பறைமேளக் கூத்து

பறைமேளக் கூத்து பறையர் சமூகத்தினரால் மட்டக்களப்பில் அளிக்கை செய்யப்பட்டு வரும் ஒரு பாரம்பரியக் கலை வடிவமாகும்.[1] இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் இடுப்பில் பறையைக் கட்டி இசைத்தபடியே ஆடுவதே இக்கூத்து ஆகும்.

சமூகப் பின்னணி

தொகு

பறைமேளக் கூத்து பறையர் சமூகத்திற்குரியதாக விளங்கியதற்குக் காரணம் அது அந்தச் சமூகத்தினரின் பிழைப்பூதியத் தொழில் முயற்சியின் ஒரு பகுதியாக இணைந்திருந்தமையாகும். ஈழத்தின் சமூக அமைப்பில் பறையர் சமூகம் இணையாக ஏற்கப்படாத (அங்கீகாரம் அற்ற) சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். பறையடித்தல் இவர்களின் குலத் தொழிலாகும். பறையடித்தல் மூலமே தங்களுக்கான பிழைப்பூதியத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அளிக்கைச் சூழல்

தொகு

பறையடித்தலை ஆலய நிகழச்சிகள், பிற மங்கல நிகழ்வுகள், மரண வீடுகள் என்பனவற்றில் அளிக்கை செய்தனர். ஆலய முன்றல், பிண (பிரேத) ஊர்வலம் என்பனவற்றின் போதும் பறைமேளக் கூத்தினை அளிக்கை செய்வது வழக்கம். சிறப்பு நாட்களில் ஊரின் பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு முன்னாலும் இக்கூத்தை ஆடிக் கொடை பெற்றுச் செல்வது உண்டு. கிராமிய தெய்வ வழிபாடுகளில் பறைமேளக் கூத்து முக்கிய இடம் வகிக்கின்றது. அதிலும் பெண் தெய்வ வழிபாடுகளிலே அதிகமாக இந்த பறைமேளக் கூத்துக்கள் இடம்பெறுகின்றன.[2] பிண (பிரேத) ஊர்வலத்தின் போது பறைமேளக் கூத்தின் சில பகுதிகள் "சந்தி மறித்து ஆடுதல்" என்னும் பெயரில் இடம்பெறும்.

இசைக்கருவிகள்

தொகு

மட்டக்களப்பில் அளிக்கை செய்யப்படும் பாரம்பரிய கலை வடிவங்களில் மத்தளம், சல்லரி என்னும் இசைக்கருவிகளே (வாத்தியங்களே) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பறைமேளக் கூத்தில் பயன்படுத்தப்படும் பறை, சொர்ணாலி என்பன பாரம்பரிய அரங்க வடிவங்கள் எவற்றிலும் பாவிக்கப்படுவதில்லை. இவை பறைமேளக் கூத்திற்கே தனிச்சிறப்புடைய இசைக்கருவிகளாகக் (வாத்தியங்களாகக்) கொள்ளப்படுகின்றன.

ஆடும் முறை

தொகு

இக்கூத்தை ஆடுபவர்கள் பறையை இடுப்பில் கட்டிக்குண்டு அதை சைத்தபடியே அந்த இசைக்கு ஏற்ப ஆடுவர். பறைமேளக் கூத்தில் 18 வகை தாளக்கட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. தாளக்கட்டுகளுக்கு ஏற்ப கூத்தில் பங்குபெறுவோர் தங்களது ஆளுமையை வெளிப்படுத்தி பறையை இசைப்பர். கலைஞர்கள் வட்டமாக சுற்றி நின்று இசைப்பதுடன், மாறிமாறிப் போட்டியாக இசைப்பது, முகபாவனையுடன் இசைப்பது எனப் பல்வேறு அம்சங்கள் இக்கூத்தில் இடம்பெறுகின்றன.[2]

மேற்படி தாளக்கட்டுகள் ஆடும் சூழலுக்கு ஏற்ப அமைகின்றன. கோயில், இறப்புவீடு, மங்கல நிகழ்வுகள் என்னும் மூன்று சூழல்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு தாளக்கட்டுகளாக மொத்தம் 18 தாளக்கட்டுகள் உள்ளன. இவை பின்வருமாறு அமைகின்றன.[1]

  1. கோயில் சேவகம்
    1. ஆரம்பத் தாளம்
    2. அழைப்புத் தாளம்
    3. ஆராதனைத் தாளம்
    4. ஆட்டுவிக்கும் தாளம்
    5. கோயில் சுற்றும் தாளம்
    6. வீதி வலம்வரும் தாளம்
  2. இறப்பு வீடு
    1. ஆரம்பத் தாளம்
    2. அழைப்புத் தாளம்
    3. அரட்டுத் தாளம்
    4. நடைத் தாளம்
    5. சந்தி கூறல் தாளம்
    6. சுடலைத் தாளம்
  3. மங்கல நிகழ்வுகள்
    1. ஆரம்பத் தாளம்
    2. அழைப்புத்தாளம்
    3. போக்குவரத்துத் தாளம்
    4. ஆட்டுத் தாளம்
    5. வரிசைத் தாளம்
    6. முடிவுத் தாளம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 ரஞ்சித்குமார் ஷர்மிளா, மட்டக்களப்புநாட்டார் கலைகளிலிருந்து அருகிவரும் பறைமேளக் கூத்து, கலைக்கேசரி, Vol 3, Issue 7, 2012, எக்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிட், கொழும்பு,
  2. 2.0 2.1 'யாழ். இசை விழா 2011' இல் மேடையேற்றிய தமிழ் கலைகள் பற்றிய அறிமுகம், தமிழ் மிரர், 1-4-2011

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறைமேளக்_கூத்து&oldid=3695212" இலிருந்து மீள்விக்கப்பட்டது