இலக்கணம் (மொழியியல்)

உட்பிரிவுகள், சொற்றொடர்கள் மற்றும் சொற்களின் கலவையை நிர்வகிக்கும் கட்டமைப்பு விதிகள்
(இலக்கணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்கணம் (ஒலிப்பு) என்பது மொழியின் அமைப்பையும், பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது.

சொற்பிறப்பியல் தொகு

இச்சொல்லின் மூலம் தமிழ் என்பர். விளக்கணம் (விளக்கம் - தமிழ் வேர்ச்சொல்)[சான்று தேவை] என்று அழைப்பர்.

தமிழ் இலக்கணம் தொகு

முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக "தமிழ் இலக்கணம்" என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவையாவன>

  1. எழுத்து இலக்கணம்
  2. சொல் இலக்கணம்
  3. பொருள் இலக்கணம்
  4. யாப்பு இலக்கணம்
  5. அணி இலக்கணம்

எழுத்து இலக்கணம் தொகு

எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகின்றன. 'எழுத்து எனப்படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் '[1] ஆகும் . எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளைக் கூறுவன எழுத்து இலக்கணம் ஆகும். மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது.

எழுத்து இலக்கண வகைகள் தொகு

எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,

  1. முதல் எழுத்து
  1. சார்பு எழுத்து
முதல் எழுத்து தொகு

முதல் எழுத்து என்பன உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகும். உயிர் எழுத்துக்கள் 12, மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும், பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

உயிர் எழுத்துக்கள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில் என இரண்டுவகையாகப் பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன குறில் எனவும், நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும்.

மெய் எழுத்துக்கள்

மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினைக் கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.

சார்பு எழுத்து தொகு

தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை; அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று கூறுவர். இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றியலிகரம் 7) ஐகாரக்குறுக்கம் 8) ஔகாரக்குறுக்கம் 9) மகரக்குறுக்கம் 10) ஆய்தக்குறுக்கம் என 10 வகையாகப் பிரித்து கூறுவர்.

1.உயிர்மெய் எழுத்துக்கள்

தமிழின் 12 உயிர் எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்கள் 18 சேர்வதினால் (12 x 18 = 216) 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன.

(உதாரணம் : க் + அ = க, க் + ஆ = கா, க் + இ = கி, க்+ஈ = கீ, க் + உ = கு)

2. ஆய்தம் (தனி நிலை எழுத்து )

தனி நிலை எழுத்து என அழைக்கப்படும் ஆய்த எழுத்து ஒன்றும் (ஃ) தமிழில் உண்டு. இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் தனக்குப் பின்னே ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் துணையாகக் கொண்டு வரும். ( உதாரணம்: அஃது, இஃது, எஃது )

3. உயிரளபெடை

உயிரளபெடை என்பது உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது ஆகும். (உயிர் + அளபெடை. அளபெடை என்றால், நீண்டு ஒலித்தல் என்று பொருள்). உயிரெழுத்துகளில், நெட்டெழுத்துகள் ஏழும், தமக்குரிய இரண்டு மாத்திரைகளில் (குறில் = 1 மாத்திரை, நெடில் = 2 மாத்திரை) இருந்து நீண்டு ஒலிக்கும் நிகழ்வு, உயிரளபெடை ஆகும். முதலெழுத்து, இடையெழுத்து, கடையெழுத்து என்று மூவகை இடங்களில் இவை நடைபெறும். எடுத்துக்காட்டு: 1. ஓஒதல் வேண்டும் . இதில், ’ஓதல்‘ என்று வந்திருக்கவேண்டும். இவ்விடத்தில் ‘ஓ’ எனும் உயிர்நெடில் எழுத்து, தனக்குரிய இனவெழுத்தான ‘ஒ’ என்று தொடர்ந்து வந்து அளபெடுத்துள்ளது. மேலும், வார்த்தையின் தொடக்கத்திலேயே அளபெடுத்துள்ளதால், இது முதல் எழுத்துஅளபெடுக்கும் வகையறா ஆகும். 2. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சான்றாய் இதில், வார்த்தையின் நடுவில் ‘தூ (த் + ஊ)’ எனும் உயிர்மெய் நெடில், தன் இனவெழுத்தான ‘உ’ வுடன் இணைந்து அளபெடுத்து வருகிறது. வார்த்தைகளின் நடுவில் அளபெடுத்து வருவதால், இவை இடையெழுத்து அளபெடுத்துவரும் வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகும். இதேபோல், கடையெழுத்து அளபெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுடன் விளக்கலாம்.

