பிராமணர்அல்லது பார்ப்பனர்[1][2][3] என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் பிராமணர்கள் முதன்மை நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மனுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, இவர்கள் வேதங்களைப் பயின்று இறை வழிபாடுகளை நடத்தும் கடமை கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் அறிஞர்களாகவும் இருடிகளாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர். முக்கடவுளரில் வேதங்களின் காப்பாளரான பிரம்மா இவர்களின் ஆதியாக அறியப்படுகிறார்.

வரையறை

மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்றும், நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அமசங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும் கூறுகிறது. மேலும் பிராமணர் என்பவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும்.

ஸமோ தமஸ் தப சௌகம்
க்சந்திர் அர்ஜவம் இவா கா
ஜ்னனம் விஜ்னனம் அஸ்திக்யம்
பிரஹ்ம கர்மா ஸ்வபவ ஜம்
(பகவத் கீதை – 18:42)

தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்திருக்கிறது. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், இந் நிலை மரபு வழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும், பிராமணர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் ஐயர், ஐயங்கார் என இரு பிரிவுகளில் பல உட்பிரிவுகளாக உள்ளனர்.

ஈழத்தில் பிராமணர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்கள் தமிழுக்கும் சைவசமயத்துக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளார்கள்.[4] இப்போது பெரும்பாலானோர் கோயில்களில் பூசகர்களாக உள்ளனர். சிலர் ஆகம விதிகளையும் வேதங்களையும் நன்கு கற்றறிந்து கோயில் விழாக்கள், சமூகத்தினரின் சமயச் சடங்குகள் என்பவற்றை நடத்தி வைக்கிறார்கள். தற்காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் பல நாடுகளில் குடியேறியுள்ளதால் ஈழப் பிராமணர்களும் அந்தந்த நாடுகளுக்குச் சென்று சமயப் பணி ஆற்றி வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் மதிப்பிற்குரியவர்களாக விளங்குகிறார்கள்.

மேற்கோள்கள்

  1. "விக்சனரி". பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
  2. "பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்". patrikai.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
  3. "பார்ப்பனர்கள் தமிழர்களா?". Viduthalai. Archived from the original on 2018-04-25. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
  4. இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள் எழுதியநினைவுக் குறிப்பு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராமணர்&oldid=3911000" இலிருந்து மீள்விக்கப்பட்டது