கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்

(பழையாறை சோமேசர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பழையாறை சோமேசர் கோயில் அல்லது பழையாறை - வடதளி - பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் உண்ணாவிரதமிருந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). காவிரி தென்கரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும்.[1] வடதளியில் சுவாமி, விமலநாயகி உடனுறை தருமபுரீசுவரராகவும், பழையாறையில் சுவாமி, சோமகமலாம்பிகை உடனுறை சோமேசராகவும் காட்சி அளிக்கின்றனர். [2] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [3]

தேவாரம் பாடல் பெற்ற
பழையாறை சோமேசர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பழையாறை வடதளி, ஆறைவடதளி
பெயர்:பழையாறை சோமேசர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கீழபழையாறை வடதளி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தர்மபுரீஸ்வரர் (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவன்), சோமேசர் (இவர் பழையாறை இறைவன்)
தாயார்:விமலநாயகி (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவியார்), சோமகலாம்பிகை (இவர் பழையாறை இறைவியார்)
தல விருட்சம்:நெல்லி.
தீர்த்தம்:சோம தீர்த்தம், கருடன் தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:முத்துப்பந்தல், ரத சப்தமி, சோமவார வழிபாடு
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சோழர் கட்டிட கலை
விமானம்
குடமுழுக்கிற்குப் பின் (29 ஜனவரி 2016)விமானம்

அமைவிடம்

தொகு

தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த கும்பகோணம் - ஆவூர் சாலையில் உள்ள முழையூர் கிராமம் வழியாக பழையாறை - வடதளி இத்தலத்தை அடையலாம். இக்கோயில், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது பழையாறை, வடதளி என இரு திருவூர்களாக இருக்கின்றன.

தல வரலாறு

தொகு
  • முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின.
  • கருடன் தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
  • இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.

தல சிறப்பு

தொகு
  • பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
  • தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.
  • இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.
  • பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.
  • சம்பந்தப்பெருமான் "அப்பரே" என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.
  • சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.
  • இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக்குளத்து நீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.
  • இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.
  • குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
  • இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

தலத்தில் அவதரித்தோர்

தொகு

மங்கையர்க்கரசி நாயனார்

தொகு

மங்கையர்க்கரசியார் நாயனார் பிறந்த ஊராதலின், அவரது திருவுருவச் சிலை, இக்கோயிலின் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.

  • மங்கையர்க்கரசியாரின் அவதாரத் தலம் : பழையாறை (கீழப் பழையாறை).
  • வழிபாடு : குரு வழிபாடு.
  • முத்தித் தலம் : மதுரை
  • குருபூசை நாள் : சித்திரை - ரோகிணி.

மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.) இத்தலத்தின் இறைவன் தருமபுரீசுவரர், இறைவி விமலநாயகி. திருக்கோயிலில் இவ்விரண்டு கற்சிலைகளே உள்ளன. திருக்கோயில் மேட்டின் மேல் உள்ளது. இதன் அருகில் துறையூர் சிவப்பிரகாச அடிகளின் சமாதி உள்ளது.

அமர்நீதி நாயனார்

தொகு
  • பழையாறை, அமர்நீதி நாயனார் பிறந்த தலமாகும் : பழையாறை (கீழப் பழையாறை).
  • வழிபாடு : சங்கம வழிபாடு.
  • முத்தித் தலம் : நல்லூர்.
  • குருபூசை நாள் : ஆனி - பூரம்.

தலப்பாடல்கள்

தொகு
  • இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே வேது என்பது - வெப்பம்..

கோயில் அமைப்பு

தொகு

ராஜ கோபுரம்

தொகு

2016இல் குடமுழுக்கு கண்ட இக்கோயிலின் முகப்பில் பழமை மாறாத இடிபாடுற்ற ராஜகோபுரம் காணப்படுகிறது. பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது.

அம்மன் சன்னதி

தொகு

அக்கோபுரத்தினை அடுத்து வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. இந்தக் கோயிலின் சோமகமலாம்பிகை சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டில் தென் திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு புறத்தில் சிற்றுவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நிற்க, அவனது தலையின் மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்கு மேல் கொண்டுவந்து வலது காதைத் தொடும் நிலையில் உள்ள காட்சி ஊர்த்துவ தாண்டவமாக வடிக்கப்பட்டுள்ளது.[4][5] சிவனின் முகம் தற்பொழுது சிதைந்த நிலையில் உள்ளது . அந்த வீரன் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மூலவர் சன்னதி

தொகு

அச்சன்னதி முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது. மண்டபத்தில் விநாயகர், இராவணன் கயிலை மலையைத் தூக்கும் நிலையில் சிவன் காணப்படுகின்றனர். உள் மண்டபத்தில் சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மங்கையர்க்கரசியார் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அழகிய விமானத்துடன் கூடிய கருவறையைச் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உமையொருபாகர்,பிரம்மா காணப்படுகின்றனர்.

திருச்சுற்று

தொகு

திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் காணப்படுகின்றன.

குடமுழுக்கு

தொகு

29 ஜனவரி 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[6]

இக்கோயிலுடன் தொடர்புடைய கோயில்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

29 ஜனவரி 2016 குடமுழுக்கு நாளில் கோயில்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Someshwarar Temple
  2. "திருபழையாறை வடதளி". Archived from the original on 2020-08-13. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.
  3. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  4. பழையாறை கோயிலில் வீரன் தலை மீது சிவன் தாண்டவமாடும் சிற்பம், தில்லை கோவிந்தராஜன் வலைப்பூ
  5. "தினகரன், 24.1.2014". Archived from the original on 2022-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-07.
  6. குடந்தையில் 10 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், திரளான மக்கள் பங்கேற்பு, தினமணி, 30 ஜனவரி 2016

வெளி இணைப்புகள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு