இசை
இசை (ⓘ) (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர்.
இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்[1].
வரலாறு
தொகுதொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பல பொருட்களில் இருந்து, பண்டைய காலத்தில் இசை எவ்வாறு இருந்தது என்பதை ஊகித்தறிய முடிகிறது. பழைய கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் சிந்துவெளி நாகரிகம் இருந்த காலத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன.[2]
இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது[3].
மிகப் பழமையானவையும், மிக அதிக அளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் சீனாவில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன[4].
மொழியில் இசை
தொகுமொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். நாடகம் என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் கூத்தர் என்றனர். நாடகம் ஆடியவரைப் பொருநர் என்றனர்.
இசை முறைகள்
தொகுஉலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. அவையாவன:
இந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்திய இசை
தொகுஇந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள் / இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப்பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர் செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன.
பின்வருவன இந்தியாவின் முக்கிய இசை மரபுகளுட் சிலவாகும்.
கருநாடக இசை
தொகுகருநாடக இசை அல்லது பண்ணிசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசை வடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.[5] செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘ஸ்வரம்’ என்றனர்..[6] கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு ஸ்வரங்களும் ஸ - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
கிராமிய இசை
தொகுகிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப் பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு. "மண் வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா." [1]
கிராமிய இசைக் கருவிகள்
தொகுபழந்தமிழ் இசை
தொகுபழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.
இந்துஸ்தானி இசை
தொகுஇந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும். வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே[மேற்கோள் தேவை] இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாம கானத்திலிருந்தே தோன்றியவை ஆகும். 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.
இந்திய இசையின் தனித்தன்மைகள்
தொகு- இந்திய இசை தனி இசை (melody)யை ஆதாரமாகக் கொண்டது. மேற்கத்திய இசை கோர்வை இசை (harmony)யை ஆதாரமாகக் கொண்டது.
- இந்திய இசையின் இராக அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் பண்கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் தேவாரம் ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம்.
இசை நூல்கள்
தொகுதமிழ்ச் சூழலில் பண்டைக் காலத்தில் இருந்த முச்சங்கங்கள் இசையைப் பேணி வளர்த்தன.இசை நூல்கள் பல இயற்றப்பட்டன. அவை காலத்தால் அழிந்துபோயின. இவ்வாறு மறைந்த நூல்களாக முதுநாரை, முதுகுருகு, சிற்றிசை, பேரிசை, பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், அகத்தியம், செயிற்றியம், குணநூல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 33 ஆவது நூற்பாவான, 'அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உள வென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்' என்பதில் சுட்டப்படும் 'நரம்பின் மறை'யை இசைநூலாகக் கொள்கின்றனர்.
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் இசை நுணுக்கம்(சிகண்டியார்), இந்திரகாளியம் (யாமளேந்திரர்), பஞ்ச மரபு(அறிவனார்), பரத சேனாபதியம் (ஆதிவாயிலார்), மதிவாணர் நாடகத் தமிழ்(பாண்டியன் மதிவாணனார்)ஆகிய நூல்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பஞ்ச மரபு இன்றும் உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு இசை நூல்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், விபுலானந்தரின் யாழ் நூல், எஸ்.இராமநாதனின் [[சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம்]], குடந்தை ப.சுந்தரேசனாரின் [[இசைத் தமிழ்ப் பயிற்சி நூல்]], மதுரை பொன்னுசாமி பிள்ளையின் பூர்வீக சங்கீத உண்மை ஆகியவையாகும்.
ஏழு சுரங்களும் அவற்றின் விளக்கமும்
தொகுஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும். இவற்றை சப்தசுரங்கள் என்பர். சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரமாகின்றன.
அடிப்படை இசை குறியீடு
தொகு- குரல்
2. துத்தம்
3. கைக்கிளை
4. உழை
5. இளி
6. விளரி
7. தாரம்
இவற்றிற்குரிய உயிர் எழுத்துக்கள்
தொகுஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ.
இவை வடமொழியில்,
- சட்ஜம் - ஸ
2. ரிஷபம் - ரி
3. காந்தாரம் - க
4. மத்தியமம் - ம
5. பஞ்சமம் - ப
6. தைவதம் - த
7. நிஷாதம் - நி
என்று குறிப்பிடப்படுகின்றன.இந்த ஏழு இசை ஒலிகளும் சுரங்கள் என அழைக்கப்படுகின்றன.
சுரங்களின் வளர்ச்சி
தொகுஏழு சுரங்களும் பின்னர் பன்னிரு சுரங்களாக வளர்ச்சி பெற்றன. இவற்றுள் குரலும்(ஸ), இளியும்(ப) வகை பெறா சுரங்களாகும். ஏனைய துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), விளரி(த), தாரம்(நி) ஆகிய இரு வகைபெறும் சுரங்களாகும்.இவ்வாறு பன்னிரு சுரங்கள் உருவாகின.
ஆங்கில மொழியில் Sharp, Flat என்பதுபோல் தமிழில் நிறை-குறை எனவும், வன்மை-மென்மை எனவும்,ஏறிய-இறங்கிய எனவும் குறிக்கப்பெறும். வடமொழியில் கோமள-தீவிர என்று அழைக்கப்படுகின்றன. ஏழிசை அல்லது பன்னிரு இசைநிலைத் தொகுப்புகளை ஒரு மண்டிலம் என்று வழங்குவர். இயக்கு, ஸ்தாயி, தானம் ஆகியவை இதன் வேறுபெயர்களாகும்.
பன்னிரு இசைநிலைத் தொகுப்புகள்
தொகு- குரல் - வகைபெறா சுரம் - குறியீடு(ஸ)
2. துத்தம் - குறை துத்தம்(தமிழில்) - சுத்த ரிஷபம்(வட மொழியில்) - ரி1
3. துத்தம் - நிறை துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் - ரி2
4. கைக்கிளை - குறை கைக்கிளை-சாதாரண காந்தாரம் - க1
5. கைக்கிளை - நிறை கைக்கிளை-அந்தர காந்தாரம் - க2
6. உழை - குறை உழை - சுத்த மத்தியமம் - ம1
7. உழை - நிறை உழை - பிரதி மத்தியமம் - ம2
8. இளி - வகைபெறா சுரம் - ப
9. விளரி - குறை விளரி - சுத்த தைவதம் - த1
10. விளரி - நிறை விளரி - சதுசுருதி தைவதம் - த2
11. தாரம் - குறை தாரம் - கைசிகி நிஷாதம் - நி1
12. தாரம் - நிறை தாரம் - காகலி நிஷாதம் - நி2
இது சமன், மெலிவு, வலிவு, சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி எனவும், மெலிவு மண்டிலம், மந்த்ர ஸ்தாயி எனவும், வலிவு மண்டிலம், தாரஸ்தாயி எனவும் மூவகைப்படும். மெலிவில் நான்கு சுரங்களும்(ம ப த நி மற்றும் நான்கு கீழ்ப்புள்ளிகள்), சமனில் ஏழு சுரங்களும்(ஸ ரி க ம ப த நி), வலிவில்(ச ரி க மற்றும் மூன்று மேல் புள்ளிகள்) என பதினான்கு சுரங்கள் இசைக் குறிப்பில் குறிக்கப்பெறும்.
பாலையும் பண்ணும்
தொகுபாலை என்பது பகுப்பு ஆகும். எழுவகைப் பாலைகள் உள்ளன. ஏழிசையின் பகுப்பானது ஆயம், சதுரம், திரிகோணம், வட்டம் ஆகிய நான்கு வகைகளில் அமைகின்றன. வட்டப் பாலை எனப்படுவது முழுமையாக ஒரு வட்டத்தில் பன்னிரண்டு கோணம் அமைத்து அதில் ஏழு கோணத்தைக் கொண்டு உறழ்வதாகும்.
சுரங்கள் ஏழும் பன்னிரண்டு இராசிகளில் வல, இட முறையாக உறழப்படுவதால் ஏழு பெரும்பாலைகள் உருவாகின்றன. அவையாவன:
- குரல் குரலாயது - செம்பாலை - அரிகாம்பதி ராகம்.
2. துத்தம் குரலாயது - படுமலைப் பாலை - நடபைரவி ராகம்.
3. கைக்கிளை குரலாயது - செவ்வழிப் பாலை - பஞ்சமமில்லாத தோடி ராகம்.
4. உழை குரலாயது - அரும்பாலை - சங்கராபரணம் ராகம்.
5. இளி குரலாயது - கோடிப்பாலை - கரகரப்ரியா ராகம்.
6. விளரி குரலாயது - விளரிப்பாலை - தோடி ராகம்
7. தாரம் குரலாயது - மேற்செம்பாலை - கல்யாணி ராகம்.
இராகம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் பண் ஆகும். பண் எனப்படுவது இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவ அமைப்பாகும்.
உசாத்துணை நூல்கள்
தொகு- முனைவர் இ.அங்கயற்கண்ணி, தமிழக இசையும் ஆய்வும், கலையகம் வெளியீடு,தஞ்சாவூர்-7, முதற்பதிப்பு:டிசம்பர்-2002
- Colles, Henry Cope (1978). The Growth of Music: A Study in Musical History, 4th ed., London: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-316116-8 (1913 edition online at Google Books)
- Harwood, Dane (1976). "Universals in Music: A Perspective from Cognitive Psychology". Ethnomusicology 20 (3): 521–33. doi:10.2307/851047. https://archive.org/details/sim_ethnomusicology_1976-09_20_3/page/521.
- Small, Christopher (1977). Music, Society, Education. John Calder Publishers, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7145-3614-8
மேற்கோள்கள்
தொகு- ↑ 25-12-2013 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ், பக்கம்-02
- ↑ The Music of India By Reginald MASSEY, Jamila MASSEY. Google Books
- ↑ Brown, RE (1971). "India's Music". Readings in Ethnomusicology.
- ↑ Wilkinson, Endymion (2000). Chinese history. Harvard University Asia Center.
- ↑ Rajagopal, Geetha (2009). Music rituals in the temples of South India, Volume 1. D. K. Printworld. p. 111-112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8124605386, 9788124605387.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help) - ↑ தமிழ் இணைய பல்கலைக்கழகம். "ஏழிசை". த.இ.ப. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013.