சுற்றுச்சூழல்

உயிர்கள் வாழ ஏற்ற இடம்
(சூழல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் (Biophysical environment) என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.[1] உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.[2] ஒவ்வொரு தனி உயிரினமும், தனக்கான ஒரு சூழலைக் கொண்டிருக்கின்றது எனக் கொண்டால், எண்ணிக்கையில்லா உயிரியற்பியல் சூழல்கள் இருப்பதை அறியலாம்.

புவி

சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகச் சூழல், பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்.

உயிர் சூழல் இடைத்தொடர்பு தொகு

தப்பிப் பிழைத்த அனைத்து உயிரினங்களும், அவற்றின் சூழலுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன. எந்த இனமாயினும், எந்தச் சூழலாயினும், வெப்பநிலை, ஒளி, ஈரப்பதம், மண், ஊட்டச்சத்து, போன்ற காரணிகள் அவற்றில் தாக்கம் செலுத்தும். எனினும் உயிரிகளும் தமது நிலைகள், அமைப்புக்களை மாற்றிக்கொள்ளும். நமது இந்த புவிக் கோளின் வரலாற்றின் ஊடாக, நீண்டகாலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நமது வளிமண்டலத்தில் ஆக்சிசன் இணைந்துகொண்டமை. காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள் தமது வளர்சிதை மாற்றச் செயல்முறையின்போது, கார்பனீராக்சைட்டை உடைத்து ஆக்சிசனை உருவாக்கியதால் ஏற்பட்ட மாற்றமாகும். இதன் பின்னர் ஆக்சிசனைப் பயன்படுத்தும் தாவரங்கள், மற்றும் விலங்குகள் உருவாகின.

சுற்றுச்சூழல் தொடர்பான கற்கை தொகு

 
ஒரு பூங்காவில் இருக்கும் சூழல் மண்டலத்தில் வாழும் காட்டு உயிரனங்களுக்கு மனிதர்கள் உணவு வழங்குவதைப் பார்க்கலாம்

சுற்றுச்சூழலியல் என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் அறிவியல் ஆகும். இந்தக் கற்கையின் ஒரு பகுதியானது, சூழலில் மனிதர்களின் தொழிற்பாடுகள் செலுத்தும் தாக்கத்தை ஆராய்கின்றது. சூழலியல் என்பது சுற்றுச் சூழலியலினதும், உயிரியலினதும் ஒரு பகுதியாகும். இருப்பினும் மனிதர்கள் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது சூழலியல் எனத் தவறாகக் கொள்ளப்படுகின்றது. சுற்றுச் சூழலியல் என்பது மிகவும் பரந்த ஒரு கற்கைத் துறையாகும். இது மனிதருக்கும், சூழலுக்குமான இடைத்தொடர்பு பற்றி ஒரு முறையான கற்கைநெறியக் கொண்டுள்ளது. இதில் இயற்கைச் சூழல், கட்டியமைக்கப்பட்ட சூழல், சமூகச் சூழல் அனைத்தும் ஆராயப்படுகின்றன.

சூழலியம் என்பது சமூக மற்றும் மெய்யியல் சார்ந்த ஒரு பெரிய இயக்கமாகும். இதன்மூலம் மனித செயற்பாடுகள் உயிரியற்பியல் சூழலில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதுடன், அவ்வகையான தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஈடு செய்வதற்கான முயற்சி நடைபெறுகின்றது. சூழலியலாளர்கள் குறிப்பாக இயற்கைச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள்பற்றிஅக்கறைகொண்டிருக்கிறார்கள். இவற்றில் மிக முக்கியமானவை காலநிலை மாற்றம், இனங்கள் அழிந்து போதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் வெளித் தாக்கத்துக்கு உட்படாத இயற்கையான காடுகளைக் கொண்டிருத்தல் போன்றனவாகும்.

புவியியல் சார்பான தகவல்களைப் உள்ளடக்கி உயிரியற்பியல் சூழலை ஆராய்வதும், இது தொடர்பான கற்கை நெறிகளுள் ஒன்றாகும்.[3]

சுற்றுச்சூழல் சீர்கேடு தொகு

சுற்றுச்சூழல் சீர்கேடு உலக உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தாறும் மாசடைந்து வருகின்றது. இம்மாசுபாடுகளால் உலக உயிர்களின் வாழ்நாள் சுருங்கிக் கொண்டேயிருக்கிறது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை இது தடுக்கிறது. சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் மனித நடவடிக்கைகளே பெரும்பங்கு வகிக்கின்றன. மாசுபாட்டை நீக்கி நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு சுற்றுச்சூழலைச் சிறந்த முறையில் பாதுகாத்தல் அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது.

மக்கள் தொகையும் சுற்றுச்சூழலும் தொகு

முப்பது கோடி முகமுயாள் என்றார் பாரதி. பாரதியின் காலத்தில் முப்பது கோடி மக்கள் இருந்த பாரதம், தற்போது நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருப்பதனால், நிலையாக உள்ள நாட்டில் நிலையாக உள்ள பரப்பளவில் மக்கள் வசிக்கும் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதற்காக காடுகளும் விளைச்சல் நிலங்களும் அழிக்கப்பட்டு வீடுகளும், ஏனைய கட்டடங்களும் எழுப்படுகின்றன. அதிகமான நகர்புறங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் சுற்றுச்சூழலை மிக அதிக அளவில் மாசுபடுத்துகின்றன. மனித இனம் கல்வியறிவு பெற்று இவற்றின் ஆபத்தை அறிந்திருந்த போதிலும், மாற்றக்கூடிய சமுதாய மாற்றங்களில் இதுவும் ஒன்று என்ற எண்ணத்தில் இதைப் பெரிதுபடுத்துவதில்லை. இதனால் மனித இனத்திற்கு பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கை தொகு

மனிதர்களின் நடவடிக்கைகளால் பிற்காலத்தில் அவர்களது சந்ததியினருக்கும், சமுதாயத்திற்கும் வரப்போகும் பின்விளைவுகளைப் பற்றி, அபாயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு, அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன.

கலைச்சொற்கள் தொகு

உசாத்துணை தொகு

  • சுராவின் பொதுக்கட்டுரைகள் - சுரா பதிப்பகம்
  • சூழல் படும்பாடு, பேராசிரியர் எம்.பி. இராமானுஜம், பொன்ராணி பதிப்பகம்

மேற்கோள்கள் தொகு

  1. Biology online. "Environment. Definition". பார்க்கப்பட்ட நாள் 2012-03-15.
  2. Kemp, David Walker (1998). Environment Dictionary. London, UK: Routledge. https://archive.org/details/environmentdicti0000kemp_w7m5. 
  3. Deng, Y. X., and J. P. Wilson. 2006. “The Role of Attribute Selection in GIS Representations of the Biophysical Environment”. Annals of the Association of American Geographers 96 (1). [Association of American Geographers, Taylor & Francis, Ltd.]: 47–63. JSTOR 3694144.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுச்சூழல்&oldid=3698099" இலிருந்து மீள்விக்கப்பட்டது