சாதி
சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு என பலகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வரும் மக்கள் மன பிரிவினைத் தோற்றம் ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையேயாகும். இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இதனை வெளியேற்ற வழியற்று சமூக அவலங்களைச் சகித்துக்கொண்டு மக்கள் வாழக் கற்றுக்கொண்டார்கள். அதிலிருந்தும் தோன்றிய அரசுகள் போன்றவற்றால் இது பாதுகாக்கப்படுகிறது.
சாதிய ஒடுக்குமுறை தொகு
ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை ஆகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவிர வன்முறையான ஒடுக்குமுறைகள், சமூக நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள் என்று பல வகைகளில் அமைகின்றன.
சாதியின் தோற்றம் தொகு
முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன,தொழில் மாறலாம் தீண்டாமையில்லை,பாகுபாடு இல்லை. பின் தொழிலை வாரிசு ரீதியாக செய்ய தொடங்கினர்.பின் தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி,அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. மனிதன் என்ற உயர்நிலை, மனிதன் தரம் தாழ்ந்த உயிரினம் ஆனான். ஆரியர்களின் தெய்வம் படைப்பு போன்றவற்றை எதிர்த்து விலகியவர்கள் தாழ்த்தப்பட்டார்கள்[சான்று தேவை] என்று பரிந்துரைக்கப்பட்டார்கள்.
பக்தவத்சல பாரதியின் கூற்று தொகு
சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்தப் பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
- மரபுக் கோட்பாடு (traditional theory)
- தொழிற் கோட்பாடு (occupational theory)
- சமயக் கோட்பாடு (religious theory)
- அரசியற் கோட்பாடு (political theory)
- இனக் கோட்பாடு (racial theory)
- படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)
அம்பேத்கரின் கூற்று தொகு
ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.[2]
மரபுக் கோட்பாடு தொகு
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும்.[சான்று தேவை] ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக் குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன. சமுதாய அமைப்பே சாதியை உருவாக்கியது என்றும் மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.[3][4]
தொழிற் கோட்பாடு தொகு
சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.
சமயக் கோட்பாடு தொகு
சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையைத் தோற்றுவித்தது.
அரசியற் கோட்பாடு தொகு
உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துக்கொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.
இனக் கோட்பாடு தொகு
ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்."[5]
நாடுகள் வாரியாக சாதியமைப்பு தொகு
இந்திய சாதி அமைப்பு தொகு
இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்பின் அடிப்படையில் மாற்றம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்பின் அடிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைபெற்றுள்ளன.
ஆகஸ்டு 2012 ஆம் ஆண்டு EPW என்ற வாரப் பத்திரிக்கையில் வெளியான “Corporate Boards in India Blocked by Caste?” என்னும் தலைப்பில் எந்தச் சமூகம் இந்தியக் கூட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.[6] தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வாரிய உறுப்பினர்களில், முதல் 1000 நிறுவனங்களின் வாரிய உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்தது. இந்தியாவில் கடைசிப்பெயர் பொதுவாக சாதியைக் குறிக்கும். கடைசிப்பெயர் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு அவர்களின் சாதியினரைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் படி 1000 நிறுவனங்களில் 9052 வாரிய உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.[7]
சாதி | எண்ணிக்கை | சதவீதம் |
---|---|---|
பிராமணர்கள் | 4,037 | 44.6% |
வைசியர்கள் | 4,167 | 46.0% |
சத்திரியர்கள் | 43 | 0.5% |
மற்றவர்கள் | 137 | 1.5% |
இதர பிற்படுத்தப்ப்ட்ட வகுப்பினர் | 346 | 3.8% |
பட்டியல் சாதியினர் & பழங்குடியினர் | 319 | 3.5% |
மொத்தம் | 9,052 | 100% |
தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய்த் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு (மனுதரும சாத்திரம்) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருந்ததாகத் தெரியவில்லை.
இலங்கை சாதி அமைப்பு தொகு
இலங்கையில் பாடசாலைக் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு போன்றவற்றுக்குச் சாதி சார்பான இட ஒதுக்கீடுகள் கிடையாது. திருமணச் சட்டங்களிலும் சாதி இடம்பெறவில்லை. எனினும் இலங்கையில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர் ஆகிய தேசிய இனங்கள் வலுவான சாதிப் படிநிலை அமைப்பைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றன. தமிழரிடையேயான சாதியமைப்பு பிரதேச வேற்றுமையைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகள் தமக்கே உரிய சாதியமைப்பைக் கொண்டுள்ளன.
சாதிய எதிர்ப்பு தொகு
இவற்றையும் பார்க்கவும் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம்
- ↑ ராஜாங்கம், ஸ்டாலின் (திசம்பர் 6, 2013). "அம்பேத்கரின் சமூக ஜனநாயகம்". தி தமிழ் இந்து இம் மூலத்தில் இருந்து 2013-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131209013817/http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5427338.ece. பார்த்த நாள்: திசம்பர் 8, 2013.
- ↑ http://www.advaitaashrama.org/cw/volume_4/translation_prose/modern_india.htm
- ↑ http://www.advaitaashrama.org/cw/volume_4/lectures_and_discourses/is_india_a_benighted_country.htm
- ↑ பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம். பக்கம்: 330.
- ↑ Ravi Saxena , Han Donker ,D Ajit (August 2012). "Corporate Boards in India". Economic and Political Weekly 47 (32): 39-43. doi:2012/08/11. http://www.epw.in/insight/corporate-boards-india.html. பார்த்த நாள்: 2014-02-18.
- ↑ ரகுராம் நாராயணன் (28 திசம்பர் 2013). "தனியார்மயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்: தலித் – பிற்படுத்தப்பட்டோரே!". மாற்று. http://maattru.com/privatisation-and-caste-question/. பார்த்த நாள்: 18 பெப்ரவரி 2014.
வெளி இணைப்புகள் தொகு
- வருண நிலை - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- கந்தன் கருணை - நூலகம் திட்டம்
- வேதத்தில் சாதி இருக்கிறதா? பரணிடப்பட்டது 2006-05-02 at the வந்தவழி இயந்திரம்
- சோமாலியாவில் சாதிமுறை பற்றி
- தலித கிருத்துவர்கள் போப்புக்கு கடிதம்
சாதி | தொகு |
---|---|
சாதி | சாதிப் பிரிவுகள் | இட ஒதுக்கீடு | வர்க்கம் | சமத்துவம் |
வர்க்கம் | தொகு |
---|---|
வர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம் |