பழையாறை அல்லது பழையாறு சோழர்களின் 5 தலைநகரங்களில் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்நாளில் சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2-ஆவது தலைநகராக மாறியது.

வரலாறு

தொகு

ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பெயர்களெல்லாம் பழையாறை என்ற பெருநகரத்திற்குரிய பண்டைய பெயர்களாகும். காவிரிப்பூம்பட்டினம் கி.பி.4ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடல்கோளால் அழிந்தது. பின்பு உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்த பெருநகரம்தான் பழையாறை. இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இக்கோநகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது. [1] அமர்நீதி நாயனார் இவ்வூரில் பிறந்தார். [2]

கி . பி 840 இல் விஜயாலய சோழன் பழையாறையில் தான் வசித்து வந்தான். பின்னர் பாண்டியருக்கும், பல்லவருக்கும் ஏற்பட்ட போரில் பல்லவருக்கு துணையாக விஜயாலய சோழன் பாண்டியனுக்கு எதிராக சண்டையிட்டார். அந்த போரில் பல்லவர்கள் பெற்ற வெற்றியின் பலனாக தஞ்சையும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் விஜயாலய சோழனுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அது முதல் சோழர்களின் பொற்காலம் தொடங்கிற்று. பின்னர் சுந்தர சோழன் காலத்தில் தஞ்சைக்கு தலைநகர் மாற்றப்படும் வரை பழையாறை சோழர்களுக்கு தலைநகராக விளங்கியது .

ஊர் அமைப்பு

தொகு

முழையூர், பட்டீச்சுரம், திருச்சக்தி முற்றம், சோழ மாளிகை, திருமேற்றளி, கோபிநாத பெருமாள் கோயில், ஆரியப் படையூர், புதுப் படையூர், பம்பைப் படையூர், மணப்படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம், நாதன்கோயில் ஆகிய ஊர்கள் அடங்கிய ஊரே பழையாறு ஆகும். பழையாறை ஊர் நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி ஆகிய பிரிவுகளாக இருந்தன. அவற்றில் இன்று வடதளி தர்மபுரீஸ்வரர் கோவிலும், கீழ்த்தளி சோமேஸ்வரர் கோவிலும் உள்ளது. இவ்வூருக்கு தெற்கில் முடிகொண்டான் ஆறும், வடக்கில் திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது. அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது. தென்தளியில் தென்தளி உள்ளது.

வைப்புத்தலம்

தொகு

பழையாறையை ஞானசம்பந்தர், ‘ஆறை வடமகாறல் அம்பர் ஐயா றணியார் பெருவேளூர் விளம்பர் தெங்கூர்‘ என்றும் திருச்சேத்திரக்கோவையில், ‘ஆறை‘ என்றும் குறிப்பர். பழையாறை திருநாவுக்கரசர் சுந்தரர் பதிகங்களிலும் கூறப்பெற்றுள்ளது. எனவே இரு ஒரு வைப்புத்தலமாகும். [3]

பொன்னியின் செல்வன் நாவலில் பழையாறை

தொகு

கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலில் பழையாறையின் சிறப்புக்கள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ராஜராஜனின் தமக்கை குந்தவை வசித்த இடமாக பழையாறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ராஜராஜனின் முதல் மனைவியான வானதியும் பழையாறை நகரத்தில்தான் வசித்து வந்தார். ராஜராஜனின் தமக்கை குந்தவை பிராட்டியார் பழையாறை நகரத்தில் வசித்து வந்ததால் அரசு விஷயங்கள் பலவும் அங்கே முடிவெடுக்கப்பட்டன. இதனை சோழ அரசின் முக்கிய முடிவுகள் அனைத்தும் பழையாறையில் எடுக்கப்படுவதாக அவரது கதாபாத்திரங்கள் பல முறை கூறுகின்றன.

கல்கியின் கூற்றுப்படி பாண்டியனின் ஆபத்துதவிகள் சுந்தர சோழனை தீர்த்துக்கட்ட முயற்சித்ததால் பாதுகாப்பு கருதி அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று விட்டனர். அதன்பின் பழையாறையின் முக்கியத்துவம் குறைந்தது.

சோழன் மாளிகை

தொகு

பழையாறையில் சோழ அரச குடும்பம் இருந்த பகுதி சோழன் மாளிகை என்று அழைக்கபட்டது. இன்றும் பட்டீஸ்வரம் அருகில் சோழன் மாளிகை என்ற இடம் உள்ளது. ஆனால் அரண்மனைகள் இருந்த இடமான சோழன் மாளிகை பகுதியில் தற்போது வெறும் மண் மேடுகளே இருக்கிறது. மாளிகைகள் அழிந்து விட்டன.

படை வீடுகள்

தொகு

பழையாறை சுற்றி சோழ படை வீரர்கள் படைவீடுகளில் குடியிருந்தனர். அவை

  • ஆரியப்படைவீடு - வடக்கே சென்று ஆரியரை வெற்றி கொண்ட வீரர்கள்
  • பம்பைப்படைவீடு - போருக்குச் செல்லும் முன் பம்பை என்ற வாத்தியம் இசைத்து வீரவுணர்வை ஏற்படுத்துவோர்.
  • புதுப்படைவீடு - புதிதாக சேர்க்கப்பட்ட படைப்பிரிவு
  • மணப்படைவீடு

இந்நான்கும் இன்று தனித்தனி ஊர்களாக விளங்குகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
  2. சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார், அமர்நீதியார் எனும் பழையாறை நகர் வணிகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
  3. புலவர் வே. மகாதேவன், பழையாறைத் திருக்கோயில்கள், மகாமகம் 1992 சிறப்பு மலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழையாறை&oldid=3847366" இலிருந்து மீள்விக்கப்பட்டது