சிற்பநூல்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிற்பநூல்கள் என்பன பண்டைய இந்தியாவின் கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பவை தொடர்பான நூல்கள் ஆகும். பல சிற்ப நூல்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந்தபோதிலும், இன்று முழுமையாகக் கிடைப்பவை சிலவே. இவற்றுள், மானசாரம், மயமதம், விஸ்வகர்மீயம் போன்றவை முக்கியமானவை.
சிற்பநூல்களின் தோற்றம் பற்றிய கருத்துக்கள்
தொகுஇந்தச் சிற்பநூல்களின் அடிப்படை இந்து வேதங்களில் அடங்கியிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாகக் கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பன கருதப்பட்டு, இவற்றை ஸ்தபத்ய வேதம் எனவும் குறிப்பிடுவர். எனினும் இதற்குச் சரியான சான்றுகள் கிடையா. அதர்வண வேதம், ஏனைய மூன்று வேதங்களுடன் ஒப்பிடுகையில் காலத்தால் பிந்தியது. ஆனாலும், அதர்வண வேதம் தொடர்பான நூல்கள் அனைத்துமே கி.மு நான்காம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவை என்று கருதப்படுகின்றது. இந்த நூல்கள் எதிலுமே கட்டிடக்கலை, சிற்பம் சம்பந்தமாகக் குறிப்பிடத்தக்க அளவில் தகவல்கள் இல்லை. முறையான சிற்பநூல்கள் அனைத்தும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையே. இந்த இடைப்பட்ட பதினொரு நூற்றாண்டுகளிலாவது, அதர்வ வேதத்திலிருந்து மேற்படி கலைகளின் படிமுறை வளர்ச்சிக்குச் சான்றாகக் கருதக்கூடிய வேதம் சார்ந்த நூல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.