உயிரளபெடையானது, மூன்று வகைப்படும்:

1. இசைநிறையளபெடை செய்யுளின் ஓசை குறையுமிடத்து , குறைந்த ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு அளபெடுத்தல். உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் 2. இன்னிசையளபெடை ஓசை குறையவில்லை எனினும், இனிமைக்காக அளபெடுத்தல். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்சார்வாய் 3. சொல்லிசையளபெடை பெயர்ச்சொல்லை, வினைச்சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தல்.

4. ஒற்றளபெடை ஒற்றெழுத்து, தமக்குரிய அரைமாத்திரையிலிருந்து, நீண்டு ஒலித்தல்.

5. குற்றியலுகரம்

ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘உ’ கரம், அரைமாத்திரயாக ஒலிப்பது, குற்றியலுகரம் எனப்படும். க, ச, ட, த, ப, ற எனும் வல்லின எழுத்துகளுடன், ‘உ’கரம் இணைந்து,

கு ,சு ,டு , து, பு, று எனும் வார்த்தைகள் தோன்றும். இந்த எழுத்துகள், தனிநெடில் உடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்து கடைசியில் வந்தாலோ, அவ்வார்த்தையில் வரும் ‘உ’கரம், அரைமாத்திரயளவே ஒலிக்கும். எடுத்துக்காட்டு: 2. பல எழுத்துகள் சேர்ந்து வருதல் . பந்து -- இதில் வரும் வார்த்தையைச் சொல்லிப்பாருங்கள். ‘பந்த்’ + உ என்றே சொல்லுவோம். ‘து’க்குப் பதில், கடைசியில் உச்சரிப்பின்போது ‘உ’ மாத்திரமே வரும். இவ்வாறு வருதலே, குற்றியலுகரம்.

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்:

எடுத்துக்காட்டு: நாடு - நெடில்தொடர் குற்றியலுகரம் எஃகு - ஆய்தத்தொடர் ‘’ வரகு - உயிர்த்தொடர் பத்து - வன்தொடர் பந்து - மென்தொடர் மார்பு - இடைத்தொடர்

6. குற்றியலிகரம்

ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘இ’கரம் அரைமாத்திரையாக குறைந்து ஒலிக்கும் . எடுத்துக்காட்டு: நாடு + யாது = நா(ட் + உ) + யாது = நாடியாது இவ்விடத்தில் வரும் ‘உ’கரம், முதலில் வரும் ‘ய’வின் காரணமாக, ‘இ’கரமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறினாலும், அதன் மாத்திரை, அரை மாத்திரையே ஆகும்.

7. ஐகாரக்குறுக்கம்

ஐ என்னும நெட்டெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தலே ஐகாரக்குறுக்கம் ஆகும் . சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ”ஐ” தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். முதல் எழுத்தில் ஒன்றரையாகவும், இடை மற்றும் கடை எழுத்துகளில் ஒரு மாத்திரையாவும் குறைந்து ஒலிக்கும். எடுத்துக்காட்டு: -- வளையல்.

8. ஔகார குறுக்கம் இது முதல் சொல்லாகத்தான் ஒரு வார்த்தையில் வரும். அப்படி வரும் போது, இரண்டு மாத்திரையிலிருந்து, ஒன்றரையாகக் குறைந்து ஒலிக்கும்.

9. மகரக்குறுக்கம்

‘ம்’ ங்ற சொல், அதன் அரைமாத்திரையிலிருந்து, கால்மாத்திரையாகக் குறைந்து ஒலித்தலே, மகரக்குறுக்கம்.

10 .ஆய்த குறுக்கம் ‘ஃ’ ஆய்த எழுத்து, தமக்குரிய அரை மாத்திரையிலிந்து, கால் மாத்திரையாக ஒலித்தல். எடுத்துக்காட்டு: கல் + தீது = கஃறீது

சொல்இலக்கணம் தொகு

பொருள் தரக்கூடிய சொற்கள் தான் சொல் எனக் குறிப்பிடப்படுகின்றன. பொருள் தராத சொற்களை சொல் என்று அழைக்கமுடியாது. எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2]

சொற்களின் வகைகள் சொற்கள் நான்கு வகைப்படும்; அவை:

