இந்துத்தானி இசை

(இந்துஸ்தானி இசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்துத்தானி இசை (Hindustani music) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளின் ஒரு பாரம்பரிய இசை ஆகும். இது வட இந்திய செவ்விய இசை அல்லது பாரதிய சாத்திரிய சங்கீதம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது வீணை, சித்தார், சரோது போன்ற இசைக்கருவிகளால் இசைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் பாரம்பரிய கருநாடக இசையிலிருந்து விலகி, பொ.ஊ 12-ஆம் நூற்றாண்டில் உருவானது. கருநாடக இசை பெரும்பாலும் சமசுகிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பாடல்களைப் பயன்படுத்துகிறது. இந்துஸ்தானி இசை பெரும்பாலும் இந்தி, உருது, பிராச், அவதி, போச்புரி, இராசத்தானி, பஞ்சாபி மொழிகளில் எழுதப்பட்ட பாடல்களைப் பயன்படுத்துகிறது.[2]

இந்துத்தானி பாரம்பரிய இசை பற்றிய அறிவு கரானா எனப்படும் பாரம்பரிய இசைப் பள்ளிகள் மூலம் கற்பிக்கப்படுகிறது. பிசுமில்லா கான், பீம்சேன் சோசி, ரவி சங்கர் உள்ளிட்ட இந்துத்தானி இசைக் கலைஞர்கள் கலைகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.[3]

இந்துஸ்தானி இசையின் ஆதி காலம்

தொகு

வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே[மேற்கோள் தேவை] இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்.

மாற்றங்கள்

தொகு

13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மார்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.

இந்துஸ்தானி இசையின் முன்னோடி

தொகு

வட இந்திய இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்தவர்களுள் அமிர்குஸ்ரு முன்னோடியாக இருந்தவர் ஆவர். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய வாத்தியங்களையும் அறிமுகப் படுத்தினார். கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் இந்துஸ்தானி இசை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. வட இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் தம் அரசவையில் இசைக்கலைஞர்களை ஆதரித்து இசைகலையை வளர்த்தார்கள்.

தான்சேன்

தொகு

இந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கர்நாடக சங்கீத வித்துவான்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.

பிற இசை செல்வாக்கும் தொண்டாற்றியோரும்

தொகு

வட இந்தியாவில் ஏற்பட்ட பல அரசியல் குழப்பங்களுக்கு உள்ளாகிய இந்துஸ்தானிய இசையும் அரேபியா, மொசப்பத்தேமியா, சின்ன ஆசியா, திபெத் இசைகளின் செல்வாக்கு காணப்படுகின்றது. மீராபாய், சூர்தாசர், கபீர்தாசர், துளசிதாசர் போன்றோர் இந்துஸ்தானிய இசைக்கு பெரும் தொண்டாற்றினார்கள். 17ம் நூற்றாண்டில் மேள, தாட் போன்ற பதங்கள் இந்துஸ்தானிய இசையில் வழக்கத்திற்கு வந்தன. வேங்கடமகி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 72 மேளகர்த்தாப் பத்ததி இந்துஸ்தானி இசையில் 10 தாட்கள் வகுக்க உதவியது.

உருப்படிகள்

தொகு

18ம் நூற்றாண்டில் தப்பா என்னும் உருப்படி வகை அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் தும்ரி, தரானா, தாதரா போன்ற இலகு செவ்வியல் இசை உருப்படி வகைகள் தோன்றத்தொடங்கின.

மேளங்கள்

தொகு

முஸ்லிம் படையெடுப்பிற்குப் பின்னர் வடமொழியில் இயற்றப்பட்ட இந்துஸ்தானி இசை நூல்களுங்கூட அகோபலர், புண்டரீக விட்டலர் போன்ற தென்னாட்டவர்களால் இயற்றப்பட்டவை. தற்கால இந்துஸ்தானி இசையின் சுத்த மேளம் பிலாவல் எனப்படும். வேளாவளி என்பது பிலாவல் என மருவியது.

வேறு பலரின் சேவைகள்

தொகு

பலர் இந்துஸ்தானிய இசை சம்பந்தமான பல நூல்களை எழுதியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்துஸ்தானி இசையை போற்றிப் பாதுகாக்க யாரும் இல்லாத சமயத்தில் விஷ்ணு திகம்பர பலுஸ்கர், பண்டிட் V.N. பாத்கண்டே ஆகிய அறிஞர்கள் பல நூல்களை எழுதினார்கள். இவர்கள் இருவரும் சங்கீத லிபி முறையை அறிமுகப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் கல்லூரிகளையும் நிறுவி இசை பயிற்றுவித்தார்கள்.

தற்போது கல்லூரிகளும், சேவைகளும்

தொகு

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய அரசாங்கம் இந்துஸ்தானி இசையை வளர்க்க பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள சங்கீத நாடக அகடமி பல இசை விழாக்களையும் இசைப்போட்டிகளையும் நடத்தி இசை உலகில் திறமை உள்ளவர்களை வெளிக்கொணரும் அரிய சேவையை ஆற்றி வருகின்றன. இந்திய வானொலி, தூர்தர்ஷன் போன்றவையும் இசை வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகின்றன. வெளிநாட்டவர்களும் இந்தியாவுக்கு வந்து இந்திய இசையை கற்றுச் செல்கிறனர். மும்பாய், பூனா, பெங்களூர், சாகூர் குவாலியர், பரோடா, தஞ்சாவூர், மைசூர், திருவனந்தபுரம், கொல்கத்தா போன்ற இடங்களிலெல்லாம் இசைக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. தற்பொழுது அகில இந்தியாவிலும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இசை சம்பந்தமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்துத்தானி இசை வகைகள்

தொகு

இந்துத்தானி இசை வகைகள் :

  • துருப்பாது
  • கயல்
  • தப்பா
  • தரானா
  • துமரி
  • கசல்
  • தமர்
  • திரிவதம் (த்ரிவத்)
  • சைதி
  • தபகயல் (தப்கயல்)
  • அட்டபதி (அஷ்டபதி)
  • ததுரம் (தாத்ரா)
  • பசனம் (பஜனம்)

பிரபல இந்துஸ்தானி வாத்தியக் கலைஞர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Definition".
  2. Ho, Meilu (2013-05-01). "Connecting Histories: Liturgical Songs as Classical Compositions in Hindustānī Music" (in en). Ethnomusicology 57 (2): 207–235. doi:10.5406/ethnomusicology.57.2.0207. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-1836. https://dx.doi.org/10.5406/ethnomusicology.57.2.0207. 
  3. "Indian artists who became the Bharat Ratna". 26 May 2020. https://www.skyshot.in/post/8-indian-artists-to-have-been-conferred-with-the-bharat-ratna. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துத்தானி_இசை&oldid=4105930" இலிருந்து மீள்விக்கப்பட்டது