ஐராவதேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இது ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோவில் இரண்டாம் இராசராசனால் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.[1]

ஐராவதேசுவரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°56′54″N 79°21′24″E / 10.94841°N 79.356708°E / 10.94841; 79.356708
பெயர்
பெயர்:ஐராவதேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:தாராசுரம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐராவதேசுவரர்
தாயார்:பெரியநாயகி, தெய்வநாயகி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:தமிழ் கல்வெட்டுகள்
வரலாறு
தொன்மை:900 ஆண்டுகள்
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:இரண்டாம் இராசராச சோழன்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அழியாத சோழர் பெருங்கோயில்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
ஐராவதேசுவரர் கோயில்
வகைபாரம்பரியக் கட்டிடம்
ஒப்பளவுi, ii, iii, iv
உசாத்துணை250
UNESCO regionஆசிய-பசிபிக் உலகப் பாரம்பரியமிக்கக் கட்டிடங்களின் பட்டியல்
ஆள்கூற்று10°56′54″N 79°21′24″E / 10.94841°N 79.356708°E / 10.94841; 79.356708
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11 ஆவது தொடர்)
விரிவாக்கம்2004

தஞ்சாவூர் அரண்மனை தேவதானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]

உலகப் பாரம்பரிய சின்னம்

1987-ல், பெருவுடையார் கோயில், இயுனெசுகோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[1] பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலும் மற்றும் ஐராவதேசுவரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.[1] தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.

கோயிலின் சிறப்புகள்

சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.

வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும்.[3] முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது.[3] தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.[3] இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.[3]

கட்டிடக்கலை

 
ஐராவதேஸ்வரர் கோயில் விமானம்

ஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.[4] தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது.[5] கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது.[1] இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.[1] முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது.[6] இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.[1]

இசைப் படிகள்

 
இசைப்படிகள்

நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

ராஜகம்பீரன் திருமண்டபம்

 
ராஜகம்பீரன் திருமண்டபம்

ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.

குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

சிற்பங்கள்

   
இடது: பிரம்மா. வலது:லிங்கோத்பவர்
   
இடது:யானை-ரிஷபம். வலது:நடன மங்கை
   
இடது:சுவர் சிற்பங்கள். வலது:இராமாயணக் காட்சி
   
இடது:சிவன் -பார்வதி வலது:திருமணக் காட்சி

கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன.

சாளரங்கள்

 
சாளரங்கள்

பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.

அம்மன் சன்னதி

 
அம்மன் சன்னிதி

ஐராவதேஸ்வரர் கோயிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோயில் அமைந்துள்ளது.

தல வரலாறு

இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும்[7] தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது.[8]

எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து.

இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.

நூல்

இத்திருக்கோயில் குறித்து "தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)" என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார்.[9]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Great Living Chola Temples - UNESCO World Heritage Centre
  2. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  3. 3.0 3.1 3.2 3.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2012-04-10.
  4. Reddy, G.Venkatramana. Alayam - The Hindu temple - An epitome of Hindu Culture. Mylapore, Chennai: Sri Ramakrishna Math. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7823-542-4.
  5. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/darasuram-architectural-marvel-from-chola-period/article2260784.ece
  6. See Chaitanya, K, p 42
  7. V., Meena (1974). Temples in South India (1st ed.). Kanniyakumari: Harikumar Arts. p. 26.
  8. See P.V. Jagadisa Ayyar, pp 350-351
  9. https://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5.html?id=rR3aoQEACAAJ&redir_esc=y

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராவதேசுவரர்_கோயில்&oldid=4007928" இலிருந்து மீள்விக்கப்பட்டது