1.பெயர்ச்சொல்

பெயரைக் குறித்து வருவது பெயர்ச்சொல் ஆகும். ஒரு பொருளைக் குறித்தும் வரும். திணை, பால், எண், இடம் காட்டுவது; வேற்றுமை உருபுகளை இறுதியில் ஏற்று வருவது; வினையால் அணையும் பெயர் ஒன்றைத் தவிர ஏனைப் பெயர்கள் காலம் காட்டா. இவையே தொல்காப்பியர் பெயர்ச் சொல்லுக்குக் கூறும் இலக்கணங்கள்.[3] பொருளைக் குறிப்பது எனவும், திணை, பால், எண், இடம் உணர்த்துவது எனவும், வேற்றுமை உருபை ஏற்பது எனவும் குறிப்பிடுகின்றனர் .

2.வினைச்சொல்

ஒவ்வொரு மொழியிலும் ஒரு தொடருக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது வினைச் சொல்லே. தொழிலையும், தொழில் செய்தவனையும், தொழில் நிகழ்ந்த காலத்தையும் ஒருசேர உணர்த்தும் சொல்லாகத் திகழ்கின்றது. வினைச்சொல் பல்வேறு இலக்கணக் கூறுகளை விளக்குவதால், முக்கியமான இடத்தைப் பெறுகிறது. வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது காலம் காட்டும். [4] வெளிப்படையாகக் காட்டும் சொற்களே அல்லாமல், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் சொற்களும் வழங்கின. வினைச்சொல் வகைகள்:

வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும்.

3.இடைச்சொல் இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது. பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் பொருள்களை உணர்த்தும். பொருள் உணர்த்தும் சில இடைச்சொற்களே அசைநிலையாகவும் இசை நிறைக்கவும் வருவதுண்டு. தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விருப்பம், ஒழிந்தசொல், பிரிநிலை, கழிவு, ஆக்கம் ஆகிய இடைச்சொற்களுக்குரிய பொருள்களில் வரும் .[5]

4.உரிச்சொல்

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும். செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சுவழக்கில் பயின்று வராத சொற்களாகும். உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும். ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம். உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும். உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும். உரிச்சொல் இரண்டு பண்புகளை உணர்த்தும்: 1. குணப் பண்பு, 2. தொழிற் பண்பு.[6]

பொருள் இலக்கணம் தொகு

இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில், ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, களவியல் காரிகை, நம்பி அகப்பொருள் விளக்கம், மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள் ஆகும். மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்புகாகக் கருதப்படுகிறது. பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

யாப்பிலக்கணம் தொகு

மரபு முறையில் செய்யுள் இயற்றுவதற்குரிய விதிகளையும், விதிவிலக்குகளையும் கூறுவது 'யாப்பிலக்கணம்' ஆகும். 'யாத்தல்' என்றால் 'கட்டுதல்' எனப் பொருள்படும். யாப்பு இலக்கணம் ஆறு வகைப்படும் . 1. எழுத்து, 2.அசை, 3. சீர், 4. தளை, 5. அடி, 6. தொடை இவை எல்லாமே அவைகளின் பண்பால், வினையால் அமைந்த காரணப் பெயர்கள். எழுதப் படுவதால் 'எழுத்து' என்ற பெயர் அமைந்தது. அது போன்றே மற்றவைகளும். எழுத்தினால் ஆனது அசை; அசைகளினால் ஆனது சீர்; சீர்களால் ஆனது அடி; அடிகளினால் ஆனது பா; சீரும், சீரும் சேரும் இணைப்பு தளை; எதுகை, மோனை போன்ற அழகியல் அமைப்புகள் தொடை ஆகும்.

அணி இலக்கணம் தொகு

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றன . அணிகளில் முக்கியமானது உவமை அணி ஆகும். மற்ற அணிகள் உவமையில் இருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. 1. தொல்காப்பியம் முதல் நூற்பா
  2. 2.தொல்காப்பியம்.நூற்பா எண் .155
  3. 3.தொல்.சொல்.நூற்பா எண் . 157,162,71
  4. 4.தொல். சொல்.நூற்பா எண் 200)
  5. 5. நன்னூல் நூற்பா எண் . 421
  6. 6. நன்னூல் நூற்பா எண் . 442
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணம்_(மொழியியல்)&oldid=3516175" இலிருந்து மீள்விக்கப்பட்டது