அமுன்-ரே எனவும் அழைக்கப்பட்டார். காற்றின் கடவுள் சூ(Shu) என்பவர் ஆவார். வானத்தின் கடவுளாக நட்(Nut) எனும் பெண் தெய்வம் வணங்கப்பட்டார். நட் எனும் பெண் தெய்வத்தின் சகோதரனும் கணவனும் ஆன ஜெப் (Geb) என்பவர் பூமியின் கடவுளாக வணங்கப்பட்டார். இக் கடவுளின் சிரிப்பினாலேயே பூமியில் பூமி அதிர்வுகள் ஏற்படுவதாக பண்டைய எகிப்தியர்களால் நம்பப்பட்டது. இசிஸ் (Isis), எனும் கடவுள் மாயாயாலங்களின் கடவுளாகக் கருதப்பட்டார். ஹதொர் (Hathor) எனும் பெண் தெய்வம் மகிழ்ச்சிக்கான கடவுள் ஆவார். ஹதொர் இசைக்கும் நடனத்திற்கும்,ஆன தெய்வமாகவும் கருதப்பட்டார். மரணத்திற்கான கடவுளாக ஒசிரிஸ் (Osiris) எனும் கடவுள் கருதப்பட்டார். ஒசிரிஸ் தெய்வத்தின் தாய் வானத்தின் கடவுள் நட் என்பவராவார். மாயாயாலங்களின் கடவுளாகக் கருதப்பட்ட இசிஸ் (Isis) எனும் பெண் தெய்வமும் நட் தெய்வத்தின் மகள் ஆவார். அனைத்துக் கடவுள்களுடனும் சூரியக் கடவுளான ரே என்பவரோடு தொடர்பு இருந்தது.
பிரமிட்டுக்கள்
தொகுபொிய அளவினால் ஆன பிரமிட்டுக்கள் பண்டைய எகிப்தின் ஆட்சியாளர்களான பாரோக்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டன. கிசாவின் பெரிய பிரமிட்டான கூபுவின் பிரமீட்டு 147 மீட்டர் உயரம் கொண்டது, 2.3 மில்லியன் கற்தொகுதிகள் அளவில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கற்களினதும் எடை 2.5 டன் அளவில் காணப்பட்டன.
எழுத்துக் கலை
தொகுபண்டைய எகிப்தின் எழுதும் முறை ஹெய்ரோகிலிபிக் (hieroglyphic) என அழைக்கப்பட்டது. இவ்வாறான எழுத்துக்கள் கோவில்களிலும் பிரமிட்டுக்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 700க்கும் மேற்பட்ட எழுத்துருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்துருவங்களும் ஒவ்வொரு பொருளையும் எடுத்தியம்புகின்றன, இவை பிக்டோகிராம் (pictogram) என அழைக்கப்படுகின்றன. பல பிக்டோகிராம்கள் சேர்ந்து ஒவ்வொரு ஒலிகளையும் எடுத்தியம்புகின்றன, ஒவ்வொரு ஒலிகளின் கூட்டங்களும் போனோகிராம் (phonograms)என அழைக்கப்படுகின்றன. இப் போனோகிராம்களே ஒவ்வொரு புதிய பற்பல சொற்களையும் உருவாக்க மூலாதாரமாய் அமைகின்றன.
இதனையும் காண்க
தொகுசான்றடைவுகள்
தொகு- ↑ Dodson (2003) p. 46
- ↑ "Chronology". Digital Egypt for Universities, University College London. Archived from the original on 16 March 2008. பார்க்கப்பட்ட நாள் 25 March 2008.
- ↑ Clayton (1994) p. 217
- ↑ James (2005) p. 8
- ↑ Manuelian (1998) pp. 6–7
- ↑ Ward, Cheryl. "World's Oldest Planked Boats", inArchaeology (Volume 54, Number 3, May/June 2001). Archaeological Institute of America.
- ↑ Clayton (1994) p. 153
- ↑ James (2005) p. 84
- ↑ Shaw (2002) pp. 17, 67–69
உசாத்துணைகள்
தொகு- Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. London, England: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3.
- Clayton, Peter A. (1994). Chronicle of the Pharaohs. London, England: Thames and Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05074-0.
- James, T.G.H. (2005). The British Museum Concise Introduction to Ancient Egypt. Ann Arbor, Michigan: University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-472-03137-6.
- Manuelian, Peter Der (1998). Egypt: The World of the Pharaohs. Bonner Straße, Cologne Germany: Könemann Verlagsgesellschaft mbH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-89508-913-3.
- Shaw, Ian (2003). The Oxford History of Ancient Egypt. Oxford, England: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280458-8.
வெளியிணைப்புகள்
தொகு- BBC History: Egyptians—provides a reliable general overview and further links
- Ancient History Encyclopedia on Egypt
- Ancient Egyptian Science: A Source Book Door Marshall Clagett, 1989
- Ancient Egyptian Metallurgy A site that shows the history of Egyptian metalworking
- Napoleon on the Nile: Soldiers, Artists, and the Rediscovery of Egypt, Art History பரணிடப்பட்டது 2008-06-02 at the வந்தவழி இயந்திரம்.
- Ancient Egypt—maintained by the British Museum, this site provides a useful introduction to Ancient Egypt for older children and young adolescents
- Digital Egypt for Universities. Outstanding scholarly treatment with broad coverage and cross references (internal and external). Artifacts used extensively to illustrate topics.
- Priests of Ancient Egypt In-depth-information about Ancient Egypt's priests, religious services and temples. Much picture material and bibliography. In English and German.
- Ancient Egypt
- UCLA Encyclopedia of Egyptology
- Ancient Egypt and the Role of Women by Dr Joann Fletcher