திராவிடக் கட்டடக்கலை

தென்னிந்தியாவில் நிலவும் கட்டிடக்கலை
(திராவிடக் கட்டிடக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டடக்கலை என்னும் தென்னிந்தியக் கட்டடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய தமிழக கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.

தமிழர் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் பேர்சி பிறவுன் என்பார் பின்வருமாறு தமிழர் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.

தமிழர் கட்டடக்கலையில் கால வரைவு பின்வருமாறு:

பல்லவர் காலம் தொகு

 
மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் இரதங்கள்

கல்லினால் கட்டிடங்களை அமைக்கும் முறையைத் தென்னகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்களே. ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுங்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை ஆகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

சோழர் காலம் தொகு

 
தஞ்சை பெரிய கோயில்

தமிழகத்தில் சோழராட்சி முன்னணிக்கு வந்த முற்பகுதியில் (பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) மிகுதியான அளவில் கோயில்கள் கட்டப்படதாகத் தெரியவில்லை; கட்டப்பட்டவையும் அளவிற் சிறியவையே. இக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகத் திருக்கட்டளையிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயில், திருமயம், கண்ணனூரிலுள்ள பாலசுப்பிரமணியர் கோயில், திருச்சிராப்பள்ளி, சிறீனிவாசநல்லூரில் கட்டப்பட்ட குரங்கநாதர் கோயில் என்பவற்றைக் கூறலாம்.

சோழராட்சியின் தொடக்கக்காலக் கோயில்களில் பல கூறுகளில் புதிய பாணிகள் தென்பட்டபோதும், பல்லவர் காலக் கட்டிடக்கலை கூறுகளும் முற்றாக மறைந்து விடவில்லை. இக்காலக் கட்டிடங்கள் முன்னர் கூறியது போல் அளவிற் சிறியனவாக இருந்தாலும், பல்லவர் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் முழுமை பெற்றவையாகக் காணப்படுகின்றன.

சோழராட்சியின் பிற்பகுதி திராவிடக் கட்டிடக்கலையின் பொற்காலம் எனலாம். இராஜராஜ சோழன் காலத்தில் சோழர்கள் மிகவும் பலம் பெற்று விளங்கினர். அவர்களுடைய நாடு பரந்து விரிந்து இருந்தது. இந்திய நாட்டுக்கு வெளியேயும் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம். இந்த அதிகார பலத்தினதும், செல்வ வளத்தினதும் பின்னணியிலேயே தஞ்சைப் பெருவுடையார் கற்றாளி (கோவில்) கட்டப்பட்டது.[1]

மேற்கோள் தரவுகள் தொகு

  1. சாத்தான்குளம் அ. இராகவன். தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை (பாகம் 1, 2 ). அமிழ்தம் பதிப்பகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிடக்_கட்டடக்கலை&oldid=3885195" இலிருந்து மீள்விக்கப்பட்டது